-பேரா. வ.தங்கவேல்
பேராசிரியர் திரு. வ.தங்கவேல், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பெங்களூருவில் வசிக்கிறார்; சுவாமி விவேகானந்தர் குறித்த நாடகங்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

முன்னுரை:
முதுமையான, முழுமையான இந்து சமயத்திற்கு ‘சனாதன தர்மம்’ என்ற பெயருமுண்டு. இதன் பொருள் என்றும் மாறாதது, மறையாதது என்பனவாகும். சனாதனம் என்றால் அழியாதது. தர்மம் என்றால் தாங்கிப் பிடிப்பது. இப்பிரபஞ்சத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது தர்மம். இப்பிரபஞ்சத்தில் ஊரும் ஜீவராசிகள் முதல் உலாவும் ஜீவாத்மாக்கள் வரை வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறது சனாதன தர்மமாகிய இந்து மதம். இதே சமயத்தில் இது யுக தர்மம் என்பதொன்றையும் காலத்திற்கேற்ப மாறும் கொள்கையுடையது. இப்படிப்பட்டக் கொள்கையை வரையறுப்பதற்குத் திடமான சிந்தனையுடைய சீர்திருத்தச் செம்மல்கள் யுகம்தோறும் தோன்றுவது எல்லாம் வல்ல இறைவனின் கிருபை. விவேகானந்தர் புதுமையைப் புகட்டி இந்து மதத்தைச் செழிக்கச் செய்தார்.
வணங்கத் தக்கவர்கள்:
நம்முடைய பாரம்பரியக் கொள்கையாக, நால்வர் வணங்கத் தக்கவர்கள். அவர்கள் முறையே மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சாரிய தேவோ பவ, அதிதி தேவோ பவ. இவற்றின் தமிழாக்கம் பெற்றோரை வணங்க வேண்டும், மூதாதையரை வணங்க வேண்டும், ஆசானை வணங்க வேண்டும், விருத்தினரை வணங்க வேண்டும். விவேகானந்தர் இவர்களோடு இன்னமும் மூவரைச் சேர்த்துக் கொண்டார். அவர்கள்- மூர்க்க தேவோ பவ, துக்கி தேவோ பவ, தரித்திர தேவோ பவ.
மூர்க்கதேவோ பவ:
மூர்க்கர்கள் என்றால், வசதியற்ற காரணத்தால் படிப்பறிவில்லாதவர்கள். இவர்கள் தம் குடும்பச் சூழ்நிலையைத் தவிர உலகம் பற்றி அறியாதவர்கள். தம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பில்லாதவர்கள். ஏமாறுவார்கள்; ஏமாற்ற மாட்டார்கள். ஆதிக்க வல்லூறுகளுக்கு இரையாகிவிடுவர். எனவே இவர்களைக் காப்பாற்றுவது நம் கடமை. இவர்களும் வணங்கத் தக்கவர்கள் என்று புதுமையைப் புகட்டினார் விவேகானந்தர்.
துக்கி தேவோ பவ:
துன்பப்படுகின்றவர்களும் வணங்கத்தக்கவர்கள். மூன்று வகையாகத் துன்பம் வர வாய்ப்புண்டு. இயற்கைச் சூழ்நிலையாலும் துன்பம் வரும். முன்வினைப்பயனாலும் துன்பம் வரும். தாமாக வருவித்துக் கொள்வதாலும் துன்பம் வரும்.
இயற்கைச் சீற்றத்தால் வருகின்ற துன்பங்களைச் சமுதாய நோக்கோடு எதிர்கொண்டு விடுவிப்பது நம் கடமைகளுள் ஒன்று. முன்வினைப் பயனால் வருகின்ற துன்பங்களுக்கு நாமே காரணம். எனவே தான் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றார். எனவே வருகின்ற துன்பங்களுக்கு நாமே காரணம். பிறரை வேதனைக்குள்ளாக்குவது அறிவற்ற செயல். தன்னைத் தானே ஆராய்ந்தால் இவ்வகை துன்பத்திற்கு விடை கிடைக்கும். எனவே திருமூலர், ‘தன்னை அறிந்த தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சு அவிழ்ப்பர், பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்’ என்றார்.
விவேகானந்த சுவாமிகள் இந்து மதத்தின் தத்துவங்களை உலகறியச் செய்து மக்களின் துன்பக் காரணங்களுக்குத் தீர்பளித்தவர். தாமாக வருவித்துக் கொள்கின்ற துன்பங்களுக்குக் காரணம் தம்முடைய அறியாமையே. இருட்டைப் போக்க வெளிக்கத்தைச் செலுத்தினால் போதும் என்பதற்கேற்ப, அறியாமை அகல அறிவைப் புகட்டுவதே வழி. இடர் வந்த பிறகு சிந்திப்படைவிட, வருமுன் காப்பது அறிஞர்களின் செயல்.
அறியாமை அகற்ற கல்விக் கூடங்களைக் கட்ட வழிவகுத்தார் விவேகானந்தர். கொல்கத்தாவில் பள்ளிக்கூடம் கட்டி தனது தலையாய சிஷ்யை சகோதரி நிவேதிதாவிடம் ஒப்படைத்தார். பொறுப்பேற்ற நிவேதிதா பள்ளிக்கூடத்தை எப்படி நடத்த வேண்டுமெறு தன் குருநாதரிடம் வினவினார். அதற்கு விவேகானந்தர், “பள்ளிக்கூட மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்” என்றார். அவர் கூறிய பதில் சிந்தனைக்கு விருந்து; அறியாமைக்கு மருந்து.
இதன் விளக்கம் என்னவென்றால், மாணவர்களின் பாங்கிற்கேற்ப ஆசிரியர் மாறி அவர்களைத் தூக்கிவிட வேண்டும். சில ஆசிரியர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பர். ஆனால் மாணவர் பாங்கிற்கேற்ப சொல்லித் தர இயலாதவராயிருப்பர். இவர்களை வள்ளுவர் ‘மணம் வெளிப்படாத மலர்’ என்ற பொருளில் “இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையாதார்” என்றார். இவர்களால் மாணவர் சமுதாயம் பயன்படாது.
சில ஆசிரியர்கள் மாணவர் பாங்கிற்கேற்ப சொல்லித்தந்து மாணவர்களின் உள்ள நிறைவால் தான் நிறைவு பெறுவர். இவர்கள் முதல்தர ஆசிரியர்கள். இத்தகைய ஆசிரியர்கள் நிறைந்த கல்விக்கூடமாகத் திகழ வேண்டும் என்று சகோதரி நிவேதிதாவிடம் “நன்றாக பள்ளிக்கூடம் நடத்த மாணவர்களிடம் கற்றுக்கொள்” என்று கூறினார். இப்படி விவேகானந்தர் சமுதாயம் சீர்பெற பல வழிகளைப் புதுமையாகக் காட்டினார்.
தரித்திர தேவோ பவ:
வறுமையில் வாடுகின்றவர்களும் வணங்கத்தக்கவர்கள் என்றார் விவேகானந்தர். பொதுவாக சமுதாயத்தில் மக்களின் பார்வை இவ்வாறிருக்கும், வெறுங்காலில் நடப்பவர் செருப்பு அணிந்திருப்பவனைப் பார்த்து நாமும் அவ்வாறு வாழ வேண்டுமென்று விரும்புவர். செருப்பு அணிந்திருப்பவர் சைக்கிளில் செல்பவரைப் பார்ப்பர். சைக்கிளில் செல்பவர் மோட்டார் சைக்கிளில் செல்பவரைப் பார்ப்பர். மோட்டார் சைக்கிளில் செல்பவர் காரில் செல்பவரைப் பார்ப்பர். காரில் செல்பவர் ஹெலிகாப்டரில் செல்பவரைப் பார்ப்பர். ஹெலிகாப்டரில் செல்பவர் விமானத்தில் செல்பவரைப் பார்ப்பர். இப்படித் தனக்கு மேலானவர்களைப் பார்த்து உயர விரும்புவர். ஆனால் விமானத்தில் செல்பவர் செருப்பில்லாமல் நடக்கும் ஏழைகளைப் பார்த்து தன்னைப் போல் ஆக்க நினைப்பது அரிதிலும் அரிது. விவேகானந்தர் விமானத்தில் செல்பவர் செருப்பில்லாத மக்களைப் பார்ப்பது போல் பார்த்து, அவர்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார் என்று பல நிகழ்ச்சிகளைக் கூறலாம். உரசிப் பார்ப்பதற்கு ஒரேயொரு நிகழ்ச்சி.
சந்தால் என்ற பழங்குடி மக்கள் குருதேவர் ராமகிருஷ்ணருக்கு மடாலயம் கட்ட நன்றாக உழைத்தார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஒருநாள் விருந்தளிக்க அழைக்கிறார் விவேகானந்தர். அவர்கள் மறுக்கிறார்கள். காரணம் அவர்களின் அடிமைப் புத்தி. மேலும் நீங்கள் உப்பு போட்டு விருந்தளிப்பீர்கள். அப்படிப்பட்ட உணவைப் பெற எங்களுக்குத் தகுதியே கிடையாது என்கின்றனர்.
விவேகானந்தரோ அவர்கள் வழிசென்று உப்பே போடாது வெறும் இனிப்புப் பண்டங்களைத் தயாரித்து விருந்தளித்து, அவர்களிடம், ‘உங்கள் வழி பகவான் நாராயணருக்கே உணவளித்து விட்டேன்’ என்றார். ‘நரன் தொண்டே நாராயணன் தொண்டு, ஜீவத்தொண்டே சிவத்தொண்டு, மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு’ என்று, தரித்திரம் பிடித்த மக்களுக்கு உதவி செய்து சமுதாயத்தில் உயர்த்திக் காட்டினார்.
நாத்திகமும் ஆத்திகமும்:
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நாத்திகர் என்றும், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆத்திகர் என்றும் கூறுவது பொதுவான உலகியல் வழக்கு. ஆனால் விவேகானந்தர் ‘முப்பத்து முக்கோடி தேவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் தன் மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன்; மாறாக தன்மீது தன்னம்பிக்கை உடையவன் ஆத்திகன்’ என்றார். ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்பது பழைய மதக் கொள்கை. தன்மீது தன்னம்பிக்கை உடையவன் ஆத்திகன் என்பது புதிய மதக் கொள்கை’ என்று கூறினார். மேலும் ‘மதம் என்பது ஏற்கனவே தன்னுள் மறைந்து கிடக்கும் தெய்வீகப் பண்புகளை வெளிக் கொணர்வதாகும்’ என்று புதுவிளக்கம் கொடுத்தார்.
மும்மார்க்கங்களின் முடிச்சு:
ஜீவாத்மாவாகிய மானிடர்களுக்கும் பரமாத்மாவாகிய இறைவனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மூன்று படித்தரங்களில் இருக்கின்றன. அவை – துவைதம், விஷிஷ்டாத்வைதம், அத்வைதம்.
புண்ணிய பூமியாம் பாரதத்தில் துவைதத்தைப் பரப்பியவர் மத்துவாச்சாரியார். விஷிஷ்டாத்வைதத்தைப் பரப்பியவர் ராமானுஜர். அத்வைதத்தைப் பரப்பியவர் சங்கராச்சாரியார். இந்த மூன்றையும் இணைத்தவர் விவேகானந்தர்.
துவைதத் தத்துவத்தின்படி ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு, இரண்டும் தனித்தனி.
விஷிஷ்டாத்வைதத் தத்துவத்தின்படி ஜீவாத்மா பரமாத்மாவின் ஓர் அங்கம். அல்லது சிறிய பகுதி.
அத்வைதத் தத்துவத்தின்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று- இரண்டற்ற நிலை என்பதாகும். விவேகானந்தர் மூன்றையும் இணைத்து புதுமையான விஞ்ஞான ரீதியான விளக்கம் தந்தார்.
ஆன்மிகவாதியின் முதல் நிலை அல்லது தொடக்க நிலை துவைதம். இடைப்பட்ட நிலை விசிஷ்டாத்வைதம். முடிந்த முழுமையான நிலை அத்வைதம்.
இக்கருத்தை இப்படி விளக்கலாம்…
ஒருவன் உணவு உண்ண சாப்பாட்டு இலை முன்பு இருக்கிறான். இப்போது உணவு வேறு, சாப்பிடுபவன் வேறு. சாப்பிடப் போகிறவன் சாப்பாட்டை விரும்புவது போல் ஜீவாத்மன் பரமாத்மாவை அடைய விரும்புகிறான். இது முதல் நிலையாகிய துவைதம்.
அடுத்து உண்ண அமர்ந்து இருப்பவன் உணவை உண்டுவிட்டான். இப்போது உணவு வேறு அவன் வேறல்ல. ஆனால் உண்ட உணவு ஜீரணமாகவில்லை. உடலுக்குள் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அவன் விபத்திற்குள்ளாகி வயிறு கிழிந்து உணவு வெளியே வந்து விடுகிறது. இப்போது அவன் வேறு உணவு வேறு. உணவு ரத்தமாக மாற தகுதியாவதற்கு முன் வெளிவந்துவிட்டது. இப்படி ஜீவாத்மா பரமாத்மாவாக மாற முழு தகுதியாவதற்கு முன் உள்ள நிலை விசிஷ்டாத்வைதமாகும். இது இடைப்பட்டநிலையாகும்.
உண்ட உணவு செரிமானமாகி ரத்தமாக மாறி உடலோடு சேர்ந்து விட்டதென்றால் உணவு வேறு, அவன் வேறு என்று சொல்ல முடியாது. உணவு அவனாக மாறிவிட்டது. அதுபோல் ஜீவாத்மா தகுதிபெற்று பரமாத்மாவாக மாறிவிட்டார். பரமாத்மா தான் ஜீவாத்மா, ஜீவாத்மா தான் பரமாத்மா. இது அத்வைதம்.
இம்மூன்றையும் இணைத்தவர் விவேகானந்தர்.
மூன்றும் தேவை. இம்மூன்றும் இதை பாரதத்தில் பரப்பிய மூவர் காலங்களுக்கு முன்னரே இருந்திருக்கின்றன என்றார். இம்மூன்றையும் இணைப்பதற்காகவே நான் தோன்றியுள்ளேன் என்றார் விவேகானந்தர்.
முடிவுரை:
‘பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய்’ இறைவன் இருக்கிறார் என்றார் மாணிக்கவாசகர். இதை உணர்த்துவது போல, விவேகானந்தர் இந்து மதத்தில் பழமையின் சாராம்சம் மாறாமல் புதுமையைப் புகட்டி ஆன்மிக அன்பர்களைச் சிந்திக்க வைத்து நிறைநிலைக்கு வழிகாட்டியுள்ளார்.
$$$