-ஆதிசைவன் இரா.இராம்குமார்
திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார், ஆராய்ச்சிகளில் ஈடுபாடும், தமிழ் இலக்கியங்களில் தேடலும் கொண்ட இளைஞர். இவரது பல கட்டுரைகள் 'பொருள் புதிது’ தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இது இவரது ஆய்வுத் தொடர்….

"யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத!
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்!"
-பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் (பகவத் கீதை).
பொருள்: ஓ, பாரத குலத்து அருமை அர்ஜுனா! எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் இருண்ட காலம் மீட்டெடுப்பு:
தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றியும், ஆடம்பர உல்லாச வாழ்க்கைக்கு அடிமையாகியும், அதன் விளைவாக போர்த் திறன் குன்றியும் இருந்த காலகட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சியானது பொ.ஆ. 275 வாக்கில் தமிழகத்தில் வேரூன்றியது. வேள்விக்குடி செப்பேடு இதனை ‘தமிழகத்தின் இருண்ட காலம்’ என்றே குறிப்பிடுகிறது. காரணம் அந்நிய ஆட்சி, சைவ வைணவ சமயம் இருட்டடிப்பு, பாலி மொழி பரவலாக்கல் போன்றவையாகும்.
இவ்வாறு தர்மம் வீழ்ச்சியுற்று அதர்மம் தலை தூக்கிய போது, பொ.ஆ 6 – 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் பக்தி இயக்கம் மூலமாக, களப்பிரர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இருண்ட தமிழகமானது மீண்டும் ஒளி பெற்று பிரகாசிக்கத் தொடங்கியது. இதற்கு மூல காரணமாக இருந்து தமிழகத்தை மீட்டவர்கள் சமயக்குரவர் நால்வராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்.
அதேபோன்றதொரு இருண்ட காலம், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது.
1857 ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் 1800 ஆம் ஆண்டுகளில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றோர் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து வீழ்ந்து பட்டிருந்த போதிலும், 1806 ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கலகம் செய்த போதிலும், அத்தகைய உணர்ச்சி ஊட்டும் சம்பவங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. ஜெனரல் அனெஸ்தீஸியா (General Anesthesia) போட்டது போல, வலிகளும் உணர்ச்சிகளும் அற்ற வெற்றுப் பிண்டங்களாகினர் மக்கள். ஸ்வதர்மத்தைக் காக்க மறந்தனர். அடிமை வாழ்வையே ஆனந்தக் கூத்தாகக் கருதினர். லார்டு என்றும், பிரபு என்றும் போற்றி ஆங்கிலேயர்களிடத்தில் அஞ்சியும் கெஞ்சியும் பிச்சை ஏற்று வாழும் வாழ்க்கையையே தனது பரம பாக்கியமாகக் கருதினர். மொத்தத்தில் வானை சூழ்ந்த கருமேகம் போல் இருண்ட காலம் தொடங்கியது தமிழகத்தில். அந்த இருட்டிலேயே வாழப் பழகிக் கொண்டனர் தமிழர்கள்.
இக்கூற்றுக்கு ஆதாரம்….
1882 இல் ஜி.சுப்பிரமணிய ஐயர் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு முன், ‘மதராஸ் மாகாணப் பத்திரிகை உலகம்’ எவ்வாறு இருந்தது என்று, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்த குருமலை சுந்தரம் பிள்ளை, 1907 இல் தாம் எழுதிய “ஜி.சுப்பிரமணிய ஐயர் வாழ்க்கை வரலாறு” என்ற நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
"இந்திய மாகாணங்கள் இரண்டில் பஞ்சம் நிலவிய போது வைசிராய் 'லிட்டன்' என்பவன் டில்லியிலிருந்து இந்திய மாகாணங்களை ஆட்சி செய்தான். பஞ்சத்தின் கொடுமைகளில் இருந்து மக்கள் விடுபடும் முன்பே அவர்கள் மீது மேலும் வரிச் சுமைகளை விதித்தான். சுதேசிய பத்திரிகைகளின் வாயையும் அடைத்தான். இந்தியர்கள் ஆயுதம் எடுத்துச் செல்வதையும் சட்டமியற்றி தடை செய்தான். இக்காரணங்களால் மக்கள் துயரடைந்த காலத்திலும் கூட, அவர்களது இன்னல்களை வெளிப்படுத்திட, சென்னையில் ஜனப் பிரதிநிதிகளின் ஒரு மாநாடோ அல்லது ஒரு பத்திரிகையோ இருக்கவில்லை. அதே சமயம் பம்பாய், வங்காளம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்களோ, மாநாடுகள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தமது குறைகளை உரக்க எடுத்துக் கூறி வந்த நேரத்தில், மதராஸிகள் தமது துன்பங்களை வாய்விட்டு கூறக் கூட இயலாத நிலையில் இருந்தனர். சுருக்கக் கூறின், இங்கு ஓர் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுஜன அபிப்பிராயமே இல்லாதிருந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயர் தமது பள்ளியாசிரியர் தொழிலை விடுத்து, பரந்த பொது வாழ்வில் 1878 இல் ஈடுபட்ட காலத்தில் தமிழகத்தில் நிலவிய நிலைமை இதுதான்”
-என்று கூறுகிறார் அவர்.
‘லிட்டன்’ என்பவன் கொண்டு வந்த மேற்கூறிய அரசு விவகாரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு, மதராஸ் மாகாணத்துக்கு மட்டும் சிறிது விலக்கு வாங்கிக் கொடுத்தது அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் சார்லஸ் டிரவெல்யன் எனும் ஆங்கிலேயன் ஆவான். அவன் அவ்வாறு செய்ததற்கான காரணம் நமக்கு பெரும் வியப்பை அளிக்கிறது.
சர் சார்லஸ் டிரவெல்யன் என்பவன், சென்னை மாகாணத்துக்கு வரி விதிப்பு பிரயோகிப்பதை ஆட்சேபித்ததோடு நில்லாமல், தாம் வைஸ்ராய்க்குத் தெரிவித்த கருத்து யாதெனில், “நமக்கு எதிரான ஒரு பொது லட்சியத்தில் தென்னாட்டை வட நாட்டோடு இணைய விடுப்பது அரசியல் அறிவீனமாகவே முடியும். மேலும் வடக்கில் அவசரத் தேவை நிலை ஏற்பட்ட காலத்திலெல்லாம் நமது (ஆங்கிலேய) அரசாங்கத்துக்கு தென்னாடே கடந்த நூறு ஆண்டு காலமாக உதவிக்கு வந்திருக்கிறது.” என்று அவர் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார். அந்த நாட்களில் மதராஸை ‘இருளடைந்த மாகாணம்’ என்று கருதி வந்த இந்திய அரசியல்வாதிகளும், சர் சார்லஸின் கருத்துக்களையே பகிர்ந்து கொண்டனர். (A History of Press in India – S.Natarajan).
மேற்கூறிய செய்தியிலிருந்து, “தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் நமக்கு அஞ்சியும், தேசிய இயக்கத்தில் பிற மாகாணங்களோடு சேராமல் இருந்து நமக்கு உதவியும் வருவதால், இந்த மதராஸ் மாகாணத்துக்கும் வரி விதிப்பை அதிகரித்து இதனையும் நமக்கு (ஆங்கில அரசுக்கு) எதிரியாக்கி விடாதீர்கள்” என்பதே இந்த எச்சரிக்கையின் வாயிலாக நம்மால் உணர முடிகிறது.
இதற்கு மேலும் ஓர் சான்று, பாரதியின் வாயிலாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்.
காங்கிரஸில் தீவிரவாதத் தலைவராக விளங்கிய வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீ விபின் சந்திர பாலரை சென்னைக்கு அழைத்து வந்து ஆறு நாள் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்தார் பாரதி. அச்சமயம் அவரை வரவேற்க சென்னையில் உள்ள ராஜவிசுவாசம் மிக்க (ஆங்கிலேய அரசுக்கு) காங்கிரஸார் யாரும் வரவில்லை. இதைக் கண்டித்து பாரதி இவ்வாறு எழுதுகிறார்:
"சில பரம யோக்கியர்கள், இந்தியர்களுக்கும், இந்திய காங்கிரஸ் சபைக்கும் தீமை செய்து அவமதித்த 'மெயில்' பத்திரிகை அதிபரான ஒரு பரங்கிப் பிள்ளைக்கு மாப்பிள்ளை விருந்து செய்து உபசரிப்பார்களேயன்றி, ஸ்ரீ விபின் சந்திர பாலர் போன்ற தேசபக்தர்களுக்கு உபசாரம் செய்ய முன்வர மாட்டார்கள். ஏனென்றால், ஸ்ரீ விபின் சந்திர பாலரால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளிலும், காலஞ்சென்ற H.K.பீச்சாம் என்னும் பரங்கிப் பிரபுவால் அதிக நன்மை விளைந்திருப்பதாய், இந்த மகாத்மாக்கள் திருவுள்ளத்திலே பதிந்திருக்கிறது. ஆகா! என்ன செய்யலாம்? சென்னை 'இருளடைந்த மாகாணம்' என்று சொல்லப்படுவது இந்தப் போலி மாந்தர் மனத்துக்குள் அடங்கியிருக்கும் இருளைக் கருதியே போலும்".
(இந்தியா: 27/04/1907).
இதே தாத்பரியத்தில் தான், இன்றும் கூட தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் தமிழகத்தை தேசிய நீரோட்டத்தோடு கலக்கவிடாமல் செய்ய இயங்கிக் கொண்டிருக்கிறன.



ஜி.சுப்பிரமணிய ஐயர்


தெய்வ பக்தியும் தேச பக்தியும்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் நிலவிய இருண்ட இருளானது எவ்வாறு தெய்வ பக்தி இயக்கம் மூலமாக ஒளி வீசி புத்துணர்வு பெற்று விளங்கியதோ, அவ்வாறு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழகத்தில் நிலவிய இருண்ட இருளானது தேச பக்தி இயக்கம் மூலமாக ஒளி பெற்று விளங்கியது. இதற்கு ஒளிப் பாய்ச்சியவர்களில் மூலவர்களாக மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் ஆகியோர் விளங்குகிறார்கள்.
ஆன்மிக விடுதலை (ஜீவன் முக்தி) பெற எப்படி நான்கு மார்க்கங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் தேவைப்படுகிறதோ, அதேபோன்று, தேச விடுதலை பெற இதே நான்கு மார்க்கங்களாகிய – சரியை எனும் தொண்டு , மந்திரம் எனும் தேச பக்திப் பாடல்கள், யோகம் எனும் தேசிய சுதேசிய சிந்தனை, ஞானம் எனும் ஐக்கிய குணம் ஆகியவற்றின் மூலமாக தேச விடுதலைக்கு வித்திட்டனர் அப்பெரியோர்கள்.
இவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது, ஓர் உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. அது யாதெனில், தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டிருந்த இவர்கள், பண்பாட்டுக் கலாச்சாரம் மீது முழு ஈடுபாடு வைத்திருந்த இவர்கள், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் கட்டுப்பாட்டு உணர்வைப் பேணிக் காத்த இவர்கள், மொழி பேதம் அற்றும் பிராந்திய வேறுபாடு நீக்கியும் வாழ்ந்த இவர்கள், துறவிகள் மற்றும் பெரியோர்கள் வழி நடந்த இவர்கள், ஹிந்து மதத்தின் மீது பெரும் நம்பிக்கையும்; ஹிந்துக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்ற ஐக்கிய மனோபாவமும், அதே நேரத்தில் பிற மதங்களின் கருத்தையும் உணர்வையும் மதித்தும் போற்றியும் வாழ்ந்து வந்த அக்காலத்திய இந்த பெரியோர்களை இக்கால நோக்கில் “சங்கிகள்” என்றே கூறலாம்.
இருபதாம் நூற்றாண்டில் தேச விடுதலைக்காக தமிழகத்தில் போராடியவர்களில் 99 சதவீதத்தினர் இந்த ‘சங்கிகளாகவே’ இருந்துள்ளனர் என்பதையும் ஆராய்ந்து தெளியலாம்.
நையாண்டித்தனம்:
ஆர்எஸ்எஸ் மற்றும் அதனைச் சார்ந்த இயக்கத்தினருக்கு பொது அடைமொழியாக…. நையாண்டித்தனமாக அழைக்க…. ‘சங்கி’ என்ற சொல்லாடல் திராவிடக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. தமிழகத்தில் இன்று ஒருவர் பாரத நாட்டின் வரலாற்றைப் பேசினால் சங்கி; ஹிந்து மரபுகளைப் பற்றிப் பேசினால் சங்கி; நமது பண்பாட்டின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் சங்கி; தேசிய உணர்வைப் பற்றிப் பேசினாலும் சங்கி; ‘ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜெய்! வந்தே மாதரம்!’ போன்ற கோஷங்கள் எழுப்பினாலும் சங்கி; இவ்வளவு ஏன்? பொது இடத்தில் தான் ஒரு ஹிந்து என்று சொல்பவனும் சங்கி. போகிற போக்கைப் பார்த்தால், என் நாட்டின் பெயர் ‘இந்தியா’ என்று சொல்பவனுக்கும் கூட ‘சங்கிப் பட்டம்’ கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது.
ஆகையால் இன்றைய சூழலில்,
- இந்த ‘சங்கி’ என்ற முத்திரையை தம் மேலும் குத்தி விடுவார்களோ எனப் பயந்து, ஹிந்து மத துவேஷத்தை தட்டிக்கேட்கத் தெரியாத ஜீவன் அற்ற நடை பிணங்களாகவும்…
- தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களுக்கு குரல் எழுப்பத் தெரியாத சக்தியற்ற ஊமைகளாகவும்…
- சில அரசியல்வாதிகளால் திருடிச் செல்லப்படும் நமது செல்வத்தைக் காக்கத் தெரியாத வீரமற்ற பேடிகளாகவும்…
- பொக்கிஷங்களை மதிப்புடன் பேணத் தெரியாத மடையர்களாகவும்…
-இருப்பதிலேயே நாம் சுகம் அடைகிறோம்.
‘சங்கி’ என்பதில் பெருமையடைவோம்:
பகுத்தறிவு சிரோன்மணிகளால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிவினை வாதங்கள் தமிழ்நாட்டில் பேசப்பட்டு பரப்பப்பட்டு வந்தன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயரிய கருத்தைக் கொண்டு உலகத்திற்கே உறவுமுறை கற்பித்த தமிழ் இனம் அல்லவா நாம்? இது வெறும் இலக்கிய வார்த்தையா? அல்லது நாம் கடைபிடிக்க வேண்டிய அறநெறியா? மொழியின் பெயரால் பிரிவினை! ஜாதியின் பெயரால் பிரிவினை! உணவுப் பழக்கத்தின் பெயரால் பிரிவினை! வடக்கு – தெற்கு என்ற பிராந்திய வேறுபாட்டின் பெயரால் பிரிவினை!
இத்தனை வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய அரசியல், மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதற்கான கருவியாக மாறிவிடக் கூடாதல்லவா?
பாரதத்தின் பண்பாட்டுப் பன்முகத்தன்மையையும், தமிழின் தனித்துவத்தையும், தேசிய ஒற்றுமையையும் ஒன்றுக்கொன்று எதிரானவையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
தமிழனாக இருப்பதும் இந்தியனாக இருப்பதும் முரண்பாடுகள் அல்ல. தமிழ்மொழியை நேசிப்பதும் பாரதத்தின் பண்பாட்டு மரபுகளைப் போற்றுவதும் ஒன்றுக்கொன்று எதிரான செயல்களும் அல்ல.
ஆகவே, சங்கி என்பதில் நாம் பெருமையடைவோம். காரணங்கள்:
- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நமது மூதாதையர்கள் – சங்கிகள்…
- பக்தி இயக்கம் மூலமாக சமயம் காத்த நமது நாயன்மார், ஆழ்வார்கள் ஆகியோர் சங்கிகள்…
- நமது நாட்டின் உயரிய ஞானியர்கள், சித்தர்கள் ஆகியோர் சங்கிகள்…
- உலகம் வியக்கும் பல பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டி எழுப்பிய நமது சேர சோழ பாண்டிய பல்லவ மன்னனர்கள் சங்கிகள்…
- நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கிகள்…
ஆகவே, சங்கி என்பதில் நாம் பெருமைக் கொள்வோம்.
(தொடரும்)
$$$