பாரதப் பண்பாட்டின் பிரதிநிதி மாவீரன் ஸ்மித் மச்சார்

-பேரா.ப.கனகசபாபதி

கேப்டன் ஸ்மித் மச்சார்

சென்ற 2026 செப். 30ஆம் தேதியன்று துபாய் விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று கொண்டிருந்த விமானம் முன்னதாகவே அவசரமாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்க வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் 170 பேருக்கும் மேற்பட்டவர்கள்  இருந்துள்ளனர். அதில் மிகப் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதப் பயணிகள்.

அந்த விமானத்தை இயக்கிச் சென்றவர் மும்பையைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார். குஜராத் மாநிலம் பூர்விகம். அவருடன் சென்ற இணை விமானி,  ஓமன் நாட்டுக் குடிமகனாகக் கருதப்படும்  ஹமாம் அல்- ஹம்மாமி. அவர்கள் இருவரும் விமானத்தின் முன்பகுதியில் இருக்கும் விமான ஓட்டிகளுக்கான பாதுகாப்பான அறையிலிருந்து (காக்பிட்) விமானத்தை இயக்கும் பொறுப்பில் இருந்தவர்கள்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, விமானம் இஸ்ரேல் எல்லைப் பகுதியை நெருங்குவதற்கு முன்னர், இந்திய விமானியிடம் சொல்லி விட்டு ஓமானிய விமானி இருக்கைகளுக்குப் பின்பகுதியில் தொழுகை செய்து கொண்டிருந்துள்ளார். திடீரென சில நிமிடங்களில் ஸ்மித்தின் தலைப் பகுதியை பின்னாலிருந்து கோடரியால் (இது ஆபாத்துக் காலத்தில் பயன்படுத்த ’காக்பிட்டில்’ வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்) கடுமையாகத் தாக்கியுள்ளார். தொடர்ந்து தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்கள் அதிகமாகவே அவர் கீழே விழுந்துள்ளார்; அதிக அளவில் ரத்தம் வெளியேறியுள்ளது.

அப்போது விமானம் வேகமாகக் கீழே இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆபத்து வரப்போவதையும், தான் கடுமையாகத் தாக்கப்படுவதையும் உணர்ந்த விமானி ஸ்மித், விமானப் போக்குவரத்து  விதி முறைகளின் படி விமான நிலையங்களுக்கு அபாய எச்சரிக்கைகளைக் கொடுக்கும் தானியங்கி பொத்தான்களை அழுத்தியுள்ளார். பின்னர் தன்னால் தனியாக ஆபத்தைத் தடுக்க முடியாதென உணர்கிறார். எனவே மிகவும் சிரமப்பட்டு விமானியின் அறையைத் திறந்து விடுகிறார். உள்ளே நடந்து வரும் தாக்குதல்  அதிர்ஷ்டவசமாக கழிவறைக்கு வந்த ஒரு பெண்மணிக்குத் தெரிய வருகிறது. உடனே அவர் மற்றவர்களை அழைக்கிறார்.

சில பயணிகள் வேகமாக உள்ளே சென்று பார்த்த போது ஆபத்தினை உணர்கின்றனர். ஒரு பயணி விமானம் கீழே செல்வதைத் தடுத்து நிறுத்துகிறார். இணை விமானியை அப்படியே வெளியில் இழுத்து வந்து, கைகளை இறுகக் கட்டிப்போட்டு அடக்கி வைக்கின்றனர். விமானத்தில் பயணிகளாகச் சென்று கொண்டிருந்த பணியில் இல்லாத இரு விமானிகள் ஓடிப் போய் விமானத்தை இயக்குகின்றனர். அடிபட்டு ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி ஸ்மித் அவர்களுக்கு விமானத்திலிருந்த ஒரு இஸ்ரேலிய பல் மருத்துவர் முதலுதவி அளித்துப் பாதுகாக்கிறார். பின்னர் விமானம் டெல் அவிவ் செல்வதற்கு முன்னதாகவே  சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது.

தற்போது கேப்டன் ஸ்மித் அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் உடல்நலம் தேறி வருவது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் முழுமையாகக் குணமடைய மேலும் சில நாட்கள் பிடிக்கலாம் எனத் தெரிகிறது.

இணை விமானி, ஐக்கிய அரபு நாட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறார். விமானத்தை ஓட்டிச் சென்று டெல் அவிவ் விமான நிலையத்திலோ அல்லது  ஜோர்டான் நாட்டிலுள்ள அமெரிக்க விமான தளத்திலோ மோத விட்டு, பயணிகள் உள்ளிட்ட அதிகம் பேரை உயிரிழக்கச் செய்து, பெரும் சேதங்களை ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருந்ததாக  தகவல்கள் வெளி வருகின்றன. அவரது செயல் திட்டமிட்ட தீவிரவாத நடவடிக்கை எனத் தெரிய வருகிறது.

எனவே கேப்டன் ஸ்மித் செய்துள்ள செயல் அசாத்தியமானது என்பதை உலகம் உணர்திருக்கிறது. தன்னால் முடிந்த வரை இணை விமானியின் சூழ்ச்சியைத் தடுக்க முயற்சிகளைச் செய்திருக்கிறார். அது முடியாததால் உயிருக்குப் போராடிய நிலையிலும், விமானிகளின் அறையைத் திறந்து விட்டு, மற்றவர்கள் உள்ளே வர வழி செய்திருக்கிறார். இல்லையெனில் அத்தனை உயிர்களும் போய், பெரும் சேதங்கள்  நிகழ்ந்திருக்கும்.

இணை விமானியின் திட்டப்படி விமானத்தை ஒரு பெரிய கட்டிடத்திலோ, அல்லது ராணுவ தளத்திலோ மோதியிருந்தால், மேலும் அதிக உயிரிழப்புகளும், சேதங்களும் நிகழ்ந்திருக்கும்.  அமெரிக்க ராணுவ தளம் சேதப்பட்டிருந்தால், அந்த நாடு அமைதியாக இருந்திருக்காது. எனவே சர்வதேச அளவில் நடைபெற  வாய்ப்பிருந்த பெரும் பிரச்சினைகளை கேப்டன் ஸ்மித் தடுத்திருக்கிறார்.

அவரை இந்தியப் பிரதமர், இஸ்ரேலியப் பிரதமர், இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள், பிற நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் எனப் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இஸ்ரேலியப் பிரதமர், அவர்களது சுதந்திர தின விழாவன்று அங்கு தீபம் ஏற்ற வருமாறு நமது பிரதமரையும் விமானியையும் அழைத்துள்ளார். இஸ்ரேல் அவர்களின் வீரத்துக்கான உயர்ந்த சிவிலியன் விருதை ஸ்மித்துக்கு அறிவித்துள்ளது. நமது நாட்டுக் கோயில்கள் பலவற்றில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளன. இஸ்ரேலிய மக்கள் அனைவரும் விமானியைத் தங்களின் கதாநாயகன் எனக் கூறிப் பாராட்டுகின்றனர். முக்கியமான இடங்களில் அவரது படத்தை வைத்து நன்றி தெரிவிக்கின்றனர்.

பாரதத்துக்கும் இஸ்ரேலுக்குமான உறவு பண்பாட்டு ரீதியிலானது. நீண்ட நெடிய வரலாறுடையது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற்ப்பட்ட போது உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கெல்லாம் பெரும்பாலும் துன்புறுத்தப் பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

நமது பாரத நாடு ஒன்றுதான் அவர்களுக்குப் புகலிடம் அளித்தது மட்டுமன்றி, அவர்களது பாரம்பரியப்படி வாழ அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. எனவே அவர்களுக்கு எப்போதும் நமது நாட்டின் மேல் தனிப் பாசமுள்ளது.  சிக்கலான நேரங்களில் நமக்கு எப்போதும் உதவி செய்யத் தயாராக உள்ள நாடு இஸ்ரேல். மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் இருநாட்டு உறவு மேலும் பல மடங்கு வலுப்பட்டுள்ளது.

கேப்டன் ஸ்மித் பயணிகளைக் காப்பாற்ற எடுத்த துணிச்சலான நடவடிக்கை இஸ்ரேலிய மக்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றியில்  திளைக்க வைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலும், உலக அரங்கிலும் நமது நாட்டுக்குப் பெரிய பெருமையைத் தேடித் தந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித்திடம் காணொளி வாயிலாக பிரதமர் மோடி அவர்கள் நலம் விசாரித்து ஆறுதல் கூறிய போது ‘நாம் யாரையும் கொல்லப் பிறந்தவர்கள் அல்ல; மக்களைக் காப்பாற்றப் பிறந்தவர்கள்’ என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். அது மிகவும் ஆழம் பொதிந்த கருத்து; தொன்மையான நமது பண்பாட்டின் அடிப்படைக் கூற்றினை எடுத்து வைப்பது.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பாரதியக் கோட்பாட்டை  தனது செயலின் மூலம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்திய கேப்டன் ஸ்மித் ஓர் உயர்ந்த பண்பாளர் மட்டுமல்ல; மாவீரன்.  வெகு சீக்கிரமே அவர் பூரண நலம் பெற்று இயல்பு நிலைக்கு மீண்டு வர மானிட இனமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. பிரார்த்திப்போம்.

$$$

Leave a Reply