-சுவாமி ஆசுதோஷானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…

அந்தோ! நாட்டிலுள்ள ஏழைகளைப் பற்றி நினைக்க யாருமில்லையே! அவர்களே நாட்டின் முதுகெலும்பு! அவர்களின் தொழிலால்தான் உணவு கிடைக்கிறது. தெருவைச் சுத்தம் செய்பவர்களும் கூலியாட்களும் ஒரு நாள் பணியை நிறுத்தினால் நகரமே கதிகலங்கிவிடும். ஆனால் அவர்களுக்காக இரங்குபவர்கள் இல்லை. துன்பத்தில் ஆறுதல் கூற யாருமில்லை!
-குடிசைகளில் வாழ்கிற மக்களுக்காக இப்படிக் கதறியவர் ஒரு சோஷலிஸ்டோ, கம்யூனிஸ்டோ, தேசத் தலைவரோ அல்ல.
இவ்வாறு உருகிய அவர் தலைசிறந்த சிந்தனையாளரான சுவாமி விவேகானந்தர். ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். அவர் ஏன் அழ வேண்டும்?
பிறர் துயரம் கண்டு அவரது இதயம் இளகிக் கரைந்ததால்! மனிதநேயத்தால்! ஆனால், மனிதநேயத்தை மீறிய காரணமும் ஒன்று இருந்தது. அது – அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால்.
அவர் கடவுளை மட்டும் கண்ட தீர்க்கதரிசி அல்ல; பாரத நாட்டையும் ஒருங்கே கண்ட தீர்க்கதரிசி. அப்படி, அவர் பாரதத்தைப் பற்றிக் கண்ட தீர்க்கதரிசனம்தான் என்ன?
சுருக்கமாகக் கூறுவதானால், குடிசைவாழ் சாதாரண மக்களின் ஏற்றத்தில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்ற மகத்தான உண்மைதான் அது.
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது! அதை மறந்துவிடாதீர்கள். அவர்களின் நிலைமையைப் பொருத்துத் தான் நமது நாட்டின் தலைவிதி அமையும் என்றார் அவர்.
குடிசைவாழ் மக்களைப் புறக்கணித்தது இந்தியாவின் வீழ்ச்சிக்கான காரணங்களுள் ஒன்று என்பதை அவர் தமது ஆழ்ந்த சிந்தனையாற்றலின் வாயிலாக உணர்ந்திருந்தார்.
பாமர மக்களின் நிலைமையை முன்னேற்ற முடியுமா? அவர்கள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து கிடக்கிறார்கள்; தங்கள் தனித்துவத்தையே இழந்துள்ளார்கள். பணமுள்ள ஒவ்வொருவனும் அவன் இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவனோ – அவர்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதிக்கிறான்.
அவர்களின் ஆன்மிகத்தை அழிக்காமல், அவர்கள் இழந்த தனித்துவத்தை மீட்டுத் தர உங்களால் இயலுமா? என்று கேட்கிறார் சுவாமிஜி.
இயலும் என்று பதிலும் கூறி அதற்கான வழியாக, முதலில் அவர்களுக்குக் கல்வி தர வேண்டும் என்றார்.
தொழிற்கல்வி:
கல்வி என்றதும் பள்ளிகளும் கல்லூரிகளும் புத்தகங்களும் நினைவில் எழுவது இயல்பே. ஆனால் சுவாமிஜியைப் பொருத்த வரை ஆங்கிலேயன் அறிமுகம் செய்த இன்றைய கல்வி கல்வியே அல்ல.
வெறும் புத்தகப் படிப்பால் எந்தப் பயனுமில்லை. சிறந்த குணத்தை உருவாக்குகிற, மன வலிமையை வளர்க்கிற, அறிவை விரியச் செய்கிற, ஒருவனை தன் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை என்கிறார் சுவாமிஜி.
சுருக்கமாக, ஆன்மிகப் பின்னணியில், அதாவது ஒழுக்க வாழ்க்கை, மன வலிமை ஆகியவற்றின் பின்னணியில் தரப்படுகின்ற தொழிற் கல்வியையே விவேகானந்தர் கல்வியாகக் கருதினார் எனலாம்.
பல தொழில்கள் நிறைந்த நமது நாட்டிற்கு ஏற்ற தொழிலாக, நாட்டின் முக்கியத் தொழிலாக விவசாயத்தைக் கருதினார் விவேகானந்தர்.
விவசாயம் : அன்றும் இன்றும்
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் விவசாயம் மிகவும் பின்னடைந்திருந்தது. இந்தியா விவசாய நாடு. விவசாயத்தை ஊக்குவித்து வளர்க்காவிட்டால் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்பதை ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் உணர்ந்திருக்கவில்லை. உணர்ந்ததும் செயல்படத் தொடங்கினர். விவசாயத்தை வளர்த்தார்கள். ஆனால் ஒருதலைப்பட்சமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அரசுக்கு லாபம் தரக்கூடிய பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சணல், அவுரி போன்றவற்றை விவசாயம் செய்யுமாறு அனைவரையும் வற்புறுத்தினார்கள். மறுத்த விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினார்கள். சாதாரண விவசாயிகள் உணவு வகைகளைப் பயிரிட ஆங்கிலேயர் அனுமதி மறுத்தனர்; தாங்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. விளைவு?
அனைத்திற்கும் ஆங்கிலேயர்களை நம்பி வாழ்கின்ற நிலைமையில் இருந்த சாதாரண மக்கள் கதியற்றுப் போனார்கள்.
பஞ்சம் என்பது இன்று நமது நாட்டில் பழகிப் போன அன்றாடக் காட்சியாகிவிட்டது. ஒரு சாபமாகவே நம்மைப் பிடித்துள்ளது. இப்படி அடிக்கடி பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற வேறு ஏதாவது நாட்டைக் காண முடியுமா? முடியாது என மனம் வருந்துகிறார் விவேகானந்தர்.
அன்று ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டனர். இன்று? நம்மை நாமே ஆள்கிறோம். ஆனால் இன்று பெரிதாக நிலைமை மாறிவிட்டதா என்ன!
அன்று பஞ்சத்தால் மடிந்தனர். இன்று அதைவிடக் கொடுமையாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே விவேகானந்தரின் கருத்துகள் அன்று போல், ஏன் அன்றைவிட அதிகமாக இன்றைய காலத்திற்கு ஏற்றனவாக உள்ளன. விவசாயம் பற்றிய அவரது கருத்தைக் காண்போம்.
இந்தியாவின் முதுகெலும்பு: விவசாயம்
இந்தியா ஒரு விவசாய நாடு. இதை நாம் மறக்கக் கூடாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் மிகப் பேரளவிற்கு விவசாயத்தையே சார்ந்துள்ளது. எனவே விவசாயம் ஒரு தொழிலாக ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு அரசாங்க அளவிலும் சரி, தனிமனித அளவிலும் சரி தயக்கமே காணப்படுகிறது. விவேகானந்தர் கூறுகிறார்:
கிராமவாசி ஒருவன் இரண்டு ஆங்கில நூல்களைப் படித்துவிட்டால் போதும், நகரத்திற்கு ஓடுகிறான். கிராமத்தில் அவனுக்கு எவ்வளவோ நிலம் இருக்கும். ஆனால் அவனுக்கு அது போதாது. பட்டணத்தில் வேலை செய்து அவன் வசதிகளை அனுபவிக்கத் துடிக்கிறான். இதனால்தான் மற்ற இனங்களைப் போல இந்துக்கள் முன்னேறவில்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால் மிகக் குறுகிய காலத்தில் நமது நாடு அதோகதியில் ஆழ்ந்துவிடும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இங்கே தானிய விளைச்சல் போதவில்லை. விவசாயத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆனால் இதை யாரிடமாவது சொன்னால், நான் படித்தவன், நானா விவசாயம் செய்வது? நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் விவசாயி ஆவதா? ஏற்கனவே நாடு முழுவதும் விவசாயிகள் நிறைந்துள்ளனர். அதனால்தான் நாடே இப்படி சீர்குலைந்து கிடக்கிறது என்கிறான். ஆனால் இது ஒருபோதும் உண்மையல்ல…. ஜனக மன்னர் ஒரு கையால் ஏர் உழுதுகொண்டு மறுகையால் வேதங்களைப் படிப்பது பற்றி மகாபாரதத்தில் வருகிறது. பண்டைய நமது முனிவர்கள் விவசாயிகளாக இருந்தார்கள்.
விவசாயம் ஒரு விஞ்ஞானம்
இங்கே விவேகானந்தர் காட்டுகின்ற உதாரணம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. விவசாயம் செய்பவர் சாதாரண மனிதர் அல்லர். ஒரு மன்னர், ஜனகர். அவர் எப்படி அதில் ஈடுபட்டார்?
ஒரு கையால் ஏர் உழுதுகொண்டே மறுகையால் வேதங்களைப் படித்தபடி! இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? வேதங்கள் அறிவுக் களஞ்சியங்கள். வேதங்களைப் படித்தபடி ஏர் உழுதார் எனில், அறிவுபூர்வமாக விவசாயத்தில் ஈடுபட்டார்.
இதைப் பற்றி சுவாமிஜி கூறுகிறார்:
விவசாயம் என்னும் போது இன்றைய நம் விவசாயிகள் செய்வது போன்ற பாமரத்தனமான விவசாயத் தொழிலை நான் கூறவில்லை. அமெரிக்காவைப் பாருங்கள். விவசாயம் ஒன்றைப் பெருக்கியதன் மூலமே அவர்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள். அதுபோல் நாமும் விவசாயத்தை ஒரு விஞ்ஞானமாகக் கற்க வேண்டும். விஞ்ஞான அடிப்படையில் அதனை வளர்க்க வேண்டும். கிராமங்களில் வாழ்வதால் ஆயுள் அதிகரிக்கிறது. நோய்நொடிகள் அங்கு மிகவும் குறைவு. படித்தவர்கள் சென்று கிராமங்களில் வசிக்கத் தொடங்கினால் கிராமங்கள் முன்னேற வாய்ப்பு உண்டு. அங்கே விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்யப்படுமானால் விளைச்சல் பெருகும். இவ்வாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்ட முடியும். அவர்களின் அறிவுத்திறன் பெருகும். அவர்கள் நல்லவற்றைக் கற்றுக்கொள்வார்கள். கிராமங்களுக்குப் போய் விவசாயத்தை மேற்கொண்டு, கிராமத்தினருடன் வாழ்ந்து, அவர்களை உங்கள் உறவினர் போல் கருதி, நட்புணர்ச்சியுடன் கலந்து பழகிப் பாருங்கள். அவர்கள் உங்களுக்காகத் தங்கள் உயிரையும் தரத் தயாராக இருப்பதைக் காண்பீர்கள். இன்று நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்ன? பாமரர்களுக்கும் கல்வி அளிப்பது, தாழ்ந்த ஜாதியினருக்கும் மிகவுயர்ந்த உண்மைகளைப் போதிப்பது, அவர்களிடம் அன்பும் இரக்கமும் காட்டுவது. கதைகள், உவமைகள் போன்றவை மூலம் அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். இதை நாடு தழுவிய அளவில் ஒரு தேசிய இயக்கமாகச் செய்தோமானால் மற்ற வழிகளில் ஆயிரம் வருடங்களில் பெறுவதைவிட நூறு மடங்கு பலனைப் பத்து ஆண்டுகளிலேயே நாம் சாதிக்கலாம்.
புதிய பாரதம் தோன்றும்
இப்படியெல்லாம் நடைபெறுவது சாத்தியமா? இப்படித்தான் நடக்கும் என ஆணித்தரமாகக் கூறுகிறார் சுவாமிஜி.
என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள் – உழைப்பாளர்களின் எழுச்சி முதலில் ரஷ்யாவில் உண்டாகும். பின் சீனாவில் தோன்றும். அதன் பிறகு இந்தியாவில் எழும். புதிய உலகை உருவாக்குவதில் அந்த இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
விவேகானந்தருடைய இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை வரலாறு நிரூபித்ததும், நிரூபித்து வருவதும் உண்மையே அல்லவா!
இந்தப் புதிய இந்தியா எங்கிருந்து எழும்?
கலப்பை ஏந்திய விவசாயிகளின் குடிசைகளிலிருந்து, மீனவர்களின், அருந்ததியர்களின், தோட்டிகளின் குடிசைகளிலிருந்து, மளிகைக்கடைகளிலிருந்து, பலகாரக் கடையின் அடுப்புக்கு அருகிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து, கடைகளிலிருந்து, சந்தைகளிலிருந்து என்று செல்கிறது, விவேகானந்தரின் சிந்தனை. பணக்காரர்களிடமிருந்து, ஆள்பவர்களிடமிருந்து வரும் என்று அவர் ஏன் கூறவில்லை?
ஏனெனில் இந்தியாவைப் புரிந்து கொண்டவர் அவர். இந்திய வரலாற்றை அறிந்தவர் அவர். இந்தியாவின் போக்கை உணர்ந்திருந்தவர் அவர். இதனுடன் உலக வரலாறு, சமூக இயல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவருக்கு அசாத்திய அறிவு இருந்தது. முக்கியமாக, தீர்க்க தரிசனம் படைத்தவர் அவர். இவற்றின் மூலம் அவர் புரிந்து கொண்டது என்ன?

மனித சமுதாயம் வரிசையாக புரோகிதர் (பிராமணர்), மன்னர் (க்ஷத்திரியர்), வியாபாரி (வைசியர்), உழைப்பாளர் (சூத்திரர்) என்ற நான்கு பிரிவினரால் ஆளப்பட்டு வருகிறது என்பதைக் கண்டார் சுவாமிஜி. வேதகாலத்தில் சக்தி முழுதும் புரோகிதர்களின் கையில் இருந்தது. புத்த மதத்தின் வளர்ச்சியுடன் புரோகிதர்களின் ஆதிக்கம் ஒழிந்தது. தொடர்ந்து மன்னர்களின் ஆதிக்கம் ஓங்கியது. வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயரின் ஆதிக்கம் வைசிய ஆதிக்கம்.
இந்தச் சுழற்சி முறையின்படி, இனி வருவது உழைப்பாளர்களின், பாமரர்களின், சாதாரண மனிதர்களின் ஆதிக்கம். முதல் மூன்று காலங்களும் கடந்துவிட்டன. இப்போது கடைசிக் காலம் வந்துள்ளது. அவர்கள் அதைப் பெற்றேயாக வேண்டும். அதை யாரும் தடுக்க முடியாது என்று சுட்டிக் காட்டுகிறார் விவேகானந்தர்.
உழைக்கும் வர்க்கத்தினரின் இந்த எழுச்சி உலகின் பல நாடுகளிலும் தோன்றிவிட்டது. எனவே அந்த நாடுகள் விரைந்து முன்னேறுகின்றன. இந்தியாவிலும் அந்த முன்னேற்றம் வர வேண்டுமானால் ஏழைகளும், உழைப்பாளிகளும் முன்னேறியே ஆக வேண்டும். இந்த முன்னேற்றத்தில் விவசாயம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
அப்படி விழித்தெழுந்து வளர்ச்சி கண்ட பாரதத்தின் காட்சியை விவேகானந்தர் இவ்வாறு வர்ணிக்கிறார்:
இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. பெருமை பொருந்தியதாக, யாராலும் வெல்லப்பட முடியாததாக, ஒரு முழுமை பெற்ற இந்தியா எழுவதை என் மனக்கண்ணில் நான் காண்கிறேன்.
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 2014).
$$$