தேவி வழிபாடு- 5

-திருநின்றவூர் ரவிகுமார்

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஐந்தாம் நாள்…

5. ஸ்கந்தமாதா

ஸிம்ʼஹாஸனக³தா நித்யம்ʼ
பத்³மாஶ்ரிதகரத்³வயா |
ஶுப⁴தா³ஸ்து ஸதா³ தே³வீ
ஸ்கந்த³மாதா யஶஸ்வினீ || ..5..

பொருள்: சிங்காசனத்தில் வீற்றிருப்பவள்; இரு கைகளிலும் தாமரை தாங்கியவள். புகழ்மிகு ஸ்கந்தமாதா தேவியே, எப்போதும் நமக்கு மங்களம் அருள்வாளாக!

ஸ்கந்தமாதா — நவதுர்க்கையின் ஐந்தாம் வடிவம்.

அவள் குமாரனான ஸ்கந்தனாகிய முருகனின் தாய். தேவர்களின் படைத்தலைவர் என்பதால் ஸேனானீ என்று பிரசித்தி பெற்றவர். அவர் ஶரவணன், கார்த்திகேயன்,  சக்திதரன், ஸுப்ரமணியன், ஷண்முகன் என்று பல நாமாக்களால் வணங்கப்படுவர். அவரின் வாகனம் மயில் என்பதால் மயூரவாகனன் என்றும் வழங்கப்படுகிறார்.

இவரின் தாயாகியதால் தேவியானவள்  ‘ஸ்கந்தமாதா’ என்று அழைக்கப்படுகிறாள்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் ஸ்கந்தமாதா வணங்கப்படுகிறார்.

தாயின் வடிவத்தில் எப்போதும் சிறு வடிவிலான ஸ்கந்தன் அவளது மடியில் இருப்பார். அவளுக்கு நான்கு கைகள் உள்ளன.

வலது மேல் கையில் — குமாரஸ்வாமி

வலது கீழ் கையில் — தூக்கிப்பிடித்த தாமரை

இடது மேல் கையில் — வரதஹஸ்தம் (அருள் வழங்கும் சைகை),

இடது கீழ் கையில் — தாமரை.

அவளது தேகம் மிகவும் ஒளி நிறைந்தது. அவள் தாமரையில் வீற்றிருப்பதால் அவளை  ‘பத்மாஸனா’ என்றும், சிங்கத்தில் வீற்றிருப்பதால் அவளை  ‘ஸிம்ஹாஸனா’ என்றும் அழைக்கிறார்கள்.

சாஸ்திரங்கள் நவராத்திரியின் ஐந்தாம் நாளின் மகிமையை பெரிதும் புகழ்கின்றன.

அவள் பத்மாஸன வடிவில் தியானிக்கப்பட்டால், மாயையால் அலைபாயும் மனோ நிலை மாறும். அன்றைய தினம் சாதகரின் மனம் விசுத்த சக்ரத்தில் நிலைபெறுவதால்

அவனது உள, புறச் செயல்கள் அனைத்தும் நின்றுவிடுகின்றன. சிந்தனைகள் அனைத்தும் அடங்கியதால், மனம் அலை இல்லாத கடலைப் போல அமைதியாகிறது. அது தூய சித்தநிலைக்கு நகர்கிறது.

ஸ்கந்தமாதாவை ஆராதித்தால் பக்தரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

அவன் இவ்வுலகிலேயே பரம ஆனந்தத்தை அனுபவிக்கிறான். மோட்சம் நோக்கிச் செல்லும் வழி, தானாகவே வெளிப்படும்.

அவளது பூஜை, குழந்தை வடிவிலான ஸ்கந்தனின் பூஜையையும் உள்ளடக்கியதாகும்.

இம்மகிமை மற்றவருக்கு இல்லை. எனவே பக்தர்கள் அவளை ஆராதிப்பதில் சிறப்பாக கவனம் செலுத்த இம்மையில் பொருளும், மறுமையில் அருளும் எளிதில் வசமாகும்.

சூரியனின் ஆதிபத்திய தேவதை ஸ்கந்தமாதா என்பதால் தனது பக்தனுக்கு அசாதாரண ஞான ஒளியையும், உடலிற் காந்தியையும் அளிக்கிறாள். சாதனையில் முன்னேற பக்தனின் உடலைச் சுற்றி எப்போதும் ஒரு தெரியாத தெய்வீக ஒளிவட்டம் இருக்கும். அதனால் அவன் யோகம் என்ற ஆன்மிகச் செல்வத்தையும், அதன் பராமரிப்பான பாதுகாப்பான ஷேமத்தையும் ஆகிய இரண்டையும் பெறுகிறான்.

ஆகையால் நம்மால் இயன்றளவு மனமாரச் சரணாகதி அடைய பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை ஏறலாம்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply