-மகாகவி பாரதி
மனிதனைப் பற்றி ஒரு பாம்புக்கும் காக்கைக்கும் பேச்சுப் போல அமைந்துள்ள இந்தக் குட்டிக் கதை, ‘சுதேசமித்திரன்’ தினசரியில், 1919-ஆம் ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

மணிமுத்தா நதியோரத்தில், ஒரு மலைக் குகையில், மணிகண்டன் என்றொரு பாம்பு வாசம் செய்தது. அங்கு ஒரு காகம் வந்தது.
காகமும் பாம்பும் சம்பாஷணை செய்யலாயின. பாம்பு சொல்லுகிறது:- “என் முகத்தில் விழிக்காதே?” காகம் சொல்லுகிறது? : “ஏன்?”
பாம்பு செொல்லுகிறது:- “நீ பாவி, சண்டாளன். உன் முகத் தில் விழித்தால் பாவம், ஏனென்றால், நீ மனிதருடைய உச்சிஷ்டத்தைத் தின்கிறாய், மனிதரோ கொடிய சண்டாளர், நீசர், அற்பர், அயோக்கியர், துஷ்டர்; ராக்ஷசர், பேயர், பிசாசர், அசுரர்; சர்வத்துக்கும் கீழானவர்கள். ஆதி முதல் எத்தனையோ சதுர் யுகங்களாக எங்களை -எங்கள் பாம்புச் சாதியைக் கண்டவிடமெல்லாம் அடித்துக் கொல்லுகிறார்கள். காட்டையெல்லாம் எரித்தார்கள், கரடி, புலி, நரி, ஓநாய், சிங்கம், காண்டாமிருகம். யானை, காட்டெருது, காட்டுப் பன்றி, காட்டுப் புல்லாய், காட்டு மிளா, காட்டு மான் முதலிய கோடானு கோடி ஜந்துக்களைக் , காட்டுக்குள்ளே பதுங்கிக் கிடந்து நாட்டுக்குள்ளே வராதபடி சுட்டும், அடித்தும் கொல்லுகிறார்கள். எஈக்களையும், எறும்புகளையும் பகைக்கிறார்கள்.
பசுவையும், ஆட்டையும், கோழியையும், வாத்தையும், கிளியையும், புழுவையும், மீன் கோடிகளையும், தவளைகளையும், நண்டுகளையும், குதிரையையும், பன்றியையும், குயிலையும் இன்னும் கோடானு கோடி ஜந்துக்களைக் கொல்லுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுடைய எச்சிலைப் போய் நீ தின்னுகிறாய்” என்றது.
காகம் சொல்லுகிறது:- “கருணா மயமாக, சுகப் பிரம்ம ரிஷி மாதிரி சர்வ ஜீவர்களையும் ஆத்மாவைப் போலே கருதிப் பாம்புகள் வாழ்கின்றனவா? காகங்கள் வாழ்கின்றனவா? மனிதன் மேல் மாத்திரம் பழி சொல்லிப் பயனென்ன? நீ மனிதனை நடுங்கச் செய்யும் படியான விஷத்தை உன் வாயிலே அடக்கிக் கொண்டு, மனிதனை நிந்திக்கிறாயே? சீச்சி!” என்றது.
பாம்பு சொல்லுகிறது:- “மணனிதன் சிருஷ்டி கோடிகளுக்கெல்லாம் தலைமையான ஜந்து. அந்த ஜந்து பரஹிம்சையை விட்டு விடுமானால், மனித ஜாதி உண்மையாகவே ஜீவகாருண்யமும் நாகரிகமும் அடையுமானால், பிறகு சகல கோடி ஜந்துக்களும் யோக்கியதை யடையும்” என்றது.
- சுதேசமித்திரன் (1919)
$$$