வழிகாட்டு கண்ணா!

-வ.மு.முரளி

(இன்று கோகுலஷ்டமியை முன்னிட்டு ஒரு கவிதை…)

கோகுலத்தில் வளர்ந்தவனே, கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!
கோபியர்கள் மனங்கவர்ந்த கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!
தேகமெலாம் கருநீல மேகமென உடையவனே!
தேசத்தைக் காத்திடவே எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்)

வெண்ணெய் திருடி உண்டவனே, உரலுடனே சென்றவனே!
வெற்றி மட்டும் அறிந்தவனே, வேள்வியாக வாழ்ந்தவனே!
பண்பாடும் குழலுடனே பசுக்களைக் காத்தவனே!
பண்பாட்டைக் காத்திடவே எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்)

காளிங்கன் சிரசினிலே ஆடியவன் நீயன்றோ?
காலங்கள் உள்ளளவும் காவியங்கள் அழியாது!
கம்சனைசம் ஹரித்தவனே, கண்ணா, கமலா, கிருஷ்ணா!
கவலைகளைப் போக்கிடவே எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்)

அர்ச்சுணனின் ரதத்துக்கு சாரதியும் நீயன்றோ?
அவதாரம் பத்தெடுத்த அருள்வடிவே, பரந்தாமா!
தர்மத்தின் இலக்கணமாம் கீதைசொன்ன நாயகனே!
தர்மத்தைக் காத்திடவே எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்)

“கடமையினைச் செய் முதலில்; பலனை எதிர்பாராதே;
கயமைகளை அழித்திடவே யுகந்தோறும் அவதரிப்பேன்”
என்று சொன்னாய் போர்நடுவில்- இன்று அதைச் செயற்படுத்த
எழுந்துள்ளோம் போர்ப்படையாய், எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்)

$$$

Leave a comment