ஸ்வதந்திர கர்ஜனை- 2(30)

தஞ்சை வெ.கோபாலன்

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை (1947)

 

பாகம்-2: பகுதி 30

பூத்தது புதிய யுகம்!

1947 ஆகஸ்ட் 15. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சுதந்திரமாக எழுந்து நின்ற நாள்.

நாமக்கல்லார் பாடியபடி  ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு.   நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது.

ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பிறந்த சுதந்திரத்தையொட்டி இந்தியாவுக்கு ஒரு புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது. இந்திய பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் இருந்த போதே இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக ஒரு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் அமைச்சரவை தூதுக்குழு 1946-இல் இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் உருவான அமைப்பு இது. இந்த அவைக்கு மாகாண அரசாங்கங்களிலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அவையில் மொத்தம் 9 பெண்கள் உட்பட 299 பேர் உறுப்பினராக இருந்தனர்.

சுதந்திரம் வரும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் 1946 செப்டம்பர் 2-ஆம் தேதி தற்காலிக மத்திய அரசு நிறுவப்பட்டது. இந்த அவையில் காங்கிரசுக்கு 69 சதவீத எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் முஸ்லிம்களும், சின்னஞ்சிறு கட்சிகளான பட்டியல் ஜாதியார் கூட்டமைப்பு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, யூனியனிஸ்ட் கட்சி ஆகியோரின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.

1947 ஜூன் மாதத்தில் சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம், பலுசிஸ்தான், மேற்கு பஞ்சாப், நேஃபா எனும் வடகிழக்கு எல்லை மாகாணம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரிந்து போய் கராச்சியில் கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினரானார்கள். ஆகஸ்ட் 15-இல் நாடு இந்தியா- பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தபோது இந்திய அரசியல் நிர்ணய சபையிலிருந்து பிரிந்து போனவர்கள் தவிர மற்றவர்கள் இந்திய சபையில் அங்கம் வகித்தார்கள். முஸ்லிம் லீகில் இருந்த 28 பேர் இந்திய சபையில் தொடர்ந்து நீடித்தனர். பின்னர் சமஸ்தானங்கள் சார்பில் 93 பேர் உறுப்பினர்கள் ஆனார்கள். இப்படி மாறி அமைந்த அவையில் காங்கிரஸ் 82 சதவீதம் பேரைக் கொண்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவி ஏற்றார். அவர் தன்னுடைய அமைச்சரவையில் 15 பேரைச் சேர்த்துக் கொண்டார். வல்லபபாய் படேல் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். 1947 ஆகஸ்ட் 15-இல் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1950 டிசம்பர் 15-இல் அவர் இறந்து போகும்வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

தொடக்கத்தில் லார்ட் மவுண்ட் பேட்டனும், பின்னர் ராஜாஜியும் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றனர். இவை 1950 ஜனவர் 26 வரை நீடித்தது. அதன் பின் இந்திய அரசியல் சட்டம் நிறைவேறி ‘இந்தியா என்கிற பாரதம்’ உருவான பின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் பதவி ஏற்றார்.

நேருஜியின் அமைச்சரவையில் மதரீதியாகப் பார்த்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய இனத்தார் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெண் உறுப்பினர் ஒருவர் மட்டுமே, அவர்தான் ராஜ்குமாரி அம்ரித் கவுர். இனி நேருவின் அமைச்சரவை சகாக்களின் பெயர்களையும் அவர்கள் நிர்வகித்த துறைகளையும் பார்க்கலாம்.

பிரதமர் - ஜவஹர்லால் நேரு    (வெளியுறவுத் துறை)
துணைப் பிரதமர் - சர்தார் வல்லபபாய் படேல் (உள்துறை, சமஸ்தானங்கள்)
நிதி - ஆர்.கே.சண்முகம் செட்டி/ ஜான் மத்தாய்/ சி.டி.தேஷ்முக்
சட்டம் - பி.ஆர்.அம்பேத்கர்
பாதுகாப்பு - பல்தேவ் சிங்
ரயில்வே - ஜான் மத்தாய்/ என்.கோபாலசாமி ஐயங்கார்
கல்வி - மெளலானா அபுல்கலாம் ஆசாத்
உணவு/ விவசாயம் - ஜெய்ராம் தவுலத்ராம்
தொழில் துறை - ஷியாம பிரசாத் முகர்ஜி
தொழிலாளர் - பாபு ஜெகஜீவன்ராம்
வர்த்தகம் - கூவர்ஜி ஹோர்முஸ்ஜி பாபா
தொலைதொடர்பு - ரஃபி அகமது கித்வாய்
நல்வாழ்வு - ராஜ்குமாரி அம்ரித் கவுர்
சுரங்கம், மின்சாரம் - என்.வி.காட்கில்
அகதிகள் நல்வாழ்வு, மறுவாழ்வு குடியமர்த்தல் - கே.சி.நியோகி

இவர்களில் சிலர் மாற்றப்பட்டனர், படேல் காலமானார்.

-இத்துடன் இந்த வரலாறு இந்திய சுதந்திரம் அடைந்த வரை நிறைவு பெறுகிறது.

(நிறைவு)

$$$

Leave a comment