ஒரு நாள் கழிந்தது

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தன் 85 ஆண்டுகளுக்கு முன் ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய சிறுகதை இது... இதில் குறிப்பிடப்படும் முருகதாசர் புதுமைப்பித்தனே தானோ என்ற எண்ணம் படிக்கும் யாருக்கும் வரவே செய்யும். அவ்வளவும் சுய எள்ளல். தமிழில் எழுத்தாளனாக இருந்தால் சுய எள்ளலுடன் தான் வாழப் பழக வேண்டும் போல. படிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும், நமது இதழ்கள் முறுவலித்தாலும், படித்து முடிக்கும்போது நெஞ்சின்மீது ஒரு பெரிய பாரம் ஏறி விடுகிறது. இதுவே இந்தச் சிறுகதையின் வெற்றி...

தமிழ்த் தாத்தா (31- 35)

1906-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியப் பெருமான் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார். அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். இந்த விழாவுக்கு வந்திருந்த அவர் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அங்கேயே ஒரு தாளில் அந்த மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத் தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு: (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 31- 35 அத்தியாயங்கள்)...

தமிழ்த் தாத்தா (26-30)

"காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல் முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான். இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது" என்றார்.....

தமிழ்த் தாத்தா (21- 25)

"ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்" என்றார் பாண்டித்துரைத் தேவர். "நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்" என்று சொன்னார். இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார். இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்' என்றார். இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், "மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டார்....

தமிழ்த் தாத்தா (15-20)

புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை.  ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார்.... 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையை சென்னையில் கொண்டுவந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலை கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 15-20 அத்தியாயங்கள்)...

தமிழ்த் தாத்தா (11, 12, 13, 14)

1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். "பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினார்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 11-14 அத்தியாயங்கள்)...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்....

தமிழ்த் தாத்தா (7, 8, 9, 10)

குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப் பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறுநாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, 'இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது' என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார். (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 7- 10 அத்தியாயங்கள்)...

தமிழ்த் தாத்தா (3,4,5,6)

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத் தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது." - கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலில் இருந்து...

தமிழ்த் தாத்தா (1, 2)

மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942)  தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத் துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும், தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம். இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்....

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

     "அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

     "கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

(புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில் இருந்து)....

விவேகானந்தரும் அம்பேத்கரும்

சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்...ன்றானது அதிசயமல்லவே.... (நமது தளத்தில் அம்பேத்கர் குறித்த 4வது கட்டுரை இது... ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதியது)...

வலிமைக்கு மார்க்கம்- 5

நியாயமென்று நீங்கள் நம்புகிற காரியத்தையே சகல சந்தர்ப்பங்களிலும் செய்யுங்கள்; மெய்ச் சட்டத்தை நம்புங்கள்; பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்காநின்ற தெய்வ சக்தியை நம்புங்கள்; ஒருபோதும் உங்களை அது கைவிடாது; எப்பொழுதும் உங்களை அது காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கையால் உங்களுடைய நஷ்டங்களெல்லாம் இலாபங்களாக மாறும்; உங்களை வருத்துகின்ற நிந்தனைகளெல்லாம் ஆசீர்வாதங்களாக மாறும். உண்மையையும் தயாளத்தையும் அன்பையும் ஒருபொழுதும் நீங்கள் கைவிடாதீர்கள். அவை உங்களை உண்மையான வலிமையுள்ள நிலைமைக்கு உயர்த்துமாகலான்,  ‘தனக்குப் போய்த் தானம்’ என்று உலகத்தார் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள். அதனை நம்புதல் ஒருவனது சொந்த சௌகரியங்களை மட்டும் நினைக்கும்படி செய்யுமேயன்றி, மற்றவர்களைப் பற்றி நினைக்கவே விடாது. ... (வ.உ.சி.யின் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் கடைசி இரு அத்தியாயங்கள்)...

வலிமைக்கு மார்க்கம்- 4

உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதுபோல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். விருப்பும் வெறுப்புமாகிய கலக்க நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள்; கேடாகிய புயல் எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன்மப்படகை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும் அசையாத நம்பிக்கையோடும் செலுத்துவீர்களாயின், அது கரைக்குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிச்சயம். மற்றபடி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்கையின் பலத்தினாலேயே நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின், மெய்ப்பொருளிடத்து நம்பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள்; உங்களுடைய வேலையிலும் அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின்மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். ... (வ.உ.சி.யின் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 10வது அத்தியாயம்)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-15

அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும் யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். வழிப் பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும்; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும் படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா? அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங் குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே! இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே!' (கி.வா.ஜ.வின்/ அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் நிறைவுப் பகுதி.