-சுவாமி பஜனானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி பஜனானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி; பேலூரில் உள்ள மடத்தின் தலைமையகத்தில் உள்ளார். ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த அறங்காவலர்களுள் ஒருவர்; ‘பிரபுத்த பாரத’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்; சிறந்த சிந்தனையாளர்; எழுத்தாளர்; பல நூல்களை எழுதி இருக்கிறார். அன்னாரது கட்டுரை இங்கே...

விவேகானந்தர் மனிதனின் ஆன்மிகப் பரிமாணத்திற்கே முக்கியத்தும் கொடுத்தார். மதத்திலும், அதன் மாறாத, பிரபஞ்சம் தழுவிய உண்மைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நவீனச் சிந்தனைகளுடன் சமரசப்படுத்தினார்.
மனிதனை ஒருவிதப் போதையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாக மதத்தைக் கண்டார் காரல் மார்க்ஸ். விவேகானந்தரோ, மதத்தை மனிதனுக்குச் சுதந்திரம் தரக்கூடிய ஒன்றாகக் கண்டார்.
தான் இன்னார் என்று தவறாகக் கருதியுள்ளவனுக்கு அவனது உண்மை இயல்பை உணர்த்தி, அவனை எல்லையற்ற பரம்பொருளுடனும், மனிதகுலம் முழுவதுடனும் ஒன்றுபடச் செய்வதற்கான ஒரு வழியே மதம்.
– சுவாமிஜியின் இச்செய்தி மனித குலத்தின் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளது.
மனிதன் மற்றும் வேலை பற்றி கார்ல் மார்க்ஸும் சுவாமி விவேகானந்தரும் வேறுபடும் இடங்கள்:
1. மனிதனின் ஆன்மிகப் பரிமாணத்தை ஏற்க மறுத்ததும், சமுதாயத்தில் மதத்தின் ஆக்கப் பூர்வமான பங்கை ஏற்றுக் கொள்ளாததும் மார்க்ஸின் முக்கியக் குறைபாடுகள். ஃப்யூவர்பேக்கின் கருத்துகளின் தாக்கமும், ஐரோப்பாவில் அவர் எதிர்கொள்ள நேர்ந்த, பண்படாத, கொள்கை வெறி பிடித்த மதக் கோட்பாடுகளும் இதற்கு முக்கியக் காரணங்கள்.
மேலும் பாதிரிகள் திரித்துக் காட்டிய இந்து மதத்தையே மார்க்ஸ் அறிந்திருந்தால், இந்து மதம் பற்றியும் அவர் தவறான கருத்தையே கொண்டிருந்தார்.
2. மார்க்ஸும் சரி, விவேகானந்தரும் சரி ஒரு லட்சிய சமுதாயத்தைக் கனவு கண்டனர். ‘உயர்ந்த உண்மைகளைச் செயல்முறைப்படுத்தும் சமுதாயமே மிகவும் உன்னத சமுதாயம். இது தான் எனது கருத்து. மிக உயர்ந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்குச் சமுதாயம் தயாராக இல்லாவிட்டால், அதைத் தயார்ப்படுத்துங்கள். இதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ, அவ்வளவிற்கு நல்லது’ என்றார் விவேகானந்தர் (ஞானதீபம், 3.207).
மக்கள் புரட்சியால் மட்டுமே அத்தகையதொரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார் மார்க்ஸ். விவேகானந்தரோ, சாதாரணக் கல்வி, ஆன்மிகக் கல்வி இரண்டையும் உரிய முறையில் ஒருங்கிணைத்துப் பரப்புவதன் மூலம் அத்தகைய ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஏழைகளைப் புறக்கணிப்பதும், அவர்களைச் சுரண்டுவதும் கூடவே கூடாது என்று சுவாமிஜி கூறினாலும், உயர் வகுப்பு மற்றும் தாழ்ந்த வகுப்பு பிரிவினரிடயே மோதல்கள் கூடாது என்றும் வற்புறுத்தினார் (ஞானதீபம், 11. 269).
3. வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஒருவன் ஏமாற்றப்படும்போது ஒருவனது திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்படாமலே போகின்றன. அவன் வேலையிலிருந்து விலகலுக்கு உள்ளாகிறான். இத்தகைய விலகலுக்கு உள்ளாகாமல் ஒருவன் வாழ வேண்டுமென்றால் முழு சமுதாயமும் மாற வேண்டும் என்று நம்பினார் மார்க்ஸ்.
அதாவது, தனிமனிதன் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி ஒரு முழு மனிதனாக வாழ வேண்டுமானால் சமுதாயம் மாறியிருக்க வேண்டும். ஆனால் சமுதாயம் முழுமையும் மாறும் வரை ஒருவன் காத்திருக்க வேண்டியதில்லை. தனிநபர் நிலையிலேயே ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்றார் சுவாமிஜி. வேலையைப் பற்றிய அவனது கண்ணோட்டம் மாற வேண்டும். அத்தகைய மாறிய கண்ணோட்டத்துடன் வேலை செய்தால் அதன் மூலம் அவன் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்பது விவேகானந்தரின் கருத்து.

4. மார்க்ஸின் கொள்கைகள் முதலாளித்துவ நாடுகளுக்காக எழுதப்பட்டவை அல்ல. ஏனெனில் முதலாளித்துவம் நீண்ட காலம் நிலைக்காது என்று நம்பினார் மார்க்ஸ். ஆனால் முதலாளித்துவம் நிலைத்தது மட்டுமல்ல, முன்பு சோஷலிசக் கருத்துகளை ஏற்றிருந்த நாடுகளில்கூட அது எவ்வித எதிர்ப்பும் இன்றிப் பரவியது.
விவேகானந்தர் தமது செய்தியை இரண்டு வித நாடுகளுக்காக அளித்தார்:
1. பணக்கார, முதலாளித்துவ மேலைநாடுகள்
2. இந்தியா போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகள்.
அவருக்கு எந்த நாட்டிடமோ, தனிமனிதரிடமோ விருப்பு- வெறுப்பு கிடையாது. கிழக்கோ, மேற்கோ எந்த நாடானாலும் சரி, மனிதன் எல்லா இடங்களிலும் சங்கலிகளால் கட்டுண்டுக் கிடப்பதை அவர் கண்டார்.
அதிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆன்மாவில் நிறைந்துள்ள ஆற்றல்களை அவன் வெளியே கொண்டு வருவதில் அவனுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
எனவே சுவாமிஜியின் செய்திக்குக் கால எல்லைகளோ, இட எல்லைகளோ இல்லை. அவரது செய்தி, மேலைநாடுகளுக்கும், அதுபோலவே இந்தியாவிற்கும் என்றும் பொருந்தும்.
‘வறுமையிலிருந்து வளமைக்கு’ புத்தகத்திலிருந்து. நன்றி: விவேகானந்தரைக் கற்போம், தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, 2012.
$$$