-மகாகவி பாரதி
கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

முன்னுரை- 6
“பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்” என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, ‘ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்’ என்ற உறுதியான நம்பிக்கை.
“வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ் செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை, எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற சொல்லா லழியுந் துயர்”
இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான்:-
“எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்” (கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்)
“உன் மனத்தை எனக்கு ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிடு. நீ என்னையே எய்துவாய். இஃதுண்மை. உனக்குப் பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன். நீ எனக்குப் பிரியமானவன்.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 65-ஆம் சுலோகம்)
“எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)
நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.
பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலுரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டிருக்கிறது.
இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக்கொண்ட பிறகுதான், கண்ணபிரான் அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப் பெருமாளையங்கார்-
“மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை வைத்தவளச்சங் கெடுத்தான் வாழ்வு”
என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். “உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்த முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு வாழ்விடம்” (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.
“சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச் சிவாய வே”
என்று நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம். “தம்மை ஒரு சுற்றாணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை” என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.
இனி, இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சந் தீர்த்துக் காப்பானென்று எதிர்ப்பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும், வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் – எல்லாம் கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றூணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். இந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ஙனமெனில், சொல்லுகிறேன்.
முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச்சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.
மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருத வேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய் விட வேண்டுமென்பது கருத்தன்று.
ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் – இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வடிவமாக உடையவன், எனினும், மனித வதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாந் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.
மேலும், நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக் கருத வேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத க்ஷயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் க்ஷயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. க்ஷயரோகம் நேரும்போது சாமான்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாகிக் கொண்டு, க்ஷயரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிக்கொண்டு வருந்து மடிவதுபோல் ஞானி செய்ய மாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.
“ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே” – ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாலேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின்.
அவனன்றி ஓரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.
“கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” இதுவே பக்தி.
அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான்.
அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.
“ஸம்சயாத்மா விநச்யதி” – ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.
(தொடர்கிறது)
$$$