அகமும் புறமும் – 3இ

-பேரா அ.ச.ஞானசம்பந்தன்

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும், நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள்  ‘பரதவர்’ என்று குறிக்கப் படுவர். தலைவன்  ‘துறைவன்’ என்றும்  ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது, தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான்.

அகம்

இலக்கியத்தில் வாழ்வு – இ

இமய நம்பிக்கை

தலைவன் பிரிந்துள்ள காலத்துத் தலைவியின் மன நிலையைச் சித்தரிக்கிறது இப்பாடல்:

பலரும் ஒன்று கூடி வாழ வேண்டிய கடப்பாடுடையது இக்காலச் சமுதாயம். சாதாரணமாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒழிய, அவ்வாழ்வு சிறப்பதில்லை. எப்பொழுது ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்? அன்புள்ள பொழுதுதான் என்று கூறத் தேவை இல்லை. ஒருவர்மேல் கொண்ட அன்பு காரணமாகத்தானே அவர் செய்தது நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக்கொடுக்கின்றோம்? இவ் அன்பு எவ்வாறு தோன்றுகிறது? இவ்வினாவிற்கு விடை அளிக்க ஒருவனாலேதான் முடியும். அவனே அனைத்தையும் ஒரு காரணங் கருதிப் படைக்கும் இறைவன். அவனை அல்லாத பிறர் அன்பு செய்யலாம்; அன்பைப் பெறலாம். ஆனால், ஏன் அன்புண்டாகிறது என்ற வினாவிற்கு விடை கூறுதல் இயலாது.

அன்புடையார்மாட்டு இயல்பாகவே நமபிக்கையும் உண்டாகிறது. இந்நம்பிக்கை இல்லையாயின், அடிப்படை அன்பு விரைவில் ஆட்டங்கண்டு விடும். பல சந்தருப்பங்களில் அன்புடையார்மாட்டுச் சிலர் கொண்டிருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பை உண்டாக்கும். ஏதோ ஒரு செயல் நடைபெற்றது. நாம் அனைவரும் அது நடைபெற்றதை நேரே கண்டிருக்கிறோம். ஆனால், அதனைக் கண்ட நாம் செயலில் ஈடுபட்டவர்களிடத்து அன்பு கொள்ளவில்லை. எனவே, செயலைச் செயலாகவே காண்கிறோம். தவிர, அதற்கு வேறு பொருள் கற்பிப்பதுமில்லை; கற்பிக்க நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால், அந் நிகழ்ச்சியைப் பற்றி அவர்களிடத்து அன்புடையார் மாட்டுக் கூறிப் பாருங்கள். அவர்கள் நம்ப மறுத்து விடுவார்கள். நிகழ்ச்சியின் மெய்ம்மையை நீங்கள் உறுதிப்படுத்திக் காட்டினாலும், அவர்கள் அதற்கு வேறு ஒரு பொருள் கூறுவார்கள். இது உலகியற்கை. அன்புடையார் மாட்டும் அவர்கள் செய்யும் செயலினிடத்தும் நம்பிக்கை இருப்பது உலகியற்கை; மனித இயல்புங் கூடவாம்.

ஒரு நல்ல தலைவனும் தலைவியும் கூடி இன்பமாக இல்லறம் நடத்துகின்றனர். ஆனால், எத்துணை இன்பமாக இல்லறம் நடத்தினாலும் வெறும் பானை உலையில் ஏற முடியாது! எனவே பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்ட தலைவனுக்குப் பொருள் தேட வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. என் செய்வான் பாவம்! அன்பே வடிவான அருமைத் தலைவியை விட்டுப் போகவும் மனம் வரவில்லை. அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் காட்டு வழியை நினைக்கையிலேயே அச்சமாக இருக்கிறது. ஆனால், கடமை வாயிற் படியில் நின்று அவனை அழைக்கிறது. பல நாள் தலைவன் ஆய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். காதலுக்கும் கடமைக்கும் இடையே நடந்த அப்போராட்டத்தில் கடமை வெற்றி பெற்று விட்டது.

தலைவன் பொருள் தேடப் புறப்பட்டான். தலைவியும் அவன் போராட்டத்தை அறிந்து கொண்டாளாதலின் மேலும் தடை கூறி அவனுடைய வருத்தத்தை மிகுதிப் படுத்தாமல், வழி அனுப்ப முனைந்துவிட்டாள். ஆனால், அவளுடைய மனத்தின் அடித்தளத்தில் தோன்றிய ஒரு பரபரப்பினால். அவனை எவ்வாறாயினும் கேட்டுவிட வேண்டும் என்று பலநாளாகச் சிந்தித்தாள். பல சந்தருப்பங்களில் கேட்கவும் முயன்றாள். ஆனால் அக்கேள்வி வாயிலிருந்து வெளிவந்தால் தானே? என்ன செய்வது!  ‘அவன் எப்பழுது மீள்வான்?’ இதுதான் அவள் கேட்க விரும்பிய வினா. ஆனால், விட்டுப் பிரிவது பற்றிப் பெரும் போராட்டத்தை அவள் நடத்திக்கொண்டிருக்கும்போது ‘எப்பொழுது வருவீர்கள்’ என்று கேட்பது எவ்வளவு தவறானது? எனவே,  ‘இன்று கேட்கலாம்; நாளை கேட்கலாம்’ என்று கருதிக் கொண்டிருந்தாள்.

இதோ நாளுங்குறித்து இன்று புறப்படுகிறான் தலைவன். இச்சந்தருப்பத்தில் எவ்வாறு கேட்பது? நல்ல வேளை! அவனே வாய் திறந்து அவள் கேளாமல் கேட்ட வினாவிற்கு விடை கூறிவிட்டான். எப்பழுது மீளப் போகிறானோ என்பது பற்றித்தானே அவள் கேட்க விரும்பினாள்? இதோ அவனே அவளைப் பார்த்துக் கூறுகிறான்;  ‘தலைவி, நீ அஞ்ச வேண்டா. வருகிற கார் காலம் தொடங்கியவுடன் யான் மீண்டு விடுவேன்!’ கார் காலம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம் என்பதை அவன் அறியானா? எனவே, உறுதியாக அவன் கூறினான். ஒரு வேளை அவள் மனம் அதிக வருத்தம் அடையாமல் இருக்கட்டும் என்ற கருத்தினாலேதான் கூறினானா? யார் கண்டார்கள்? அப்படியுங்கூட இருக்கலாம்! போனவிடத்தில் அவன் விரும்பிய பொழுது திரும்பி வர அங்கு என்ன, பொருள் கொட்டியா கிடக்கிறது? அள்ளிக்கொண்டு வேண்டும் பொழுது திரும்பிவிட முடியுமா? இவற்றை எல்லாம் அவன் ஆய்ந்து பாராமலா கூறி இருப்பான்! தோழிக்குக்கூட அவன் சொற்களில் நம்பிக்கை பிறக்கவில்லை.

ஆனால், இத்தலைவியே ஒரு விதமான பெண்! தலைவனிடத்து எத்துணைக் காதல் கொண்டிருக்கிறாளோ, அத்துணை நம்பிக்கையும் வைத்திருக்கிறாள். எனவே அவன் மீண்டு வருகிறேன் என்று கூறிய கார்ப்பருவத்தை அப்படியே ஆழமாக மனத்தில் பதித்துக்கொண்டாள். அவன் சொற்களில் யாதோர் ஐயமும் தோன்றவில்லை இவளுக்கு. இது இயலுமோ என்ற வினாவும் இவள் உள்ளத்தில் தோன்றவில்லை! அப்படியானால், இவள் என்ன, அறிவில்லாதவளா? யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இந்த எளிய வினாக்கள்கூட இவள் மனத்தில் தோன்றாமைக்குக் காரணம் யாது? தோழிக்குப் புரியும் வினாக்கள், அவளினும் மேம்பட்ட தலைவிக்கு விளங்காவா? நன்றாய் விளங்கியிருக்கும். ஆனால் இவளுடைய விளக்கத்தை மற்றொன்று முன்னின்று மறைத்து விட்டது. அதுவே இவள் அவன்மேற் கொண்ட பெருநம்பிக்கை. அவன் கூறினான்; இவள் அதனை ஏற்றுக் கொண்டாள். இதனை யார் மறுக்க முடியும்? பிறர் கூறிய சொற்களானால், இவளும் அவற்றை ஆய்ந்து பார்த்துப் பொய்ம்மை – மெய்ம்மை ஆராய்ச்சியில் ஈடுபடுவாள். ஆனால், இப்பொழுது பேசியவன் யார்? இவளுடைய தலைவன் அல்லனோ! அவனா இவளை ஏமாற்றுவான்? அவனும் இவளும் வேறு அல்லரே! அப்படி இருக்க, அவன் சொற்களில் இவள் ஐயங்கொள்ளக் காரணம் இல்லை யன்றோ? அவனுடைய சொற்களில் பொய் தோன்றுமா? இதென்ன வேடிக்கை! சந்திரனில் நெருப்புப் பிறக்குமா? என்றாவது திங்களில் தீத் தோன்றினால், அன்றுதான் அவனுடைய சொற்களில் பொய் தோன்றும்.

‘குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்
திங்களுள் தீத்தோன்றி அற்று’ 

     (குறிஞ்சிக்கலி-5)

இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் தலைவி தலைவனுடைய சொற்களில். எனவே, இவள் நம்பிக்கை, இவள் அதிகம் வருந்தாமல் இருக்க துணை செய்கின்றதன்றோ?

நாட்கள் ஓடிமறைகின்றன. வீட்டில் உள்ள சுவர்களில் (அழகான  ‘காலண்டர்கள்’ இல்லாத காலம்) தலைவன் சென்றபிறகு வந்து போன நாட்களைக் கோடிட்டு வைத்தாள் தலைவி; சில நாட்களில் நின்று அக்கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிவாள். சென்னைப் பட்டினம் போன்ற நகரங்களில் – அல்ல நகரங்களில் – பஸ்ஸை எதிர்பார்த்து நிற்பவர்கள்  ‘கியூ’ வரிசை நீள்வது போலத் தலைவி கிழித்த கோடுகள் நீண்டன. ஆனாலும் தலைவன் வந்த பாடில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்ததே தவிர, நம்பிக்கை தளரவில்லை. இக்காலம் போல காலண்டர்கள் இருப்பதனால், இன்ன நாளில் வருவேன் என்று அவனுங் கூற முடியும்; இவளும் அந்த நாளை எதிர்பார்க்க முடியும். ஆனால், அந்நாட்களில் அவ்வாறில்லை. எனவே, அவனும் கார் காலத்தில் வருகிறேன் என்று கூறினான். கார் காலம் (மழைக் காலம்) என்று தொடங்கும்? மழை பெய்யத் தொடங்கினால் கார் காலம் என்று கூறிவிட முடியுமா? அன்றி, ஐப்பசி தொடங்கி விட்டது. எனவே, இது கார் காலம் என்றுதான் கூறிவிட முடியுமா? இரண்டுஞ் சேர வேண்டும். அப்பொழுது கூட உறுதியாக இது கார் காலம் என்று கூற முடியாதன்றோ?

தலைவன் பிரிந்து சென்று பல நாட்களாகிவிட்டன. மழை தொடங்கிவிட்டது.  “மழைக் காலத்தில் பூக்கும் கொன்றை, பிடவம் முதலியன பூக்கத் தொடங்கிவிட்டன. தலைவி மனவருத்தம் அடையத் தொடங்கிவிட்டாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழியின் பாடு தரும சங்கடமாகி விட்டது; என்ன செய்தால் தலைவியின் துயரம் ஆறும்? தலைவனைக் கொண்டு வந்து நிறுத்தினால், தலைவி வருத்தம் தீர்வாள். ஆனால், அது நடக்கக் கூடிய செயல் அன்றே! தோழி நன்கு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள். தலைவன் வரவில்லையே என்ற வருத்தத்தைக் காட்டிலும் தலைவிக்குக் கார் காலம் வந்துவிட்டதே என்ற வருத்தம் மிகுதி. ஆனாலும், இவ்வளவு துயரத்தின் இடையிலும் தலைவன் சொல் தவற மாட்டான் என்ற நம்பிக்கை மட்டும் இவளிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நன்கறிந்த தோழி இதன் மூலமே தலைவிக்கு ஆறுதல் அளிக்க முடிவு செய்தாள். எவ்வாறு ஆறுதல் அளிப்பது?

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’ 

    (குறள்-948)

என்றார் பொதுமறையாசிரியர். தலைவியின் நோய் யாது? தலைவன் இன்னும் வரவில்லையே என்ற வருத்தந்தான்.  ‘இன்னும்’ என்பதுதானே நோயின் முதல்? அதாவது அவன் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வரவில்லையே என்ற வருத்தம். இது கார்காலம் அன்று என்று நிரூபித்து விட்டால், தலைவியின் துயரத்தின் அடிப்படை நீங்கிவிடும். நல்ல கார் காலத்தை எவ்வாறு,  ‘இது கார்காலம் அன்று’ என்று கூற முடியும்? சாதாரணமானவர்களை இது கார் அன்று என்று கூறி ஏமாற்ற முடியாது.

ஆனால், தலைவியை ஏமாற்றிவிடலாம் எனத் தோழி நினைக்கிறாள். இது எவ்வாறு முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? நன்றாக முடியும். மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கட்கு. ஒரு மிகுதியும் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் காணச் செல்கிறோம். நற்பேறின்மையின் நாம் சென்ற நேரத்தில் அவர் இறந்து படுதலும் கூடும். நோயாளி இறந்துவிட்டதை நாம் அறிவோம். ஆனால், நோயாளியின் தாயோ, அன்றி மனைவியோ, இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னால் அன்பு செய்யப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்தப் பகுத்தறிவுடைய மனித மனம்! உயிர் பிரிந்துவிட்ட நேரத்திற்கூடப் பெரிய மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து காட்ட முற்படுவர் எத்துணைப் பேர்! ஏன்? அவர்களுடைய அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை அத்தகையது! ஆதலாலேதான், இறப்பாகிய நிகழ்ச்சியை – கண்ணெதிரே காணும் நிகழ்ச்சியை – நம்ப மறுத்து,  ‘எவ்வாறாயினும் இந்த மருந்து உட்செல்லுமா!’ என்று உயிர் பிரிந்து விட்டவர் வாயில் மருந்தை ஊற்றுகின்றார்கள்!

மனித மனம் இத்தகைய விசித்திரம் நிறைந்த ஒன்று. இதனை அடிப்படையிற் கொண்டே தோழி தலைவியின் வருத்தத்தைத் தணிக்க, அன்றேல், ஓரளவு குறைக்க முற்படுகிறாள். தலைவி கண் எதிரே மழை பெய்கிறது; மயில் ஆடுகிறது; கொன்றை பூக்கின்றது. ஆனால், எப்பொழுது மழை பெய்தாலும் இவை நிகழ்கின்றனவா? இல்லையே! கோடை மழை பெய்யும்பொழுது மயிலின் ஆட்டமும், கொன்றை பூத்தலும் நிகழ்கின்றனவா? இல்லையே! ஆனாலும் என்ன? சாதாரண மனநிலையுடையவர் மழை பெய்தல் முதலியவை தனி நிகழ்ச்சிகளாயினும், ஒன்றுடன் ஒன்றைத் தக்க முறையில் தொடர்பு படுத்திக் காண்பர். ஆனால், மனம் மாறுபட்டு அல்லது கலங்கியிருப்பவர்க்கு இத்தொடர்பு எங்கே விளங்கப் போகிறது! தலைவி மனம் கலங்கியிருக்கிறாள்.

அவளுடைய கலக்கத்திற்குக் காரணம் யாது? தலைவன் கார்காலம் தொடங்கியவுடன் வந்துவிடுகிறேன் என்று கூறிப் போனான். இதோ கார்காலம் தொடங்கி விட்டது போலக் காணப்படுகிறது. ஆனால் தலைவன் வந்தபாடில்லை. தலைவன் வாராமையின், இது கார்காலம் அன்று என்று கூறிவிடலாமா? அல்லது இது கார்காலந் தான் எனினும், அவன் வரவில்லை என்று கூறி விடலாமா? இதுவே தலைவியின் கலக்கம். இவ்விரண்டினுள் ஏதாவதொன்றுதான் உண்மையாக இருத்தல் கூடும். எது உண்மை என்று அறிய முடியாமல் இவள் வருந்தும் பொழுது தோழி இவளுடைய உதவிக்கு வருகிறாள். எவ்வாறு?  ‘தலைவன் வரவில்லை என்று கவலையுறாதே! இது கார்காலம் அன்று’ என்று கூறுகிறாள் தோழி. கண்ணெதிரே காண்பதை இல்லை என்று எவ்வாறு கூறுவது என்று நினைக்கிறீர்களா? இதோ தோழி கூறுகிறாள்:

‘மழை பெய்கிறதே இந்த மேகம் என்று நினைக்கிறாயா? தலைவி, கலங்காதே! அறிவில்லாதது இந்த மேகம்! மறதியினால் நீரை உண்டாலும், உண்டதன் பயன் இல்லாமற் போய்விடுமோ? நெருப்பில் மறந்து கையை வைத்துவிட்டால் சுடாமல் விடுமா? நீரை உண்ட உடனே மேகம் சூல் கொண்டுவிட்டது. சூலின் முடிவு யாது? மழையாகப் பெய்துதானே ஆக வேண்டும்? வேறு வழி இன்மையால் மழையைப் பெய்துவிட்டது. இந்த மேகம் செய்த முட்டாள் செயலினால் எத்தனைப் பொருள்கள் அந்த முட்டாள் பட்டத்தை ஏற்றுக் கொள்கின்றன? மழை பெய்தவுடன் (தவறுதலாகத்தான்) அஃறிணைப் பொருள்களாகிய பிடவு (முல்லை) காந்தள், கொன்றை முதலியன பூத்து விட்டன. அவை அறிவுடைய பொருள்களாயின், இது கார்காலமன்று என்று அறிந்திருக்கும். பாவம்! அஃறிணைப் பொருள்களாதலின், கார்காலம் என நம்பிப் பூத்துவிட்டன. அவைகளின்மேல் தவறு இல்லை. எல்லாம் இந்த முட்டாள் மேகம் மறதியால் செய்த வேலையாகும். நீயும் (பகுத்தறிவுடைய நீயும்) இது கார்காலம் என நம்பிக் கொண்டு,  ‘செல்லத் தொலையாததும் நீரில்லாமல் வரண்டு போனதும் ஆன நீண்ட வழியினிடத்து வேட்டியை விரித்தது’  போன்ற வெயில் வீசுகின்ற கொடுமையால் காண்பார் நெஞ்சு நடுங்கும் கொடிய காட்டின்கண் சென்ற காதலர் ‘வருகிறேன்’ என்று கூறிச் சென்ற பருவம் இதுதானே என்று கேட்கிறாய். இது அன்று அப்பருவம்.”

இந்த முறையில் தோழி பேசுவதாக அமைந்துள்ளது பழந்தமிழ்ப் பாடல்களுள் ஒன்று. ஆய்ந்து நோக்கும் பொழுது மனித மனத்தின் கூறுபாட்டை 2000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த தமிழர் எவ்வாறு நுணுக்கமாக அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறதன்றோ? இதோ பாடல்!

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில்விரித்து அன்ன வெயில்அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம இறந்தோர்
தாம்வரத் தெளிந்த பருவம் காண்வர
இதுவோ? என்றிசின் மடந்த! மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்த்த உள்ளமொடு தேர்வுஇல
பிடவுங் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. 

    (நற்றிணை-9)

(நிரம்பா – செல்லத் தொலையாத; உருப்பின் – வெப்பத்தை யுடைய; பனிக்கும் – நடுக்கத்தைச் செய்யும்; வரத் தெளித்த – வருவதாக உறுதி கூறிய; மதியின்று – அறிவின்றி; இறுத்த – பெய்த; வண்பெயல் – வளப்பம் பொருந்திய மேகம்; அயர்த்த – சந்தேகித்த; கோடல் – காந்தள் பூ;  மடவ – அறிவற்றவை)

பெய்கின்ற மழையையும், பூக்கின்ற கொன்றை, காந்தள், முல்லை முதலியவற்றையும் மறுத்து, தலைவன் சொல் தவற மாட்டான் என்று தலைவி கொண்டிருக்கும் இமயமலையை ஒத்த நம்பிக்கை வாழ்வதாக! பெண்டிர் இத்துணை நம்பிக்கை கொண்டிருந்தமையின், அற்றை நாள் சமுதாயம் வாழ்ந்தது. இன்றும் நாம் தமிழரெனத் தலைதூக்கித் திரிய இது வாய்ப்பும் வழியும் வகுத்தது.

***

நெய்தல் திணை

நெய்தல் திணை கடலிலும் கடல் சார்ந்த இடத்திலும் நடைபெறுவது. மாலைக் காலம் இதற்குரிய காலம் என்பர்.

தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவி வாய்விட்டுப் புலம்புவதை அறிவிக்கும் நெய்தல் பாடல்கள். இக்கருத்து இல்லாமல் கடலும், கடலைச்சார்ந்த பொருள்களும் பேசப்படுவதனாலும் நெய்தல் என்ற பெயர் வருதலும் உண்டு.

தலைவியின் உயர்ந்த பண்பாட்டை விளக்குவது இப் பாடல்:

புன்னை மரத் தங்கை

இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்தே இதில் காணப் பெறும் பொருள்கள் காண்பார்க்குப் புதுமையை நல்கின. புல் பூண்டில் தொடங்கி, மனிதனில் முடிவு பெறும் பல்வேறு உயிர்த் தொகுதிகள் இவ்வுலகில் உள்ளன. சிலவற்றை உயிருடைய பொருள்கள் என்று கண்டு கொள்ளக்கூட மேல்நாடுகட்குப் பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆயின.  ‘செடி கொடிகட்கும் உயிர் உண்டு, அவைகளுக்கு உணர்ச்சி கூட உண்டு’  என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டக்கூட இந்நாட்டு அறிவியல்துறை வல்லுனரான ஸர். ஜே.ஸி.போஸ் அவர்களாலேதான் இயன்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போஸ் அவர்கள் இவ்வுண்மையைப் புற உலகிற்கு இயந்திர சாதனத்தின் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார் என்பது போற்றத்தக்கது. ஆனால், இந்நாட்டிற்கூட அப்பொழுதுதான் இவ்வுண்மை காணப்பட்டது போலும் என்று நினைந்துவிட வேண்டா. வேத காலத்திற்கூட வடநாட்டாரும், தென்திசையில் வாழும் தமிழரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். தாவரங்கட்கும் உயிர் உண்டு என்ற உண்மையை அறிந்ததோடு நிறுத்தி விட்டனர் இற்றை நாள் அறிவியல் நூலார். ஆனால், பழங்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த பெரியோர் இவ்வுண்மையை அறிந்ததோடு நில்லாமல், இன்னும் ஒரு படி மேலே சென்று, இத்தாவர உயிர்கட்கும் நமக்கும் உள்ள தொடர்பைக்கூட அறிந்தனர்; தாவர உயிர்களுடன் உறவு கொண்டாடவும் தொடங்கினர்.

மிகப் பழைய நூலாகிய  ‘தொல்காப்பியம்’ தமிழ் மொழியினுடைய இலக்கணத்தை அறிவிக்கும் நூல்.  அது மொழி இலக்கணத்தை மட்டும் அறிவிப்பதுடன் நின்று விடாமல், அம்மொழி பேசும் தமிழர்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தது. இப்பெருமை – உலகப் பல்வேறு மொழி இலக்கணங்களுள்ளும் தமிழ் மொழி இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தாவரங்கட்கும் உயிர் உண்டு என்ற உண்மை பேசப்படுவது – வியப்பே அல்லவா! ‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே’ என்பது சூத்திரம். இது நன்கு விளங்குதற்பொருட்டு ஓரறிவு உடைய பொருள்கள்யாவை எனக் கூறத் தொடங்கி,

“புல்லும் மரனும் ஓர்அறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

    (தொல்; பொரு- மரபியல் 27-28) 

என்றும் பேசுகிறது தொல்காப்பியப் பொருளதிகாரம், மரபியல் சூத்திரங்களில். இதன் பொருளும் ‘புல்லும் மரமும் ஓர் அறிவுடைய; பிறவும் அக்கிளையும் பிறப்பும் உள்ளன’  என்பதாம். புல்லுடனும் மரத்துடனும் கிளையாக உள்ள பிற உயிர்கள் புதர், கொடி என்பன. அதைவிடச் சிறப்பான உண்மை இரண்டாம் அடியிற் பேசப்படுகிறது. மக்களானும், விலங்கானும் பெறப்பட்ட குழந்தைகளும் தொடக்கத்தில் ஓர் அறிவினவாகவே உள்ளன என்கிறார் தொல்காப்பியனார். இவற்றால் தாவரங்களை உயிர்ப் பொருளாகவும் மக்களுடன் தொடர்புடையனவாகவும் கொள்கிறார் என்பதும் நன்கு விளங்கும். இக்கருத்தை மேலும் வலியுறுத்தவே போலும் இத்தாவரங்களின் இளங்கன்றுகட்குத் தொல்காப்பியனார் பெயரிடு முறை அமைந்துள்ளது!

‘பிள்ளை, குழவி, கன்றே, போத்துஎனக்
கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே’

    (தொல்; பொரு. மரபியல்-24)

இன்றுங்கூட இந்நாட்டில்  ‘தென்னம்பிள்ளை’ என்று கூறும் மரபு உண்டு. நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளையும்  ‘பிள்ளை’ என்ற சொல்லால் குறிப்பிட்டுத் தென்னை மரத்தின் கன்றையும் அதே பிள்ளை என்ற சொல்லால் குறிப்பிடுவதனால், இரண்டையும் ஒன்றாகவே கருதினர் இத்தமிழர் என்பதற்குச் சான்றும் வேறு வேண்டுமா!

இனி இக்கருத்துச் சங்கப் பாடல் ஒன்றில் மிகவும் விளக்கமாகப் பேசப்படுவதைக் காணலாம். ஒரு செல்வருடைய மகள் தன் தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பெண்களுடைய விளையாட்டுக்கள் ஆண்களுடைய விளையாட்டுக்கள் போல இராமல், அமைதியும் சாந்தமும் உடையனவாகவே இருக்கும். அப் பெண் மகளிர் விளையாடும் ஆடல்களில் ஒரு வகை கும்பலாகக் குவிந்த மண்ணில் ஒருத்தி ஏதாவது ஒரு பொருளை ஒளித்து வைப்பதும், ஏனையோர் அது உள்ள இடத்தைத் தேடாமல் உடனே கண்டுபிடிப்பது மாகும். இன்றுங்கூட சில இடங்களில் குழந்தைகள் இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. ‘கிச்சுக்கிச்சுத் தம்பலம்’ என்ற பெயருடன் இது ஆடப்பெறும். இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டிருந்த அச்செல்வரின் மகள், புன்னை விதையை உள்ளே ஒளிக்கும் காயாக வைத்து விளையாடினாள். இரவு நேரம் வந்தவுடன் உள்ளே ஒளித்த விதையை எடுக்காமல் அவள் வீட்டுக்குச் சென்று விட்டாள். அன்றிரவு மழை பெய்ய விதை முளைத்து விட்டது. தான் மறந்து விட்டுச் சென்ற புன்னை விதை செடியாக முளைத்தது கண்ட அந்தச் சிறுமி, அதனிடம் தனித்த அன்பு பாராட்டினாள். பாலும் நெய்யும் விட்டு அதை வளர்க்க ஆரம்பித்தாள். செடி நன்கு வளர்வதைக் கண்ட அவளுடைய தாய் மகளுக்கு ஒரு நல்லுரை பகர்ந்தாள்.  “மகளே, நீ அன்புடன் வளர்க்கும் இந்தப் புன்னைச் செடியை ஒரு செடி என்று மட்டுமே நினைந்து வளர்க்க வேண்டா; உன் உடன் பிறந்த தங்கையாகவே கருதிக் கொள். உன்னைக் காட்டிலும் நல்ல பண்புகள் இதனிடம் நிறைந்துள்ளன. என்றோ நாம் ஒரு நாள் நீர் ஊற்றுகிறோம். அன்றேல், பல சந்தர்ப்பங்களில் நீர் ஊற்றக்கூட மறந்து விடுகிறோம். அவ்வாறு மறந்து விட்டாலும், மரம் நம்மாட்டுப் பகைமை பாராட்டுவதில்லை; பிற்காலத்தில் பழமும் நிழலும் தருகிறது; அது மட்டும் அன்றி, தன்னையே வெட்டி வீழ்த்தக் கோடாரியுடன் வருபவனுக்கும் அவன் வெயிலில் வாடாமல் நிழல் தந்து உபசரிக்கிறது. இவை அனைத்தைக் காட்டிலும் மற்றொரு சிறப்பும் மரத்தின்பால் உண்டு. மக்கள் தங்களிடம் உயிரும் பொருளும் உள்ள வரைதான் உதவி செய்வார்கள். எத்துணைப் பெரிய உபகாரியும் இறந்த பிறகு யாருக்கும் பயன்படுவது இல்லை அல்லவா? ஆனால், இந்த மரத்தைப் பார்; மரம் வாழும் பொழுது பழமும் நிழலும் தந்து பயன்படுவதுடன், இறந்து விட்ட பிறகும் எரித்தற்குரிய விறகாய் இருந்து பயன்படுகிறது. எனவே, இம் மரம் நீ வளர்த்த மரம்; உன்னினும் சிறந்த உன் தங்கையாகும்” என்று கூறினாள். தாய் இவ்வாறு கூறியது அச்சிறுமியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது.

சிறுமி வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள் என்றாலும் அவள் மனத்தில் தோன்றிய எண்ணம் மட்டும் மாறவே யில்லை. புன்னை மரத்தைப் பார்க்குந் தோறும் அதைத் தன் தங்கையென்றே கருதிவிட்டாள். சிறுமி தலைவியான நிலையில் இவளுக்கு ஒரு தலைவன் கிடைத்துவிட்டான். தலைவனோடு களவில் ஈடுபட்டாள். அவள் கடற்கரையில் இருக்கும்போது இந்த நட்பு உண்டாகியிருக்கலாம். கடற்கரையில் மீன் உலர்த்தும் தொழிலில் தலைவி ஈடுபட்டிருக்கலாம். பரந்த கடற்கரையில் காலைப் பொழுதில் பரதவர்கள் கூடி மீன் பிடிக்கக் கட்டு மரங்களுடன் கடலினிற் சென்றுவிட்டால் மாலையிலேதான் மீள்வார்கள். ஆதலிற் பகற்பொழுது முழுவதும் தலைவன் தலைவியைச் சந்திக்க நல்ல வாய்ப்பாய் இருந்தது. தாழம் புதர் நிறைந்துள்ள சோலைகள் மிக்கு இருத்தலின், பிறர் கண்ணில் படாமல் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன போலும்! பல நாட்களாகவே இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைவி கடற்கரையில் பார்க்க வேண்டிய அலுவல் முடிந்து விட்டது. அவளைப் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். முன்போலத் தலைவனை அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனினும், தலைவன் விடுவதாக இல்லை. அவன் மெல்லத் தோழியின் உதவியை நாடினான். தோழி, அவனுடைய வருத்தத்தையும் தலைவியின் துன்பத்தையும் கண்டு ஒருவாறு மனம் இரங்கினாள்; பகல் நேரத்தில் அவன் வந்து போக ஏற்பாடு செய்தாள்; அவன் வந்து தங்களைச் சந்திப்பதற்குரிய ஓர் இடத்தைக் குறிப்பிட்டாள். இதனைப்  ‘பகற்குறி’ என்று இலக்கண நூல் பேசும். அந்த நேரத்தில் தோழி தலைவியும் தானும் வெளியிற்செல்வது போல வீட்டாருக்குப் போக்குக் காட்டிவிட்டுப் புறப்படுவாள்; தான் முன்னரே தலைவனிடம் குறிப்பிட்டுள்ள இடத்திற்குத் தலைவியை அழைத்துக் கொண்டு செல்வாள்.

இம்முறையில் ஒரு நாள் தலைவன் வந்தான். ஒரு புன்னை மரம் நன்கு தழைத்து வளர்ந்திருந்தது. பூரிப்பும் இளமையும் செழித்துக் கொழிக்கும் தன் காதலியைச் சந்திக்க இம்மரநிழல் மிகவும் பொருத்தமுடையது என நினைத்துவிட்டான் அவன். பாவம்! அவனுக்கு இம்மரத்தின் வரலாறு எவ்வாறு தெரிய முடியும்? ஆனால், தோழியும் தலைவியும் இம்மரத்தின் அருகே வரக்கூட நாணினர். ஏன்? வரவே மறுத்துவிட்டனர். தலைவனுக்கு ஒரே வியப்பு உண்டாயிற்று.

அதற்குள் தோழி அவனை நோக்கி,  “ஐயனே, இப் பரந்த கடற்கரையில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருக்கின்றனவே! அவற்றுள் ஒரு மரத்தடிக்குச் சென்று விடுங்கள்” என்று கூறினாள். தலைவனின் வியப்பு இன்னும் அதிகமாகி விட்டது. இவ்வாறு தலைவி மறுப்பதற்குரிய காரணத்தைத் தோழியிடம் கேட்டான். இதோ தோழி பேசுகிறாள்.

“புதிதாக வந்த பாணர்கள் பாடும் மெல்லிய இசைப் பாட்டைப் போல வெண்மையான வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும் விளங்கிய கடல் நீரை உடைய நெய்தல் நிலத் தலைவரே, யாம் ஒருநாள் விளையாடும் எம்தோழிகளுடன் வெள்ளிய கடற்றுறை மணலில் சென்று விளையாடி இருந்தோம். அப்பொழுது ஒரு புன்னை விதையை மணலுள் புதைத்து விளையாடிவிட்டு வரும் பொழுது அவ்விதையை மறந்துவிட்டோம். மீட்டும் அவ்விடம் சென்று காண்கையில் அப்புன்னை விதை வேர் ஊன்றி முளைத்து நின்றது. அது கண்டு நெய் கலந்த பாலுடன் கூடிய நீரை விட்டு அதனை வளர்த்தோம். எம் அன்னை அதனைக் கண்டு மகிழ்ந்து,  ‘நீங்கள் வளர்த்து வரும் இப் புன்னையானது நும்மினும் சிறந்தது அன்றோ! இது நும்முடன் பிறந்த தங்கையாகும்’  என்று அதன் சிறப்பைக் கூறினாள். எனவே, எம் தங்கையாகிய அதன் எதிரே நாம் சந்திப்பது மிகவும் நாணம் தருவதாய் உளது! அதன் எதிர் நகைத்து விளையாட மிகவும் வெட்கப்படுகிறோம். நீர் எம் தலைவிக்கு அருள் புரிவதாயின் இன்னும் எத்தனையோ மரங்கள் இங்குள்ளன கண்டீர்!”

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பொய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப,
'நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே;
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே. 

    (நற்றிணை-172)

‘ஆயம் – தோழியர் கூட்டம்; காழ்முளை – முற்றிய விதை முளை; நுவ்வை – உம்முடைய போசரி; விருந்திற்பாணர்- புதிய பாணர்; விளர் இசை – மெல்லிய இசை; வான் கோடு – வெண்மையான சங்கு;  நரலும் – ஒலிக்கும்; துறை கெழு கொண்க – கடற்றுறையின் தலைவனே.)

புன்னை மரத்தையும் உடன் பிறந்த தங்கையாகக் கருதி, அதன் எதிரிலும் தலைவனுடன் விளையாட மறுத்த தலைவியின் பண்பாடும், புன்னையைத் தங்கை என்று கூறிய தாயின் பண்பாடும் அறிந்து மகிழ்தற்குரியன! இவ்வாறு பிறர் பார்க்கத் தலைவனைச் சந்திப்பது வெட்கமாகிறது என்ற குறிப்பால் அவனை விரைவில் வந்து மணந்து கொள்ளக் கூறுகிறாள் தோழி.

***

சமய சஞ்சீவியாகிய தோழியின் அறிவுத்திறனை விளக்கும் பாடல் இது:

எம் ஊரில் தங்கலாமா?

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும், நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள்  ‘பரதவர்’ என்று குறிக்கப் படுவர். தலைவன்  ‘துறைவன்’ என்றும்  ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது, தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான்.

பெரும்பாலும் தலைவனும் தலைவியும் குடும்பம் நடாத்துகிற காலத்தில், பொருள் தேடவோ போர் செய்யவோ தலைவன் பிரிந்து சென்றுவிடுவான். ஒரு காலத்தைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து விடுவதாகக் கூறிப் போனாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களால் அந்த நாளில் வர இயலாமல் போவதும் உண்டு, அவ்வாறாயின், தலைவி சில காலம் பொறுமையுடன் இருப்பாள். பின்னும் தலைவன் வரவில்லையாயின், அவள் துயரம் தாங்க மாட்டாமல் வாய்விட்டு அரற்றுதலும் உண்டு. இவ்வாறு அவள் துயரைக் கூறும் பாடல்கள்  ‘நெய்தல் திணைப் பாடல்கள்’ என்பர். இவ்வாறு உள்ள பாடல்கள்  ‘உரிப் பொருளால் நெய்தல்’ என்ற தொகுப்பைச் சேரும். இன்னும் சில சந்தருப்பங்களில் கற்புக் காலம் அல்லாத களவுக் காலத்திலும் இத்தகைய பாடல்கள் தோன்றுவதுண்டு. களவில் தலைவி எவ்வளவு துயரம் அடைந்தாலும் அத்துயரைப் பிறர் அறிய வெளிக்காட்டல் இயலாது. எனவே, அவள் துயரைப் பெரிதுபடுத்திக் காட்டாமல் பாடல் அதனைக் குறிப்பால் மட்டும் சுட்டுவதுண்டு.

தலைவி துயரைப் பெரிதாக்கிக் காட்டாத பாடல்களை எவ்வாறு நெய்தல் திணை என்று பிரிப்பது?

நெய்தலுக்குரிய கடல், மீன் பிடித்தல், நாரை, சுறா முதலியன பேசப்பட்டாலும், அப்பாடலை நெய்தல் என்றே குறிப்பர். இவ்வாறு முதற்பொருளாலும், கருப் பொருளாலும் நெய்தல் என்ற பெயரைப் பெற்ற பாடல் ஒன்றைக் காண்போம்;

கடலை நம்பி வாழும் வாழ்க்கை இடர் மிகுந்த வாழ்க்கையாகும். காலையில் கடல்மேல் உணவு தேடிச் செல்பவர் மாலையில் தவறாமல் திரும்பி வந்து விடுவர் என்ற உறுதி இல்லை. ஒரு மணி நேரத்தில் கடலில் எத்தகைய வேறுபாடுகள் தோன்றும் என்று கூறவியலாது. எனவே நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையிலேயே உடல்உரமும் மனத்திண்மையும் படைத்தவர்களாய் இருப்பார்கள். துன்பம் நேர்கையில் அதற்கு அஞ்சிக் கையற்று விடாமல் அதனை ஆற்றி இருப்பதே மனத் திண்மை என்று கூறப்பெறும். துயரத்தை ஆற்றி இருப்பதால் துயரத்தை அனுபவிக்கவில்லை என்று கூறுதல் தவறாகும்.

நல்ல கடல் துறைக்குத் தலைவன் அவன். கடல் படு செல்வம் அனைத்தும் அவனிடம் நிரம்ப உள்ளன. ஆனால், அவன் மனம் அவற்றால் அமைதியைப் பெற முடியவில்லை. மனத்தில் அமைதியை உண்டாக்கும் காதலியை எதிர்ப்பட்டான் ஒருநாள்; அதுவும் ஒரு கடற்கரையில். கடற்கரை என்று கூறினவுடன் சென்னைக் கடற்கரையையும் ஆங்கு வரும் கூட்டத்தையும் நினைந்து கொண்டு அவதியுற வேண்டா. தலைவன், தலைவியைச் சந்தித்த இடம் அமைதியானதும், மக்கள் நடமாட்டம் அற்றதுமான ஒரு கடற்கரை. கடல் காதலை மிகுதிப் படுத்தும் இயல்புடையது என்பது பழந்தமிழர் கொள்கை. ‘நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற் கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்’ என்று பாரதியார் பாடியதும் இக்கருத்தை வலியுறுத்தும். கடற்கரையில் தனியே காணப்பட்ட அக்காரிகை, அத் தலைவன் மனத்தைக் கவர்ந்து விட்டாள். பல நாளும் கடற்கரைக்கு வரும் பழக்கம் உடையவன் அவன்; அவளும் அவ்வாறே. ஆனால், ஒருநாள் அவனும் அவளும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்கினர்; காதல் பிறந்தது; அன்றிலிருந்து அவனும் அவளும் பலவிடங்களில் தனியே சந்தித்தனர்.

அவர்கள் ஒழுக்கம் மெள்ளத் தோழிக்கு எட்டியது. தோழியும் தலைவியைப் போல ஒத்த வயதினள். ஆகலின், தலைவியின் இவ்வாழ்க்கை மாறுபாட்டில் அதிக வியப்படையவில்லை.  ‘நடக்க வேண்டிய ஒன்றுதானே இது’ என்று கருதி இருந்துவிட்டாள் போலும்! நாட்கள் பல சென்றன. தலைவன் தலைவியருடைய நட்பு நாளுக்குநாள் பிறைமதி போல வளர்ந்துகொண்டே வந்தது. அந்த அளவில் அது மகிழ்ச்சிக்குரிய செயல்தான். ஆனால் இது எவ்வாறு சென்று முடியப் போகிறதோ என்ற ஐயம் தோழிக்குத் தோன்றிவிட்டது. தலைவன் மிக உயர்ந்தவன். பண்பாடு உடையவன். எனவே அவன் தலைவியைக் கைவிட்டு விட மாட்டான் என்றாலும், எத்துணை நாட்களுக்குத்தான் இவ்வாறு மறைமுகமாகவே அவன் வந்து திரும்புவது! மறைந்து ஒழுகும் களவு ஒழுக்கத்தில் அதிக இன்பத்தைப் பெறுகிறான் தலைவன் என்ற நினைவு தோழிக்கு. தலைவி மட்டும் அதில் மகிழ்ச்சி அடையவில்லை? அடையத்தான் செய்கிறாள். ஆனாலும் அவள் பெண் தானே! பெண்களுக்கே உரிய எத்தனையோ கவலைகள் அவளைப் பிடித்து ஆட்டுகின்றன. என்ன செய்வாள் பாவம்! வீட்டில் தாய், அண்ணன்மார், தந்தை என்ற அனைவரும் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் ஒருபுறம்; ஊரில் உள்ள பெண்டிர்தாம் எப்படிப்பட்டவர்! தாம் உண்டு, தம் வேலை உண்டு என்று இருக்கப்படாதா? அதுதான் போகட்டும். இப்பெண்டிர் அனைவரும் பிறக்கும்பொழுதே பாட்டிமார்களாய்ப் பிறந்து விட்டார்களா! ஒவ்வொருத்தியும் இளமையுடையவளாய் இருந்திருக்க மாட்டாளா! அந்தக் காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை ஒவ்வொருத்தியும் நினைத்துப் பார்க்க மாட்டாளா? வேறு வேலையே இல்லாதவர்கள் போல இப்பெண்கள் ஏன் இப்படித் தலைவியைப் பற்றிப் பேசி அவள் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்?

அம்மம்ம! ஒருநாளில் எப்பொழுதோ வருகிறான் தலைவன். அவனுடன் அவள் கழிக்கும் சில நாழிகை நேரத்திற்காக அவள் அனுபவிக்கும் தண்டனைதான் எவ்வளவு! அவன் பிரிவால் உண்டாகும் துயரம் ஒருபுறம். அதனைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டி ஏசும் ஊர்ப் பெண்கள் ஒருபுறம். இவை இரண்டின் இடைப்பட்டு அவள் படும்பாடு ஒருபுறம்! இவை எல்லாம் தலைவனுக்கு எங்கே தெரியப் போகின்றன! தலைவியின் நினைவு வந்தவுடன் அவன் புறப்பட்டு விடுகிறான். பகல் என்றும், இரவு என்றும் மழை என்றும், வெயில் என்றும் அவன் பார்ப்பது இல்லை. அவன் வரும் வழியிலேதான் எத்துணை அச்சந் தரும் தொல்லைகள்!  ‘தன்னிச்சையாகத் திரியும் சிங்கம்; அதன் சத்தத்தால் கலங்கும் யானை’ போன்றவை. வரும் வழியிலேதான் எத்தனை ஆறுகள்! அவற்றில் முதலைகள் எத்தனை! நினைக்கும் பொழுதே நெஞ்சு நடுங்குகிறது! இவை அனைத்தையும் கடந்து அவன் வருகிறான் என்று நினைத்தாலே, அவன் வந்த பிறகு பெறும் இன்பம் வேண்டா என்று கூறத் தோன்றுகிறது. அவனோ, இவற்றுள் ஒன்றுக்கும் கவலைப் படுபவனாகவே தெரியவில்லை. வழியில் வரும் ஏதம், தலைவி படும் துயரம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றுக்காவது அவன் அஞ்ச வேண்டுமே! அதுதான் இல்லை. நாட்கள் கழிகின்றன. திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழுந்ததாகத் தெரியவில்லை.

நாட்கள் செல்லச் செல்லத் தலைவியின் வருத்தம் எல்லை கடக்கிறது. தோழி ஒருத்திக்குத்தான் தலைவியின் துயரம் எவ்வளவு என்பது தெரியும். தலைவனைக் கண்டு பலபடியாகக் குறிப்பாகத் தோழி பேசிப் பார்த்தாள். அவனுடைய காதில் அச்சொற்கள் ஏறுவனவாகத் தெரியவில்லை. நயமாகப் பலமுறையும் தம் குறையைச் சொல்லி வருந்துமுகமாகப் பல கூறிப் பார்த்தாள். அவனிடம் நேரே கூறிய முறைகளைவிடப் பலமுறை அவன் காதில் விழும் படியாகவும் கூறினாள். இவ்வாறு அவள் கூறுவதைச்  ‘சிறைப்புறமாகக் கூறியது’ என்று புலவர் கூறுவர். இவ்வாறு மறைமுகமாகப் பலமுறை கூறியும் தலைவன் திருமண ஏற்பாடு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டமையின், அத்தோழி ஒருநாள் மாலைப் பொழுதில் தலைவனைக் கண்டு நேரே அவனிடம் பேசத் தொடங்கி விட்டாள்.

பகல் நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்தான் தலைவன். அவன் புறப்படுவதற்குள் மாலை முற்றி இருள் கவிய ஆரம்பித்து விட்டது.

“மிகவும் உயர்ந்த ஆகாயத்தில் திரிகின்ற செழுமையான கதிர்களை உடைய சூரியன் பெரிய மலைப் பக்கத்தில் மறைந்து விட்டான். ஆதலால், கடற்கரையில் யாரும் போக்குவரத்து இல்லை. இறால் மீன்களைத் தின்று விட்டு எழுந்த கரிய கால்களையும் வெண்மை நிறத்தையும் உடைய நாரைகள், உப்புக் குவட்டின் மேலே பறந்து சென்று, கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் கிளைகளில் தம் துணையுடன் தங்கிவிட்டன. தண்டுடன் கூடிய நெய்தல் மலர், மறையும்படியாக நீர் பெருகுகிற கழியில் துணையுடன் கூடிய சுறா மீன்கள் வழங்குகின்றன. இரவிலும் ஒலிக்கின்ற கடலில் பல விளக்குகளை எடுத்துக் கொண்டு எம் சுற்றத்தார் மீன் பிடிக்கச் சென்றுவிட்டார்கள். ஆதலால், அலைகளின் பிசிர் வீசும் கடல் மத்தளம் போல ஒலிக்கிற எம்முடைய ஊரில் இன்றிரவு தங்கி விட்டுப் போனால் யாது குறை ஐயா?”

சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே;
இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே;
கணைக்கால் மாமலர் கரப்ப மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்இமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஈ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்
தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர்
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடல் படப்பைஎம் உறையின் ஊர்க்கே? 

    (நற்றிணை - 67)

[மால் வரை- பெரிய மலை; துறை புலம்பின்றே – கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை; இறவு – இறால்; வெண்குவட்டு- உப்புக் குவட்டில்; அருஞ்சிறைத்தா அய் – அரிய சிறகை வீசிப்பறந்து; இறை – தங்குதல்; கணைக்கால் – கொழுத்த தண்டு; எல் இமிழ் – இரவு சூழ்ந்த; முழவு – மத்தளம்; உடை கடல் – அலைகள் மேல் எழுந்த வீழ்ந்து உடைகிற கடல்]

திருமணம் ஆவதற்கு முன் தலைவியின் வீட்டில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவது இயலாத காரியம் என்பதைத் தலைவன் அறிய மாட்டானா? தோழிக்கும் அது தெரியாதா? இருவருக்குமே நன்கு தெரியும். ஆனால், ஏன் தோழி இவ்வாறு கூறினாள்? இவ்வாறு கூறுவதன் உட்பொருளை நன்கு அறிந்தாவது தலைவன் மணம் செய்துகொண்டு வீட்டில் தங்க மாட்டானா என்ற எண்ணம்தான்!

கடல்துறையில் யாரும் இல்லை என்றதனால் அவன் மீண்டு போகும்பொழுது கள்வரால் இடைஞ்சல் ஏற்படக் கூடும் என்பதைக் குறிப்பிட்டாள். நாரைகள்கூட மாலைக் காலத்திலே தம் பேடைகளோடு கூட்டில் உறையச் செல்கின்றன என்ற குறிப்பால்,  ‘ஆண் மகனாகிய நீ இன்னும் மணம் செய்துகொண்டு குடும்பம் வைக்காமல் தனிவாழ்க்கையில் களவே சிறப்பென்று கருதி வாழலாமா?’ என்றும் இடித்துக் கூறினாள். கேவலம் கொல்லுதலையே தொழிலாகக் கொண்ட சுறாகூடத் தன் துணையுடன் வாழ்கிறதென்று எடுத்துக்காட்டுதலில் எவ்வளவு எள்ளல் குறிப்பைப் பெய்துவிடுகிறாள் அத்தோழி.  ‘எம் சுற்றத்தார்கள் கடலில் மீன் வேட்டைமேல் சென்றுள்ளார்கள்’ என்பதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்பதைக் குறிப்பிட்டு விட்டு,  ‘நீர் இந்த நேரத்தில் செல்வது கூடத் தகாது’ என்பதையும்  ‘எம் சுற்றத்தார் கடற்கரையில் இருப்பர்’ என்னும் குறிப்பால் சுட்டுகிறாள்.

***

மருதத் திணை

அகத்துறை இலக்கியத்தில் குறைந்த அளவு பாடல்களைப் பெற்றிருப்பது மருதத் திணையேயாம். வயலும் வயல் சார்ந்த இடமும் இதற்கு நிலைக்களம். விடியற்கால நேரம் இதற்குரிய பொழுதாகும்.

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று, தவறான செயல்களில் ஈடுபட்டுவிட்டு, விடியற்காலம் மீள்கிறான். அந்நிலையில் தலைவி அவனுடன் பிணங்கிக் கொள்கிறாள். அவர்கள் ஊடலை (பிணக்கை) அடிப்படையாகக் கொண்டு தோன்றுவன இப்பாடல்கள்.

‘பெயரன் பிறந்தான்’

தவறு செய்த தலைவன் வருந்துகிறதைச் சித்தரிக்கிறது இப்பாடல்.

மருதம் என்ற இத்திணையுள் தலைவன் – தலைவியரிடையே தோன்றும் சிறு பிணக்குகள் கூறப்படும். பிணக்குகள் எப்பொழுது தோன்றும்? ஒருவருக்கு விருப்பம் இல்லா ஒரு செயலை மற்றவர் செய்ய நேர்ந்தால்தானே வருத்தம் நேரிட முடியும்? தலைவன் எது செய்யினும் தலைவிக்கு அது விருப்பத்தைத் தருதலின், குடும்பக் காரியங்களில் பிணக்கு ஏற்பட வழியில்லை. மேலும், தலைவனோ, தலைவியோ, தமக்கென்று தனிப்பட்ட ஒரு செயலையும் செய்வதில்லை யாதலானும், எது செய்யினும் அது குடும்ப நலன் கருதியே செய்யப்படுதலானும், பிணக்குத் தோன்ற வழியில்லை. எனவே, மருதமாகிய ஊடல் தோன்ற ஒரே ஒரு காரணந்தான் எஞ்சியது. தலைவன் தலைவியை ஏமாற்றிய வழியே ஊடல் தோன்றலாயிற்று. தலைவி தனக்கு என்ன கொடுமையைத் தலைவன் இழைத்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால், அவன் வேறு ஒருத்தியை விரும்பினான் என்று கண்டால் பொறுக்க மாட்டாள்.  ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்’ என்பது இன்றும் தென்னாட்டில் வழங்கும் பழமொழி.

இத்துணைச் சிறந்த காதல்மணம் புரிந்துகொண்ட தலைவனா வேறு ஒரு பெண்ணை விரும்பினான்? என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! அவனேதான் இவ்வாறு செய்தான். அவன் இவ்வாறு செய்வதற்காகவே பெண் குலத்தின் ஒரு பகுதியைப் பிரித்துப்  ‘பரத்தையர்’ என்று அவர்கட்குப் பட்டமும் சூட்டி, ஊரின் ஒதுக்கில் இடம் கொடுத்து வைத்திருந்தான். அவருள்  ‘காதற் பரத்தையர், இற்பரத்தையர், சேரிப் பரத்தையர்’ எனப் பல பிரிவினர் உண்டு.

ஒரு சில ஆடவர் இச்சேரிகட்கும் சென்று வந்தனர் போலும்! ஒரு நாட்டில் வாழும் மனிதர் அனைவரும் சிறந்த பண்புடையவராகவே இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் இயலாத காரியம். பல்வேறு பண்பாடுடைய மக்களும் கலந்ததுதான் சமுதாயம் என்று கூறப்படும். இத்தகைய மனப் பண்புடையவரும் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வு பற்றியும் ஒரோ வழிக்கவிஞன் பாடல்கள் பாடினான். அவற்றை மருதத் திணைப் பாடல்களாகப் பிற்காலத்தார் தொகுத்தனர்;. தலைவன் இவ்வாறு பரத்தையின் வீட்டுக்குச் சென்று வந்த பொழுது தலைவி அது பொறுக்க மாட்டாமல் அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துவிடுவாள். தலைவன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விடும். இது மாதிரி சந்தருப்பங்களில் தலைவன் பிறருடைய உதவியை நாடி, அது சாக்காக வீட்டினுள் நுழைவதும் உண்டு. அவன் உதவி வேண்டுபவர்கள் தோழி, விருந்தினர், குழந்தை என்ற மூன்று இனத்தவராவர். தோழியை வேண்டிக்கொள்ள, அவள் தலைவியிடம் தூது நடந்து தலைவனை மன்னித்துவிடுமாறு கூறுதலும் உண்டு. தலைவனிடம் பேச்சு வார்த்தைகள் இல்லாமலே தலைவி குடும்பம் நடத்திக்கொண்டு வரும் வேளையில் தலைவனுடைய நற்காலத்தின் அறிகுறியாக விருந்தினர்கள் வந்து சேர்தலும் உண்டு. விருந்தினரின் எதிரே தலைவி தன் கோபத்தைக் காட்டுதல் பண்பாட்டுக்கு விரோதமன்றோ? எனவே, விருந்தினரைக் கண்டவுடன் அவள் கோபம் தணிந்துவிடுவாள். இன்னும் சில சந்தருப்பங்களில் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு அது சாக்காகத் தலைவன் உள்ளே வந்து விடுதலும் உண்டு. இவை அனைத்திற்கும் உதாரணமாக பல பாடல்கள் காணலாம்.

மனித வாழ்க்கையின் விரும்பத்தகாத ஒரு பகுதியை விளக்குவதுதான் மருதத்திணைப் பாடல். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களுள் ஒருசிலரே இந்தத் தவறான வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கக் கூடும் என்று நினைப்பது பொருத்தந்தானே!

அதற்கேற்பவே அகத்துறைப் பாடல்களில் மருதத் திணைப் பாடல்கள் நூற்றுப் பத்து வீதமே உள்ளன. நூறு ஆண் மக்கள் வாழ்கின்ற ஓர் இடத்தில் பதின்மர் ஓரளவு பொருந்தா ஒழுக்கம் உடையவராய் வாழ்வதானால் பெருந்தீங்கு எதுவும் விளைந்துவிடப் போவதில்லை.

சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் இவ்வகை வாழ்க்கை விரும்பத் தகாததாயினும் கவிதையுலகில் மருதம் பற்றிய பாடல்கள் மிக்க சுவையுடையனவாய் இருக்கின்றன. பரத்தையர் வீடு சென்று வந்த தலைவனைப் பற்றிக் கூறும் பாடல்கள் ஒருபுறமிருக்க, அப்பரத்தையரைப் பற்றியும் அவர்களுடைய மனோதத்துவம் பற்றியும் கூறுகிற பாடல்களும் சில உண்டு.

தங்களுடைய வாழ்க்கை இழிந்தது என்றோ, தவறானது என்றோ, அப்பரத்தையர்கள் கருதியதாகத் தெரியவில்லை. தம்மாட்டு வந்து செல்லுகின்ற தலைவன்மார் தம்முடைய வீட்டில் தலைவியரிடம் அஞ்சி நடுங்குகின்றதைக் கண்டு அவரை எள்ளி நகையாடுகின்ற அளவுக்கு அவர்கள் மனத்திடம் படைத்தவர்களாய் இருந்திருக்கின்றார்கள். தலைவியர்மாட்டு அச்சமிருப்பினும் மீட்டும் மீட்டும் தம்பால் தலைவர்கள் வருகின்ற காரணத்தாலும் தமக்கு வேண்டிய உபசரணங்களைச் செய்து போற்றுகின்ற காரணத்தாலும், தாங்களும் சமுதாயத்தின் ஒரு சிறந்த உறுப்பெனவே அப்பரத்தையர் கருதிக்கொண்டனர்.

இந்நிலையில் உலகப் பெரியாருள் ஒருவரான  ‘டால்ஸ்டாய்’ எழுதிய  ‘குரூட்டர் சொனட்டா’ என்ற கதை நினைவு கூர்தற்கு உரியது. உணவுவிடுதி ஒன்றைக் காண டால்ஸ்டாய் உள்ளே செல்லுகிறார். அங்கே சில பெண்கள் கேளிக்கையில் பொழுது போக்கு வதைப்பார்த்து,  “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்கின்றார். அவர்கள் சிரித்துக்;கொண்டே,  “நாங்கள் சும்மாதான் இருக்கிறோம்” என்று விடை பகருகிறார்கள். அதை நம்ப முடியாத டால்ஸ்டாய் விடுதித் தலைவரைப் பார்க்கின்றார். உடனே அத்தலைவர் மிக்க சினத்துடன் அப்பெண்களைப் பார்த்துப்  “பேதைகளே, நீங்களெல்லாம் பரத்தையர்கள் என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறுகிறார். ஆனால், அப்பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்த டால்ஸ்டாய், விடுதித் தலைவரைப் பார்த்து,  “ஐயா, நாமெல்லாம் (ஆண்களெல்லாம்) நல்லவர்களாய் இருந்து விட்டால் இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் இருக்க வேண்டுவதில்லை அல்லவா?” என்று கூறினாராம்.

பரத்தையரின் மனோநிலையை விளக்க இந்த ஒரு உதாரணத்துடன் நற்றிணைப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்:

தலைவன் பரத்தை வீட்டில் வந்து பல நாட்களாய்த் தங்கிவிட்டான். இவன் வீட்டைவிட்டு வருகிற காலத்தே தலைவி சூல் முதிர்ந்திருந்தாள். எனவே பரத்தையின் இல்லம்புக்க தலைமகன், வீடு செல்ல வேண்டும் என்னும் நினைவின்றி அங்கேயே தங்கிவிட்டான். இந்நிலையில் ஒரு நாள் அவனுக்கு மகன் பிறந்த செய்தியைச் சிலர் வந்து கூறினர். எவ்வளவுதான் தலைவியை மறந்தவன் போல அங்குத் தங்கிவிட்டாலும், மகன் பிறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டவுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வராமலா இருந்துவிடும்? எனவே, தன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டான். ஆனால் அம் முடிவைக் கொண்டுசெலுத்துவதில் இரண்டு பெரிய அல்லல்கள் உள்ளன. முதலாவது, இத்தனை நாட்கள் தங்கிய பரத்தை வீட்டைவிட்டு எவ்வாறு திடீரென்று புறப்படுவது என்பதாகும். இரண்டாவது, இத்தனை நாட்கள் எட்டிப்பாராத தன் வீட்டுக்குள் இப்பொழுது எப்படித் திடீரென்று நுழைவது என்பதாகும். இவ்விரண்டு தொல்லைகளையும் ஒரே வகையில் தீர்க்க முனைகிறான் தலைவன். இரவு நடுயாமத்திற்குமேல் புறப்பட்டால் இரண்டு வீட்டில் உள்ளவர்கள் நன்கு உறங்கிக் கொண்டிருப்பார்கள் எனவே, அந்த நேரத்தில் புறப்பட்டுத் தன் வீட்டுக்குள் புகுந்துவிடலாம் என அவன் முடிவு செய்து விட்டான். ஆனால், பரத்தையை இவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியுமா? எனவே, அவள் அவன் செய்தவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். தலைவனுடைய சுற்றத்தார் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி உண்டாயிற்று, எப்படியோ தலைவன் அப்பரத்தையை ஏமாற்றிவிட்டு இன்று தப்பித்துக்கொண்டு வந்து விட்டானே என்று மகிழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், பரத்தைக்கு மட்டும் உண்மை தெரியும். அவன் தான் விட்டதாலேதான் போக இயன்றதே தவிரத் தன்னை ஏமாற்றிவிட்டுச் செல்லவில்லை என்பதையும் அவனுடைய சுற்றத்தார்கள் காதில் விழும்படி கூறிச் சிரிக்கிறாள்.

“பெரிய காவலையுடைய தலைவனுடைய பெரிய மாளிகையில் நீண்ட நாவையுடைய ஒளி பொருந்திய மணியானது அடித்தது. ஒலி உண்டாக்குகின்ற தென்னங் கீற்றால் மிடைந்து அலங்கரிக்கப்பெற்ற முற்றத்தில் வெண்மையான மணல் பரப்பப் பட்டிருக்கிறது. முன்பு தலைவன் பரத்தை வீட்டுக்குச் செல்கையில் அவனைச் சுற்றிப் பாணர் கூட்டம் காவல் காத்துச் சென்றதைப் போல் இப்பொழுது தலைவி வீட்டில் ஆராய்ந்த ஆபரணத்தை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டுச் சூழ்ந்து முற்றத்தில் நிற்கின்றனர். நறுமணம் கமழும் விரிப்பு விரித்துள்ள நல்ல படுக்கையில் செவிலித் தாயுடன் சமீபத்தில் பிறந்த புதல்வன் உறங்கிக் கொண்டிருக்கிறான். பிணி அண்டாமல் இருக்க வெண்சிறு கடுகை அரைத்து எண்ணெயுடன் கலந்து, அதனால் தலைமுழுகிய ஈரத்துடன் அழகு விளங்கும் மேனியையுடைய தலைவி தன் இரண்டு இமைகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்த உறங்குகிறாள். அத்தகைய நடு இரவு நேரத்தில் அகன்ற நீர்த்துறையையுடைய தலைவனும் கள்ளனைப்போல அவனுடைய வீட்டினுள் நுழைந்தான். தலைவனின் தந்தையின் பெயரை வைத்துக் கொள்ளக்கூடிய மகன் பிறந்த காரணத்தால்”.

நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்
குரைஇலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டுஎன ஒருசார்த்
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செலிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர்அணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்என் கங்குல் கள்வன் போல
அகந்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. 

    (நற்றிணை-40)

[நெடு நா ஒண்மணி- நீண்ட நாவையுடைய மணி கட்டி இருத்தலின் செல்வ மிகுதி கூறினார்; இரட்ட – ஒலிக்க; பெரும்பாண்-தலைவனைப் பரத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தொழிலுடையவன்; விரிச்சி – நல்ல சொல் (சகுனம்) கேட்டல்; வெறி – வாசனை; அறுவை – அறுக்கப்பட்டது, துணி; புனிறுநாறும் – ஈன்ற அணிமை தோன்றும்; ஐயவி – வெண் சிறு கடுகு (இதனைக் கலந்தால் பேய் முதலியன அண்டா எனப் பழந்தமிழர் நம்பினர்); நெய்யாட்டு – எண்ணெய் முழுக்கு; யாக்கை – உடம்பு; சிறந் தோன்பெயரன் – தலைவனுடைய தந்தை (சிறந்தோன்) க்குப் பெயரன்.

***

‘வாரிரோ விருந்தினரே!’

தலைவன் தவற்றைத் தலைவி காணும் முறையைக் கூறும் பாடல் இது.

விடியற்காலை நேரம் – கதிரவன் உதயம் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என்றாலும் ஓரளவு வெளிச்சம் தோன்றிவிட்டது. இந்த நேரத்தில் ஒருவன் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக் கொண்டு, ஊரின் வெளிப்புறத்தே இருந்து வருகிறான்; ஏதேனும் ஒலி அண்மையில் கேட்டாலும் மிகுந்த அச்சத்துடன் திரும்பிப் பார்க்கிறான். அவ்வளவு கோழையா இவன். அரவத்தைக் கேட்டு அஞ்சுவதற்கு? இல்லை, தன்னை இந்த நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதே இவனுடைய நோக்கம் போலும்! ஏன் இவ்வாறு பிறரைக் கண்டு அஞ்சுகிறான்? ஒருவேளை பிறர் பொருளைத் திருடிவிட்டு வருகிறானா? அவ்வாறு தெரியவில்லை, இவன் முகத்தைப் பார்த்தால் உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கூறத் தோன்றுகிறதே தவிரத் திருடன் என்று கூற நா எழவில்லை. அவ்வாறாயின் இவன் ஏன் இவ்வாறு அஞ்ச வேண்டும். ஆம்! ஏதோ செய்யத் தகாத செயல் ஒன்றைச் செய்துவிட்டு வருகிறான் போலும்!  ‘செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’  என்ற குறளை மறந்துவிட்டு ஏதோ தவறு செய்திருக்க வேண்டும்.

இவனுடைய இளமை இவன் என்ன தவற்றைச் செய்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. மனிதர்கள் தவறு என்று அறிந்திருந்தும் செய்யும் தவறுகள் பல. அவற்றுள்ளும் பெரிய தவறு ஒழுக்கக் கேடுதான். தன்னால் காதலித்து மணம் செய்து கொள்ளப்பெற்ற மனைவி வீட்டில் இருக்கிறாள். அவளையும் தானே தேடிப் பிடித்துக் காதலித்தான். கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல் அவளுடன் நீண்ட நாட்கள் களவு வாழ்க்கையில் ஈடுபட்டான். அத்தோழி இவனை எத்துணை முறை கண்டு கேட்டாள்! நேரடியாகவும் குறிப்பாகவும் தலைவி படும்பாட்டை எடுத்துக் கூறினாள்; மணம் செய்து கொண்டு வாழ வேண்டுவதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறினாள்; இவ்வாறு களவு நடைபெறுவது நீண்ட நாட்கள் நடைபெற முடியாது என்பதை எடுத்துக் காட்டினாள்; என்றாவது ஒரு நாள் தலைவியினுடைய தந்தை அல்லது அண்ணன்மார்களிடம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்தினாள்; களவுக் காலத்தில் சில மணி நேரமே பெறக்கூடிய இன்பத்தை இடையீடுபடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கலாமே என இவனுடைய ஆசையைத் தூண்டிவிட்டுப் பார்த்தாள். இவ்வளவு தூரம் அவள் கூறியும் இவள் அதற்காக எல்லாம் அசைந்து கொடுத்தால்தானே! ஒன்றுமே நிகழாததுபோல இவன் தினம் பகலிலும், இரவிலுமாக வந்து போகிறான். இவனுக்கு மட்டும் தோழி கூறும் காரணங்கள் தெரியாதவைகளா? தெரிந்திருந்தும் பின்னர் ஏன் களவை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்? இத்தனை தொல்லைகளையும் மீறி இவன் களவை நீட்டிக்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.

பிறர் அறியாமல் செய்கிற ஒவ்வொரு செயலிலும் மனிதன் இன்பத்தை அடைகிறான் போலும்! ஆகையால், களவு வாழ்க்கையில் அதிக இன்பம் பெறுவதாக எண்ணி, தலைவன் களவை நீட்டித்தான் போலும்! இதே தலைவன் தான் இப்பொழுது குடும்பம் நடத்துகிறான், அதே தலைவியுடன். ஆனால், திடீரென்று ஒரு நாள் இவனுக்குப் பழைய ஞாபகம் எங்கிருந்தோ வந்துவிட்டது போலும்! பிறர் அறிந்தால் எள்ளி நகையாடுவர் என்று அறிந்திருந்தும், இவன் பரத்தை வீட்டிற்குப் போய்வர முடிவு செய்துவிட்டான். இவன்மேல் அதிகத் தவறு கூறவும் காரணம் இல்லை. இவன் ஒரு கலைஞன். இவனுடைய கலை மனம் பிறருடைய அங்க நெளிவுகளிற்கூட ஓர் அழகைக் காண்கிறது. பாடலைக்கொண்டு இவன் எவ்வளவு கலையுள்ளம் படைத்தவன் என்பதை அறிதல் கூடும். எனவே, எங்கோ ஒருநாள் ஒரு பரத்தையின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். முதலில் அவளுடைய கலையிலேதான் இவன் ஈடுபட்டான்; கலையுள்ளம் எத்துணைச் சிறந்ததாக இருப்பினும், அதனால் சில தீமைகளும் விளைதல் கண்கூடு.

கலை உள்ளம் என்றாலே அது எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம். உணர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு மிகுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கலையில் ஈடுபட முடியும். எனவே, கலையும் உணர்ச்சியும் கைகோத்துச் செல்லும் இயல்புடையன என்பதையும் அறியலாம். உணர்ச்சி மிகுந்து விட்டபொழுது மனிதன் அறிவையும் நடுவு நிலையையும் இழக்க நேரிடுகிறது. அறிவை இழக்கும் பொழுது செய்யத் தகுவன இவை, தகாதன இவை என்று பாகுபாடு மறைந்துவிடுகிறது. உதாரணமாக, கோபம் என்ற உணர்ச்சியை எடுத்துக்கொள்வோம். எத்துணைச் சிறந்த பெரியவர்களும் கோபம் உற்ற பொழுது தவற்றைச் செய்து விடுகின்றார்கள். கோபம் தணிந்த பிறகு தாமே தம் செயலைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர். என்றாலும், மறுமுறை கோபம் வராமல் இருப்பதில்லை. எனவே, கோபம் முதலிய உணர்ச்சிகள் மிகும்பொழுது அறிவும், நடுவு நிலையும், ஆராய்ச்சியும், நன்மை தீமை முதலிய பாகுபாடும் விடைபெற்றுக்கொள்ளும் என்பது தெளிவு. இக் காரணத்தாலேதான் சிறந்த கலைஞர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள்.

இறைவனிடம் செலுத்தப்படும் பக்தி உணர்ச்சி ஒன்று நீங்கலாக, ஏனைய உணர்ச்சிகள் அனைத்தும் இத்தீமையை ஓரளவு செய்யாமல் இருப்பதில்லை. பரத்தையின் ஆடல் பாடலைக் கண்டுகேட்டு மயங்கிய தலைவன், அவ்வாடல் பாடல்களிலேதான் முதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றிய இந்த ஈடுபாடு மெள்ள அவன் அறிவை மயக்கிவிட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அக் கலையில் இருந்த ஈடுபாடு அக் கலைப் பொருளில் செல்லத் தொடங்கிவிட்டது. பரத்தையின் ஆடலில் கொண்ட ஈடுபாடு மெள்ள அவளிடமே செல்லத் தொடங்கிவிட்டது. துணிந்து ஒருநாள் அவள் வீட்டிற்குச் சென்று விட்டான்.

இவ்வாறு இவன் பரத்தை இல்லம் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டில் புகுந்தான். தன் வீட்டில் தன் வரவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதைப் பறை சாற்றுபவன் போல மிக்க இறுமாப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டான். அங்கே தலைவிக்கு இவனுடைய செயல் தெரிந்துவிட்டது. அவள் ஒன்றுமே பேசவில்லை. இம் மாதிரி சந்தருப்பங்களில் இரண்டு வகையில் நடந்து கொள்ளும் இரண்டு வகையான தலைவியர்கள் உண்டு. ஒரு வகையார் உடனே தலைவனிடம் பெரு வாய்ச் சண்டை இடத் தொடங்கிவிடுவர். தலைவன் பாடு முதலில் வருந்தத் தக்கதாக இருப்பினும், உடனே தலைவியின் கோபம் ஆறிவிடும். அதிலும் வாய் திறந்து கூச்சலிட்டுச் சண்டை பிடிப்பவர் உடனே தம் கோபம் ஆறிவிடுவர். ஆனால், இரண்டாம் வகையைச் சேர்ந்தவரே அஞ்சத் தக்கவர். இவர்கள் வாய் திறந்து சண்டை செய்வதில்லை. ஏன்?  தங்கட்குப் பிடிக்காத நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துவிட்டால் வாய் திறவாமல் இருந்துவிடுவர்; சிலரைப் போலக் கூச்சல் இடுவதில்லை. தம் கடமைகளுள் ஒன்றும் தவறுவதும் இல்லை. ஆனால், தமக்குத் தீங்கிழைத்த கணவரிடத்து முகந்தந்து பேச மாட்டார்கள். இவர்களுடைய இச்செயல் அக்கணவன்மார்களை வாள் கொண்டு பிளப்பதுபோல இருக்கும். இம்மாதிரி இனத்தைச் சேர்ந்த தலைவி ஒருத்தியுடன் வாழும் தலைவன்தான் பரத்தை வீடு சென்று மீண்டான். தலைவி வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவனுடைய வீட்டிலேயே இவன் புதியவன் போல இருக்க வேண்டியதாய் விட்டது. தன்னுடைய நிலைமையைக் குறித்து இவன் வருந்துகிறான். எவ்வாறு இருந்தால் இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து நீங்க முடியும் என்பது இவனுக்கு நன்கு தெரியும். ஆம், விருந்தினர் இப்பொழுது வந்துவிட்டால் தலைவியின் கோபம் போய்விடும். எனவே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இத் தலைவன் உள்ளே நடமாடும் தலைவியைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான்.  ‘யாரேனும் விருந்தினர் வந்து நம்மை இப்பொழுது காப்பாற்ற மாட்டார்களா!’ என்ற கவலையில் ஆழ்ந்து இருக்கிறான்.

‘எருமைக் கன்றுகள் தூண்தோறும் கட்டி இருப்பதால் அழகு மிகுந்த வீட்டின்கண், வளைந்த குண்டலங்களை அணிந்த தலைவி, சிறிய மோதிரம் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படி வாழை இலையின் அடிக்காம்பு பெரிதாய் இருக்கிறது என்பதால் அதனைக் கிழித்து விட்டுப் பரிகலம் அமைத்து விட்டுச் சமையல் அறையில் புகை படிந்த கண்களுடனும் நெற்றியில் வியர்வையுடனும் இருக்கும் இப்பொழுது நம்மிடம் பெருங்கோபம் கொண்டுள்ளாள்! இப்பொழுது யாராவது விருந்தினர்கள் வருவார்களாக. விருந்தினர் வந்துவிட்டால் இவள் கண் கோபத்தால் சிவப்பதில்லை; புன்சிரிப்புடன் கூடிய முகத்தினை உடையவளாய் இருப்பாள். ஆதலால், பிறகு நாம் இவளுடன் மகிழ்ந்து இருக்கலாம்’ என நினைக்கிறான்.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ்செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்துஅடி வல்லிதின் வகைஇப்
புகைஉண்டு அமர்த்த கண்ணன் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை;
எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பாள் அன்று;
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே. 

    (நற்றிணை- 120)

(தடமருப்பு- வளைந்த கொம்பு; மடநடைக்குழவி-தளர்ந்த நடையுடைய கன்று; காண்தகு-அழகிய;கொடுங்குழை- வளைந்த மகர குண்டலம்; செழுஞ்செய் பேதை- செழுமையான சிவந்த நிறமுடைய இவள்; தகைபெற- அழகுசெய்ய; பிறைநுதல்…துடையினள் – தனது பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் தோன்றிய சின்ன வியர்வைத் துளிகளைப் புடைவையின் தலைப்பால் துடைத்துக் கொண்டு; நப்புலந்து-நம்மேல் கோபித்துக் கொண்டு; அட்டிலோளே-சமையல் கட்டில் உள்ளாள்; சிவப்பாள் அன்று – கோபத்தால் கண் சிவக்க மாட்டாள்; சிறிய முள்…கம்மே- சிறிய முள்ளைப்போலும் இவள் பற்களால் சிரிப்பதைப் பார்க்கலாம்.)

தலைவி கோபித்துக்கொண்டு சமையல் கட்டில் இருக்கின்ற இந்த நேரத்திற்கூட அவளுடைய குழையணிந் துள்ள முகத்தையும், வாழை இலையை அரிவதால் சிவந்து போன கையையும், சமையல் செய்வதால் உண்டாகும் வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் அழகையும் காண்கிற இத்தலைவன் ஒரு சிறந்த கலைஞனாகத்தான் இருத்தல் வேண்டும். எனவேதான் இவன் வாழ்க்கையில் இத்தவற்றைச் செய்துவிட்டான் போலும்!

***

‘நான் இறந்தால் தொல்லை தீரும்’

இருவரும் விட்டுக்கொடாத பொழுது அவர்களைச் சேர்த்து வைக்கத் தோழி கையாண்ட தந்திரம் இது.

இரண்டு பேர் மனம் மாறுபட்டுப் பூசலிடும் பொழுது இடை நின்று நீங்கள் சமாதானம் செய்ய முற்பட்டதுண்டா? சண்டை வலிவாக நடைபெறும் பொழுது சமாதானத்திற்குப் போகிறவர் மிகவும் வன்மையுடையவராய் இருத்தல் வேண்டும். பல சமயங்களில் சண்டை இடும் இருவருமே சேர்ந்து இடை நிற்பவரை அடித்து விடுதலும் உண்டு. எனவே, போரிடுபவர்களிடையே அமைதியை நிலைநாட்டப் போவது அவ்வளவு இனிய செயல் அன்று. ஆனால், எல்லா இடங்களிலும் இந்நிலை ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. பல சமயங்களில் பூசல் இடுகிறவர்களைப் பொறுத்தே இடை நிற்பவர் நிலையை முடிவு செய்ய முடியும். பூசலிடுபவர் பண்பும் நாகரிகமும் உடையவர்களாக இருப்பின், இடை நிற்பார் நிலை அவ்வளவு தீமையுடையதாகி விடாது. எவ்வளவு மாறுபாடும் சினமும் இருந்தாலும் எல்லை கடந்து போகாமல் காண்கின்றவர்களும் உண்டு அல்லவா? கணவன் மனைவியர் போராட்டம் பெரும்பாலும் இந்த வகையையே சேரும்.

பண்புடைய தலைவனும் தலைவியும் கூடி வாழ்க்கை நடத்தும் பொழுதும் சில சந்தருப்பங்களில் கருத்து வேறுபாடு தோன்றிவிடுகிறது. அப்பொழுதும் பூசல் ஏற்படும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை காரணமாக உடனே அம் மாறுபாடு நீங்கிவிடுவர். இத்தகைய போராட்டங்களில் பெரும்பான்மை மனைவியும் சிறுபான்மை கணவனும் விட்டுக் கொடுத்தல் இயற்கை. பெரும்பாலும் போராட்டத்தின் காரணத்தை ஒட்டித்தான் இம்முடிவும் ஏற்படும்.

சில சந்தருப்பங்களில், போராட்டத்தின் காரணத்தை ஒட்டி இப்பூசல் நீண்ட நாட்கள் நடைபெறுவதும் உண்டு. கணவன் ஒழுக்கக்கேடு செய்கிறான் என்பதை எந்த மனைவியும் எளிதில் மன்னிக்க மாட்டாள். இன்றும் தென்தமிழ் நாட்டில்  ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்’ என்று வழங்கும் பழமொழி இக்கருத்தை வலியுறுத்தி நிற்கின்றது. கணவன் செய்த தவறு எதுவாயினும், அதனை முழு மனத்துடன் மன்னிக்காத மனைவியே இல்லை என்று கூடக் கூறி விடலாம். ஓயாமல் மனைவியை அடிக்கும் கணவன்மார் – ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும்  ‘பீப்பாயில்’  மிதக்கும்  ‘பெருங்குடி’ மக்களான கணவன்மார் – திருமங்கலியத்தையும் திருடிச்சென்று அஸ்வமேத யாகத்திற்குப் (குதிரைப்பந்தயம்) பலியிடும் கணவன்மார் என்னும் இத்தகைய கணவன்மார் அனைவரையும் மன்னித்து விடுகின்ற மனைவிமார் உண்டு. இன்னும் சில குடும்பங்களில் மேலே கூறிய அனைத்துப் பண்பாடுகளையும் ஒருங்கே பெற்ற கணவன்மாரும் உண்டு. இவ்வளவு தீய பண்புகள் நிறைந்திருந்தும் அக் குடும்பங்களில் நாம் சற்றும் எதிர்பாராத ஒற்றுமை நிலவுவதுண்டு; அம் மனைவிமார் தம் கணவர்களை நல்லவர்கள் என்றும், சேர்க்கை காரணமாகவே கெட்டு விடுகிறார்கள் என்றும் கூறுவதைக் கேட்டு வியவாமல் இருக்க முடியாது. இவ்வளவு குற்றங்களையும் பெருந்தன்மையோடு மன்னித்து விடும் ஒரு மனைவிகூட மன்னிக்க முடியாததும் விரும்பாததுமான ஒரு குற்றம் உண்டு. அந்தக் குற்றத்தை ஒரு கணவன் செய்துவிட்டால், வேறு துறைகளில் அவன் எவ்வளவு சிறந்தவனாயினும், அவன் மனைவி அதனைத் தாள மாட்டாள். இதன் அடிப்படை மனத்தத்துவம் யாதாக இருக்கலாம் என்று அறிதற்கில்லை.

தன்னை ஒத்த வேறு ஒரு பெண்ணைத் தன்னுடைய கணவன் நாடினான் எந்று நினைக்கும் பொழுது அம் மனைவியினுடைய  ‘அகங்காரம்’ தாக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத எந்த அழகைத் தன் கணவன் அப்பிற பெண்ணிடத்துக் கண்டான் என்ற எண்ணம் முதலில் தோன்றும்போலும்! தன்பால் இல்லாத ஒன்றை அவள் பெற்றிருந்த காரணத்தாலேயே தலைவன் அவளை விரும்பினான் என்ற நினைவு தோன்றியவுடன் பொறாமைதான் முதலில் தோன்றுகிறது. தன்பால் அந்த ஒன்று இல்லையே என்ற நினைவு தோன்றுந்தோறும் அவளுடைய அகங்காரம் ஆயிரம் புண்ணைப்பெறுகிறது. எனவே, கணவன் தனக் கிழைத்த தீங்கை மிகப் பெரிதாக நினைக்கிறது மனைவியின் மனம். ஏனைய குற்றங்களை அவன் புரிகையில் தலைவிக்கு நேரடியாக அதிக நஷ்டம் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஒரோ வழிப் பொருள் நட்டம் முதலிய தோன்றினாலும், தன் மாட்டு அவன் வைத்திருக்கும் அன்புடன் தலைவி இந்த நட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். எனவே, இந்த நட்டம் பெரிதாகப் படுவதே இல்லை. பிறர் அவனுடைய செயலையும் அவன் அழிக்கும் பொருளையும் கண்டு அஞ்சுகின்றனர்; அவளிடங்கூட முறையிடுகின்றனர். ஆனால், அவர்கள் அவனுடைய செயலில் ஒரு பகுதியைத்தான் காண்கின்றனர். அவர்கள் காணாததும் காண முடியாததுமான மற்றொரு பகுதியை அவள் ஒருத்தி மட்டுமே காண முடியும். அந்த மற்றொரு பகுதி தான் அவன் அவளிடம் காட்டும் அன்பு, அவன் காட்டுகின்ற கண்ணால் காண முடியாத அன்பின் எதிரே அவனுடைய ஏனைய தவறுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. ஆதலால், தான் அவளிடம் கொண்ட அன்பு குறையாமல் அவன் எத்தனைப் பிழைகள் செய்தாலும், அவள் அவற்றைப் பெரிதாக மதிப்பதே இல்லை. இன்றில்லையேனும் நாளை அவன் திருந்திவிடுவான் என்ற உறுதியான நம்பிக்கையில் அவள் மகிழ்ச்சியுடன் வாணாளைக் கழிக்கின்றாள். நாகரிகம் மிகுந்துவிட்ட குடும்பங்களில் இந்தப் பண்பாட்டைக் காண முடியாது. காரணம், நாகரிகம் (தற்கால ரகம்) மிகும் பொழுதே போலித்தன்மையும் உள்ளொன்று வெளியொன்றுமாக நடந்துகொள்ளும் இயல்பும் உடன் தோன்றிவிடுகின்றன. எனவே, ஒருவர் மாட்டு ஒருவர் காட்டும் அன்பு, வருத்தம், வெறுப்பு முதலிய அனைத்துமே ஓர் எல்லைக்கு உட்பட்டுப் பிறர் அறியாவாறு காட்டப்படுகின்றன. ஆதலாலே தான் போலி நாகரிகம் மிகுந்த குடும்பங்களில் மேலே கூறிய தலைவி இயல்பை நன்கு காண்டல் இயலாது. ஆனால், போலி நாகரிகம் முற்றாமல் உள்ளத்தே தோன்றும் உணர்ச்சியை மறைக்காமல் வாழ்ந்து வரும் கிராமத்துக் குடும்பங்களில் இன்றும் இந்தப் பண்பாட்டைக் காணலாம்.

மேலே கூறிய முறையில் உள்ளத்து உணர்ச்சியை ஓரளவு வெளிப்படையாகவே காட்டப் பழகிய தலைவி ஒருத்தி; அவள் இல்லறம் நடத்தத் தொடங்கியது கருத்தொத்த கணவனுடனேதான். அந்தக் கணவனும் அவளும் தமிழர் முறைப்படி முதலில் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர்க் கற்புநெறி கடைப்பிடித்தவர் தாம். அந்த நாளில் அவன் அவள்மாட்டுக் கொண்டிருந்த காதலுக்கு எல்லையே இல்லை என்றும் கூறலாம். தன் காதலைப் பலபடியாக எடுத்து அவளிடம் அவன் கூறியது உண்டு. அந்த நாட்களில் அவளைத் தவிர அவன் வேறு பெண்களை கண் எடுத்துக்கூடக் கண்டதில்லை. அவனைப் பொறுத்த மடடில் உலகில் வேறு பெண்களே இல்லை என்றுகூடக் கூறிவிடும் நிலையில் இருந்தான். ஒரு நாள் அவன் இந்தத் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான். இதனை  ‘உடன் போக்கு’ (Elopement) என்று கூறும் இலக்கியங்கள். அவ்வாறு இத் தலைவன் இத்தலைவியைக் கூட்டி வரப் பேருதவி புரிந்தவள் இத்தலைவியினுடைய தோழிதான். எங்கோ சென்ற இவர்கள் இறுதியில் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணம் முடிந்து குடும்பம் வைத்த பிறகு தலைவி தன்னுடைய உயிர்த் தோழியை வரவழைத்துத் துணையாக வைத்துக் கொண்டாள். இவர்களுடைய இல்லறம் நன்றாகத்தான் நடைபெற்று வந்தது.

நாட்கள் சென்றன; தலைவன் முன் போல இல்லை என்பதைத் தலைவி மெள்ள உணரலானாள். அவளை விட்டுச் சிறிது நேரம் பிரிந்திருக்கவும் விரும்பாத தலைவன் இப்பொழுது ஏதாவது ஒரு சிறு காரணத்திற்காகவும் பிரிந்து இருக்க முற்பட்டான். நாளாவட்டத்தில் இரவு நேரங்களிற்கூட வீட்டில் தங்காமல் வெளியே இருக்க முற்பட்டான். தலைவிக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது. யாரிடம் அவள் தன் வருத்தத்தைத் தெரிவிக்க முடியும்? தலைவன் எங்கோ பரத்தையர் வீட்டிற்குச் சென்று வருகிறான் என்று ஊரார் மெல்லப் பேசிக்கொண்டது தலைவியின் காதில் விழுந்தது. திடீரென்று மிகுதியும் கலவரமடைந்த அவள், தோழியிடம் குறிப்பாக இதைத் தெரிவித்தாள். தன்னைப் போல அவளும் இதைப் பெரிய துன்பமாகக் கருதி வருந்துவாள் என்று தலைவி எதிர்பார்த்தாள். ஆனால், என்ன ஏமாற்றம்! தோழி இது பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.  ‘என்ன! இவள் என்னுடைய தோழிதானா!’ என்று அவள் மேல் பெரிய சீற்றங்கொண்டாள் தலைவி.

தோழிக்குத் தலைவியிடம் அன்பு இல்லையா? தலைவன் தவறு இழைக்கிறான் என்பது அவளுக்கு மட்டும் தெரியவில்லையா? நன்றாகத் தெரிகிறது! என்ன செய்ய வேண்டும் என்று அவள் ஆராய்ந்து பார்த்தாள்; தலைவனை நெருங்கிச் சண்டை போடலாமா என்றுகூடக் கருதினாள். ஆனால், அதனால் பயன் உண்டாகுமா? தலைவிதான் ஓயாமல் தலைவனுடன் பிணங்கிக்கொண்டு சண்டையிடுகிறாளே. தலைவனைச் சண்டையிட்டு நல்வழிக்குத் திருப்புவதாயின், எப்பொழுதோ தலைவியே திருப்பி இருக்கலாம். சண்டை இட்டு அவனை மாற்ற முடியாது என்பதற்குத் தலைவியே சான்றாகிவிட்டது. எனவே, தோழி மேலும் சிந்தித்தாள். எஞ்சியுள்ளது ஒரே வழிதான். அன்பு வழியால் அவனைத் திருத்தினால்; என்ன? அன்புக்குக் கட்டுப்படாதவர் எவரேனும் உண்டா? ஏன் உலகை வெல்லக்கூடிய அன்பு இத்தலைவனிடம் மட்டும் பயன் இல்லாமல் போக வேண்டும்? தலைவியிடம் நிறைந்த அன்புடையவன்தான் அவன்! ஆண்களுக்குரிய சில தவறுகளும் அவனிடம் இருக்கின்றன. தான் செய்யும் காரியத்தால் தலைவிக்கு ஒன்றும் தீங்கு நேராது என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கிறான். அதனாலேதான் அவன் தவறான வழியில் சென்றுகொண்டே இருக்கிறான். இந்த நிலையில் அவனை இடித்துப் பேசிப் பயன் இல்லை. அன்பு வழியில் அவன் தவற்றை எடுத்துக்காட்ட வேண்டும். தலைவிக்கு – அவனால் பெரிதும் விரும்பப்படும் தலைவிக்கு – அவன் எவ்வளவு பெரிய தீமையைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அப்பொழுது அவன் தானாகத் திருந்திவிடுவான் என்பது தோழியின் எண்ணம். இவ் எண்ணத்தை மெள்ளத் தலைவிக்கு எடுத்துக் கூறினாள் தோழி. அவள் ஒரேயடியாகத் தோழியின்மேல் சினந்து கொண்டாள். தோழிக்குக்கூடத் தன்மேல் அன்பு இல்லை என்றும், அதனாலேதான் தனக்காகப் பரிந்துகொண்டு தலைவனிடம் சண்டை இடவில்லை என்றும் ஆத்திரத்துடன் கூறினாள். தோழியின்மேல் வந்த சினத்தை எல்லாம் தலைவி தலைவன்மேல் காட்டினாள். என்றோ ஒரு நாள் வீடு தேடி வருகிற அவனை இம் மாதிரிச் சினங் கொண்டு வெருட்டுதலினால் மேலும் தீமை ஏற்படுமே தவிர நன்மை விளையாது என்பதைத் தோழி மட்டுமே உணர்கிறாள். என்ன செய்வது? தலைவனுக்காகப் பரிந்து பேசினால் தலைவியின் சினத்துக்கு ஆளாக வேண்டும். தலைவியுடன் சேர்ந்து தலைவனைச் சினந்து கொண்டாலோ, தலைவன் ஒரேயடியாய்ச் சென்றுவிடும் பெரியதொரு தொல்லை வந்துவிடும் என அஞ்சுகிறாள் தோழி பாவம்! அவளுடைய நிலைமை மிகக் கேவலமாகிவிட்டது.

ஒரு நாள் தலைவன் எதிர்பாராவிதமாக வந்தான். தோழி சென்று அவனுக்கு இன்முகங் காட்டி, உள்ளே வருமாறு உபசரித்தாள். பிறகு தலைவியிடம் சென்று தலைவன் வந்துள்ள செய்தியை அறிவித்தாள். தலைவி தன்னை அலங்கரித்துக்கொண்டு தலைவனைச் சென்று வரவேற்க வேண்டும் என்று தோழி வற்புறுத்தினாள். தலைவி பெருஞ் சினங்கொண்டு தலைவனையும் தோழியையும் வெறுத்துப் பேசினாள். இந்த நிலையில் மனம் நொந்து போன தோழி பேசுகிறாள். இருவர் சண்டையிடும் பொழுது சமாதானம் செய்து வைக்கப்போன தோழியின் அனுபவம் இதோ பேசப்படுகிறது.

“வயல் அருகில் பலா மரம் பெரிதாய் நிற்கிறது. அப் பலாமரத்தில் உள்ள இலைகளைக் கூடுபோலச் செய்து சிவந்த சுளுக்கி எறும்புகள் (முயிறு) முட்டை இட்டுள்ளன. அவ்விலைக் கூடுகளுள் சிவந்த எறும்புகளும் முட்டைகளும் நெருங்கி வாழ்கின்றன. வயலில் மீன் உணவை நாடி வந்த நாரை பலா மரத்தில் உள்ள இக் கூட்டினுள் நீண்ட அலகை வைத்து உறிஞ்சுகிறது. நாரை உறிஞ்சியவுடன் உள்ளே உள்ள சிவந்த எறும்புகளும் அவற்றின் வெண்மையான முட்டைகளும் வயலில் உதிர்ந்து விடுகின்றன. அவை உதிர்ந்து கிடப்பது செந்நெல்லும் வெள்ளை அரிசியும் கலந்துகொட்டிக் கிடப்பதுபோல இருக்கிறது. அத்தகைய மருத நிலங்களையுடைய தலைவன் பரத்தை மகளிர் பலரை முயங்கும் விருப்பத்தால் நம்முடைய வீட்டினுள்ளே வாராமல் இருக்கிறான். ஒருவேளை அவன் வரினும் அந்த நேரத்தில் மாமை நிறத்தையுடைய தலைவி அவனுடைய பெருந்தன்மையை விரும்பி அவன்மேல் கொண்டுள்ள கோபத்தை விடவும் இல்லை. அன்னி என்பவனும் பெரிய மன்னனாகிய திதியன் என்பவனும் ஒரு புன்னை மரம் காரணமாகச் சண்டை இட்டனர். இறுதியில் புன்னை மரத்தை வெட்டி வீழ்த்திய பிறகே இருவரும் அமைதியடைந்தனர். அதுபோல் இத் தலைவனும் தலைவியுமாகிய இருவரும் இடையில் நிற்கின்ற நான் இறந்தால்தான் தம்முடைய சண்டையை நிறுத்துவார்கள் போல இருக்கிறது!” என்ற கருத்தில் தோழி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

பழனப் பாகல் முயிறூமூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவுவெள் ளரிசியில் தாஅம்ஊரன்
பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே!
மாயோன், நலத்தை நம்பி விடல்ஒல் லாளே!
அன்னியும் பெரியன் அவனும் விழுமிய
இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னோடு கழியும்இவ் விருவரது இகலே. 

     (நற்றிணை-180)

(பழனம்- வயல்; பாகல்- பலா மரம்; முயிறு- சிவப்பு நிறமுடைய சுளுக்கி எறும்பு; மூசு-நெருங்கு; குடம்பை- கூடு; உரைத்தலின்- உறிஞ்சுதலால்; தாஅம்-பரந்து கிடக்கும்; நசைஇ- விரும்பி; நலம்- பெருந்தன்மை; அன்னி- ஒரு சிற்றரசன்; பெரியன்- திதியன் என்பான்)

‘புன்னைமரம் வெட்டுண்ட பிறகே திதியனும் அன்னியும் பகைமை ஒழிந்ததுபோல, யான் ஒழிந்த பிறகே இவர்கள் பூசல் தீரும் போலும்!’ என்று நொந்து கொள்கிறாள் தோழி.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s