இவரல்லவோ முதலமைச்சர்!

-கருவாபுரிச் சிறுவன் 

துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை,  ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர். 

திருக்குறள்,  திருவாசகம், திருமந்திரம், திருத்தொண்டர் புராணம், திருவருட்பா – இந்த ஐந்து நூற்களும் ஹிந்துக்கள் வீட்டில் கட்டாயம் பூஜிக்க வேண்டிய நூற்கள்.  

சைவ இலக்கியமான பன்னிரு திருமுறைகளில் திருவாசகத்தை, பாண்டிய மன்னரின் முதலமைச்சரும், பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை சோழ மன்னரின் முதலமைச்சரும் இயற்றியுள்ளார்கள். மக்கள் நல்வழியில் வாழ வேண்டும் என்ற நோக்கில் இருபெரும் முதலமைச்சர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் இவை.

* மணிவாசகம் சொன்னது திருவாசகம்

* மணி மணியான வார்த்தையைக் கொண்டது திருவாசகம் 

* திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்

* தில்லை பாதி திருவாசகம் பாதி

* படிப்பவரை திருவாக்கும் தன்மை கொண்டது திருவாசகம்

* ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொன்னாய்

-என்ற புகழ்மொழிகள், எல்லாம் மதுரை அருகே உள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர் சொன்ன திருவாசகப் பெருமைக்கு சான்று.

கல்லாதவரின் கல்நெஞ்சையும் கனிவிக்கும் ஆற்றல் கொண்டது, படிப்பவர்களைத் திருவாக்கும் தனித்தன்மை கொண்டது திருவாசகம். இந்த திருவாசகத்தின் மீது சான்றோர்கள் கொண்ட பக்தி சிறப்பு மிக்கது என்பதை விளக்குகிறது கீழ்க்கண்ட நிகழ்வுகள்: 

வடலூர் ராமலிங்க சுவாமிகள்:

வடலூர் ராமலிங்க சுவாமிகள் சென்னை மாநகரில் சிறிது காலம் வாழ்ந்தார். அப்போது திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகிய தலங்களுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல அப்படி தெருவழியாக வள்ளல் பெருமான் நடந்து சென்ற போது திருவாசகம் படிக்கும் ஓசை கேட்டது. 

சப்தம் கேட்ட இடத்திலேயே தன்னுடன் வந்த அடியார் குழாத்துடன் அப்படியே நின்று கண்களில் கண்ணீர் மல்க, தலைமேல் கரங்களைக் குவித்து நின்று விட்டார். பின்னர், திருவாசகத்தைப் படித்து முடித்த பின்னரே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார் என்கிறது கர்ண பரம்பரை செய்திகள்.  

கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள்:

ராமநாதபுரம் மாவட்டம், கல்லலில் பிறந்தவர் முத்தம்பலக்காரர். மாணிக்கவாசகர் மீதும், அவர் எழுதிய திருவாசகத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். இவர் தினந்தோறும் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் பாடிய பின்னரே உணவு உட்கொள்ளும் பழக்கம் உடையவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர் வரை தன்னை அணுகும் அன்பர்களுக்கு திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலைச் சொல்லிக் கொடுக்கும் பண்பினை உடையவர்.   

அதனால்தான் இவருடைய குருநாதர் குன்றக்குடி மேலமடம் கணபதி சுவாமிகள் அன்னாருக்கு அருளளிப்பு செய்து தீட்சாநாமமாக மணிவாசக சரணாலய சுவாமிகள் என்ற புதிய திருநாமத்தைச் சூட்டினார் என்கிறது  ‘கருணைக்கடலும் கல்விக்கடலும்’ என்கிற நுால்.  

மாணிக்கவாசகரின் அடிச்சுவற்றில் திருவாசகத்தின் திருவாக்கின்படியே வாழ்ந்து காட்டியவர் கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள் என்றால் அது மிகையல்ல. 

ஜி.யூ.போப்:

ஜி.யூ. போப்பிற்கு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என உத்தரவு வழங்கினார் தலைமை குரு. அதற்கு  “வாழ்நாளின் இறுதிநிலைக்கு வந்து விட்டேன். இனி எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் எனத்தெரியாது. என்னிடம் இப்பணியை ஒப்படைத்தால் எப்படி?” எனக் கேட்டார் போப். அதற்கு  “இப்பணி முடிந்த பிறகும் உயிருடன் வாழ்வாய்” என வாழ்த்தினார் தலைமை குரு. அதன்படியே அப்பணி முடிந்த பிறகும் எட்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தார் போப். 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்ற காரணத்திற்காக, அன்றைய தீவிர விசுவாசிகள் அவரை தம் மதத்திற்கு துரோகம் இழைத்தவர் என குற்றமும் சாட்டி நீதிபதிகள் முன்பு நிறுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, அவர் மொழி பெயர்த்த திருவாசகத்தை கொண்டு வருமாறு கட்ளையிட்டனர். 

அவரின் மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்த்த நீதிபதி,  “அவர் திருவாசகத்தை மொழிபெயர்த்த பின்னரும் நம் மதத்தை விட்டு மணிவாசகரின் மதத்திற்கு மாறாமல் இருக்கிறார் எனப் பெருமை கொள்ளுங்கள்” எனச் சொல்லி அவரை அந்தக் குற்றச்சாட்டில் இருந்து முற்றிலும் விடுவித்தார். 

அந்த அளவு பிறமதத்தினரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது திருவாசகம்.

ஆச்சாரிய வினோபா பாவே:

விடுதலைப் போராட்ட வீரர் வினோபா பாவே. தாயின் விருப்பத்திற்கு இணங்க, மராட்டிய மொழியில் பகவத்கீதையை மொழி பெயர்த்தவர் என்ற பெருமைக்குரியவர். வழக்கமாக இவர் மாதத்தில் ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பார். ஒரு சமயம் இவர் சிறைச்சாலையில் இருந்தபோது இவர் கடைப்பிடிக்கும் விரத நாளும் வந்தது. அன்று முழுவதும் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார். இவரின் தன்மையை அறிந்த சிறைக்காவலர் ஒருவர் மாலையில் தேன் கலந்த பழச்சாறு கொண்டு வந்து கொடுத்து உதவினார் 

அப்போது  ‘தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்ற திருவாசக வரிகளை சொல்லி அந்தக் காவலரைப் பாராட்டினார் வினோபாஜி அவர்கள்.

துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை,  ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர். 

$$$

Leave a comment