-மகாகவி பாரதி
குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல... ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே பகவத் கீதையின் நூற்பயன்.

முன்னுரை- 7
“குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!” (பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)
“ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்த மாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்” (மேற்படி 15-ஆம் சுலோகம்)
இஃதே பகவத் கீதையின் சிகரம்.
சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.
அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம்.
இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.
இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் படல் வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
குளிர் – வெம்மை, இன்பம் – துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.
(தொடர்கிறது)
$$$