‘சுப்ரமண்ய’ வேதம்

-திருநின்றவூர் ரவிகுமார்

வர்ணம் வேறு  ஜாதி முறை  வேறு. வர்ணத்தை  ஏற்றுக்கொள்ளும்  பாரதி, ஜாதி  முறையை ஏற்க  மறுக்கிறார்.  வர்ணம் பிறப்பை அடிப்படையாகக்  கொண்டதல்ல. ஆனால் ஜாதி  என்பது  பிறப்பால் வருவது.  பிறப்பின் காரணத்தால்  ஏற்படும் பிரிவுகளை  அவர் வெறுக்கிறார்.

வேத பாரதம்

வேதம் பாரத பண்பாட்டின்  ஆணி வேராக இருக்கிறது.  முதல் நூலாகக் கருதப்படும்  ரிக் வேதத்தில் வரும்  புகழ்பெற்ற  வரி:

 ‘ஸத் விப்ரா பஹுதா வதந்தி’

 இதை பாரதியார்

 ‘வேடம்பல் கோடியோ ருண்மைக் குளவென்று
 வேதம் புகன்றிடுமே !’

 -என்கிறார் தமிழில்.

 வேதம்  ஹிந்துக்களுக்கு ஆனது  என்பதை விட  மனித குலத்திற்கான  என்பதே உண்மை  அது பிறந்தது  பாரததேசம்  என்பதால்  பாரத தேசம் உயர்வானது. அதை,

“ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
    உலகின்பக் கேணி என்றே
நன்று பல் வேதம் வரைந்தகை பாரத
    நாயகி தன் திருக்கை” 

-என்கிறார் பாரதி. 

பரம்பொருள் ஒன்றே  பலவல்ல என்பது  வேதத்தின் கருத்து.  பலரும் நினைப்பதுபோல் உலகம் துன்பம் நிறைந்தது  அல்ல. நாம் அனைவரும்  பரம்பொருளின் பிள்ளைகள்  என்பதை உணர்ந்தால் உலக வாழ்க்கை இன்பமானது ஆகிவிடும்.  இதைக் கூறும் வேதத்தை  எழுதியது பாரத நாடு. இது  மழையும் மண்ணும்  நதியும் கடலும் கொண்டதல்ல.  இவள்  பாரதத்தாய்.  இவள் அருளியதே  வேதம் என்று  பாரதத்தையும்  வேதத்தையும் இணைத்துக் காட்டுகிறார் பாரதி. 

பரம்பொருளை உணரவும்  அதற்கான வழியையும்  காட்டியது பாரத  நாடு. பாரதம்  ஆன்மிக பூமி.  இது உலகிற்கு  ஆன்மிக ஒளியை  அளிக்க வேண்டும்  என்பதே இதன் விதி என்கிறார் சுவாமி  விவேகானந்தர். 

வேத மதமும் பிற மதங்களும்

ஆபிரகாமிய மதங்கள்,  இறைவன் உலகைப்  படைத்தான் என்கின்றன.  முதல்நாள் ஒளியைப் படைத்தான்  என்று துவங்கி ஏழாம்நாள்  படைப்பை முடித்து ஓய்வு  எடுத்துக் கொண்டான் என்கின்றன.  எதைக்கொண்டு  படைத்தான் என்றால்,  ஆணின் விலா எலும்பிலிருந்து  பெண்ணைப் படைத்தான்  என்கின்றன.  ஒளியை எதைக்கொண்டு  படைத்தான், உலகை – பிரபஞ்சத்தை எதைக்கொண்டு படைத்தான் என்றால்  சரியான பதிலில்லை.

வேத மதமோ  கடவுள் எதைக் கொண்டும்  உலகைப் படைக்கவில்லை.  தானே  பிரபஞ்சமாகத் தோற்றம்  காட்டுகிறார். எல்லாம்  இறைவனே. இறைத்தன்மை  இல்லாத பொருளோ உயிரோ ஏதுமில்லை.  இதைத் தெளிவாகக்  கூறுகிறது யஜுர்வேதத்தில்  வரும்  ருத்ரம். தற்போது காலண்டர்களை  இதை  விஷ்ணுவின்  விராட்  ரூபமாக  அச்சிட்டிருப்பதைக்  கண்டிருக்கலாம். இதை பாரதியார்,

வல்லமை சேர் கடவுளில்லா பொருளொன்றில்லை
   மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை.
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை
   அனைத்துமே தெய்வம் என்றால் அல்ல லுண்டோ? 

என்று அனைத்தும்  தெய்வம் என்கிறார்.  புரியாதவர்களுக்கு  மேலும் விரிவாகப் புரியும்படி  சொல்கிறார், 

“..... இதை மட்டும் விரித்துச் சொல்வேன்
   விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணு மதே
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
   ஊர்வனவும்பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர்  வகை மட்டுமன்றி யிங்குப்
   பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
   மேலுமிங்குப் பலபலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற  ஜடப் பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
   எழுதுகோல்தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்'

 ஊர்வன,  பறப்பன, விலங்குகள்,  நிலா, சூரியன்,  நட்சத்திரம்  எல்லாம்  தெய்வம் என்று சொல்ல  ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் மனித வடிவில் உள்ள  தீயவர்களை, பங்காளி  வடிவில்  வரும் பகைவர்களை  எப்படி  தெய்வமாகக்  கருத முடியும்?  பாரதியார்  சிரிக்கிறார்.  சிரித்துக் கொண்டே  சொல்கிறார்,  அர்ஜுனனுக்கு  எதிராக,  எதிரியாக நிற்கும்   துரியோதனனும்  கண்ண பரமாத்மா தானே என்கிறார். 

போருக்கு வந்தங்கெதிர்த்த 
   கௌரவர் போல வந்தானும் அவன்
நேருக்கருச்சுனன் தேரிற் கசை
   கொண்டு நின்றதும் கண்ணனான்றோ?

என்றும்,

புகை நடுவினில் தீ இருப்பதை பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

 என்றும் வேத மதத்தின் உயர்வை நிலைநாட்டுகிறார்.

 மதமாற்றம் தவறு

அனைவரையும்  அரவணைத்துக்  கொள்ளும்  வேத மதம்.  மாறாக  என் வழியே சரியானது.  அதன்படி  நீ வரவில்லை  என்றால் உனக்கு  நரகம்தான்  என்ற மதமும், என் மதத்தை  நீ ஏற்காவிட்டால் உன்னைக்  கொல்லவும் எனக்கு உரிமை  கொடுத்துள்ளான் இறைவன்  என்று மாற்று மதத்தினரைக்  கொல்லும் மதமும் இங்கு உண்டு.  இது வேதத்திற்குப் புறம்பானது. இதை,

நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
    நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
   நான்மறை கண்டிலதே

-என்று கூறி மதமாற்றம் செய்வது தவறு என்கிறார்.

ஆனால்  மதமாற்ற சக்திகள்  வேதம் தவறென்றும்  அது கூறும்  சதுர்வர்ண சமூக அமைப்பு  ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதெனவும் ஆகவே இந்து மதத்தை  அழிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 

சனாதனத்தைக் கருவறுப்போம்  என்று கருப்பையைக்  கருத்தில் கொண்டு  ஒரு தலைவர்  பேசி வருகிறார்.  கருப்பை கொண்ட கவிதாயினியோ  சாதிப்பிரிவினைக்குக் காரணம் என  இந்து மதத்தை  வேரோடு வீழ்த்த சூளுரைக்கிறார்.  காரணம் ‘சதுர்வர்ணம் மம ஸ்ருஷ்டி’ –  நான்கு வர்ணங்களை   நான் படைத்தேன்  என்று கீதையில்  கண்ணன் கூறுகிறான்.  மனு நூலில் வேற்றுமை  வலியுறுத்தப் பட்டுள்ளது  என்றும் கூறப்படுகிறது. 

ஜாதிப் பிரிவினை 

நால்வர்ணம்  பாரத தேசத்தில் தான்  இருக்கிறது என்று கூறுவது தவறு.  அது எல்லா தேசங்களிலும்  இருக்கிறது. ஆனால் அது இங்கு மிகவும்  சீர்கெட்டு இருக்கிறது.  காரணம் அது தவறாக  சித்தரிக்கப் பட்டுள்ளது. 

‘நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்கள்’

 -என்கிறார் பாரதி.  கீதையில் கண்ணன் கூறும்  சதுர்வர்ணம்  எவை என்பதையும் கூறுகிறார் பாரதி, 

வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
   வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
   பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
   சோம்பலைப் போல் இல்லை.

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
   நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
   வீழ்ந்திடும் மானிடச் சாதி.

இன்று வேதம் எதற்கு?

கணினி தொழில்நுட்பமும் அணு அறிவியலுமே  அறிவுலகமென்றாகி  விட்டது என்று கூறுவதன்  மூலம் வேதத்தை  வெறும் சடங்குகளாக குறுக்கி மறுப்பது  நடக்கிறது. வித்தை தெரிந்தவன்  என்றால் கபடதாரி  என்ற வெள்ளையன்சொன்னது  நம் மனதில் உறுதியாக வீற்றிருக்கிறது.  எனவே பிராமணர்  என்பதை மறுவரை  செய்கிறார் பாரதி.

‘சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில்  சிறந்தவராம்’

என்கிறார். இதைத்தான்  தெய்வப்புலவர்  திருவள்ளுவரும்  முன்பே வரையறுத்துள்ளார்.  ஆனால்  குறளோவியர்களும்   இதை மறைத்தனர். வயதால் (மனம்)  இறுகியவர்கள் கேட்க  மாட்டார்கள்  என்பதால்  இதை  குழந்தைகளுக்கு சொல்கிறார்.  ‘வெள்ளை  நிறத்தொரு பூனை  எங்கள் வீட்டில் வளருது கண்டீர்…’ பாடலில் பூனைக்குட்டிகளைக் காட்டி, முடிவில், 

“வண்ணங்கள் வேறுபட்டால் அதில்
 மானிடர் வேற்றுமை இல்லை” 

-என்று புரிய வைக்கிறார்.

வர்ணமும் ஜாதியும் 

வர்ணம் வேறு   ஜாதி முறை  வேறு. வர்ணத்தை  ஏற்றுக்கொள்ளும்  பாரதி, ஜாதி  முறையை ஏற்க  மறுக்கிறார்.   வர்ணம் பிறப்பை  அடிப்படையாகக்  கொண்டதல்ல. ஆனால் ஜாதி  என்பது  பிறப்பால்  வருவது.  பிறப்பின் காரணத்தால்  ஏற்படும் பிரிவுகளை  அவர் வெறுக்கிறார்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’

-என்று வேறுபாட்டையும்  தன் நிலைப்பாட்டையும் கூறுகிறார்.

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும்
நன்மை உண்டென்பான் 

போலிச் சுவடி என்பதையும் அது இன்று தேவையற்றது என்பதையும்  அதைப் பொசுக்கு   என்பதையும் கவனிக்கவும். 

ஆனாலும்  அது வேத மதத்தின் மீது சாட்டப்படுகிறது.  உண்மையற்ற இதை சமயச்  சான்றோர்கள் புறந்தள்ளி  வேதத்தை  அடிப்படையாகக் கொண்ட  பாரதப் பண்பாட்டை பின்பற்றுவோர்  அனைவரும்   சகோதரர்களே,  உயர்வு தாழ்வுக்கு இங்கு இடமில்லை என்று கூறும்படி செய்தார்  ஆர்எஸ்எஸ்ஸின் தலைவராக  இருந்த  குருஜி கோல்வல்கர்.  விஷ்வ ஹிந்து பரிஷத் மூலமாக  கர்நாடக  மாநிலத்தில் உள்ள உடுப்பியில் நடத்தப்பட்ட   மாநாட்டில் கூடியிருந்த இந்து மதத்  தலைவர்கள்  அனைவரும்  இதை ஒரே குரலில் ஓங்கி ஒலித்தனர். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் குருஜி கோல்வல்கருக்கு அடுத்து தலைவரானவர் தேவரஸ்.  அவர்  அதற்கும்  மேலாக,  ‘தீண்டாமை தவறில்லை என்றால் உலகில் எதுவுமே தவறில்லை’ என்று கூறி ஜாதி வேற்றுமையை முதன்மையான தவறாக்கினார். அதை போக்க அன்பு,  சேவை என்பதை வழியாக மேற்கொள்ள வைத்தார். 

அதை பாரதியும் சொல்லி இருக்கிறார். 

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
   தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
   நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டா
   அன்பு தன்னில் செழித்திடும் வையம்

……..

வகுப்பவர்  வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றே சார்ந்தவராவீர். 

ஒரு நாளிலோ அல்லது ஒருவரின் வாழ்நாளிலோ  இந்த மாற்றம்  சமுதாயத்தில் ஏற்பட்டு விடுமா.  நூற்றாண்டுகளாக  புரையோடி உள்ள இந்த நோயைப் போக்க பலர் வாழ்நாட்கள் முழுவதும்  முயற்சி செய்ய  வேண்டியுள்ளது.  இதையே தவமாக, இத்தவமே  வாழ்வாக கொண்டால்  நோய் போகும். நினைத்தது நிறைவேறும். 

“செய்க தவம் செய்த தவம் நெஞ்சே
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்” 

-என்று தேசியப் பணிக்கு ஆசி கூறுகிறார் பாரதியார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s