-திருநின்றவூர் ரவிகுமார்
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஆறாம் நாள்…

6. காத்யாயநீ
சந்த்³ரஹாஸோஜ்வலகரா ஶார்தூ³லவரவாஹனா காத்யாயனீ ஶுப⁴ம்ʼ த³த்³யாத்³ தே³வீ தா³னவகா⁴தினீ/ ..6..
பொருள்: சந்திரன் போன்று ஒளிரும் வாளைக் கையில் தாங்கியவளும், சிங்கத்தை வாஹனமாகக் கொண்டவளும், தான்வர்களை (அசுரர்கள்) வதம் செய்பவளும் ஆகிய காத்யாயனீ (நமக்கு) நன்மையைச் செய்யட்டும்.
காத்யாயனி – துர்க்கையின் ஆறாவது வடிவம்.
பெயரின் தோற்றம்: கதா என்றொரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் காத்யா; அந்த குலத்தில் பிறந்தவர் புகழ்பெற்ற முனிவர் காத்யாயனர். அவர் கடுமையான தவம் செய்து, தேவியைத் தன் மகளாகப் பெற வேண்டும் என்று விரும்பினார். தேவியும் அந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.
மஹிஷாசுரன் எல்லை கடந்து கொடுமைகளைச் செய்தபோது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்கள் தேஜஸின் ஒரு பகுதியை ஒன்றிணைத்து தேவியை உருவாக்கினர். முதலில் அவளை வழிபட்டவர் காத்யாயனர் என்பதால், அவள் காத்யாயனி என்று அழைக்கப்பட்டாள்.
மற்றொரு கதையின்படி, அவள் காத்யாயனரின் மகளாகவே. அசுவின மாத க்ருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியில் பிறந்தாள். 7, 8, 9 ஆம் திதிகளில் காத்யாயனர் அவளைப் பூஜித்தார்; பத்தாம் நாள் விஜயதசமியில் மஹிஷாசுரனை வதைத்தாள்.
காத்யாயனி தேவி, பக்தர்களின் விருப்பங்களை, எளிதில், எப்போதும் நிறைவேற்றுபவள்.
பிருந்தாவன கோபிகைகள், கிருஷ்ணனை கணவராகப் பெற வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளைப் பூஜித்தனர். எனவே, அவள் விரஜா மண்டலத்தின் அதிபதி தெய்வமாக புகழப்படுகிறாள்.
அவள் தங்க ஒளிவீசும் தெய்வீக ஒளியுடன் சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறாள். அவளுக்கு நான்கு கைகள்.
வலது மேல் கை – அச்சமகற்றும் அபய முத்திரை
வலது கீழ் கை – வரம் தரும் வரத முத்திரை
இடது மேல் கை – வாள்
இடது கீழ் கை – தாமரை
நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபடப்படுகிறாள். அன்றைய தினம் சாதகரின் மனம் ஆஜ்ஞா சக்ரத்தில் நிலைகொள்கிறது. இது யோக சாதனையில் மிக முக்கியமான நிலை. இந்த நிலையில் சாதகர் தன்னை முழுவதுமாகத் தேவிக்கு அர்ப்பணிக்கிறார். அதனால், காத்யாயனி தேவியின் நேரடி தரிசனமும் அருளும் எளிதாகக் கிடைக்கிறது. காத்யாயனீ காத்தாயீ என்று நம் தமிழகத்தில் கிராம தேவதையாக பூஜிக்கப்படுகிறாள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அனைத்தையும் அருளுபவள். தீவினைப் பலன்களை அகற்றுகிறாள்.
நோய், துயரம், அச்சம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறாள். பக்தர்களுக்கு ஸாலோகம், ஸாமீபம், ஸாரூப்யம் முதலான கிரம முக்தி நிலைகளையும், ஸாயுஜ்யம் என்ற பதமுக்தி நிலையையும் (அவர்கள் பக்குவத்திற்கு) ஏற்றபடி அருளுபவள்.
காத்யாயனியை பக்தியுடன் வணங்குகிறவன், ஆன்மிக ஒளியைப் பெறுவது உறுதி.
(தொடர்கிறது)
$$$