விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி

-அரவிந்தன் நீலகண்டன்

அணுவியல் விஞ்ஞானியான திரு. சத்யேந்திரநாத் போஸ் (1874- 1974), மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்.  சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கண்ணோட்டம் தொடர்பாக, எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரை இது…

உண்மையான அஞ்சலி:

சுவாமிஜி இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகளை அறிவியல் அறிஞரான சத்யேந்திரநாத் போஸ் கூறியது:

சுவாமிஜியின் கருத்துகளுக்காகவே அவரது சீடர்கள் தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்ததால் அவருக்குப் பின்னும் சுவாமிஜியின் பணி தொடர்ந்தது. இன்றைக்கும் அப்பணிகள் பெருமளவு முடிக்கப்பட்டுள்ளன என்றாலும்,  நம் முன் இன்று நாம் எண்ணிப் பார்க்காத இடங்களிலிருந்து எழுந்துள்ள புதிய சவால்கள் நிற்கின்றன.

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு தருணமும் சந்திக்கும் சவால்களை எதிர்நோக்க உறுதியான சங்கல்ப சக்தி உள்ளவர்கள் தேவை. நாம் இன்று எதிர்நோக்கும் சவால்களைச் சந்திக்க சுவாமி விவேகானந்தரை மனதில் கொள்ள வேண்டியுள்ளது. நாம் அவரது கொள்கைகளை எக்காலத்துக்கும் பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவரைக் குறித்து நாம் பெருமைப்படுவதில் பொருளில்லை.

பனிமலையின் புயல் போல் பணியில் ஈடுபடுங்கள் என அறைகூவல் விடுத்தார் சுவாமி விவேகானந்தர். நாம் அவர் கூறுவது போல அவரது கொள்கைகளுக்காக வீரத்துடனும், தியாகத்துடனும் நம்மை நாமே அர்ப்பணம் செய்வது மட்டுமே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

(1963 -ல் ரஜனசங்கலன் பத்திரிகைக்கு போஸ் எழுதியது)

சத்யேந்திரநாத் போஸ்

தேச ஒற்றுமை:

நம் நாட்டின் பாரம்பரியம் என்பது பல நூற்றாண்டுகளான உழைப்பின் விளைவு. அதனுடன் அது எத்தனை தொன்மையானதாக இருந்தாலும் ஒன்றுபட்டு உறையவே நாம் விழைகிறோம்.

பாரம்பரியத்துக்கான மரியாதையே தேச ஒற்றுமையின் அடிப்படை. யாராவது தனது சுயநலத்தைக் குறைத்துக் கொண்டு இந்த நாடு முழுக்கச் சுற்றி வந்தால், அரசியல் துறையில் காண முடியாத மனம் சார்ந்த ஓர் உறவை அவன் நாடு முழுக்கக் காண முடியும்.  இது எனது அனுபவம்.

நம் தேசத்தின் ரிஷிகள், நமது புனித யாத்திரீகர்கள், சாதாரண இந்து சிறுவர் சிறுமியர், கிராமங்களில் வசிக்கும் மாற்று மதத்தினரிடமும் கூட இந்த ஒற்றுமையின் இழை ஊடுருவிச் செல்வதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒற்றுமை எளிதில் பிரிக்க முடியாதது.

(1962-ல் ஹைதராபாத்தில் ஆற்றிய உரை)

தேச சேவை:

ஒரு பாரம்பரியத்தால் இணைந்த ஒரு தேசத்தின் மக்கள் தனியொரு ஓட்டக்காரனாக அல்ல, தொடர் ஓட்டப்பந்தய வீரர்களைப் போலச் செயல்பட வேண்டும்.

தேசக் கொடியின், தேச உயர்வின் முன்னேற்றமே லட்சியமாகச் செயல்பட வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளின் கடும் உழைப்பும் தியாகங்களும் வாழ்வின் தரத்தை உயர்த்தவும், வறுமை, நோய் மற்றும் பிணிகளிலிருந்து மக்களை விடுவிக்கவும் வேண்டும். அந்த முயற்சிகளில் அவர்கள் வீழ்ந்தாலும் இப்பணியில் எத்தனை தூரம் அவர்கள் முன்னேறியுள்ளனர் என்பதே நம் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்வின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதை நம் முதல்தர தத்துவவாதிகள் தவிர்த்து வந்தனர். அதனால் இரண்டாந்தர சிறு மனப்பான்மை கொண்டவர்கள் பெரும் தத்துவங்களுக்கு உதட்டளவு மரியாதை கொடுத்தபடி யதார்த்த வாழ்வில் பொறாமைக்கும் சச்சரவுகளுக்கும் இடம் அளித்துவிட்டனர்.

இதன் விளைவாக அந்நியப் படையெடுப்புகளுக்கு நம் நாடு ஆளாகியது. பல நூற்றாண்டுகள் நாம் அடிமைத்தளையில் கிடக்க நேரிட்டது. நல்ல காலமாக இப்போது விழிப்புணர்வின் அறிகுறிகள் தென்படுகின்றன.

நம் உலக கடமைகளுக்கும் நம் ஆன்மிகப் பார்வைக்கும் ஓர் இசைவை நாம் கொண்டு வரலாம். நம் தேசம் அண்மையில் (1963) சுவாமி விவேகானந்தரது நூற்றாண்டைக் கொண்டாடியது. மாபெரும் மகானான அவர் தனிப்பட்ட மனிதனின் முக்திக்கு மேலாக மானுடம் முழுமைக்குமான கடைத்தேற்றத்துக்குப் பாடுபடுவது என்பதை வலியுறுத்தினார்.

நாம் அனைவரும் அவரது அறைகூவலை ஏற்போம். நமது கச்சைகளை வரிந்து கட்டி இன்று சக்தியில் புதைந்து நிற்கும் மானிடத்தின் தேருக்குத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்துவோம்.

(மே 1963-ல் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை)

நன்றி: 
விவேகானந்தரைக்  கற்போம்! 
–தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர்  
ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை- 2012

காண்க: சத்யேந்திரநாத் போஸ்

$$$

Leave a comment