சங்க காலம் (எதிர்) சாராய காலம்

-ச.சண்முகநாதன்

சங்கத் தமிழ்க் கவிதைகளை தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் சிறப்பிடம் வகிக்கிறார். தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய அரும்பணி இது...
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!  
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,  
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்  
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.

       -நற்றிணை: பாடல்- 83

காக்காய்க்குச் சோறு வைப்பது தெரியும். சங்கத்தமிழ்ப்  பெண்ணொருத்தி ஆந்தைக்குச் சோறு வைக்கிறாள். அதுவும் சைவச்சோறு  அல்ல, கறிக்குழம்புடன் அசைவச் சோறு. 

காரணம், காதல் படுத்தும் பாடு.

காதலினால் இந்த சமூகம் அடைந்த நன்மைகள், இசை, இலக்கியம், ஓவியங்கள்,  வீரம் என பெரிய பட்டியல் இருக்கிறது. அப்படியாக காதலில் கிடைத்த ஒரு அருமையான செய்யுள், ஒரு உருக்கமான உரையாடல் (அ) வேண்டுகோள்,  இந்த நற்றிணைப் பாடல்.

தலைவன் மேல் உள்ள காதல் சங்கத் தமிழச்சியை ஆந்தையிடம் மன்றாடி ஒரு கோரிக்கை வைக்கச் சொல்கிறது. அதற்கு லஞ்சமாக கறிச்சோறு.  

கிளிப்பேச்சுக்காரி ஆந்தையிடம் உரையாடுகிறாள்.

பாடலின் முதலில் ஆந்தையின் முகவரியைச் சொல்லிவிடுகிறாள். வேறு யாருக்கும் போய்விடக் கூடாதென்ற சுதாரிப்பு.

“எங்கள் ஊரில் வாயிலில் நீர் எடுத்துச்செல்லும் துறை ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு முதிய மரம் இருக்கிறது. அந்த மரத்தில் கடவுள் இருப்பதாக நம்புகிறோம், தமிழர்களாகிய நாங்கள். அங்கே தங்கியிருக்கும் ஆந்தையே…”

இப்படியாக ‘To address’  எழுதியாகி விட்டது. 

 “உனக்கு வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூறிய நகம் இருக்கிறது” என்று  ‘ஐஸ்’ வயதாகிவிட்டது.

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! 4

“உனக்கு மாமிசம் கலந்த நெய் கலந்த வெண்சோற்றைத் தருவோம். கூடவே எலியின் மாமிசம் கொடுக்கிறோம்….”

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், 
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; 6

“அதற்குக் கைமாறாக ஒன்றே ஒன்றைச் செய்ய வேண்டும.   அன்பு குறையாத என் காதலன் என்னைக் காண தூங்காமல் உடலை வருத்திக்கொண்டு வருகிறான். நாங்கள் சந்திக்கும் இடம் அந்த மரத்தடி தான். எனவே அவன் வரும் பொழுது உன் கடுங்குரல்  கொண்டு ஒலி  எழுப்பாதே. எங்களுக்கு அந்தச் சத்தம் பிடிக்காது. தவிர அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உன் சத்தம் கேட்டு இங்கு வரக்கூடும். நங்கள் மாட்டிக்கொள்ளக் கூடும். அதனால்  நீ உன் கடுங்குரல் கொண்டு ஓசை எழுப்ப வேண்டாம், please…”

எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்  
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. 9

அப்படிச் செய்யாமல் இருந்தால் மேற்சொன்ன  ‘மெனு’வில் இருக்கும் அனைத்தையும் உனக்குப் படைப்பேன். தயவுசெய்து இதை மட்டும் செய் என்று ஆந்தையிடம் negotiate செய்கிறாள் தலைவி.

பல இரவுகள், இப்படி, முழுவதும் விழித்திருந்து காதலியைக்  காண பயணம் செய்தும் பலகாலம் வாழ்ந்து வந்தனர் சங்ககாலத்தில்.

இந்தச் சாராய காலத்தில் தமிழன்  ‘Body’  ஒரு  நாளுக்குத் தாங்க  மாட்டேன் என்கிறது. சிவராத்திரிக்கு  விழித்திருந்தால் ஒரு உயிர் போகிறது என்கிறதுகள் சாராயகாலத் தமிழர் கூட்டம்.

$$$

Leave a comment