காவியில் பூத்த கனல்

-ஆர்.பி.சாரதி

திரு. ஆர்.பி.சாரதி   ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக  ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர  குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு  கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர்.  சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

கதிரையும் நிலவையும் தாங்கும், விரிந்த மன வானம்…

இதயத்தை விட்டு என்றும் இணைபிரியாத பாரத மண்ணின் பற்று…

பொய், போலி, புரட்டு, பொறாமை அவலங்களைப் பொசுக்கும் பெரு நெருப்பு…

ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏங்குபவரை அன்பு இறகால் வருடும் தென்றல்…

இந்திய மண்ணின் ஈரம் காக்கவும், வேதநெறி வளம் பெருகவும் வெள்ளமாகப் பாயும் தண்ணீர்…

– இந்தப் பஞ்சபூத விந்தைகளின் இணைப்புத் தான் சுவாமி விவேகானந்தர்.

“நீயே கடவுள்; நீயே நர (நாராயணன்)ன்; உலக மக்களின் கவலைகளையும், துயரங்களையும் தீர்க்க வந்தவன்”  – இளைஞன் நரேந்திரனை, தனக்காக வாழாது மனித மனம் இளைப்பாற வந்த ஆலமரமாக்கிய குருநாதர் பரமஹம்சர் கரங்குவித்து வணங்கி, சீடனாக வரவேற்றார், இந்த வார்த்தைகளால்.

அவர் வாழ்க்கையில் வந்து மோதிய முரண்களை ஒன்றிணைத்துச் சாதனை படைத்தது தான் அவர் வெற்றி! கையில் காசின்றி இருந்த நேரம் உண்டு; அரசர்களும், பிரபுக்களும் அவர் காலடியில் செல்வத்தைக் கொட்டக் காத்திருந்ததுண்டு; வாழ்ந்த வீட்டை விழுங்க வந்த உறவினரை வழக்கில் சந்திக்க நேர்ந்ததும் உண்டு; தங்கள் அரண்மனையில் அவர் வந்து தங்க மாட்டாரா என்று திவான்களும், அரசர்களும் ஏங்கிய காலமும் உண்டு.

வாட்டும் குளிரில் வசதிகளற்றுத் தவித்து, துணையின்றி ரயில் நிலையப் பெட்டியின் மீது படுத்து இரவைக் கழித்ததும் உண்டு. ஆடம்பரக் கட்டில்களும் சுகமான பஞ்சணைகளும் அவருக்காகப் போடப்பட்டு, அவை காத்துக் கிடந்ததும் உண்டு.

அவர் ஏழையினும் ஏழைதான். ஆனால் அவரால் ஏழையரின் துயர் துடைக்க ஓர் உலக அமைப்பையே உருவாக்க முடிந்தது. அவர் துறவி தான்; ஆனால் அவர் உறவுக்காக உலகமே ஏங்கியது. அவர் அதிகாரம் ஏதும் இல்லாதவர் தான்; ஆனால் அவர் நா அசைந்தால் நாடசைந்தது,

அவர் புகழைத் தேடாதவர்; ஆனால் புகழ் அவரிடம் புகலிடம் தேடியது.

“ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார்; விவேகானந்தரோ, புதிய பாரத தேசத்தையுண்டாக்கியவர்களிலே முதல் வகுப்பைச் சேர்ந்தவர்” – இது புதுவையில் விழாவெடுத்து மகாகவி பாரதி ஆற்றிய உரை.

“தேசாபிமான ஸிம்ஹமெனத் திகழ்ந்து தேசத்திலே ஒரு புதிய உணர்ச்சியையும, ஆதர்ஷத்தையும் உண்டாக்கியவர்” என்பார் தேசபக்தர் சுப்பிரமணிய சிவா.

“இந்தியா ஏதோ பிழைத்திருந்தால் போதும் என்று மட்டும் விழித்தெழுந்து நிற்கவில்லை; உலகை வெற்றி கொள்ளவும் தான் என்பதற்கான முதல் கண்கூடான அடையாளம் இவர் வருகை!” – கிருஷ்ண தரிசனம் பெற்ற மகரிஷி  அரவிந்தரின் தீர்க்கதரிசனம் இது.

“இவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் நான் இவர் காலடியில் கிடந்திருப்பேன்; நான் சொல்வதில் தவறில்லையென்றால், நவீன இந்தியா இவர் படைத்தது தான்” – இப்படி முழங்கியவர் விடுதலைப் போரின் பீரங்கி நேதாஜி!

“இவர் இந்து சமயத்தைக் காப்பாற்றினார்; இந்தியாவைக் காப்பாற்றினார்; இவர் மட்டும் இல்லையென்றால் நம் சமயத்தை இழந்திருப்போம், விடுதலை கூடப் பெற்றிருக்க மாட்டோம்” – இவை மூதறிஞர் ராஜாஜியின் முத்துச் சொற்கள்.

இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் சத்தியவாக்கு, “இவருடைய நூல்களைப் படித்த பிறகு என் தாய்நாட்டுப் பற்று ஆயிரம் மடங்கு பெருகியது” என்று ஒலித்தது.

விடுதலை இந்தியாவின் முதல் முடிசூடா மன்னன் நேரு கூறினார், “இந்தியாவின் நவீன தேசிய இயக்கத்தில் தீவிரப்பங்கு கொண்ட பலர் இவரிடமிருந்து தான் உத்வேகம் பெற்றனர்”.

இந்திய விடுதலைச் சிற்பியர் பலரைச் செதுக்கிய தலைமைச் சிற்பி என்று சிறப்பிக்கப்படும் விவேகானந்தரின் நாட்டுப்பற்று தான் எப்படிப்பட்டது?

“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு உங்கள் பாரத மாதாவைத் தவிர மற்ற கடவுளர்களைஎல்லாம் மறந்து விடுங்கள்” என்றவர் சுவாமி விவேகானந்தர். இதையே “ஆலயங்தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே” என்பார் மகாகவி பாரதி!

கீழைநாட்டு ஞான சூரியனாக உலக சமய மாநாட்டில் மற்ற மதத் தலைவர்களை மெழுகுவர்த்தியாக்கிய விவேகானந்தருக்கு தேசபக்தியே முதல் மதம்; பிறகே இந்து மதம்!

மேலைநாட்டுப் பயணத்தில் இந்து சமய மேன்மையை உணர்த்திவிட்டு, ‘இந்தியாவெனும் ஞானபூமிக்கு மத வியாபார மிஷனரிகளை அனுப்புவதே வீண்’ என்று அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றே எழுதும் அளவுக்குப் புரட்சி முழக்கம் புரிந்துவிட்டு தாயகம் திரும்பும்போது விவேகானந்தரை ஓர் ஆங்கிலேயர் கேட்டார், “இப்போது உங்கள் நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

சுவாமி சொன்னார், “இந்தியாவை விட்டு வந்த போது அதைநேசித்தேன், ஆனால் இப்போது, அதன் தூசி கூட எனக்குப் புனிதமாகிவிட்டது.அங்கு வீசும் காற்று எனக்குப் புனிதமானது”.

“நமக்கு இதுஅழுவதற்கு நேரமல்ல; ஆனந்தக் கண்ணீர் கூட இப்போது கூடாது; போதுமான அளவு நாம்அழுதாயிற்று….” என்று இந்தியர்கட்கு அறிவுரை சொன்ன வீரத்துறவி விழிகளிலே கண்ணீர் வழிந்ததுண்டு. ஏன்? அவர் யாருக்காக அழுதார்?

சிகாகோ மாநாட்டு உரையாற்றிய அந்நாளின் இரவு… உறங்கி ஓய்வெடுக்க மெத்தென்ற பஞ்சு மெத்தை… பட்டுக்கம்பள விரிப்பு… சுவாமி தூங்கவில்லை. காரணம், புகழ்ப் பெருமித மகிழ்ச்சியா? அல்லவே அல்ல.

கண்ணீர் கரை புரண்டது… தலையணை நனைந்துவிட்டது. தரையிலே புரண்டார். அப்போது அன்னை காளியிடம் அவர் அழுது கேட்டது என்ன?

“தாயே, எனக்குப் புகழும் பெருமையும் கிடைத்து என்ன பயன்? என் புகழால் என்னபயன்? அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியற்று, வெறும் வயிற்றோடு, சாலையோரங்களில் தரையில் கைகளையே மடித்துத் தலையணையாக வைத்துப் படுக்கும்கோடானு கோடி பாமர மக்களை யார் உயர்த்துவார்கள்? தாயே அவர்களுக்குத்தொண்டாற்ற எனக்கு வழிகாட்டு”.

பேலூர் மடத்திலேயே கூட இந்திய மக்கட்காக அவர் கண்ணீர் விட்டதுண்டு. மனித சமுதாயத்துக்குச் சேவை செய்யாத எந்தச் சமய அமைப்பும் பயனற்றது என்பது சுவாமிகளின் திண்மையான கருத்து. “மனிதர்கள் துயரைத் துடைக்க முடியாத எந்தச் சமயமோ, ஏன்,  ராமகிருஷ்ணரோ கூடஎனக்குத் தேவையில்லை” என்ற நிலைக்கும் அவர் வந்து விடுவார்.

ஒரு சமயம் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய்…. மக்கள் துயரம் வார்த்தைகளுக்குள் அடங்காதது. சுவாமி, சகோதரி நிவேதிதை அம்மையார் துணையுடன் நிவாரணப் பணிக்குத் தொண்டர்படை அமைத்துவிட்டார். ஆட்கள் மட்டும் போதுமா? வெறுங்கையா முழம் போடும்? நிதி நெருக்கடி! பேலூரில் குருநாதர் ராமகிருஷ்ணர் பெயரில் மடம் அமைக்க நிலம் ஒன்று வாங்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் உயிர் முக்கியம்… நோயுற்றவர்கட்கு உதவி முக்கியம்… மக்கள் சேவை முக்கியமென நிலத்தை விற்கவும் துணிந்துவிட்டார். நல்லவேளை, நிதி நெருக்கடி தொடவில்லை. சுவாமிக்கு மக்கள் சேவையே மதம்.

அவருடைய சமூகப்பணி நாட்டம் அவரை நாத்திகராக்கி விடவில்லை. ஏனென்றால் இந்திய மக்கள் ரத்தத்தில் சமயம் கலந்துவிட்டது என்பது அவர் நம்பிக்கை.

“உலகின் பிற சமயங்களைச் சகித்து, ஏற்றுக் கொள்ளும் பண்பைக் கற்பிக்கும் மதம்….பிற மதங்களும் சத்தியம் என்று நம்பும் மதம்” என்பது தான் அவரது சிகாகோ முதல் முழக்கத்தின் முக்கியக் கருத்து. “ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் நான்மட்டும் வாழ்ந்திருந்தால், அவர் திருவடிகளை என் கண்ணீரால் அல்ல, இதயத்துரத்தத்தால் கழுவி இருப்பேன்” என்று சொன்ன ஞானி விவேகானந்தர் தான். அவரே தான், இந்து மதத்தை இழித்தும், பழித்தும் பேசிவந்த கிறித்தவ வியாபாரப் பாதிரிமார்களை ‘கடலில் தூக்கி வீசுவேன்’ என்றும் எச்சரித்தார்.

‘தாய் பிறன் கைபடச் சகிப்பவனாகி நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ?’ என்று நாட்டுப்பற்றால் சிவாஜியாகிச் சீறினார் மகாகவி பாரதி. நண்பர் சின்ஹாவிடம் சுவாமி கேட்டார், “கிறித்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரே ஹிந்து மதத்தைத்தூற்றுகிறார்கள்; அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேருக்கு அந்த அநீதி பொறுக்காமல் ரத்தம் கொதிக்கிறது?” இப்படி மட்டும் கேட்கவில்லை; “எங்கே உன் தேசபக்தி?” என்றும் வேதனைப்பட்டார்.

தீண்டாமை என்னும் தீமையை இந்து சமயத்தைப் பீடித்த நோயாக வெறுத்தார் சுவாமிஜி. ‘தீண்டாமை நமது மனநோயின் வடிவம்’ என்றும் கூறினார். கேத்ரி நகரில் தீண்டாதவன் என்று விலக நினைத்தவனிடம் சப்பாத்தியினை வேண்டிப் பெற்று விருந்தாக உண்டார்.

அவருடைய விரிந்த பார்வை தொழில்வள நாட்டத்தில் விழுந்த காரணத்தால் தான், டாட்டாவிடம் ‘ஜப்பானியத் தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் ஏன் அத்தொழிலை இங்கு தொடங்கக் கூடாது?’ என்று கேட்கச் செய்தது.

அவருடைய அஞ்சாமை, “உங்களுடைய செல்வம் உங்களுடையதல்ல. ஏழையர்க்குதவ கடவுளால் உங்கட்கு அளிக்கப்பட்டது” என்று அறிவுறுத்தி அறம் செய்யத் தூண்டியது, அமெரிக்காவின் ராக் பெல்லரை!

பெண்ணடிமையைப் பேதமையாகக் கருதினார். இந்தியரை ‘சீதையின் குழந்தைகள்‘ என்று குறிப்பிட்டார். சகோதரி நிவேதிதையை சுவாமிஜி முன்னிலைப்படுத்தியதால் தான், மகாகவி பாரதி, அம்மையாரைத் தம் ஞானகுருவாக ஏற்றார்.

இப்படி, வைரத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், ஒளி சுடர்விடுவது போல சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும் நம்மையும் ஒளிரச் செய்கின்றன. அவரது நினைவே நமக்கு நல்வழி காட்டும். அவரது கனவுகள் நமது நாட்டின் எதிர்கால நனவுகளாகும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s