விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!

-வ.மு.முரளி

சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று தெரிவதில்லை. பூர்வஜன்ம பந்தமாக இருக்கலாம். அப்படி என்னை முதல் சந்திப்பிலேயே ஆகர்ஷித்தவர் நம்பி அண்ணா; அப்போதே மிக நீண்டநாட்கள் பழகியவர்கள் போல கைகோர்த்தோம். தற்போது  ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரை ஒரு சஹ்ருதயராக வாழ்த்தி மகிழ்கிறேன். எனது இதழியல் பணியில் சில திசைகாட்டிகள் உண்டு. அவர்களுள் முதன்மையானவர் நம்பிஜி.

இந்தப் பதிவு அவரைப் பற்றியதுதான். ஆயினும், அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன் சில சொந்தக் கதைகளைச் சொல்வது அவசியம். ‘நமக்கு நாமே’ திட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள்!

நான் படித்தது இயந்திரவியல் பொறியியலில் பட்டயம் (டிஎம்இ). அவரும் கட்டுமானப் பொறியியலில் பட்டயம் (டிசிஇ) பெற்றவர். ஆனால் இருவருமே இதழியல் ஆர்வலர்கள். அதற்காகவே, செய்துகொண்டிருந்த பொறியியல் வேலையைக் கைவிட்டு  தடம் மாறியவர்கள். அதிலும் அவர் எனக்கு முன்னோடி. அது மட்டுமல்ல, என்னில் இருந்த எழுத்தாளரைக் கண்டுபிடித்தவர்களில் அவரும் ஒருவர்.

1986ஆம் ஆண்டுமுதல் நான் எழுதி வருகிறேன். 1989இல் பட்டயப் படிப்பை முடித்தேன். அப்போதே கவிதைகள் என்று எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். விஜயபாரதம் – 26.05.1989 வார இதழில் எனது 3 ஹைகூ கவிதைகள் முதல்முறையாக அச்சு வாகனம் ஏறின. அதில் ஒரு கவிதை:

சிரிப்பு

குற்றவாளி சிரித்தான்,
சாட்சி இல்லையென...
கடவுளும் சிரித்துக் கொண்டார்.

அதே காலகட்டத்தில் ‘தினமணி’ நாளிதழிலும் எனது வாசகர் கடிதங்கள் பல வெளியாகின. ஆரம்பத்தில் எழுதியவை எதுவும் எதிலும் உடனே பிரசுரம் ஆகாது. ஆயினும் தொடர்ந்து எழுதியதால், எழுத்தும் சீரானது; அச்சில் எனது எழுத்துகள் வருவதும் தொடர்ந்தது. அதேசமயம்,  கோவையில் பொறியியல் துறையில் பாதுகாப்பான ஊதியத்துடன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

1986 முதல் விஜயபாரதத்தின் வாசகன்; நான் இருந்தது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். ஓரளவுக்கு மட்டுமே வெளியுலகம் அறிந்த எனக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டியவை விஜயபாரதம் கட்டுரைகள் தான். அதில் வரும் கட்டுரைகளைப் படித்து அதேபோல எழுத முயன்று என்னை மேம்படுத்திக் கொண்டேன். அதில் வரும் இராம.நாராயணன் என்பவரது கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் யாரென்று தெரியாது. ஆனால், சுருக்கென்று தைக்கும் நடை; தேசபக்திக் கனல் மிளிரும் எழுத்துகள். பின்னாளில் நாங்கள் இருவரும் இணைந்து பல பணிகளைச் செய்வோம் என்று நான் நினைத்திருக்கவில்லை.

விஜயபாரதம் வார இதழுக்கு தொடர்ந்து எதையாவது எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். பல படைப்புகள் என்னவாகும் என்றே தெரியாது. இன்றுபோல தகவல் தொடர்பு வசதிகள் அப்போது கிடையாது. அந்தச் சமயத்தில் விஜயபாரதம் அலுவலகத்தில் இருந்து ‘ஆசிரியருக்காக’ இராம.நாராயணன் என்று கையெழுத்திட்ட கடிதம் (27.07.1990) வந்தது.  “தங்களின் கடிதம் கிடைத்தது. பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். தொடர்ந்து தங்கள் கருத்துகளை விஜயபாரதத்திற்கு அனுப்பி வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்” என்று அந்த அஞ்சல் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் சோர்ந்து போனேன். நான் எழுதி அனுப்பியவை கவிதைகள்; அதிலும் மரபுக் கவிதைகள்! ஆனால், அவை கருத்துகளாகவும் கடிதமாகவும் கருதப்பட்டு விட்டதே என்பதுதான் என் ஆதங்கம்.

அநேகமாக, பொதுவான வடிவத்தில் யாரோ எழுதிக் கொடுத்த கடிதத்தில் பொறுப்பாசிரியர் கையெழுத்திருப்பார் போல என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். தவிர, நமது எழுத்துகளையும் யாரோ படித்துவிட்டு பதில் எழுதி இருக்கிறாரே என்ற உத்வேகத்துடன் மேலும் எழுதிக் குவித்தேன். அதன் பிறகு எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகத் தொடங்கின.

இந்த நிலையில் தான், 1997இல் சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி விஜயபாரதம் சிறப்பு மலரை வெளியிடுவதாகக் கூறி, கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டேன். எனது ‘பொன்விழாச் செய்தி’ கவிதை ரூ. 100- முதல் பரிசு பெற்றது.

அந்தக் கவிதை கீழே…

பொன்விழாச் செய்தி

#

சுதந்திரத்தை, உரிமைகளை 
சுகமாக அனுபவிக்கும்
பொன்விழா ஆண்டென்ற
பூரிப்பு அனைவருக்கும்!
நல்லதிந்தத் தருணத்தில் 
நமை நன்கு சோதிப்போம்!
நடக்கின்ற அத்தனையும்
நல்லவையா, சிந்திப்போம்!

எத்தனையோ தியாகியரின்
எலும்பினையும் சதையினையும் 
எருவாக இட்டுத்தான் 
எட்டியுள்ளோம் விடுதலையை!
என்றாலும் அதன் பொருளை 
எளிதாக மறந்துள்ளோம்!
எத்தர்களும் திருடர்களும் 
ஏமாற்ற வழி வகுத்தோம்!

அந்நியரை, வெள்ளையரை 
அகற்றிவிட்டோம்- ஆனாலும்
அடிமை விலங்கொடித்தாலும்
அரசாங்கம் மாறவில்லை!
நாட்டிலுள்ள குடிமக்கள் 
நலம் பேணத் தான் அரசு!
நயமற்ற அரசியலில் 
நலம் பேண வழியெங்கே?

ஊர்கூடி, வரிசெலுத்தி 
ஒன்றாகச் சேர்த்த பணம் 
நமை நாமே அரசாள 
நமக்கான மூலதனம்!
இச்செல்வம் சிவன் சொத்து!
இதை உறிஞ்சும் அட்டைகளின் 
பலகோடி ஊழல்களை 
பாரதம் தான் தாங்கிடுமா?

ஆண்டவனின் முன்னாலே 
அனைவருமே ஒன்றன்றோ?
அதை மறந்து சாதியினால் 
அல்லல் பல படலாமா?
ஒரு தாயின் பிள்ளைகளே 
ஒட்டாமல் இருப்பதுவா?
ஒற்றுமையை, வல்லமையை 
ஓநாய்கள் அழிப்பதுவா?

மதத்துக்கு ஒரு சட்டம்!
மதம் மாற்ற வெளியுதவி!
சிதறியுள்ள ஆடுகளை 
சிறைஎடுக்கும் சிறுநரிகள்!
சிறுபான்மைக்குச் சலுகை
சிதிலத்தில் பெரும்பான்மை!
மதியற்ற இச்செயல்கள் 
மலிவாகப் போவதுவா?

சாதிக்குப் பலசங்கம்!
சமயத்துக் கொரு நீதி!
சட்டத்தில் பல ஓட்டை!
சச்சரவில் பஞ்சமில்லை!
இளைஞர்களின் எதிர்காலம் 
இருள் படர்ந்த திரையரங்கில்!
இவையெல்லாம் போதாது,
இசங்கள் மேல் மோகங்கள்!

விளக்குக்குப் பின்னாலே 
இருட்டான நிழலைப் போல் 
விடுதலைக்குப் பின்னாலும் 
விடிவற்ற துயரங்கள்! 
விதிவசமோ எனச் சொல்லி 
விம்மிஎழும் கூக்குரல்கள்!
விழலுக்கு நீர் பாய்ச்சி 
விசனித்தால் என்ன பயன்?

விடுதலையின் விலை தெரியா 
விளையாட்டுப் பிள்ளைகளின் 
அறியாமை உள்ளவரை 
அல்லல்களும் பின்தொடரும்!
நடந்துள்ள நிகழ்ச்சிகளில்
நல்லதொரு பாடத்தை 
அறிந்திடுவோம்- அதைக் கொண்டு 
அன்னையினைக் காத்திடுவோம்!

சுதந்திரத்தை, உரிமைகளை 
சுகமாக அனுபவிக்க-
தேசபக்தி நறுமணத்தை
தெருவெங்கும் பரப்பிடுவோம்!
தெய்வமான தியாகியரின் 
திருவாழ்வை நினைந்திடுவோம்!
பொன்விழாக் செய்தி இது!
பொழுதெங்கும் புலரட்டும்!

 -விஜயபாரதம் : சுதந்திரப் பொன்விழா மலர்  (15.08.1997)

எனது எழுத்துகளுக்காக நான் பெற்ற அந்தப் பரிசு எனது வாழ்க்கைத் தடத்தை மாற்றியது. அதன் பிறகு ஓராண்டு மட்டுமே பொறியியல் துறையில் பணிபுரிந்தேன். அங்கிருந்து ஜிவ்வெனெ இதழியல் துறைக்குத் தாவினேன். அதுவும், விஜயபாரதம் வார இதழுக்கே! (அது ஒரு தனிக்கதை).

விஜயபாரதம் வார இதழில் 1998 ஜூன் முதல் 2001 மார்ச் வரை துணை ஆசிரியராக, அன்றைய ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் தண்ணிழலில் பணியாற்றினேன். அங்குதான் நம்பி நாராயணன்ஜியை முதல்முறையாக, 1998 தீபாவளி மலர் ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் சந்தித்தேன். இராம. நாராயணன் என்பவரும் அவர்தான்; விஜயபாரதம் வார இதழில் மூன்றரை ஆண்டுகள் (1990 – 1994) முழுநேர ஊழியராகப் பணியாற்றியவர் அவர் என்பதையும் அறிந்தேன். எனது ‘பொன்விழாச் செய்தி’ கவிதையை பரிசுக்குரியதாகத் தேர்வு செய்தவரும் அவர்தான் என்று ஜோதிஜி சொன்னார். அன்றுமுதல் இன்று வரை அந்த பந்தம் இன்றும் இடையறாது தொடர்கிறது.

விஜயபாரதத்தில் அரசியல் கட்டுரைகள் எழுதும் போதெல்லாம், தொலைபேசியில் நம்பிஜியுடன் பேசி ஆலோசனை பெறுவேன். எனது எழுத்துகளின் ரசிகர் அவர். என்னைப் பாராட்டுவதிலும் வழிநடத்தியதிலும் அவர் என்றும் குறை வைத்ததில்லை. எனது வளர்ச்சியில் மகிழ்ந்த மூத்த சகோதரராகவே அன்றுமுதல் இன்றுவரை அவர் இருந்து வருகிறார்…

***

இப்போது பிரதானப் பகுதிக்கு வருகிறேன். அதீத சுயபுராணம் அவஸ்தையாகிவிடும். இனி  வருபவை, நம்பிஜி பற்றி பலரிடம் சேகரித்த தகவல்கள்…

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருத்தலம் தென் திருப்பேரை. அங்குதான் நமது இராம. நம்பிநாராயணன் 1959இல் பிறந்தார். தீவிரமான வைஷ்ணவக் குடும்பம். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். தொடர்பு. பட்டயப் படிப்புக்குப் பின் அரசுப் பணியில் சில ஆண்டுகள் இருந்தார். சங்கம் அவரது வாழ்வில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. 1987இல் திடீரென முழுநேர பிரசாரகராக வந்து விட்டார். 1988 – 199 0வரை பல இடங்களில் சங்கப் பணி புரிந்தார்.

அந்த சமயத்தில் ஸ்ரீ. சிவராமகிருஷ்ண சர்மா என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரின் ஆசிரியத்தில் விஜயபாரதம் வெளிவந்து கொண்டிருந்தது. அவருக்கு உதவியாக ஜெயமோகன் (ஆமாம், ஆசானே தான்), எஸ்.எஸ்.மகாதேவன், விஷ்ணுகுமார், நம்பி நாராயணன் போன்றவர்கள் உதவி வந்தனர். அதையடுத்து, 1990 டிசம்பர் முதல் 1994 டிசம்பர் வரை விஜயபாரத்தின் முழுநேர பொறுப்பாசிரியராக நம்பிஜி பணிபுரிந்தார். அப்போது அவர் எனக்கு அனுப்பிய கடிதம் தான் மேலே கண்டது!)

1992இல் விஜயபாரதம் வார இதழில் அவர் நடத்திய பத்திரிகையாளர் பயிற்சி முகாம் முன்னோடி முயற்சி. ஆண்டிற்கு ஒருமுறை ஒரு வாரகாலம் இதழியல் ஆர்வமுள்ளவர்களை ஓரிடத்தில் கூட்டி, அவர்களுக்கு தினசரி  இதழியல் துறை வல்லுநர்கள் ஐவரைக் கொண்டு (7 x 5 = 35) வகுப்புகளை நடத்தி, சான்றிதழ் அளிக்கும் அந்தப் பயிற்சி, பலரை பத்திரிகையாளர்கள் ஆக்கி இருக்கிறது. (அவர்களில் ஒருவர் தினமணி நாளிதழில் பின்னாளில் எனக்கு மேலதிகாரியாகப் பணிபுரிந்தார்!)

1994க்குப் பிறகு மீண்டும் அரசுப் பணிக்குத் திரும்பினார். ஆயினும் ஒவ்வொரு ஞாயிறும் ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து பத்திரிகைப் பணிகளில் உதவுவார் (1994 – 1997). 1997இல் திருமணம் ஆயிற்று. இல்லறம் என்னும் நல்லறம். ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது.

1997 திருமணத்திற்குப் பிறகு, சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். அதன் மாத இதழான ‘சுதேசி செய்தி’ பத்திரிகையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். தவிர, 2006 – 2015 ஆண்டுகளில் இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். 2001இல் மாநிலம் முழுவதும் 32 நாட்களுக்கு அவர் நடத்திய சுதேசி  விழிப்புணர்வு பாதயாத்திரை குறிப்பிடத் தக்கது. சுதேசி செய்தி இதழின் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அப்போது பல இதழ்களில் எனது படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

2017 முதல் தமிழக பாஜகவின் மாத இதழான ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்று 2026 வரை திறம்படப் பணியாற்றினார். அதிலும் எனது படைப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தார். அவர் வெளிக்கொணர்ந்த ‘ஒரேநாடு’ வெள்ளிவிழா மலர் ஓர் அரிய காலப் பெட்டகம்.

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் இருந்தபோது முதல் தலைமுறை தொழில்முனைவோரை வலுப்படுத்தும் வகையிலான  ‘நான்காம் ஞாயிறு’ கருத்தரங்குகளை சென்னையில் தொடர்ந்து நடத்தினார். ‘பாதை, பயணம், பார்வை’ என்ற பெயரிலான அந்த நிகழ்வுகள் இளம் தொழில் முனைவோர் பலரை உருவாக்கி இருக்கின்றன.

நம்பி அண்னா, இதழாளர் மட்டுமல்ல, இயக்கத்தின் தீவிர செயல்வீரர். 1999 கார்கில் போரின்போது  ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை, மறைந்த எழுத்தாளர் ஞாநி பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கட்டுரைத் தொடரை எழுதுவதாக அறிவிப்பு வெளியிட்டபோது, அதை தனது முயற்சியால் ஒருங்கிணைந்த எதிர்ப்பால், அறிவிப்போடு நிறுத்தச் செய்தவர் நம்பிஜி.  

2013இல் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது அவரை சிறுமைப்படுத்தும் விதமாக, ஆணாதிக்கவாதியாக விவேகானந்தரைச் சித்தரித்து  ‘த இந்து’ ஆக்கிலப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அதை எதிர்த்து அந்தப் பத்திரிகை அலுவலகம் முன்பாகவே சுப்புஜியுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். அதன் விளைவாக த இந்து பத்திரிகை மன்னிப்பு கேட்டது. சன் டி.வி, புதிய தலைமுறை நிறுவனங்களுடனும் நியாயத்திற்காக அவர் மல்லுக் கட்டி இருக்கிறார்.

சென்ற ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தமிழக இடதுசாரி எழுத்தாளர்கள் எதிர்த்தபோது, அதைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள தேசிய சிந்தனை மிக்க எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் திருவாளர்கள்  ‘திராவிட மாயை’ சுப்பு, பத்மன், நம்பி நாராயணன், அர்ஜூன் சம்பத், பேரா. ப.கனகசபாபதி, ஜவஹர் வெங்கடசாமி, பாஸ்கர் சுப்பிரமணியம் ஆகியோருடன் நானும் ஈடுபட்டேன். அப்போது மாநிலம் முழுவதும் சுமார் 500 எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தோம். நாங்கள் நடத்திய மூன்று  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வுகள் மூலமாக, தமிழகம் தேசியத்தில் யாருக்கும் சளைத்ததல்ல என்று வெளிப்படுத்தினோம்.

சென்ற ஆண்டு கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து எழுத்தாளர் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, ஜனாதிபதிக்கு அனுப்பினோம். அது தனியார் விருது என்றபோதும் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி  கலந்துகொள்வது ஒரு மரபாக இருந்தது. நமது கையெழுத்து இயக்கம் மற்றும் வேண்டுகோளால், இந்த ஆண்டு நடந்த விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.

நம்பிஜியும் நானும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், 1990 முதல் ஒரே சிந்தனையுடன் பணிபுரிகிறோம். அவர் தொலைக்காட்சி விவாதத்திற்கு செல்லும்போதெல்லாம் பேச வேண்டிய விஷயம் குறித்து விவாதிப்பதுண்டு. நான் நடத்தும் வலைப்பூக்கள், இணையதளங்களை தகவல் சுரங்கமென அவர் பாராட்டுவார். அதில் பங்களிக்கவும் செய்கிறார்.

நம்பி அண்ணாவைப் பொருத்த வரை, அசாத்திய வேகமும், எழுத்தாற்றலும் கொண்ட பத்திரிகையாளர். அதிலும் சங்கம் மீதான பற்று அதீதம். அதனால் வாழ்வில் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார். தமிழக பாஜகவிலும் அவருக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதை நான் அறிவேன். அவற்றை சிரித்தபடியே கடந்திருக்கிறார். பண்பட்ட இதழாளரான அவர் ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்பது, சமகாலத்தின் தேவை. ஓர்  இளம் சகோதரனாக, அவரது பாதையில் பயணிக்கும் சக பயணியாக அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்தப் பணியை அவர் மிகச் சிறப்பாக நிறைவேற்ற, ஈசன் அருள் புரிய வேண்டி பிரார்த்திக்கிறேன்.

$$$  

Leave a comment