-சேக்கிழான்
உலகியல் இன்பங்களை விட உயர்ந்தது துறவு என்று கூறுவதற்காக திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணி, அக்கால மன்னரின் முறை வழுவா ஆட்சியின் சின்னமாக செங்கோலை முன்னிறுத்தும் செய்யுள்களைக் கொண்டு இலங்குகிறது....

பகுதி-6: தொல்காப்பியத்தில் செங்கோல் குறிப்பு
.
7. சிந்தாமணியில் சீர்மிகுகோல்
தமிழன்னையின் சிறப்புமிகு அணிகலன்களான ஐம்பெருங் காப்பியங்களுள் நமக்கு இன்று முழுமையாக்க் கிடைத்திருப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவை மட்டுமே. வளையாபதியும் குண்டலகேசியும் இதுவரை கிடைக்கவில்லை. இவை இரண்டும் சமண, பௌத்த காப்பிய கருத்துகளை வலியுறுத்தும் காப்பியங்களாக இயற்றப்பட்டன என்பதை பிற தமிழ் நூல்களில் எடுத்தாளப்பட்ட மேற்கோள்களிலிருந்து அறிய முடிகிறது.
காப்பியச் சுவை மிகுந்ததாகப் போற்றப்படும் சீவக சிந்தாமணியும் நமக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் மட்டும், மிகவும் பாடுபட்டுத் தேடி, மூலமும் உரையும் சரிபார்த்து அச்சிட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால், அற்புதமான இக்காப்பியத்தை நாம் இழந்திருப்போம்.
தமிழ்த் தாயின் நல்லூழ், உ.வே.சா. அவர்களால் இக்காப்பியம் காக்கப்பட்டது. இந்நூலை அரிதின் முயன்று நூலாக்கிய வரலாற்றை தனது சுயசரிதை நூலில் உவே.சா. குறிப்பிட்டுள்ளார். சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பிரதிகளை எங்கெங்கோ முயன்று தேடிக் கண்டறிந்து, பதிப்பிக்கும் பணியில் தாம் ஈடுபட்டிருந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எண்ணங்களையும் உ.வே.சா. இந்நூலில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:
“சிந்தாமணியிலும் அதன் உரையிலும் மூழ்கியிருந்த எனக்கு மற்ற வேலைகளில் கவனம் செல்லவே இல்லை. அந்நூலின் புதுமைச் சுவையை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அதனைப் படிக்கப் படிக்க, பிற்காலத்து நூல்களெல்லாம் எவ்வளவு தூரம் அந்தக் காவியத்திலிருந்து காவிய மரபுகளை அறிந்து அமைத்துக் கொண்டுள்ளனவென்பது நன்கு விளங்கியது”
(என் சரித்திரம்)
-என்கிறார் தமிழ்த் தாத்தா.
அத்தகைய அற்புதமான உவமைநயங்களையும் காப்பியச் சுவையையும் கொண்டதாக, சீவக சிந்தாமணி விளங்குகிறது. இதன் காலம் பொ.யு.பி. பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் கம்ப ராமாயணத்துக்கு முன்னோடி இதுவே என்றும் புலவர்கள் கூறுகின்றனர். கலிப்பாவின் அடுத்த வளர்ச்சி நிலையான, நான்கு வரிகள் அமைந்த விருத்தப்பாவே சிந்தாமணியின் யாப்பு வகையாகும். கம்பரும் ராமாயணத்தை விருத்தங்களில்தான் அமைத்திருக்கிறார்.
திருத்தக்க தேவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்ட சீவக சிந்தாமணி, உலகியல் இன்பங்களை விட அருக தேவனுக்கு வாழ்வை அர்ப்பணிக்கும் துறவே மேலானது என்று நிலைநாட்டுகிறது. எனினும், நூல் முழுவதும் சநாதன (ஹிந்து) சமயத்தின் பல கூறுகள் உவமைகளாகவும் கதைப் போக்கினூடே தகவல்களாகவும் வெளிப்பட்டபடியே உள்ளன. இது அக்காலப் புலவர்களின் சமயப் பொறையை வெளிக்காட்டுகிறது எனலாம்.
வாதீபசிம்மனின் ‘சந்திர சூடாமணி’ என்ற வடமொழிக் காப்பியத்தின் தழுவலாகவே சீவக சிந்தாமணி எழுதப்பட்டுள்ளது. பதிகம் (காப்பிய முன்னுரை) தவிர்த்து 3,141 பாக்களுடன் எழுதப்பட்டுள்ள இக்காப்பியம், மன்னன் சீவகனின் துயரமான பிறப்பு, எண்மரை மணந்த இல்லற வாழ்வு, சதி செய்து ஆட்சியைப் பிடித்த கட்டியங்காரனை வென்று ஆட்சியை மீட்டல், நல்லாட்சி, துறவு பூணுதல் என, விறுவிறுப்பான கதையைச் சொல்லிச் செல்கிறது.
ஏமாங்கத நாட்டின் மன்னன் சச்சந்தனின் மகனாக, அரசி விசையையின் வயிற்றில் உருவானவன் சீவகன். அமைச்சன் கட்டியங்காரனை நம்பி மோசம்போன மன்னன் கொல்லப்பட, விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கின்றான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றிச் சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்திரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம் புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு, மக்கள் ஆதரவுடன் புரட்சி செய்து அரசுப் பதவியை மீள அடைகிறான். அதையடுத்து, 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.
மணநூல், காமநூல் என்று புகழப்படும் இக்காப்பியத்திலும், ஆங்காங்கே செங்கோலின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்…
சீவகனின் தந்தையாகப் போகிற மன்னன் சச்சந்தனை காப்பியத்தின் கதைச் சுருக்கமான பதிகத்தில் அறிமுகம் செய்விக்கிறார் திருத்தக்க தேவர். இதோ அப்பாடல்:
கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.
(சீவக சிந்தாமணி - பதிகம் – 7)
பொருள்: நீதி மாறுபடாத செங்கோலையும், இரக்கம் மிகுந்த ஆட்சி நடத்தும் தண்ணிய வெண்குடையையும், வெற்றிமாலை அணிந்த வெள்ளிய வேலையும், புறங்கொடாத நால்வகைப் படைகளையும், இடிபோலப் பிளிறும் பட்டத்து யானையையும் உடைய மன்னன் சச்சந்தன். அவனது மனைவி நீங்காத கற்பினையுடைய விசயை என்பவளாவாள்.
பதிகத்தின் இறுதியில் சீவகனின் பிற்கால வாழ்க்கை சுட்டப்படுகிறது.
மாமன் மகளான, வேல்போலச் சிவந்த நீண்ட கண்களை உடைய இலக்கணையை மணந்து அவளது அமிர்த இன்பம் நுகர்ந்தவன் சீவகன்; செங்கோல் பொலிவு மிக, குளிர்ந்த வெண்கொற்றக் குடை சூழ சீவகன் ஆள்கிறான்.
சிற்றரசர்கள் குறைவின்றிச் செலுத்திய கப்பத்தால் நிலைத்த செல்வம் மிகுந்திருக்க, செங்கோன்மை மிகுந்த நல்லாட்சி நடைபெற, பகைவருடைய தேர்கள் வணங்கி வழிவிடும் வெற்றிவீரனாக வீற்றிருக்கிறான் சீவகன். ஆயினும், இடியோசை கேட்ட நாகம் போல, அருகரின் அறம் கேட்டு, இவை அனைத்தையும் துறக்க ஆயத்தமாகிறான் சீவகன் என்கிறார் திருத்தக்க தேவர், கதைச் சுருக்கமான பதிகத்தில். இதோ அப்பாடல்கள்:
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,
திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்…
(சீவக சிந்தாமணி- பதிகம் – 26, 27)
பதிகத்தை அடுத்து 13 இலம்பகங்களில் (அத்தியாயங்கள்) சீவகன் கதை சொல்லப்படுகிறது. அதில் முதலில் வரும் நாமகள் இலம்பகம், சச்சந்தனின் வீழ்ச்சியைப் பேசுகிறது.
மணம் புரிந்த நாளில் இருந்து அரசாட்சியை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டு இன்ப நாட்டத்தில், மனையாளிடம் தஞ்சம் அடைந்து கிடந்ததே மன்னன் சச்சந்தனின் பிழை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா? மன்னனின் மயக்கம் அறிந்த அமைச்சன் தானே மன்னனாக சதித் திட்டம் தீட்டுகிறான். செங்கோல் மன்னனாக இருந்தபோதும், சிற்றின்பத்தில் ஆழ்ந்த சச்சந்தன் மண்மகளை இழக்கிறான். இதனை கீழ்க்கண்ட பாடலில் விளக்குகிறார் புலவர்…
விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே.
(சீவக சிந்தாமணி- நாமகள் இலம்பகம் – 1-244).
பிறகு, மன்னனை சதியால் வீழ்த்த முயலும் கட்டியங்காரனை அவையில் எச்சரிக்கும் தருமதத்தன் நல்லுரை கூறித் திருத்த முயல்கிறான்.
“அரசன் முறைமை கெடுவானானால், நவகோள்களும் தம் நிலை மாறிவிடும்; இரவு குறைந்து பகற்பொழுது நீண்டுவிடும்; மழை பொய்த்து, விவசாய விளைச்சல் குன்றும்; அதனால் நாட்டில் பசியும் பட்டினியும் பெருகும்; மகளிரின் கற்புநெறி கெடும்; அறச்சாலைகள் பேண ஆளின்றி இவ்வுலகு கெடும்; எனவே, ஆட்சியை ஒப்படைத்த மன்னன் சச்சந்தனுக்கு துரோகம் நினையாதே” என்கிறான் தருமதத்தன். இதோ அப்பாடல்:
கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்.
(சீவக சிந்தாமணி- நாமகள் இலம்பகம் – 1-255)
இதைப் படிக்கும்போது நமக்கு ஏற்கனவே படித்த மணிமேகலையில் கூறப்படும், செங்கோன்மையின் உயர்வு நினைவுக்கு வரக்கூடும்.
கோனிலை திரிந்திடின் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை...
(மணிமேகலை - துயில் எழுப்பிய காதை- 7: 6-14)
ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காகிறது அவையோர் கூறிய அறிவுரைகள். சதியால் அவன் ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றுகிறான். அரசி விசயை மயிலூர்தியில் தப்ப, சச்சந்தன் போர்க்களத்தில் மாய்கிறான்.
அமைச்சன் கட்டியங்காரன், சச்சந்த மன்னனைப் போரில் கொன்றுவிட்ட நிகழ்ச்சியைப் பாடும்போது,
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
அறச் செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
நாகமுடன் விழுங்கிற்று அன்றே.
(சீவக சிந்தாமணி- நாமகள் இலம்பகம் – 1-290)
என்று சிறந்த உவமைகளுடன் பாடுகிறார் திருத்தக்க தேவர்.
செங்கோல் செலுத்தி நாடாண்டு வந்த சச்சந்தன் என்னும் கதிரவனை, கொடுங்கோல் இருள் எங்கும் பரவுமாறு அமைச்சன் கட்டியங்காரன் என்னும் கருநாகம் விழுங்கியது என்று கூறுகிறார். இது சூரிய கிரஹணத்தைக் குறிக்கிறது; இந்த கிரஹண காலம் சொற்ப காலமே என்பதை முன்கூட்டியே இச்செய்யுள் உரைக்கிறது என்றும் கொள்ளலாம்.
காப்பியத்தின் இறுதியில், பூமகள் இலம்பகத்தில், கட்டியக்காரனிடமிருந்து மீட்ட நாட்டை சீவகன் ஆளும் திறம் காட்டப்படுகிறது. அதில் மன்னனின் நல்லாட்சி போற்றப்படுகிறது.
பகைவனை வென்ற சீவகன் முருகனைப் போல வாகை சூடி தனது அரண்மனையில் புகுந்தான். பகைவனின் உறவினர்களை மன்னித்து அவர்களுக்கு அபயம் அளித்தான். செங்கோல் மன்னன் சீவகன் நாட்டின் பெரு வேந்தனாய் முடி சூடியபின், நாட்டு மக்களுக்குப் பல நன்மைகளைப் புரிகிறான்.
பதினைந்து ஆண்டுகளுக்கு வரிகளையெல்லாம் நீக்கி விடுகிறான். மக்கள் அனைவரும் அன்பு பூண்டு ஒற்றுமையாய் இருந்து பசியும் நோயும் இன்றி வாழ வழிவகுக்கிறான். மேலும் பார்வையற்றோர், நோயுற்று நலிந்தோர், கணவனால் புறக்கணிக்கப்பட்ட மகளிர் ஆகியோருக்குப் புகலிடங்கள் அமைத்து, அவற்றை நிர்வகிக்க பெரும் பொருள் நல்குகின்றான். இறுதியாக, அருக தவமுனிவர் அறவுரை கேட்டு, புதல்வனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, துறவு வாழ்வு மேற்கொள்கிறான் சீவகன். செங்கோன்மையின் இறுதி, மன்னனின் துறவாக நிறைவெய்துகிறது.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -7”