இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!

-சேக்கிழான்

பரிதாபத்துக்குரிய அடிமாடுகள்…

2016-இல் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது நடந்த நிகழ்வு இது…

ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், அப்போது தெரிவித்த ஒரு முக்கியமான கருத்து, நாட்டின் இளஞ்சிவப்புப் புரட்சியை (இறைச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி) கேள்விக்குள்ளாக்கியது. ஜல்லிக்கட்டு சிக்கல் இப்போது தீர்ந்துவிட்டதால், அந்த முக்கியமான கருத்தை உதாசீனம் செய்துவிடக் கூடாது.

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கு 2011-இல் அப்போதைய ஐ.மு.கூட்டணி அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தத்தால் சிக்கல் ஏற்பட்டது. ‘காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில்’ வன விலங்குகளுடன் காளையையும் சேர்த்தது அன்றைய மத்திய அரசு. அதற்கு அப்போதைய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முக்கிய காரணமாக இருந்தார். போட்டிகளில் காளைகள் வதைபடுவதைத் தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

தமிழகத்தில் பரவலாக எழுந்த கோரிக்கைகளை ஏற்று, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2016 ஜனவரி 7-இல் ஓர் அரசாணையை வெளியிட்டது. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் காளைகள், எருதுகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

நன்றி: தினமணி/ மதி/ 14.01.2016

எனினும்,  மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து ‘பீட்டா’ தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு மீண்டும் இடைக்காலத் தடை (ஜன. 12) விதித்தது. இந்த இடைக்காலத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, திருவட்டாறு வழக்கறிஞர் என்.ராஜாராமன் உச்ச நீதிமன்றத்தில் 2016 ஜன. 13-இல் முறையிட்டார். அப்போது அவர் தனது மனுவில், “காளைகளை தமிழர்கள் குடும்பத்தில் ஒருவராகவும், செல்லக் குழந்தைகளாகவும் கருதி வளர்க்கின்றனர். அவற்றை எப்படி அவர்கள் ஜல்லிக்கட்டில் துன்புறுத்துவர்?” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்,  நீண்ட வரலாறு குறித்தும் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தபோது கூறிய கருத்துகள் நமது மனசாட்சியை உலுக்குபவை.

“காளைகளை குடும்பத்தில் ஒருவராகவும் செல்லப் பிள்ளைகளாகவும் தமிழர்கள் கருத்துவதாகக் கூறினீர்கள். அப்படியெனில், வயதான மாடுகளை அவர்கள் ஏன் அடிமாடுகளாக அண்டை மாநிலத்துக்கு விற்கிறார்கள்?” என்று  நீதிபதிகள் வினவினர். அலைகள் போலத் தொடர்ந்து வரும் செய்திக் கடலில் இந்த முக்கியமான கருத்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்டது.

அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயம். எனவே ஜல்லிக்கட்டுக்கு இந்த விஷயத்தில் நன்றி கூறிவிட்டு, இந்த விவகாரத்தை ஆராய்வது காலத்தின் தேவையாகும்.

இந்தியாவில் பலவிதமான உற்பத்திப் புரட்சிகள் நடந்துள்ளன. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் பசுமைப் புரட்சி, மீன்வளத்தை அதிகரிக்கும் நீலப்புரட்சி, பால்வளத்தை அதிகரிக்கும் வெண்மைப்புரட்சி, இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்கும் இளஞ்சிவப்புப் புரட்சி ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நாட்டின் உணவுத் தன்னிறைவுக்காக இவை மேற்கொள்ளப்படுவதாக அரசால் வர்ணிக்கப்படுகிறது.

இவற்றில் முதல் மூன்றும் உண்மையிலேயே அரசின் நடவடிக்கைகளால் உருவானவை எனலாம். இவற்றுக்கு பின்விளைவுகளும் உண்டு என்பது தனிக்கதை. ஆனால், இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க அரசு என்ன செய்தது என்று ஆராய்ந்தால், அதில் அரசின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதும், நாட்டின் கால்நடைச் செல்வங்களை அழித்தே இந்த ஏற்றுமதி சாத்தியமாகி இருக்கிறது என்பதையும் உணர முடியும்.

நாட்டின் இறைச்சி ஏற்றுமதியில் எருமை, ஆடு, பன்றி, மீன் ஆகியவை முக்கியமானவை. (இந்தப் பட்டியலில் மாடு இடம் பெறவில்லை என்பதை கவனிக்கவும்). இதில் 90 சதவீதத்துக்கு மேல் எருமை இறைச்சி இடம் பெறுகிறது. எருமை இறைச்சி (BEEF) என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், இதில் மாட்டிறைச்சியும் அடக்கம். இந்த மாடுகள் அனைத்தும் விவசாயிகளின் சொத்தாக ஒருகாலத்தில் இருந்தவை.

பொதுவாக இறைச்சிக்காக நமது நாட்டில் எருமைகள், ஆடுகள், பன்றிகள், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை. ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மாடு வளர்ப்பதற்கென்றே பண்ணைகள் உண்டு. இந்தியாவிலோ, மாடுகள் (காளைகள், பசுக்கள்) விவசாயிகளின் உறுதுணைவனாகவே வளர்க்கப்படுகின்றன. விவசாயத்தில் உழவுக்கு உதவ காளைகளும், பால் வழங்க பசுக்களும் வளர்க்கப்படுகின்றன. இவையல்லாமல் இறைச்சிக்காக மாடு வளர்க்கப்படும் சதவீதம் மிக மிகக் குறைவு.

அதாவது, காலம் முழுவதும் விவசாயிகளின் தோழனாக வாழும் மாடுகள், வயதான காலத்தில் ‘அடிமாடு’ என்ற பெயரில் விற்கப்படுகின்றன. ஏனெனில், அதன்பிறகு அந்தக் காளைகளால் உழைக்க முடியாது; பசுக்களால் பால் தர முடியாது. அதேசமயம் அவற்றுக்கு தீவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இதனை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை.

ஒருகாலத்தில், வயது முதிர்ந்தாலும் மாடுகளை சாகும் வரை பராமரித்தவர்கள் தான் நமது விவசாயிகள். ஆனால், விவசாயமே புயலில் அகப்பட்ட தோணி போல அல்லாடுகையில், மாடுகளைப் பற்றிக் கவலைப்பட விவசாயிகள் தயாராக இல்லை. எனவே தான், கண்ணீர் மல்க, மாட்டு வியாபாரியின் கைகளில் ஒப்புவித்துவிட்டு விவசாயிகள் அடுத்த மாட்டை வாங்க சந்தைக்குக் கிளம்பி விடுகின்றனர்.

கார்ட்டூன்: நிதி சென்ட்ரல் (2016)

அது மட்டுமல்ல, 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை விவசாயத்தின் முதுகெலும்பாக எருதுகள் இருந்தன. ஏர் பூட்டி உழவும், கட்டை வண்டி ஓட்டவும், கிணற்றில் நீர் இறைக்கவும், செக்கிழுக்கவும், காளைகளே உழவனின் உற்ற தோழர்களாக இருந்தன. விவசாயம் தற்போது இயந்திரமயமாகவிட்ட நிலையில், டிராக்டருக்கு ஈடு கொடுக்க முடியாமல், காளைகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. போலவே, சரக்குப் போக்குவரத்திலும் ஆட்டோமொபைல் இயந்திரங்களான வேன்களின் வருகை கட்டை வண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதாவது, விவசாயிகளுக்கு காளைகள் இப்போது அத்தியாவசியமானதாக இருப்பதில்லை.

எனவே, விவசாயக் குடும்பத்தில் பண்ணைகளில் பிறக்கும் கன்றுகள் பசுவாக இருந்தால் மட்டுமே வருவாய் ஈட்டித் தரப் பயன்படும் என்று கருதப்படுகின்றன. காளைகள் முன்னர் போல விவசாயக் குடும்பங்களில் வரவேற்பைப் பெறுவதில்லை. அவை இறைச்சி நோக்கத்துடன் மட்டுமே சிறிதுகாலம் வளர்க்கப்படுகின்றன என்பதை, விவசாய நண்பர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் விட மிகவும் கவலை கொள்ளச் செய்யும் விஷயம் ஒன்று உண்டு. பசுக்களை கருவுறச் செய்ய செயற்கைக் கருவூட்டலுக்கான உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை  செய்வதால், அவை இயற்கையான இணை சேர்தலையே இழந்து வருகின்றன. செயற்கைக் கருவூட்டலுக்கு அதிக எண்ணிக்கையிலான பொலிகாளைகள் தேவையில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இக்காலத்திலும் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுப் போட்டிகள் இருப்பதால் தான் நாட்டு மாடுகள் (காளைகள்) வளர்க்கப்படுகின்றன என்பதும், பசுக்களின் இயற்கையான இணை சேர்க்கைக்கு தரமான காளைகள் கிடைக்கின்றன என்பதும் உண்மை.

மாட்டு விந்து வங்கிகளை கால்நடை பராமரிப்புத் துறை உருவாக்கி வைத்திருப்பது, மாட்டினப் பெருக்கத்திற்காக மட்டுமே. இந்த இடத்தில் விலங்குகளுக்கும் உடற்தேவைகள் உண்டு என்பதையோ, அவற்றின் இயற்கையான இணை சேர்வதன் முக்கியத்துவத்தையோ மனிதர்களான நாம் பெரிதாகக் கருதுவதில்லை. 

அடுத்ததாக, இது ஒரு சமூகப் பிரச்னை. ‘கோமாதா’ என்றும் ‘நந்தி’ என்றும் வழிபடப்படும் மாடுகளை விவசாயிகள் விருப்பப்பட்டு காவு கொடுப்பதில்லை. உண்மையில் தற்போதைய பொருளாதாரச் சூழல் விவசாயத்தையே காவு வாங்கிவரும் நிலையில், அவர்களின் இந்த முடிவு, இயலாமையால் விளைந்த நிர்பந்தமே என்பது வெளிப்படை.

இவ்வாறு தான் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான மாடுகள் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் கால்நடைச் செல்வம் இன்னும் பத்து ஆண்டுகளில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்பது கால்நடை நிபுணர்களின் எச்சரிக்கை.

உலக அளவில் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா நான்காமிடம்
(2021 முதல் காலாண்டு)

ஒரு புள்ளிவிவரப்படி, நாட்டில் 1992-இல் 20.46 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை 2007-இல் 19.9 கோடியாகக் குறைந்துவிட்டது. இந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நாட்டில் இளஞ்சிவப்புப் புரட்சி வேகம் எடுத்தது என்பதைக் கருத்தில் கொண்டால், இப்போதைய நமது கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர முடியும்.

இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் காங்கேயம் காளை போன்ற பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. நாட்டின் பாரம்பரிய பசு இனமும் நலிந்து வருகிறது. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை.

இளஞ்சிவப்புப் புரட்சி என்பது, உண்மையில் இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பை பிரத்யேகமாக மேற்கொள்வதை ஊக்குவிப்பதாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ, வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இன்று உலக அளவில் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இறைச்சி உற்பத்தி அதிகரிப்பு (2017- 2019)
அளவு: டன்களில்.

இது ஒருவகையில் நன்றி கொன்ற செயலாகும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; செய்நன்றி கொன்றவர்களுக்கு என்றும் மன்னிப்பில்லை. இதனை கூறியிருப்பவர், தமிழக அரசியல் கட்சிகள் புகழ்ந்துபாடும் நமது திருவள்ளுவர் தான். ஆனால், அடிமாடுகள் மரண வாதையுடன், கைவிடப்பட்ட ஏக்கம் கண்ணீராக வழிய, மேற்கு நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பவர்களை ‘மதவாதிகள்’ என்று இதே கட்சிகள் கண்டிக்கின்றன.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம், இளங்கன்றுகளை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்ற விதி அப்பட்டமாக மீறப்படுவதாகும். இளக்கன்றுகளைக் கொல்வது கால்நடை இனத்தை மிக விரைவிலேயே இல்லாமல் செய்துவிடும். அதை உணராமல், ஆட்டிறைச்சிக்கு மாற்றாக (கலப்படமாக) இளம் மாட்டுக் கன்றுகள் பலியிடப்படுகின்றன.

இந்த இளஞ்சிவப்புப் புரட்சியை கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். ஆனால், பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகான இந்த 9 ஆண்டுகளில், இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. சொல்லப்போனால், முந்தைய ஆண்டுகளை விட பாஜக ஆட்சிக்கு வந்த பிறகான ஆண்டுகளில் இறைச்சி ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது (காணக: வரைபடங்கள்). இறைச்சி ஏற்றுமதிக்கு பிரத்யேக முயற்சிகள் இந்த அரசின் காலகட்டத்தில் செய்யப்படவில்லை என்பது உண்மையே. அதேபோல, கட்டுப்பாடின்றி மாடுகளும் பசுக்களும் கொல்லப்படுவதை இந்த அரசு தடுக்கவில்லை என்பதும் மறுக்க இயலாத உண்மை.

இறைச்சி ஏற்றுமதி: 2009-2019

2013 ஏப்ரல்- நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி மதிப்பு 2.8 பில்லியன் டாலராக (ரூ. 18,760 கோடி) இருந்தது. இதுவே 2014-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.3 பில்லியன் டாலராக (ரூ. 22,110 கோடி) அதிகரித்திருக்கிறது. இதன் வளர்ச்சிவிகிதம் 16.74 %. 2014-ஆம் ஆண்டில் நாட்டின் இறைச்சி ஏற்றுமதி மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (ரூ. 30,150 கோடி) என்பது நிதர்சனத்தில் பெருமைக்குரிய விஷயமல்ல.

ஆனால், மத்திய அரசு இவ்விஷயத்தில் ஏதும் செய்யாமல் இருப்பதன் காரணம், விவசாயிகளின் அதிருப்தியை எதிர்கொள்ள முடியாததே. உ.பி, பிகார் போன்ற மாநிலங்களில் இறைச்சிக்காக எருமைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் இறைச்சிக்காக எருமையோ, மாடோ வளர்க்கப்படுவதில்லை. அப்படியே வளர்ப்பதாகக் கூறினாலும், அவை தானாக மேய விடப்படுவது தான் உண்மை.

மேய்ச்சல் நிலத்தில் பண்ணைகள் அமைத்து மாடுகள் வளர்த்து அவற்றை இறைச்சிக்காக வெட்டுவது தவறாகாது. ஆடுகள் அதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அது தொழில்முறையிலானதாக இருக்கும். மாடுகள் அவ்வாறு பண்ணைத் தொழிலாக வளர்க்கப்படுவதில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள் பண்ணைகளில் வளர்க்கப்படுவதில்லை.

ஆக, சரியான நேரத்தில் நமது இயலாமையையும் பொய்மையையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி விளாசியுள்ளனர். நன்றியற்ற மனிதர்களாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறிய கருத்து.  இப்போது ஜல்லிக்கட்டு நடத்திவரும் நாம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்வியின் உட்பொருளை உணர்ந்திருக்கிறோமா?

‘கோமாதா எங்க குலமாதா’ என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.

பசுவதை எதிர்ப்பு என்பது, மாட்டினத்தின் பசுக்களை மட்டும் காப்பதற்கானது அல்ல; காளைகளைத் தொடர்ந்து இழந்தால், எதிர்காலத்தில் பசுக்கள் ஈன்றெடுக்கவும் காளைகள் இருக்காது. சமுதாயத்தில் எவ்வாறு ஆணும் பெண்ணும் சமமோ, அதுபோலவே, மாட்டினத்திலும் காளைகளும் பசுக்களும் சமமான கவனத்துடன் காக்கப்பட வேண்டும். பால் கொடுக்கும் பசுக்களையே மடி வற்றியவுடன் அடிமாடாக அனுப்புவோரிடம், காளைகளுக்கு தீவனம் வைக்குமாறு கோருவது சிரமமான காரியம் தான். 

எனவே, வருங்காலத்தில் கால்நடை வளர்ப்புக்கு அரசு உதவிகள் செய்வது கட்டாயத் தேவையாக மாறக்கூடும். (உ.பி. மாநிலத்தில் இதற்கான முன்னோட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளன). மிக விரைவில், இளஞ்சிவப்புப் புரட்சிக்காக அல்ல, வெண்மைப் புரட்சிக்கே அரசு திண்டாட வேண்டியிருக்கும். அதற்குள் அரசு விழிப்படைவது அவசியம். அதற்கான சிந்தனையை உருவாக்க வேண்டியது, அறிவுள்ளவர்களின் கடமை.பசுவதை எதிர்ப்பை மதரீதியாக மட்டும் பார்க்காமல், பொருளாதார, சமூகப் பிரச்னையாகப் பார்த்தால் தான் இதன் பின்புலத்தில் உள்ள விபரீதம் புரியும்.

ஜல்லிக்கட்டை தடை செய்வதற்காக, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் வன விலங்குகளுடன் மாடுகளைச் சேர்த்த புண்ணியவான்கள், அவற்றைக் கொடூரமாகக் கழுத்தறுத்து வம்ச நாசம் செய்யும் இளஞ்சிவப்புப் புரட்சி குறித்தும் சில ஷரத்துகளைச் சேர்த்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும். ஏனெனில் எந்தக் காட்டு விலங்கும் இறைச்சிக்காக கொல்லப்படுவதில்லை. அவ்வாறு கொல்வது வனத் துறை சட்டப்படி கொடிய குற்றம். எனவே, உச்ச நீதிமன்றம் பசுவதை தொடர்பான வழக்குகளை  விசாரிக்கும்போது, மேற்கண்ட விவரங்களையும் பரிசீலித்து தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றமும், சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோலாக விளங்கும்.

இவ்விஷயத்தில் மத்திய அரசு இதுவரை செயலற்று இருந்தது போதும். தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, இனியேனும் விவசாயக் கால்நடைகளை கசாப்புக்கு அனுப்புவதைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதான மாடுகளைப் பாராமரிப்பதிலும் விவசாயிகளுக்கு நலன் விளையும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மறைநீர் பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் பரவிவரும் நிலையில், இறைச்சி உற்பத்திக்கு ஆகும் செலவினத்தையும் நீர்ப் பயன்பாட்டையும் உத்தேசித்தால்,  கிடைக்கும் லாபம் பெரியதல்ல என்றும் சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி கனவு கண்ட பசுவதை தடுப்பு சட்டத்தை விட மேலானதாக, பசு – காளைகள் வதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்படுமானால், பாஜக அரசு சரித்திரத்தில் இடம் பெறும். இதையே மோடி அரசிடம் நாடு எதிர்பார்க்கிறது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s