அகமும் புறமும் – 6ஆ

-பேரா.அ.ச.ஞானசம்பந்தன்

ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்ய வேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

புறம்

6. தமிழர் கண்ட அரசன் – ஆ

.

அறப்போர்

போரிடுங் காலத்திலும் இவர்கள் தம்முடைய பண்பாட்டிலிருந்து தவறுவதில்லை. போர் புரியத் தொடங்கு முன்னரே பகைவருடைய நாட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிடுமாறு எச்சரிக்கும் நற்பண்புடையவர்.  “பசுக்களும், பசுத்தன்மை பெற்ற அந்தணர்களும், பெண்டிரும், பிணியுடையவர்களும் பிதிர்க்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர் பெறாதவர்களும், யாம் போர் தொடுக்கப் போவதால் உடனே உமக்குப் பாதுகாவலான இடத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” (புறம்.9) என்று பறை அறிவிப்பர் இம் மன்னர் எனில், இவர் பண்பாட்டை அறிய இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விதிவிலக்கு

அறநெறி பிழையாது போர் இட்ட இம்மன்னர் கூட்டத்தின் நடுவே ஒரு சிலர் இம்முறைக்கு மாறாகவும் நடந்து கொண்டார் என்பதும் உண்மையே. ஏனைய சமயங்களிற் செம்மையாக நடந்துகொள்ளும் நல்ல அரசர்கள்கூட ஒவ்வொரு சமயத்தில் இடித்துக் கூறுவார். இல்லாத காரணத்தாலோ, என்னவோ தவறு இழைத்து உள்ளனர். பகைவருடைய நாட்டையும் அரணையும் அழித்து அவர் நிலங்களில் கழுதை பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுவித்தலையும் (புறம். 15) ஒரு பாடலில் கேட்கத்தான் செய்கிறோம்.

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழாக,
ஏம நன்னாடு ஒள் எரி ஊட்டினை

  (புறம். 16)

என்பது போன்ற பாடல்கள் மிக மிகச் சிலவே. தொகையாகச் சேர்க்கப் பெற்ற புறம் போன்ற நூல்களில் இத்தகைய பாடல்கள் ஒன்றிரண்டு காணப்படுதலான் ஓர் உண்மை நன்கு விளங்கும். அற்றை நாளில் தமிழ் மன்னர் இருந்த நிலையை உள்ளவாறு விளக்க வேண்டும் என்ற காரணத்தால் பொய் அறியா நன்மாந்தர் வேண்டும் என்றே இத்தகைய பாடல்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான மன்னர் மிகச் சிறந்தவராய் இருந்தனர் என்பதும், ஒரு சிலர் தவறான வழியில் சென்றனர் என்பதும் அறிய முடிகிறது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து இதைப் பெருந்தவறு என்றும் கூறுவதற்கில்லை. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் போரில் தோற்றாரைத் துன்புறுத்தலினும் அவர் நாட்டை எரி ஊட்டலினும் தவறு ஒன்றும் இல்லை என நினைத்திருக்கலாம் அல்லவா? எரியூட்டல் முதலிய செயல்கள் நாகரிகம் முதிர்ந்ததாகக் கருதப் பெறுகிற இற்றை நாளிலும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒன்று தானே? இற்றை நாள் மேலை நாட்டார் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் இச்செயல் கள் தவறுடையன எனக் கூறுவதற்கில்லை. ஆனால்,  ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்ற பழந்தமிழன் பண்பாட்டோடு ஒப்பிட்டால், தவறுடையதுதான் என்பதில் ஐயமில்லை.

தூய படுக்கை

இத்தகைய அரசர்களுடைய புறச்செயல் முதலியவற்றைக் கண்டோம். இனி  தனித்த முறையில் அரசனைப் பற்றிச் சிறிது காண்டல் வேண்டும். தமிழ் மன்னன் காட்சிக்கு எளியனாய் இருந்தமையோடு காட்சிக்கு அழகனாயும் இருந்தனன் என நினையவேண்டி யுளது. அவன் உடை முதலியவற்றால் பொலிவுற்றிருந்ததை இலக்கியத்தில் காணலாம். அவன் படுத்து உறங்கும் கட்டில் தூக்கு மாலைகளால் பொலிந்து விளங்கினது என்ற கருத்தில்,

 ‘கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி’ 

   (மதுரைக்காஞ்சி 7131)

என்ற  ‘மதுரைக் காஞ்சி’ ஆசிரியர் குறிக்கிறார்.  ‘சிந்தாமணி’யாரும்,

 ‘ஐந்து மூன்று அடுத்து செல்வத்து அமளி இயற்றி’ 

   (சீவகசிந்தாமணி 888)

என்று கூறுகிறார். ஆதலின், இம்மன்னர்கள் தாம் உறங்கும் படுக்கையிடத்து எத்துணைக் கருத்துச் செலுத்தினர் என்பது ஆய்தற்குரியது.  ‘நெடுநல் வாடை’ என்ற பாடல் அரசனுடைய கட்டிலைப் பற்றி வருணிக்கின்ற முறையை இன்றுங்கூட முழுவதும் அறிவது கடினமாய் உள்ளது.

இன்று நம்முடைய நாட்டில் செல்வர்கள் கூடப் படுக்கை எவ்வாறு இருந்தால் என்ன என்ற கருத்துடன் இருக்கக் காண்கிறோம். வீட்டின் பிற பகுதியை நன்கு வைத்துக் கொள்பவர்கள் கூடப் படுக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் காண்கிறோம். ஆனால் நடுத்தர வாழ்வு வாழும் ஆங்கிலேயர்கள் முதலிய பிற நாட்டார் படுக்கையை வைத்துக்கொள்ளும் சிறப்பையும், பழைய தமிழ் மன்னர்களின் படுக்கை பற்றிய வருணனைகளையும் காணும் பொழுது இதில் ஓர் உண்மை இருப்பதை அறிய முடிகிறது. படுக்கை இருக்கும் தூய்மை, சிறப்பு என்பவற்றிற்கேற்பப் படுப்பவனுடைய மனமும் தூய்மை உடையதாய் இருக்கும் போலும்! ஆடம்பரமற்ற முறையில் படுக்கை இருப்பினும், அது தூய்மையுடன் வைத்துக் கொள்ளப்பட வேண்டுவது என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வலியுறுத்துகிறார்,

 ‘கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றால்’ 

   (குறள் - 840)

என்ற குறளில்.

திருந்து துயில்

இத்தகைய படுக்கையில் உறங்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனைவரும் நன்கு உறங்குகின்றனர் என்று கூறல் இயலாது. மனிதனுடைய மனம் எவ்வளவுக் கெவ்வளவு கவலையுற்றிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு ஆழ்ந்து இனிமையாகவும் உறங்க முடியும் என்பதை அவரவர் அனுபவத்திலும் மனோதத்துவர் கூற்றிலும் காண்டல் கூடும். பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியை நடாத்திய தமிழ் மன்னர்கள் மனநிலையில் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் தமிழ்ப் பாடல்களிலிருந்து ஒருவாறு அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சியாசிரியர் மன்னன் ஒருவன் உறக்கத்தை நீத்து எழுந்தான் என்று கூறவரும் பொழுது,

 ‘திருந்து துயில் எடுப்ப இனிதின்எழுந்து’ 

   (மதுரை. 714)

என்று கூறும் அடி அம்மன்னனைப் பற்றிய பல உண்மைகளை நமக்கு அறிவிக்கிறது. சாதாரணமாகவே அதிகப் பொறுப்புள்ள வாழ்க்கை வாழ்கிறவர்கள் நன்கு உறங்க முடியாது. அவருள்ளும் மன்னன் வாழ்க்கை பற்றிக் கேட்க வேண்டுமா?

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுரவு உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல். 

   (சிலம்பு. 25: 100-104)

(மழை குறைந்தாலும், உயிர்கள் துன்புற்றாலும் மன்னன் கொடுங்கோலனென்று தூற்றப்படுகிறான். ஆதலின்,  மக்களைக்காக்கும் மன்னர் குடிப்பிறத்தலினும் துன்பம் வேறு இல்லை.)

என்று அரசர் குடியிற் பிறந்த இளங்கோவடிகளே குறிக்கின்றார். எனவே மன்னனாய்ப் பிறந்த ஒருவன் மன அமைதியோடு உறங்குகிறான் எனில், அதில் பெரியதோர் உண்மை இருத்தல் வேண்டும். இக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாகரிகமும் பணமும் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர்  ‘உறக்க மாத்திரைகள்’ பயன்படுத்தினால் ஒழிய உறங்க முடிவதில்லை என்பதை அறிகிறோம்.

இவை அனைத்தையும் மனத்திற்கொண்டு மதுரைக் காஞ்சியார் கூறிய  ‘திருந்து துயில்’ என்ற சொற்களைக் காண்போம். ‘திருந்து’ என்ற அடைமொழியைத் துயிலுக்கும்  ‘இனிதின்’ என்ற அடைமொழியை  ‘எழுந்து’ என்ற சொல்லுக்கும் பெய்து பாடுகிறார் ஆசிரியர். இக்காலம் போன்று பயனின்றி அடைமொழி தந்து பாட மாட்டார்கள் சங்கப் புலவர்கள். அவ்வாறு மிகுதியான சொற்கள் காணப்பட்டால், அங்கு நின்று ஆய வேண்டும். ‘திருந்து’ என்றும் ‘இனிதின்’ என்றும் கூறும்பொழுது ஆசிரியர் ஏதோ ஒரு பெரிய கருத்தைத் தெரிவிக்கின்றார். துயிலை  திருந்து துயில் என்று குறிப்பிடுவதால், மனக் கவலையின்றி ஆழ்ந்து உறங்கும் உறக்கத்தையே குறிக்கிறார் ஆசிரியர். இத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை யார் பெற முடியும்?

பச்சிளங் குழந்தைகளும் மெய்ஞ்ஞானிகளும் மட்டுமே படுக்கையிற் படுத்தவுடன் உறங்கிவிடுகிறார்கள். மேலும், உறங்கும்பொழுதும் அரைகுறையாய் உறங்காமல், கனவு முதலியவற்றால் அல்லற்படாமல், நன்கு உறங்குகிறார்கள். குழந்தைகளும் மன உறுதியுடையாரும் இவ்வாறு உறங்கக் காரணம் யாது? இவ்விருவரும் மனக் கவலை இன்றி இருப்பதால் உறங்க முடிகிறது. எனவே, ஒருவன் திருந்திய துயில் கொள்ளுகிறான் எனில், அவன் மனம் கவலை அற்றுள்ளது என்பதே பொருள். துறவியின் மனம் கவலை இன்றி இருத்தல் கூடும். ஆனால், மன்னன் ஒருவன் இவ்வாறு சிறிதும் கவலை இன்றி இருக்கிறான் எனில், அது வியப்பானதே. பழந்தமிழ் மன்னர்கள் கவலையின்றி இருந்தார்கள். கவலை இன்றி இருப்பதென்றால், அது இருவகையிற் கூடும். கல் மனம் உடையவனாய், பிறர் வாழ்வு தாழ்வில் கவலையற்றவனாய், பொறுப்பற்றவனாய் இருக்கும் ஒருவனும் கவலையற்றிருத்தல் கூடும்.

தமிழ் மன்னர்கள் பற்றிய பாடல்களைப் பார்த்தால், அவர்கள் இவ்வாறு பொறுப்பற்றிருந்தார்கள் என்று கூறல் இயலாது. எனவே, வேறு ஒரு காரணம் பற்றியே அவர்கள் திருந்திய துயில் கொண்டிருத்தல் கூடும். அக் காரணமாவது யாது? வாழ்வின் உட்பொருளை நன்கு உணர்ந்தும் அரசராய்ப் பிறந்துள்ள தம் பொறுப்பை நன்குணர்ந்தும் வாழ்ந்தனர் அற்றை நாள் மன்னர்கள். மேலும், அக் கடமையை நன்கு நிறைவேற்றினமையின், கிடைத்தற்கரிய அமைதி என்ற பரிசைப் பெற்றனர். கடமையை நன்கு நிறைவேற்றியதால் உண்டாகும் மன நிறைவில் பிறந்த உறக்கமே அவர்கள் உறங்கிய உறக்கமாகும். இதனையே ஆசிரியர்  ‘திருந்து துயில்’ என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார்.

இதனையடுத்து,  ‘இனிதின் எழுந்து’ என்று வரும் சொற்களும் ஆய்தற்குரியன. விடியற்காலை எழும்பொழுது நம்மில் எத்துணைப் பேர்கள் மன நிறைவுடனும் சிரித்த முகத்துடனும் எழுகின்றோம்? இவ்வாறு எழ வேண்டு மாயின், இரவு நல்ல முறையில் உறங்கி இருத்தல் வேண்டும். எனவே, இனிய முகத்துடன் மன்னன் எழுந் தான் என்று ஆசிரியர் கூறும்பொழுது அம்மன்னனுடைய வாழ்வையும் பண்பாட்டையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். தெளிந்த மனத்துடன் எழும் அம் மன்னன் நன்கு கடமையாற்றத் தயாராகிவிடுகிறான்.

வழிபாடு

இவ்வாறு எழுந்தவுடன் அம் மன்னன் படுக்கையில் இருந்தபடியே அன்றாடம் ஆற்றி முடிக்க வேண்டிய கடமைகளைப் பற்றிச் சிந்திக்கிறான். பழந்தமிழர் போற்றிச் செய்து வந்த இச்செயலைப் பிற்காலத்தெழுந்த ஆசாரக் கோவை என்ற நூல் அனைவருக்கும் உரிய கடமையாக வகுக்கின்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல் அறனும் ஒண்பொருளும் சிந்தித்து’ 

   (ஆசாரக்கோவை)

என்று கூறும் அடிகளில். இக்கடமை முடிந்தவுடன் அரசன் நீராடிவிட்டு உடையுடுக்கிறான். அடுத்துக் கடவுட் பூசையில் ஈடுபடுகிறான்.

வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி. 

   (மதுரைக்காஞ்சி -723-724)

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் அவன் செய்யும் இச் செயலையும் நமக்கறிவுறுத்துகின்றன. பின்னர் உணவுண்டு, நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பெரிய முத்து மாலையை அணிகின்றான். ஒளி பொருந்திய ஏனைய மணிமாலைகளுடன், மலர் மாலையையும் அணிகின்றானாம்; கைவிரல்கள் நிறைய மணிகள் அழுத்தின மோதிரங்களையும் அணிகின்றானாம்; இத்தனைக்கும் மேலாக அன்றாடம் சலவை செய்யப்பெற்ற உடைகளை அணிகின்றானாம். துணிகட்குக் கஞ்சியிட்டுச் சலவை செய்தல் இக் கால வழக்கம் என்று யாரும் நினைத்துவிட வேண்டா. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்நாட்டில் மன்னர்கள் இதனையே அணிந்தனர் என்பதை

‘சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்’ 

   (மதுரைக்காஞ்சி-721)

என்ற அடிகளால் அறியலாம்.

உடைச் சிறப்பு

இத்துணை அலங்காரங்களுடன் காலை நேரத்தில் மன்னன் காட்சி தருகின்றான். ஆங்கிலர் ஆட்சித் தொடக்கம் வரையில் நிலை பெற்றிருந்த இந்திய நாட்டின் உடைச் சிறப்பு  தமிழ்நாட்டில் தொடங்கியதெனக் கூறலாம். அற்றை நாளில் தமிழ்நாட்டில் நெய்யப்பெற்ற மெல்லிய துணிகட்கு என்ன பெயர்கள் தந்தார்கள் என்று கூற முடியாவிடினும்,  ‘டாக்கா மஸ்லின்’ போன்றிருந்தன அவை என்று மட்டும் கூற முடியும். பழந்தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் உடுத்த உடைகள் எவ்வாறிருந்தன என்பதை அவர்கள் பாடலில் தோன்றும் உவமைகளால் மட்டுமே அறிய முடிகிறது. உடைகளைப் பற்றிய சில குறிப்புகள் அறியற்பாலன.

 ‘புகைவிரிந் தன்ன பொங்குதுகில்’ 

  (புறம், 398)

 ‘ஆவி நுண்துகில் யாப்புறுத்து’ 

  (பெருங்கதை 1:36-64)

 ‘நிறங்கிளர் பூந்துகில்’ 

  (சிலம்பு. 6:88)

 ‘நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்’ 

  (சிலம்பு. 1:207)

என வரும் இவ்வடிகள் தமிழ்நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவதுடன் மன்னர் அணிந்த உடை வளத்தையும் காட்டி நிற்கின்றன. அடுத்து உணவுகொண்டு மன்னன் நாள் ஒலக்கத்திற்குச் சென்றமை அறிய முடிகிறது. அவ்வரசர்கள் அவைக்குச் செல்லு முன் அன்றைப் பொழுதுக்கு இவருக்கு ஏவலராக அமைந்துள்ளவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அறிய முடிகிறது. அன்றாடம் அரசனுடைய மெய்k காப்பாளர், உறங்கும் இடத்தைக் காவல் புரிபவர் என்ற இருவகை ஏவலாளருமாவர் இவர். பெருங்கதை என்ற நூலில்,

புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய,
திருவீழ் கட்டில் திறத்துளி காத்த
வல்வேல் சுற்றத்து மெய்ம் முறை கொண்ட
பெயர் வரி வாசனை கேட்ட பின் 

   (பெருங்கதை-34:5-8)

என வரும் அடிகள் பழந்தமிழ் மன்னரின் வாழ்வில் ஒரு பகுதியை அறிவிக்கின்றன. இப்பழக்கம் ஹிட்லர் காலம் வரையில் இருந்ததைக் கண்டோம்.

உணவுச் சிறப்பு

அரசர்கள் உணவும் பல்வகைச் சுவையுடையதாய், சத்துள்ளதாய் இருந்துளது. அரிசி உணவையே பெரிதும் விரும்பியுண்டனரெனினும், இற்றை நாளில் யாண்டுங் கிடைக்காத செந்நெல் என்பதை அற்றை நாளில் மிகுதியும் பயன்படுத்தினர். சத்துப்பொருள் முறையில் இச்செந்நெல் அரிசி மிகுதியும் சத்துடையதாய் இருந்திருக்குமெனத் தெரிகின்றது. ஒரு மன்னன் பாடிச்சென்ற பரிசிலர்க்கு உணவு தருமுறை கூறப்படுகிறது சிறுபாணாற்றுப் படை என்ற நூலில். அதிலிருந்து மன்னன் உணவையும் அதனை உட்கொள்ளு முறையையும் ஒருவாறு ஊகிக்கலாம். வீமன் இயற்றிய சமையற்கலை நூலின் நெறியில் தப்பாமல் பல சுவையுடன் செய்யப்பெற்ற அடிசிலை விண்மீன்கள் சூழப் பட்ட இளஞாயிறு போலக் காட்சிதரும் பொன் பாத்திரத் திடத்தே தந்தனனாம். இக்கருத்துப்பட வரும் பாடற்பகுதி.

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவளின் வழாப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குபொன் கலத்தில் தான் நின்று உட்டி,


   (சிறுபாணாற்றுப்படை 240-244)

என்பதாகும். அரசன் பரிசிலர்க்குந் தரும் முறை இதுவானால், அவன் உணவு முறை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தமிழ் மன்னன் பெருஞ்செல்வம் பெற்றிருந்ததுடன் அதனை நன்கு அனுபவிக்கவும் பழகி இருந்தான்.

அரசர் அவை

பழந்தமிழ் மன்னர்கள் உண்டு உடுத்து வாழ்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய இடம் அரசவையாகும். பழந்தமிழ் மன்னர்கள் அலங்கரித்த அவைகள் பல பெயர்களால் வழங்கப் பெற்றன. ஒலக்கம், நாளோலக்கம், பெருநாளவை என்ற பெயர்களால் அவ்வவைகள்  குறிக்கப்பெற்றன. அரசர்கள், அமைச்சர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பிற நாட்டுத் தூதுவர் முதலியவர்களால் சுழப்பட்டிருப்பார்கள். அவ்வவைகளில் பரிசிலர் இனம் மட்டுமே அவ்வோலக்கத்தின் கண் ஆணை இன்றியும் நுழைதல் கூடும்.

 ‘நசையுநர்த் தடையாநன்பெரு வாயில்’ 

   (பொருநராற்றுப்படை 66,71)

என்றும்,

பொருநர்க்காயினும், புலவர்க்காயினும்,
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி 

   (சிறுபாணாற்றுப்படை 203-6)

என்றும் வரும் அடிகள் பெரு நாளவைகளின் சிறப்பை அறிவிக்கின்றன.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

அரசர்களைச் சுற்றியுள்ளவர்கள்  ‘உழைவர்’ (பெருங் 4:13:23) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் இவ்வுழையர்கள் சேர்ந்தனவே. ஐம்பெருங்குழுவினுள் யார் யார் அமைவர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.  ‘ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்’ (சிலம்பு. 5:157) எனவரும் இடத்தில் அரும்பத உரையாசிரியர் இவர்களை  ‘சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம், நெல் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்’ என்றும்,  ‘வேந்தர்க்கு மாசனம், பார்ப்பார், மருத்தர், வாழ்நிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து’ (சிலம்பு 5:157 குறிப்புரை) என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அடியார்க்கு நல்லார்,  ‘அமைச்சர் புரோகிதர், சேனாபதியார், தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப் படுமே’ என்றும், கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி (குதிரை) மறவர், இணையர் எண்பேர் ஆயம் என்ப’  (சிலம்பு. 5:157 உரைப் பகுதி) என்று கூறுகிறார்.

இவ்விரு உரையாசிரியர் கூற்றையும் நோக்குமிடத்து அரசரைச் சுற்றி இருப்போர் காலாந்தரத்தில் மாறினர் என்று நினைக்க இடமுண்டு என்றாலும், அடியார்க்கு நல்லார் கூறினவர்களே அரசவையில் உடனிருந்து பங்கு கொள்ளத்தக்கவர்கள் என்று கூறல் பொருந்தும்.

சாந்து கொடுப்போர். பூக்கொடுப்போர் முதலியவர்கள் அரசவையில் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களா என்று ஆயுமிடத்து அடியார்க்கு நல்லார் கூறினவர்களே தகுதியுடையார் என்பது நன்கு விளங்கும். அரசவையில் இருப்போர் அரசனுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபடத் தகுதி யுடையவராய் இருத்தல் வேண்டாவா? அமைச்சர் முதலானோருடன் பூத்தருவோரையும், உடை அணிவிப்போரையும் வைத்தெண்ணுதல் பொருத்தமுடையதாகப் படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்யுமிடமும், பரிசிலர் முதல் வெளிநாட்டுத் தூதுவர் வரை அனைவரையும் வரவேற்குமிடமும் இந் நாளோலக்கமேயாகும்.

பழந்தமிழ் மன்னர்களுடைய நாளோலக்கத்தை நாம் இன்றும் அறிய வாய்ப்பைத் தந்தது, அவர்கள் பரிசிலர்களையும் இவ்வோலக்கத்தில் அனுமதித்ததேயாகும். ஏனையோர் பலநாள் காத்திருந்தும் அரசனுடைய செவ்வி கிடைக்கப் பெறாமல் மனம் மறுகி இருக்கவும், பரிசிலர் மட்டும் யாதொரு விதமான தடையும் இன்றி உட்புகுதல் எத்தகைய செயல்? தமிழ் மன்னர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த செயல் வேறு யாது வேண்டும்?

‘செல்வத்துப் பயனே ஈதல்:
துய்ப்பேம் எனினே தப்புந பலவே’ 

   (புறம்-189)

என்று நக்கீரர் புறநானூற்றில் (189) கூறியதை இம்மன்னர்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர் போலும்! தமிழ் மன்னர்கள்,

 ‘காட்சிக் கெளியராய்’ 

   (குறள். 396)

இருத்தல் வேண்டும் என்று பொது மறை வகுத்த சட்டத் திற்கும் இம்முறை ஏற்றதாய் உளது.

அரசன் எதிரில்

அரசனுடைய அவையில் உள் நுழைவோர் நடந்து கொள்ளும் வகையை அறியப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இன்று பெருங்கதை என்ற நூலும் சிலப்பதிகாரமும் அரசவையில் புகுவோர் நடந்துகொள்ள வேண்டிய முறையை அறியப் பயன்படுகின்றன. கணவனை இழந்த கண்ணகி இணையரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையளாய்ப் பாண்டியன் அரண்மனை வாயிற்காவலனை உள்ளே சென்று அறிவிக்க வேண்டுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்டஞ்சிய காவலன் உள்ளே ஓடுகிறான். காணாத செயலைக் கண்டிருப்பினும், நடவாத செயல் நடந்துவிட்ட தென்பதை அறிந்துங்கூட, உள்ளே சென்று மன்னன் அவையில் நுழைந்த அவன் பேசுவது வியப்பையே தருகிறது.

பாண்டியன் அவையுள் நுழைந்த வாயிற்காவலன்,

 ‘வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி!’ 

   (சிலம்பு 20:30-34)

என்று கூறிவிட்டுப் பின்னரே தான் கூற வந்ததைக் கூறுகிறான். எனவே, இவ்வாறு அரசனைக் காண்போர் வாழ்த்திய பின்னரே வந்த காரியத்தை எடுத்தியம்ப வேண்டும் என்ற வரன்முறை அற்றை நாளில் இருந்திருக்கும் போலும்! இவ்வாறு வரன்முறை வைத்ததற்கும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அரசனைப் பார்க்க வருபவர் பல்வகையான செய்தியையும் கொணர்வர்.

அவ்வாறு நுழைபவர் தம்முடைய உணர்ச்சிகட்கு இடந்தந்து பேச முற்படுவாராயின், அரசனுக்கு அதனால் நடுவு நிலை நீங்க நேரிடும். எனவே, செய்தி கூற வருபவர், தாம் வந்த காரியத்தை உடனே கூறாமல், அவனைப் பல படியாக வாழ்த்திவிட்டுத்தான் கூற வேண்டுமெனில், வந்த உணர்ச்சி வேகத்தில் பாதியை இழந்துவிடுவர். இவ்வகையான ஒரு நலத்தையும் இவ்வாழ்த்து முறை தருதலைக் காணலாம். பழந்தமிழ் மன்னர் அவைக்களம் முழுவதிலுமே இப்பழக்கம் இருந்துவந்ததென்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வணங்கிய தலையர்

அவையுள் அரசனைக் காண வருபவர் இவ்வாழ்த்தை வாயினாற் கூறுவதோடன்றிச் செய்ய வேண்டிய செயல்கள் சிலவும் உண்டு. அவற்றை அறியப் பெருங்கதை உதவுகிறது.  ‘பிரச்சோதன’ மன்னன் கணக்கர்களையும், அரசன் கருவூலத்தைக் (பொக்கிஷம்) காப்பவரையும் அழைத்து வர ஏவுகின்றான். இவ்விரு கூட்டத்தாரும் அரசவையுள் நுழையும்பொழுது முழங்காலிட்டு, போர்வையாகிய மேலுடையை மடக்கிக்கொண்டு, வணக்கஞ் செலுத்திக் கொண்டு, அண்ணாந்து அரசனைக் காணாமல், குனிந்த படியே அவன் ஏவலைக் கேட்டனர் என்று அந்நூல் கூறுகிறது.

கணக்கரை வியன்கரக் கலவரைக் காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்வு உடுத்த நெடுநுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந்து இயலா ஆன்றுபுரி அடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழுஉப் புகுதர 

   (பெருங்கதை 1:62-67)

என்ற அடிகள் அரசவைப் புகுந்த அரசன் ஊழியர் யாவரேனும் நடந்து கொள்ளும் முறையை நன்கு அறிவிக்கின்றன. இவ்வித முறையில் மரியாதை காட்டுவதால்தான் அரசன் பெருமையடைகிறானோ என்று ஐயுற வேண்டா. என்ன இருந்தாலும் மன்னனே நாட்டிற்கு உயிர் போன்றவன் என்று கருதப்பட்ட நாளில் இவ்வாறு ஏவலரும் பிறரும் அவனிடம் பணிவு காட்டியதே அவனுடைய பெருமையை அறியாதாருக்கு அறிவிப்பதா யிருந்தது. இவ்வாறு பெருமை தரும் இயல்பு மன்னன் என்னும் மனிதனுக்கு மற்றுமன்றி, அவனுடைய அதிகாரத்திற்கும் காட்டப்பட்டது என்று கருதுதலும் தவறன்று.

உறங்குமாயினும் மன்னவன் தன்ஒளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால் 

   (சிந்தாமணி-248)

என்று திருத்தக்க தேவர் கூறுவது இது கருதியேயாம். மன்னன் இல் வழியும் அவன் அமர்ந்து ஆட்சி செய்யும் இடத்திற்கும் இம்மரியாதை காட்டப்பட்டது.

தேவி உடனிருத்தல்

இத்துணைப் பெருமை வாய்ந்த அரசவையில் அரசன் வீற்றிருக்கும் பொழுது அரசியும் உடன் இருந்தாள் என்றும் அறிகிறோம்.

தேவியர்க்கு எல்லாம் தேவி யாகிக்
கோவீற்று இருப்புழிப் பூவீற்று இருந்த
திருமகள் போல ஒருமையின் ஒட்டி
உடன்முடி கவித்து கடன்அறி கற்பின்
இயற்பெருந் தேவி 

   (பெருங்கதை 2:4:20)

என்ற அடிகள் அற்றை நாள் தமிழ் மன்னர் பெண் இனத்திற்குக் காட்டிய பெருமையை எடுத்தியம்புகின்றன.

ஆம்! ஔவையும், வெள்ளிவீதியும், ஒக்கூர் மாசாத்தியும் பிறந்த தமிழ் நாட்டில் பெண்கட்கு மதிப்புத் தருதலும், சமஉரிமை தருதலும் இயல்பே அன்றோ? இத்துணை உரிமைகளை மகளிர்க்கு அளித்திருந்தும், வருந்தத்தக்க ஒரு நிலையாதெனில், இம்மன்னர்களனைவரும் பல தார மணஞ்செய்து கொண்டவர்களாகவே இருந்தனர். பெருங்கதை போன்ற காப்பியங்கள் இவர்களை ஆயிரக் கணக்கில் கூறுவதைக் காணலாம்.

காணிக்கை

அரசனை அவையிற்சென்று காண்போர் காணிக்கையாகச் சில பொருள்களைக் கொண்டு சென்று காண்டல் மரபாகும். இப்பொருளைப் பண்ணிகாரம் (3.18.24) என்ற சொல்லால் குறிக்கிறது பெருங்கதை. செல்பவர் தகுதிக் கேற்பவும், அவர் வேண்டும் குறைக்கு ஏற்பவும் உயர்ந்தனவும் சாதாரணமானவும் ஆன பொருள்களைக் கொண்டு செல்லல் மரபு. சேரன் செங்குட்டுவன் மலை வளங் காணச்சென்று தங்கியிருந்த பொழுது மலைவாணர் மலைபடு பொருள்களைக் கொணர்ந்து தந்து அவனை வழிபட்டமையைச் சிலப்பதிகாரம் விரிவாகப் பேசுகிறது. (சிலம்பு 25.36-55)

அவையே நீதி மன்றம்

பழந்தமிழ் மன்னனுடைய அவை நீதி மன்றமாகவும் இருந்தமையைக் கண்ணகி வழக்குரைத்தல் மூலம் கண்டோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியை நோக்கி,

பெண் அணங்கே,
கள்வனைக் கோறல் கடுங்கோலன்று!
வெள்வேல் கொற்றம் காண்! 

   (சிலம்பு 20:63)

எனக் கூறியதும் அவனுடைய அவையிடத்தேதான். அற்றை நாளில் கொலையல்லாத பிற குற்றம் செய்தவர்கள் வேறு தண்டனை பெறாமல் தம் நிறையளவு பொன்னை அரசனுக்குத் தண்டமாகக் கொடுத்து விடுதலை பெறும் பழக்கமும் இருந்ததாக அறிய முடிகிறது. இக்கருத்தைப் பழைய குறுந்தொகைப் பாடல் விரிவாகப் பேசுகிறது.

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் 

   (குறுந்தொகை-292)

கொள்ளாத மன்னன் நன்னன் ஆவான். தமிழ் மன்னர் பல சந்தருப்பங்களில் அளவு மீறிய தண்டனையளித்தனர் என்பதையும் அறிவிக்கிறது. நீராடு துறையில் நீருடன் வந்த மாங்காயைத் தின்றுவிட்டாளாம் ஒரு பெண். அந்நாட்டு மன்னன் நன்னன் மாங்காய் தின்ற குற்றத்திற்கு அவள் தந்தை தருவதாகக் கூறிய பொருள்களையும் (81 யானைகளும் அவள் நிறை பொன்னும்) பெற மறுத்து, அவளைக் கொன்றே விட்டானாம்! இத் தீச்செயலால் அவன் பெண் கொலை புரிந்த மன்னன், என்ற பழிச்சொல்லைப் பெற்றான்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகால்பெருவளத்தான், பாரி போன்ற நன்மன்னர்களே தமிழ்நாட்டை ஆண்டிருப்பார்கள் என்று கூறுவது பொருத்தம் ஆகாது.

ஒரோவழி நன்னன் போன்ற கொடுங்கோலர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

எனவே சங்கப் பாடல்களில் கொடுங்கோல் மன்னர்ப் பற்றிய குறிப்புகள் பொதுவாகவே உள்ளன.

அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து
தொல்கவின் அழிந்த கண் அகன் வைப்பு 

   (பதிற்றுப்பத்து 13)

அம்புடை ஆர்எயில்உள் அழித்து உண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன் 

   (பதிற்றுப்பத்து 20)

பின் பகலே அன்றி பேணார் அகநாட்டு
நண்பகலும் கூகை நகும்

அளவிற்கு நகர்கள் பாழாயின.  ‘அறத்தாறு நுவலும் பூட்கை’ என்ற புறநானூறு போர் அறம் கூறுமேனும் அதற்கு மாறாக நிகழ்ந்த போர்வெறிச் செயல்களின் மிகுதியைப் பதிற்றுப் பத்தும், புறநானூறுமே கூறக் காண்கிறோம்.

வாழ்த்தியல் துறையினும், வாடுக, இறைவ! நின் கண்ணி – ஏனோர் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே என்றெல்லாம் அறம் வேட்கும் புலவர் பெருமக்களே பாடியுள்ளமையும் காணப்படுகிறது.

தமிழ் மன்னர் நாளோலாக்கம் மிக்க சிறப்புடைய தாயினும் அவருள்ளும் சில பேதையர் இல்லாமற் போக வில்லை. இளவிச்சிக்கோ என்பானுடைய அரசியலைப் பாட வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்

வயங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின்
அணங்குசால் அடுக்கம்பொழியநும் ஆடுமழை,
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே. 

   (புறம். 151)

என்று பாடுவதால், பரிசிலரை வரவேற்காத அவைகளும் ஒரோவழிச் சில இருந்தன என்பது அறியப்படுகிறது.

ஆட்சியாளர்க்கு

உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனித இனம் தோன்றி வளரு முன்பே இத்தமிழகத்தில் மனிதன் தோன்றிவிட்டான் என்பது இற்றை நாளில் நிலநூல் அறிஞர் பலரும் ஒப்புகின்ற முடிபாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் இத்தமிழனுடைய நாகரிகமும் பழமை யானதாகும். சரித்திரம் எட்டிப் பாராத அந்த நாளிலேயே இத்தமிழர் செம்மையான அரசியல் அமைப்பைப் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல், பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்.  ‘புறநானூறு’ என்ற நூல், தொகுக்கப்பெற்றது எக்காலம் என்பது இன்று உறுதியாக அறியக் கூடவில்லை. எனினும், கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டாவது முற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. தொகுத்தது அந்த நாளில் என்றால், அதில் காணப்பெறும் பாடல்கள் பல அதற்குக் குறைந்த அளவு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டு முற்பட்டாவது தோன்றி இருத்தல் கூடும். எனவே, புறநானூற்றில் வரும் கருத்துக்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழர் கொண்ட கருத்துக்கள் என்று கூறுவதில் அதிகம் பிழை இருக்க இயலாது.

இத்தகைய பெருநூலில் ஆட்சியாளர் இன்றும் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள் மிகப் பல உள.

பதவியால் மாற்றம்

ஒருவர் எத்துணைப் பெரிய பதவியில் இருப்பினும் தாமும் மற்றவரைப் போன்ற மனிதர்தாம் என்பதை அவர் உணர வேண்டும், இதை நாம் எடுத்துக் காட்டினால் பயன் விளையாது. எத்துணை நல்லவர்களாயினும், ஆட்சி கைக்கு வந்தவுடன், மனம் மாறி விடுகின்றனர். இக்குறைபாடு உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படுகிற ஒன்று தான். எனினும், இத்தமிழர்கள் என்றுமே இதனை ஆட்சி யாளர்க்கு நினைவூட்ட மறந்ததில்லை. தான் பொது மக்களின் தொண்டன் என்ற நினைவு ஒருவனுக்கு இல்லையாயின், அவன் நல்ல ஆட்சியாளன் ஆதல் இயலாது. எனவே, இவர்களைப் பற்றிக் கூறவந்த பொதுமறை,

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறுஆகும் மாந்தர் பலர்  

   (குறள்-514)

என்று கூறிற்று. ‘எத்தனை முறைகளில் ஒருவரைச் சோதித்து முடிபு செய்தாலும் அதிகாரம் கைக்கு எட்டிய பின் அவர் எவ்வாறு ஆவார் என்பதைக் கூற முடியாது, என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். குறள் வகுத்த இந்த இலக்கணத்தை ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த கம்பநாடனும் தன் இராம காதையில் பேசுகிறான்:

அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும்
பெறல் அருந் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம். 

   (கம்பன்-1476)

பண்பாட்டால் நிறைந்தவர்கட்குக்கூட, பெறுதற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், மனம் மாறிவிடும் என்கிறான் கவிஞன், மேனாட்டு ஆக்டன் பிரபு, ‘அதிகாரம் மனிதனைச் சீரழியச் செய்கிறது; எதேச்சாதிகாரம் முற்றிலும் அழிந்துவிடச் செய்கிறது’ என்று கூறியதும் ஆய்தற்குரியது. ஆட்சியாளர் இவ்வாறு மாறிவிடாமல் இருக்க வழி யாது?  இதற்குற்ற வழி யாது என்ற வினாவை மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த  ‘நக்கீரர்’ என்ற புலவரும் கேட்டார். பல நாள் சிந்தித்த பின் அவர் ஒரு முடிபுக்கு வந்து விட்டார். ஆட்சியாளர் சீர்திருந்த வேண்டுமாயின், அதனைப் பிறர் கட்டளை இட்டுச் செய்ய இயலாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எவ்வாறு திருந்துவது? இதோ புலவர் வழி கூறுகிறார். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் தவறாமலும் ஓயாமலும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய கருத்து இது.
திருந்த வழி

தெளிந்த நீரால் சூழப்பெற்ற உலகம் முழுவதையும் பிறவேந்தருக்கும் பொது என்று இல்லாமல் தாமே ஆளும் வெண்கொற்றக் குடையை உடைய ஒப்பற்ற பேர் பெற்ற அரசருக்கும், நடு இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறி வில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குரியது ஒரு நாழி அரிசி; உடுக்கப்படுவன இரண்டே துணிகள்; பிற எல்லாம் ஒன்றே; என்ற பொருள்பட,

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோக்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பன இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே. 

   (புறம். 189)

என்று பாடுகிறார் தமிழ்ப் புலவர். இற்றை நாள் ஆட்சியாளர் அனைவரும் இதனை நினைவில் வைத்துக் கொண்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்! பொது மக்களினின்றும் தம்மை வேறாக நினைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பாதவற்றையும் அதிகாரபலத்தால் திணிக்க மனம் வருமா, இந்த எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தால்?

காட்சிக்கு எளியர்

தம்மைச் சாதாரண மனிதராக இவர்கL நினைத்துக் கொண்டால்தானே முறை வேண்டியவர்களும், குறை வேண்டியவர்களும் வந்து இவர்களைக் காண முடியும்? இதனை மனத்துட் கொண்ட வள்ளுவர்,

‘காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லன்
அல்லனாய்’  

   (குறள்-386)

மன்னன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆட்சியாளர் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டும் என்று கூறுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் உள்ளன. இக் காலத் தேர்தல் முறையில் இக்குறைபாடு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலே நின்றுதான் வாக்குரிமை பெறுகின்றனர் பலரும். தனிப்பட்டவர் என்று கூறிக் கொள்கிறவர்கட்கு இக்கால அரசியல் அமைப்பில் இடமில்லை. மேலும், தனிப்பட்ட ஒருவர் பிறர் உதவியை வேண்டாமல் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறுவது என்பதும் இயலாத காரியம். எனவே, பிறருடைய உதவி நாடப்படும் பொழுது அப்பிறர் எத்தகையவர் என்பதை ஆராய்தல் இயலாத காரியம்.

கூடா நட்பு

எவ்வாறாயினும் ஒருவருடைய உதவி தேவை என்று நினைக்கும் அந்த நேரத்தில் தம் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொளபவர் உதவியை மட்டும் நாடுவதென்பதும் இயலாது. உதவ வருபவர் பண்புடையாளரா, அல்லரா என்று ஆராய்ந்துதான் அவருடைய உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிபு செய்தால், அவர் தேர்தலுக்கு நின்றும் பயன் இல்லை. எனவே, பலருடைய உதவியையும் நாடித்தான் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது. எனில், அந்தப் பலருள் பல்வேறு பண்புடையவரும் இருப்பர் அல்லவா? தன்னலவாதிகள், பிறருக்குத் தீங்கு இழைப்பதைக் கலையாக வளர்த்தவர்கள், பிறர் பொருளைத்தம் பொருளாகக் கருதுபவர், பொதுப் பணம் என்பது தம்முடைய நலத்துக்கெனவே கடவுளாற் படைக்கப்பட்டது என்று கருதி வாழும் பண்புடையாளர் ஆகிய பல திறப்பட்டவரும் அப்பலருள் இருக்கத்தானே செய்வர்? இவர்களுடைய உதவியால் தேர்தலில் வெற்றி பெறுபவர் பிறகு அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களை எளிதில் நீக்கிவிட முடியுமா? டாலர் பெருமான் முழு ஆட்சி நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களாட்சியில் இக்கூற்றை நன்கு காணலாம்.

எனவே, ஆட்சியாளர் தீயவர்கள் நெருக்கத்திலிருந்து மிக விரைவில் விடுபட வேண்டும். அத்தகையோருடைய உதவியை மேற்கொண்டு தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவது அரசியல் நீதியாயினும், ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்தகையவர்களை நீக்கிவிட வேண்டுமென்பதே பழந்தமிழர் கண்ட அரசியல் நுணுக்கமாகும்.  ‘வெள்ளைக் குடி நாகனார்’ என்ற புலவரும் இந்தக் கருத்தையே வற்புறுத்துகிறார்.

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் 

   (புறம். 31)

என்ற அடிகளில் நடுவுநிலை பிறழாமலும், முறை வேண்டு பவர்கள் எளிதில் வந்து காணுமாறும் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்பதையே கூறுகிறார்.

சொல் – செயல் வேறுபாடு

ஆளப்படும் பொதுமக்கள் பல்வகை நலன்களை ஆட்சியாளர் தமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தல் இயல்பே. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கட்குத் தாம் எவற்றைச் செய்ய முடியும், எவற்றைச் செய்ய முடியாது என்பவை தெரியும். ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்ப் பலவற்றையும் செய்வதாக வாக்களித்தலும், அமர்ந்த பின்னர் இந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதலும் இன்று நாம் காணும் காட்சி. இக்காலத்து மக்கள் அனைவருமே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர் போலும்! ஒரு கட்சியார் மட்டும் அல்லாமல் அனைவருமே இவ்வாறு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாயிருத்தலின், ஒருவரும் இதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால், பொதுமக்களைப் பொறுத்த மட்டில் ஆட்சியாளரின் இந்தச் சொல், செயல் மாறுபாடு மன வருத்தத்தை உண்டாக்கத்தான் செய்யும்.

ஆழ்ந்த வருத்தம் உண்டாகுமாயின்,  நாளடைவில் அது ஆட்சியாளருக்குத் தீமையாய் முடியும். பொது மக்களிடம் தோன்றிய இந்த வெறுப்புச் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தருவதும் உண்டு. இன்னும் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தராது. இவ்வாறு பயன் தராதபோது மக்கள் வெறுப்புக் கொள்ளவில்லை என்று ஆட்சியாளர் நினைத்து விடக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களைவிடச் சிறந்த பண்புடைய கட்சி வேறு இன்மையால் மக்கள் தம் வெறுப்பைக் காட்டாமலும் இருத்தல் கூடும். சந்தருப்பம் வந்தபொழுது தவறாமல் வெறுப்பைக் காட்டிவிடுவர். அமெரிக்காவில் நெடு நாட்களாய் ஆட்சியில் இருந்த  ‘டெமாகிராட்டிக்’ கட்சியார் சென்ற தேர்தலில் தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எனவே,  ‘கூடுமான வரை செய்யக் கூடியவற்றைச் செய்கிறோம்’ என்று கூறுலும், இயலாதவற்றை  ‘இயலாது’ என்று கூறுதலும் நலத்தைத் தவறாமல் விளைக்கும், ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் இதோ இக்கருத்தைக் கூறுகிறார்:

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவக்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லுக என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூ உம்வாயில் 

   (புறம்.195)

[ஒல்லுவது- கொடுக்கக்கூடியதை; ஒல்லாது- தர இயலாத தை; ஆள்வினை மருங்கு – முயற்சி செய்வோரிடத்து உள்ள; கேண்மைப்பாலே – நட்பின் செயலாகும்; இரப்போர் வாட்டல் – எதிர்பார்க்கின்றவர்களை வீணாகத் துன்புறுத்தலும்; புரப்போர் புகழ் குறைபடூஉம்- ஈவோர் (ஆட்சியாளர்) புகழைக் குறைக்கும்]

இக்காலத்தே நாகரிகமும் அரசியல் முறையும் மிகுதியும் வளர்ந்து விட்டன என்று கூறித் தருக்கடைகிறோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத் தமிழன் கண்ட அரசியல், அறம் இன்னும் தேவைப் படுதலைக் காணலாம்.

மன்னனுக்கு வேண்டுவது

நாட்டை ஆளும் அரசனுக்கு எத்தனையோ பண்பாடுகள் தேவை. என்றாலும், அவை அனைத்தையுங் காட்டிலும் மிகவும் இன்றியமையாதது அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் என்றே பழந்தமிழர் கருதினர்.

ஒரு நாட்டை ஆள்பவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூற வேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்குகளும் பிறந்து, உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்து விடுவானாகில், இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து மனிதன் பிரிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த காரணம் அவன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் குறிக்கோள்தான். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை உப்புச் சப்பு இல்லாமல் ஏதோ நடைபெறுகிறது என்று கூறும் முறையிலேதான் இருக்கும். தனிப்பட்ட மனிதன் வாழ்வுக்கே குறிக்கோள் தேவை என்றால், பலருடைய வாழ்க்கையை வழிகாட்டி நடாத்தும் நாடாள்வானுக்கு இது தேவை என்று கூறினால் அதில் வியப்படையக் காரணம் இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் எத்துணைப் பெருமுயற்சியுடன் ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர்! இத் திட்டம் முடிந்து பயன்தரும் பொழுது, இன்று ஆட்சி செலுத்துபவர்களே அப்பொழுதும் இருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. எனினும், இன்று ஆள்பவர்கள் அது பற்றிக் கவலை கொள்வதில்லை. தாங்கள் மீட்டும் ஆட்சியில் அமர முடியுமா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல், திட்டங்களை நிறைவேற்றவே முற்படுகிறார்கள். ஏன்? இதுதான் குறிக்கோள் என்று கூறப்படும். நாட்டுக்கும் பெரும்பாலான மக்கட்கும் நலந்தருவன எவை என்று ஓயாமல் நினைந்து, அவ்வாறு நலந்தருவனவற்றை நாடுதலே ஆட்சியாளனுடைய ‘குறிக்கோள்’ எனப்படும்.

குறிக்கோள் இன்மை

சிறந்த குறிக்கோள் இல்லாதவர்களும், இல்லாத கட்சியும் எத்துணை வண்மையும், கூட்டச் சிறப்பும் பெற்றிருப்பினும் சரி, அவை பயன் தாரா. இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதிலும் கட்சிகள் தாம் நாட்டை ஆள்கின்றன. மக்களாட்சி நடைபெறுவதாகப் பறை சாற்றப்படும் நாடுகளிலும், தனிப்பட்டவர் ஆட்சி என்று கூறப்பெறும் நாடுகளிலும் உண்மையில் நடை பெறுவது கட்சி ஆட்சியே! கட்சியாட்சியின் குறைவு நிறைவுகளை ஆய்வது நம்முடைய கருத்தன்று. என்றாலும், ஒரு கட்சி சிறப்படைவதும், சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளைப் பொறுத்தனவே யாகும். குறிக்கோள் இல்லாதவர்கள் கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின், நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவை இல்லை. எனவே, பலர் அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோள்களைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடிய பாடலை இங்குக் காணலாம்.

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 

   (குறள்-596)

என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்ய வேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

ஆனாலும், ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தான் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும், அவனுடைய குறிக்கோள் எத்துணைச் சிறந்ததாயினும், பயன் இல்லை, அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராய் இல்லா விடத்து!

இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மைகளைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமற்போய் விடுகிறது. காரணம், இடை நிற்போர்! எனவே, ஆள்வோ ருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன் படவும் வேண்டுமாயின், ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக்கொள்ளுதல். உடன் இருக்கும் அத்தக்கவர் களாலேதான் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.

அரசன் குறிக்கோள்

சோழன் நல்லுருத்திரன் என்பவன் நாடாளும் சோழர் குடியில் பிறந்த மன்னன் – அரசாட்சியின் இந்த நுணுக்கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்! இதோ குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறான் அவன்;

 ‘நன்கு விளைந்து முற்றி வளைந்த நெல் கதிராகிய உணவைச் சிறிய இடத்தையுடைய வளையில் நிறைய வைக்கும் எலி முயன்றாற்போலச் சிறிய முயற்சியை உடையவர்களாகி, இருக்கும் தம்முடைய செல்வத்தை அனுபவிக்காமல் இறுகப் பிடிக்கின்ற பரந்த மனப் பான்மை இல்லாதவர்களுடன் பொருந்திய நட்பு இல்லாமல் போவதாக! தறுகண்மையுடைய பன்றியைப் புலி அடித்த பொழுது அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்து விட்டதாயின், அன்று அவ்விடத்தில் உணவு உட்கொள்ளாமல், மறு நாள் பெரிய மலையின்கண் உள்ள தனது குகை தனிமைப்பட உணவை விரும்பிப் புறப்பட்டு வந்து பெரிய ஆண் யானையை நல்ல வலப்பக்கத்தில் விழும்படியாக அடித்து உண்ணும் புலி பசித்தாற்போலக் குறை இல்லாத நெஞ்சுரம் உடையவர்களின் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாக!’ என்ற கருத்தில் பேசுகிறான் அவ்வரசப் புலவர்.

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன்று அனைய ராகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாது ஆகி வழிநாள்
பெருமலை விடர் அகம் புலம்ப வேட்டுஎழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித்து அன்ன மெலிவில் உள்ளத்து
உரன்உடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ! 

   (புறம். 190)

[விளைபதம் – முற்றிய பருவம், வல்சி – உணவு, அளை – வளை, வளன் – செல்வம், வலியுறுக்கும் – இறுகப் பிடிக்கும், கேண்மை – நட்பு, கேழல் – பன்றி, வழிநாள் – மறு நாள், விடர் அகம் – குகையில், புலம்ப – தனித்துவிட; இருங் களிறு – பெரிய ஆண் யானை, உரன் உடையாளர் – நெஞ்சு வலிமை உடையார், வைகல் – நாட்கள்.]

எலி மனிதர்

உலகில் வாழும் மனிதர்கள் பல திறப்படுவார்கள். எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கி விடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் இன்றி, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலி கூட்டத்தார், இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக்காகவோ முயற்சி சிறிதும் செய்ய மாட்டார்கள்; ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப் பட்டிருப்பினும், அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். சில காலத்திற்கு முன்பு கள்ளச் சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணாமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப் பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே யாவர்.

புலி மனிதர்

இவரினும் வேறுபட்ட ஒரு கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலி போன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும், அப்பன்றி இடப் பக்கம் வீழ்ந்துவிட்டமையின் அதனை உண்ணாமற் சென்றுவிட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணான விடத்துப் பசியையும் பொறுத்துக் கொள்ளுகின்ற புலி, மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் வீழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற விலங்கைப் புலி உண்பதில்லை. அதுபோல இவர்களும் பிறருடைய முயற்சியால் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதே போல இவர்கள் செய்த முயற்சியில் வந்த ஊதியம் தவறானதாய் இருப்பின், இவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக் கொள்வது போல இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தங்கள் கொள்கைக்காகப் பொறுத்துக் கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டு விட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்ளுவதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதே போல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தை தமக்கே வேண்டும் என்று வைத்துக் கொள்வதுமில்லை; தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக்கூட்டத்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதுவான் அப் பழந்தமிழ் ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக்கூட்டத்தார் நட்பினர் ஆகாமல், புலிக் கூட்டத்தார் நட்பினர் ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s