-ஆதிசைவன் இரா.இராம்குமார்
திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார், ஆராய்ச்சிகளில் ஈடுபாடும், தமிழ் இலக்கியங்களில் தேடலும் கொண்ட இளைஞர். இவரது பல கட்டுரைகள் 'பொருள் புதிது’ தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இது இவரது ஆய்வுத் தொடர்…. (பகுதி- 3)

"ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்! அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்! கடல் வாங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்! யார்க்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்! எங்கும் அஞ்சோம்! எப்போதும் அஞ்சோம்!” -விநாயகர் நான்மணிமாலை, மகாகவி பாரதி.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவதேவர்களுக்கும் ஏற்படும் விக்னங்களை (தடைகளை) நீக்கும் சக்தி அந்த முழுமுதற் கடவுள் விநாயகனுக்கு மட்டுமே உரியதல்லவா?
சோம்பல், பலவீனம் முதலிய எண்வகை அவசக்தியை அழிக்கும் ஆற்றல் எண்குணத்தானுக்கே உண்டு.
தேசத்தில் பீடித்துள்ள அவகுணங்களை விரட்டியடித்தாலொழிய சுதந்திர தேவிக்கு வெற்றி ஏது?
‘கீதா ரகசியம்’ எழுதிய திலகருக்கு இந்த விநாயக ரகசியமும் வெளிப்படலாயிற்று.
மகாராஷ்டிரா மாகாணத்தில் 1893 ஆம் ஆண்டு சர்வஜனங்களின் மஹோத்ஸவமாக பொதுவெளியில் விநாயகர் ஊர்வலத்தை நடத்தினார் திலகர். விநாயகரோ…. வீட்டினுள் அஞ்சிக் கிடந்த மக்களுக்கு அபயகரம் நீட்டினார். சிதறிக் கிடந்த மக்கள் ஒன்று சேர்ந்தனர். விநாயகா! விக்னேஸ்வரா! விக்னவிநாயகா! என்று விநாயகரை வழிபடலாயினர். இவ்வாறு
நாடெல்லாம் ஒற்றுமைக்குள் உய்யவே மாபெரும் செயல் செய்தார் ‘விக்ன ஹர்த்தா’வாகிய சக்தி குமாரன். மக்கள் விழித்தனர்; சுதந்திர தாகம் மீண்டும் வீறு கொண்டு எழுந்தது.
தமிழகத்திலும் புரட்சி இயக்கங்களால் இத்தகைய விநாயகர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பாரதியும் தனது ‘விநாயகர் நான்மணிமாலை’ எனும் நூலில் “யார்க்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்! எங்கும் அஞ்சோம்! எப்போதும் அஞ்சோம்!” என்று விநாயகர் அருளால் அச்சம் நீங்கிய தன்மையை எடுத்துப் பாடினார் .
தமிழகத்தில் 1983 இல் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் தலைமையில், சென்னை, திருவல்லிக்கேணி, தானப்பா தெருவில் முதல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதற்கு முன்னரே தீவிர தேசியவாத இயக்கத் தலைவர்களால் அது ஒரு தேசிய விழாவாக நடந்து வந்துள்ளது என்பது உண்மை.
இவ்வாறு சுதந்திர விதை துளிர் விட்டு முளைத்து செழித்து வளரும் சமயத்தில் தான் பாரதமாதாவிற்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார் மகாகவி பாரதி. ஹே மாதா! ஹே பவானி! காளி! துர்க்கே! பைரவி! சுதந்திர தேவி! உனது வீர மைந்தர்களாகிய நாங்கள் அறியாமையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் உறக்கத்திலிருந்தும் விழித்தெழுந்து விட்டோம். தாயே! உன்னை தொழுது வாழ்த்திட பல்லாயிரம் தொண்டர்கள் நாங்கள் சூழ்ந்து நிற்கின்றோம். பறவைக் கூட்டங்கள் எல்லாம் விடியலை வரவேற்று ஆரவாரம் செய்கின்றன! வெற்றி முரசங்கள் எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன! நாடெங்கும் சுதந்திர நாதம் பொங்கி ஒலிக்கும் சமயத்திலும், தாயே நீ இன்னும் உறங்கலாமா? கொடியவர்கள் நடுங்கும்படி சூலாயுதம் ஏந்தி வா அம்மா. உன் பிள்ளைகளாகிய நாங்கள் கூடிவந்து எழுப்பியும், தாயே நீ இன்னும் உறங்கலாமா? மழலைக் குழந்தைகளின் குதலைப் பேச்சுக்குக் கூட, உன் மனம் இரங்காதா? பதினெட்டு விதமான உனது (பாரத) பாஷைகள் கொண்டும் உன்னைப் போற்றி அழைக்கின்றோமே, தாயே நீ இன்னும் உறங்கலாமா? எங்கள் வாழ்க்கை இதமுற, நீயே வந்து எங்களை ஆட்சி செய்து அருள்வாய் அம்மா. ஈன்றவளே! பள்ளியெழுந்தருள்வாயே! என்று உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
சிவாஜி உத்சவம்:
மக்கள் மனதில் புரட்சி எண்ணம் விதைத்திடுவதற்காக, முகமதிய ஆட்சியின் அஸ்திவாரத்தையே நிலைகுலையச் செய்த சத்ரபதி வீரசிவாஜியின் உத்ஸவங்களும் தீவிர தேசியவாத தலைவர்களால் நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
1906ஆம் ஆண்டு நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 6 ஆகிய தேதியிட்ட ‘இந்தியா’ இதழ்களில், ‘சத்ரபதி சிவாஜி தனது சைநியத்துக்குக் கூறியது’ என்ற கவிதைத் தொடர் வெளியானது. அதில் அதர்மச் செயல் செய்யும் துருக்கியர்களை எதிர்த்து வென்றிட, பாரதப் படைகளை சிவாஜி தயார் செய்வது போன்ற வீர வரிகள் இடம்பெற்றுள்ளன. “ஈடிலாப் புகழினோய், எழுகவோ எழுக!” என்கிறார்.
"பாரதநாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!"
-என்று சுயமறதியில் கிடந்த மக்களுக்கு நினைவூட்டுகிறார்.
"மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நம்மில்இங் குளனோ?"
-என்கிறார்.
மொட்டுகள் தோன்றி பூத்து முடிவது போல, மக்களாகப் பிறந்த நாம் அனைவரும் ஒருநாள் அழிவது உறுதி. ஆகவே தாய்திருநாட்டை அழிக்க முயலும் மிலேச்சரை (அந்நியரை) உயிருக்குப் பயந்து எதிர்க்காமல் இருப்பவரின் வாழ்வும் ஒரு வாழ்வா? என்கிறார். பின்னர் கூடுதலாக ஒரு படி மேலே சென்று, பெற்றத்தாய் பிறர் கைப்பட, அதைக் கண்டும் சகித்துக் கொண்டு கிடக்கும் நாய் போன்ற வாழ்வும் ஒரு வாழ்வா? என்று கேட்கிறார் பாரதியார்.
இதேபோன்று, ஆர்.எஸ்எஸ் அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் அவர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக்குவதற்கு முன்பே,”ராஷ்ட்ரீய உத்ஸவ் மண்டல்”எனும் பெயரில், இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேட்கையை விழிப்படையச் செய்யும் நோக்கத்தில், தேசிய வீரர்கள் மற்றும் மகான்களின் வாழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் சத்ரபதி வீரசிவாஜி உத்ஸவம், சமர்த்த ராமதாஸர் நவமி, விஜயதசமி விழா, விநாயகர் சதுர்த்தி விழா, மகர சங்கராந்தி விழா ஆகியவற்றை நடத்தினார். மேலும் இவ்விழாவில் திலகரின் முதன்மைச் சீடரான லோக் நாயக் டாக்டர் மாதவ் ஸ்ரீஹரி அணே, திலகரின் நெருங்கிய நண்பர் கபார்டே, டாக்டர் மூஞ்சே ஆகியோரை பங்கு பெறச் செய்து சொற்பொழிவு நிகழ்த்தவும் செய்தார் டாக்டர்ஜி.
காரணம், ஹிந்துஸ்தானத்து மக்கள் ஆத்ம மறதியில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு, இது நம் நாடு என்ற உணர்வே இல்லாது போய்விட்டது. இந்த நாட்டில் உள்ள செல்வங்கள் நம்முடையது என்ற பிரக்ஞையற்றும் போய்விட்டனர். ஆதலால் அவர்களுக்கு நம் நாட்டின் முற்கால ஸ்திதியை உணர்த்த வேண்டுவது அவசியம் எனக் கருதி இம்மாதிரியான விழாக்களை தொடர்ந்து நடத்தி வந்தார் டாக்டர்ஜி.
இதனடிப்படையில், டாக்டர்ஜி மற்றும் பாரதியாரின் எண்ணங்கள் ஒரே பாதையில் பயணித்ததை நம்மால் உணர முடியும்.
சுதேசிய பண்டார்:
அந்த நாட்களில் சுதேசி பண்டார் என்ற கடைகளை சதேசிகள் நிர்மாணித்து வந்தனர். பாரதியும் கூட சென்னையில் ‘பால பாரத சங்கம்’ என்ற ஒரு தேசபக்த சங்கத்தை நிர்மாணித்து அதன் மூலம் ஒரு சுதேசிய பண்டகசாலையை நிறுவினார்.
டாக்டர் ஹெட்கேவாரும் கூட இத்தகைய ஒரு சுதேசி பண்டார் சாலையை தனது நண்பர் கோவிந்த கணேஷ் கேல்கர் மூலம் தொடங்கினார். அந்தப் பண்டக சாலையானது, தலைமறைவாக இருந்த சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாக விளங்கியது.
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான ஆயுதப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், புரட்சி வீரர்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கவும் இத்தகைய பண்டார் உதவியாக இருந்தது.
பிற்காலத்தில் சுதேசிய சிந்தனையை மக்களிடையே கொண்டு சென்று உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார தன்னிறைவை ஊக்குவிக்க, 1991 நவம்பர் 22 அன்று ஆர்.எஸ்.எஸ். மூத்த கார்யகர்த்தர் ஸ்ரீ தத்தோபந்த் தெங்கடி அவர்களால் நாகபுரியில் ‘சுதேசி விழிப்புணர்வு இயக்கம்’ (ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்) தொடங்கப்பட்டது. இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், சுதேசிப் பொருட்களை தங்களது வாழ்வில் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பிறரையும் அந்த முயற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே:
பாரதி, டாக்டர்ஜி க்கு இடையே மேலும் ஒரு வலுவான சுவாரசியமான கருத்தொற்றுமைக்கு இன்னுமொரு சிறந்த உதாரணம் என்னவென்றால்,
முதல் உலக மகாயுத்தம் ஆரம்பமான போது, ஆங்கிலேயர்கள் தங்கள் படையின் பெரும்பகுதியை உலகப் போருக்குப் பயன்படுத்தினர். ஆங்கில அரசின் இந்த இக்கட்டான சூழ்நிலையை நமக்கு சாதகமாக்க விரும்பினார் டாக்டர்ஜி. அதற்காக, நாடு முழுவதிலும் உள்ள நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஒரே தருணத்தில் ஹிந்துஸ்தானம் சுதந்திரம் அடைந்து விட்டது என்று அறிவித்து, அதற்கான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இந்தக் கருத்தினை அப்போது பல தலைவர்களிடத்திலும் முன்வைத்தார். ஆனால் அந்தக் கருத்துக்கு போதுமான ஆதரவு இல்லை.
டாக்டர் ஹெட்கேவார் சிறுவனாக இருந்த போது ஆங்கிலேயப் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பியதற்காக அப்பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தேசியவாதிகளால் இயக்கப்பட்ட பள்ளியில் ‘லோக் நாயக் மாதவ் ஸ்ரீஹரி அணே’ (திலகரின் பிரதான சீடர்) ‘யவத்மால் தேசியப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார் டாக்டர் ஜி. பின்பு டாக்டர் மூஞ்சே உதவியால், கல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியில் இணைந்து மருத்துவம் பயின்று வந்தார்.
இதுபோன்ற தேசிய கல்வி நிலையங்களை முடக்குவதற்காக, ஆங்கிலேய அரசு ஒரு திட்டம் தீட்டியது. தேசிய கல்வி நிலையங்களில் படிப்பது வீண் என்றும், அங்கு படிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்காது என்றும் ஒரு மசோதா (Bogus Medical Degree Bill) தாக்கல் செய்தது.
மேற்கூறிய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க டாக்டர்ஜி ஒரு திட்டம் தீட்டினார். கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் இதுவரை பட்டம் பெற்றோர் அனைவருடைய ஒத்துழைப்புடன் செய்திப் பத்திரிகைகள் மூலமாக ஒரு நூதனப் போராட்டம் செய்தார்.
அதாவது, வங்காளத்தின் பல்வேறு மாநில பத்திரிகைகளில் (அமிர்த பஜார் உட்பட) Bogus Medical Degree Bill க்கு எதிராக கல்கத்தாவில் பல இடங்களில் போராட்டக் கூட்டங்கள் நடைபெற்றது என்ற செய்தி வெளிவந்தது. மேலும் ஆங்கில அரசின் இத்தகைய செயலைக் கண்டித்து பல தலையங்கங்களும் வெளியாகின. ஆனால் உண்மையில் இத்தகைய கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தினசரி பத்திரிகைகளில் இது பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. உளவுத் துறையானது தலையங்கம் வெளியிட்ட கண்டனக் கூட்டத் தலைவர்களிடம் இது பற்றி விசாரிக்கும் போது, ஏற்கனவே (முன்னேற்பாடோடு) பேசி வைத்திருந்த அத்தலைவர்களும், ஆமாம், போராட்டம் எங்கள் தலைமையில் இச்சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்டமாக நடைபெற்றது என்றனர். இறுதியில், ஆங்கிலேய அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற்றது.
இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக, கல்கத்தாவில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் டாக்டர்ஜி. இந்த பொதுக்கூட்டத்திற்கு புகழ் பெற்ற தீவிர தேசியவாத தலைவர் ஸ்ரீ சுரேந்திர நாத் பானர்ஜி தலைமைத் தாங்கினார் என்பது வரலாறு.
மேற்கண்ட இத்தகைய முயற்சியை தேச சுதந்திரத்திற்கும் பயன்படுத்த எண்ணிய டாக்டர்ஜி, முதல் உலக மகாயுத்தத்தை அதற்கு நல் வாய்ப்பாக கருதியே, பல தலைவர்களிடமும் சென்று சுதந்திர பிரகடனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த சூழ்நிலையில் பலரும் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.
ஆனால் தமிழகத்தில் டாக்டர்ஜி போன்று ஒத்த மனநிலை உடைய பாரதியார், 1909 ஆம் ஆண்டு வாக்கிலேயே, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 38 ஆண்டுகள் முன்னதாகவே “பாரதம் சுதந்திரம் பெற்று விட்டது” என்று தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தேச சுதந்திரப் பாடலை “சுதந்திரப் பள்ளு” என்றத் தலைப்பில் வெளியிட்டார். அது தான், “ஆடுவோமே — பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று” பாடல்.
ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே! நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் -- இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் -- இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் -- பரி பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.
ரிக்வேதத்தில் சம்ஞான சூத்திரத்தில், “ஸங்கசத்வம், ஸம்வதத்வம், ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்” என்று சொல்லப்பட்டது போல, பாரதியார் மற்றும் டாக்டர்ஜியின் எண்ணம், சொல்செயல் ஆகியவை ஒருமித்திருந்தன என்பதை, நம்மால் மேற்கண்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உறுதியிடன் சொல்ல முடியும்.

மாஜினியின் தாக்கம்:
இத்தாலி தேசத்தின் தீர்க்கதரிசி, தேசப்பிதா, இத்தாலி தேச ஒருங்கிணைப்பின் ஆன்மா என்று வர்ணிக்கப்படும் ‘மாஜினி’ என்ற மாபெரும் ஆளுமையிடம் பாரதியும் டாக்டர்ஜியும் பெரும் ஈடுபாடு வைத்திருந்தனர்.
காரணம், “நல்லொழுக்க லட்சியங்களை அரசியல் அபிலாஷைகள் என்றுமே கைவிட்டு விடக்கூடாது; ஒரு நாட்டின் வாழ்க்கை உண்மையான மதத்தையே மையமாக கொண்டிருக்க வேண்டும்; விடுதலைக்கான போராட்டம் நாடு தழுவிய ஆன்மிக விழிப்புடனையே சேர்ந்து நிகழ வேண்டும்” – என்பன போன்ற மாஜினியின் அடிப்படையான கருத்துக்கள் அனைத்திலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மிகப் பெரும் உத்வேக சக்தியைக் கண்டனர்.
“மாஜினி போன்ற கவர்ச்சிகரமான நபரின் கருத்துக்களும் லட்சியங்களும், ஒற்றுமையையும் விடுதலையையும் அடையப் போராடி வந்த நாடுகளின் தலைவர்களை இயல்பாகவே கவர்ந்தன. இந்தியாவில் தேசிய இயக்கம் எழுந்த காலந்தொட்டே கற்பனாலங்காரமான தேசியவாதக் கருத்துக்கள் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வந்தன” என்று மாஜினியின் எழுத்துக்களைத் தொகுத்த தொகுப்பாசிரியரான என்.கங்குலி என்பவர் தனது நூலின் முன்னுரையில் எழுதுகிறார்.
சுரேந்திர நாத் பானர்ஜி என்ற தேசியவாதத் தலைவர், 1878 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று கல்கத்தாவில் மாணவர் சங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்:
"கரிபால்டி, மாஜினி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இத்தாலிய ஒற்றுமை என்ற கருத்தைக் கேட்டும், இத்தாலி நாட்டுக்காக உயிர் நீத்த தேசபக்த தியாகிகளின் புனிதமான பெயர்களின் மீது நிலையான புகழைப் பெய்துள்ள உன்னதமான செயல்களையும், கேட்டறியாத தியாகங்களையும் கண்டும் இத்தாலி விழித்தெழுந்தது. இத்தாலிய மக்கள் தமது நாட்டின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் போராடிப் பெற்றனர். இந்திய ஒற்றுமைக்காக உங்களில் யார் மாஜினியாகவும் கரிபால்டியாகவும் இருக்க போகிறீர்கள்? அவர்களது தியாகத்தையும் ஈடு இணையற்ற தேசபக்தியையும், தமது நாட்டின் நலன்களின்பால் அவர்கள் கொண்டிருந்த தளராத பக்தியையும், உங்களில் யார் பின்பற்ற போகிறீர்கள்?"
-இளைஞர்கள் மத்தியில் அவர் உரையாற்றும்போதெல்லாம் அவர் இறுதியில் இந்த கேள்விகளை எழுப்பினார். அப்போது “நாங்கள் அனைவருமே” என்று அவர்கள் (இளைஞர்கள்) ஒரே குரலாக கோஷம் இடுவார்களாம். (ஆதாரம்: ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு – ப. கோதண்டராமன்)
பாரதியின் மதிப்புக்குரிய தலைவராக விளங்கிய விபின் சந்திர பாலர் என்பவர் “Memories of My Life and Times” என்ற தனது நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
"மாஜினி வாழ்க்கையும் குறிப்பாக ஆஸ்திரிய ஆதிக்கத்தின் கீழ் தனது நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில், குடும்பம் மற்றும் சமூகத்தின் கோலாகலக் கொண்டாட்டம் எதிலும் தான் கலந்து கொள்ள முடியாது என்று பள்ளி சிறுவனாக இருந்தபோதே மறுத்த அவனது உணர்வு மிக்க தேச பக்தியும் எங்கள் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த தேச விடுதலை ஆர்வம் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தன. நாங்கள் மாஜினியின் எழுத்துக்களையும் ‘யெளவன இத்தாலி’ இயக்கத்தின் வரலாற்றையும் படிக்கத் தொடங்கினோம். இவ்வாறு மாஜினியின் வாழ்க்கை மற்றும் யெளவன இத்தாலிய இயக்கம் பற்றி சுரேந்திரநாத் பானர்ஜி எடுத்துக் கூறிய விதத்தில் வங்க இளைஞர்கள் உள்ளத்தில் குடிபுகுந்த புதிய உத்வேகம், எங்களில் பலரை ரகசிய ஸ்தாபனங்களை உருவாக்கவும் தூண்டியது. இத்தகைய ரகசிய சங்கங்கள் பலவற்றிற்கு, சுரேந்திரநாத் பானர்ஜியே தலைவராகவும் இருந்தார் என்று நான் கருதுகிறேன்".
லாலா லஜபதிராய் மாஜினி மற்றும் கரிபால்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
டாக்டர்ஜியின் பெரும் மதிப்புக்குரிய, ஆதர்ஷ நாயகனாக விளங்கிய விநாயக் தாமோதர் சாவர்க்கரும் ‘மாஜினியின் போதனை மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் அவரது சுயசரிதத்தை மராத்தியில் எழுதினார். விநாயக் சாவர்க்கரும் அவரது மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கரும் இணைந்து ஆரம்பித்த ‘அபிநவ பாரத சங்கம்’ மாஜினியின் ‘யெளவன இத்தாலி’ சங்கத்தை முன்மாதிரியாகக் கொண்டே நிறுவப்பட்டது என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
1910 ஆம் ஆண்டில் விநாயக் தாமோதர் சாவர்க்கர்க்கு ஆங்கில அரசு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து அந்தமான் சிறையில் அடைத்த போது, அரசாங்கம் அவர் எழுதிய மாஜினியின் சுயசரிதத்தையும் ஒரு காரணமாகக் காட்டியது.
டாக்டர்ஜியும் அவரது நண்பர் பாவுஜி காவரேவும் இணைந்து கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அக்காடா (உடற்பயிற்சி மையங்கள்) மூலம் தயார் செய்து நாட்டின் பல மாகாணங்களுக்கும் புரட்சிப் பணி செய்ய அனுப்பி வைத்தனர். அந்த நாட்களில் இளைஞர்களுக்கான கூட்டங்களில், குறிப்பாக வீர சாவர்க்கர் எழுதிய மாஜினியின் சுயசரிதையே பெரும்பாலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து டாக்டர்ஜி எந்த அளவு மாஜினியை உள்வாங்கியுள்ளார் என்று அறிய முடிகிறது.
அதேபோல பாரதியின் குருமணியாக விளங்கிய நிவேதிதா தேவியும் மாஜினியின் சுய சரிதத்தை ஆறு தொகுதிகளாக வெளியிட்டு, அதில் அவரது கொரில்லா போர் முறையையும் வெளியிட்டு, விவேகானந்தரின் தம்பி புரட்சி வீரர் பூபேந்திரநாத் தத்தா மூலம் பல ரகசிய சங்கங்களுக்கு வழங்கியும் உள்ளார்.
மாஜினியைப் போன்றே டாக்டர்ஜியும் பிறவி தேசபக்தராகவே விளங்கினார். மாஜினியைப் போன்றே, தன் பாரத நாடு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையில், தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் கோலாகலக் கொண்டாட்டம் எதிலும் அவர் பங்கு கொண்டதில்லை.
ஐரோப்பிய நாடுகள் ஆஸ்திரியா நாட்டின் கீழ் ஒன்றிணைந்து நெப்போலியனைத் தோற்கடித்த பிறகு, அந்த ஆஸ்திரியா அரசானது, இத்தாலியை கூறுபோட்டு விற்று, அதன் கைவிரல் அசைவுக்கு அந்நாட்டு மக்களை மண்டியிட வைத்திருந்தது. இதை காணச் சகிக்காத மாஜினி சிறு வயது முதற்கொண்டே இத்தாலியையும் அதன் மக்களையும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சிந்திக்கலானார். அதன் காரணமாக அப்போதைய புரட்சி இயக்கமாகிய ‘கார்போனரி’ என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினார். அவருக்கு உற்ற நண்பராக கரிபால்டியும் வந்து சேர்ந்தார். ஆனால் அந்த கார்போனரி இயக்கம் தொலைநோக்குப் பார்வை அற்றதாகவும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அமைப்பாகவும் இருந்து வந்ததால், அதனால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் மாஜினி இளைஞர்களை மையப்படுத்தி புரட்சிகர ரகசிய சங்கத்தை ‘யௌவன இத்தாலி’ என்ற பெயரில் தொடங்கினார். மிகவும் கட்டுப்பாடுள்ள இந்த அமைப்பானது தேசம் மற்றும் தெய்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. விடுதலைப் போராட்டம் நாடு தழுவிய ஆன்மீக விழிப்புடனையே சேர்ந்து நிகழ வேண்டும் என்று விரும்பினார் மாஜினி.
பாரதியும் மாஜினி தொடங்கிய ‘யௌவன இத்தாலி’ போன்று, சென்னையில் ‘பால பாரத சங்கம்’ ஒன்றை நிறுவினார். தனது ஆங்கில பத்திரிகைக்கும் ‘பால பாரதம்’ என்றே பெயர் வைத்தார். இதிலிருந்து பாரதிக்கு எந்த அளவு மாஜினியின் மேல் ஈர்ப்பு இருந்தது என்பது தெரிகிறது. மேலும் மாஜினியைப் பற்றி பல கட்டுரைகள் மற்றும் ”மாஜினியின் பிரதிக்கினை’ என்ற பாடலையும் இயற்றியுள்ளார்.
குறிப்பாக, மாஜினி தொடங்கிய ‘யௌவன இத்தாலி’ ரகசிய சங்கத்தின் உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ளும் சத்தியப் பிரமாண வாசகத்தையும் பாரதி தமிழில் மொழிபெயர்த்ததோடு மட்டுமல்லாமல், இங்கே அவரால் நடத்தப்பட்டு வந்த ரகசிய சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பிரதிக்ஞையாகவும் (சத்தியப் பிரமாணம்) அதைச் சற்றே நம் நாட்டிற்கு தகுந்தவாறு மாற்றியும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவருகிறது.
இந்தியாவில் அகிம்சை பற்றிய சரியான கண்ணோட்டம் இல்லாததால், காங்கிரஸில் பராக்கிரமம் நிறைந்த இளைய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டதாக டாக்டர்ஜி உணர்ந்தார். இத்தாலி தேசத்தின் கார்போனரி இயக்கத்தைப் போன்றே இந்தியாவில் மிதவாத காங்கிரஸார் இளைஞர்களை தேச விடுதலைக்கானப் போராட்டத்தில் மையப்படுத்தவில்லை.
ஒரு வேடிக்கையான சம்பவம் 1922 – 1923 இல் மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்திற்காக டாக்டர்ஜி தன் நண்பர்கள், நல்ல புஜபலம் கொண்ட மற்றும் துணிச்சலான இளைஞர்களை ஈடுபடுத்தினார். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் காங்கிரஸின் அகிம்சாவாதத் தலைவர்கள் தங்களது அமைதியை இழந்தனர். இப்படிப்பட்ட இளைஞர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்பினால் போலீஸ் தடியடி செய்யும் போது தான் அடி வாங்குவதற்கு பதில் தடியைப் பறித்து போலீசை விரட்டி அடித்து விடுவார்கள் என்றனர். இதைக் கேட்ட மாத்திரத்தில் டாக்டர்ஜியின் நண்பர்களுக்கு சிரிப்பு வந்தது. அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு அளித்த பதில், பதிலடி கொடுக்க வேண்டாம் என்றால் இந்த இளைஞர்கள் பதிலடி கொடுக்க மாட்டார்கள். தாங்கிக் கொள்ள இவர்களால் இயலும். ஆனால் பலவீனமான தொண்டர்கள் தடியடி வாங்கி காலமாகிவிட்டால் அது இம்சை ஆகாதா? என்று கேட்டனர்.
டாக்டர்ஜியோ, இத்தாலிய மாஜினி போன்றே இளைய சமுதாயம் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். அவர்களை அரவணைத்தார். அவர்களுக்கு கட்டுப்பாடு மிக்க வழிகளோடு ஒன்றிணைந்து செயற்பட கற்றுக் கொடுத்தார். ஒற்றை நிர்வாகத்தின் கீழ் ஒன்றுபட்டு பணிபுரிய பயிற்றுவித்தார். தாங்கள் கொண்ட தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிடவும் வழிகாட்டினார்.
ஆனால், அக்காலத்தில் காங்கிரஸார் எப்படி இருந்தனர் என்பதை பாரதியார் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் ‘தேச பக்தியும் பாடசாலைகளும்’என்ற தலைப்பில் (15.12.1906) இவ்வாறு எழுதுகிறார்:
"இத்தேசத்திலே தேச அபிமானிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரைப் பற்றி நினைக்கும் போது கண்ணீர் விடுவதா, நகைப்பதா என்று தெரியவில்லை. நம்மவர்களுக்கு உள்ளேயும் தேச அபிமானிகள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் மேற்கு தேசங்களில் இருந்த மாஜினி, கோசுத் முதலிய தேச அபிமானிகளைப் பற்றிப் படித்தும் இருக்கிறார்கள். மேற்கு தேசத்தாரைப் போலவே சபைகள் கூட்டுகின்றார்கள். தீர்மானங்கள் செய்கின்றார்கள். ஆனால் மேற்கு தேசத்தார் செய்யும் தீர்மானங்களுக்கும், நமது தேச அபிமானிகளின் தீர்மானங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. மேற்கு தேசத்தார் தீர்மானங்கள் செய்த உடனே அதன்படி நடக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இங்கே வாய்த் தீர்மானங்கள் மட்டும் மிகப் பிரமாதமாக நடக்கின்றனவே அல்லாமல் மனத் தீர்மானத்தை சிறிதேனும் காணவில்லை.”
தொண்டர்கள் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும்:
பாரதியின் மேற்கூறிய கூற்றிலிருந்து, நமது தேச அபிமானிகள் பெரும்பாலோரிடையேயும் சொல் ஒன்று, செயல் ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகிறது.
ஆகவே, தொண்டர்கள் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவர்களாக மாற வேண்டும் என்று டாக்டர்ஜி சிந்திக்கத் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு நாகபுரி மாகாண காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராக டாக்டர்ஜி நியமிக்கப்பட்டார். அப்பொறுப்பில் பணிபுரியும் போது அவர் நேரில் கண்டவை யாவும் கட்டுப்பாடின்மையே ஆகும். இன்றைய தொண்டன் நாளைய தலைவன் அல்லவா? ஆக கட்டுப்பாடற்ற, எடுபிடி வேலை மட்டுமே செய்யும் ஒரு காங்கிரஸ் தொண்டனால் எவ்வாறு தம் தலைமை இட்டக் கட்டளையை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்? மேஜை நாற்காலி எடுத்துப் போடுவது மட்டுமே தொண்டர்கள் வேலையா?
இந்த நிலையில் இருந்து தொண்டர்களை மீட்டிட பண்புப் பயிற்சி என்ற வ்யக்தி நிர்மாண் (மனித நிர்மாணம்) மூலம் தேச நிர்மாணம் செய்ய முடிவெடுத்தார் டாக்டர்ஜி. எடுபிடி ஆளாக தொண்டரை உருவாக்க அவர் விரும்பவில்லை. மாறாக, “தேசபக்தி நிரம்பிய, நல்லொழுக்கத்தை ஆபரணமாக அணிந்த, நற்குணங்கள் நிறைந்த எல்லையற்ற தொண்டு மனப்பான்மையோடு, சுய ஊக்கத்துடன், கட்டுப்பாடான வாழ்க்கை வாழும் லட்சிய விரதம் ஏற்று, செயல் துடிப்புள்ள, கடமை உணர்வு பூண்ட, இளைஞர்களை லட்சக்கணக்கில் நிர்மானிப்பது டாக்டர்ஜியின் விருப்பமாக இருந்தது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் கூட, “நாட்டில் நீண்ட கால நல்ல மாற்றம் வரவேண்டுமானால், திடீர்ப் புரட்சியால் எதுவும் நடந்துவிடாது. அது புஸ்வாணம் போல எழுந்த வேகத்தில் அடங்கிவிடும். ஆகவே அதற்கு கட்டுப்பாடுள்ள நல்ல பண்பு இயக்கங்கள் தோன்றி இளைஞர்களை வழிநடத்த வேண்டும்” என்று கூறினார்.
ஆகவேதான் தொண்டு மனப்பான்மை பொங்கிப் பாய்ந்து, உற்சாகம் ததும்ப பணிபுரிவோர் கரங்களில் தலைமை பொறுப்பு வரவேண்டும் என்று எண்ணினார் டாக்டர் ஹெட்கேவார்.
(தொடர்கிறது)
$$$