பாஞ்சாலி சபதம் – 1.1.23

-மகாகவி பாரதி

அஸ்தினாபுரம் செல்வது என்ற தனையன் தருமனின் முடிவைk கேட்டவுடன் பீமன் கோபாவேசம் கொள்கிறான். துரியன் சூதுப்படி நாம் அஸ்தினாபுரம் செல்வதென்றால் படையெடுத்துச் செல்வோம் என்கிறான்; தம்பி அர்ஜுனனிடம் வில்லைப் பூட்டுக என்கிறான். பாண்டவர்களுக்கு  சூதில் விருப்பமில்லை என்பதை மகாகவி பாரதி இப்பாடல்களில் காட்டுகிறார்... “இரு நெருப்பினிடையினில் ஒரு விறகா?” என்ற இனிய உவமையை இங்கு எடுத்தாள்கிறார். 

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.23. வீமனுடைய வீரப்பேச்சு

வீமனும் திகைத்துவிட்டான்;-இள
      விசயனை நோக்கிஇங் கிதுசொலு வான்,
‘மாமனும் மருமகனு மா-நமை
      யழித்திடக் கருதிஇவ் வழிதொடர்ந் தார்;
தாமதஞ் செய்வோ மோ?-செலத்
      தகுந்தகு’மெனஇடி யுறநகைத் தான்;
கோமகன் உரைப்படி யே-படை
      கொண்டுசெல் வோமொரு தடையிலை காண்!       133

‘நெடுநாட் பகைகண் டாய்!-இந்த
      நினைவினில் யான்கழித் தனபல நாள்;
கெடுநாள் வருமளவும்-ஒரு
      கிருமியை அழிப்பவர் உலகிலுண் டோ?
படுநாட் குறிஅன் றோ-இந்தப்
      பாதகம் நினைப்பவர் நினைத்தது தான்?
விடுநாண் கோத்திட டா!-தம்பி!
      வில்லினுக் கிரைமிக விளையு தடா!       134

‘போரிடச் செல்வ மடா!-மகன்
      புலைமையும் தந்தையின் புலமை களும்
யாரிடம் அவிழ்க்கின் றார்?-இதை
      எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?
பாரிடத் திவரொடு நாம்-எனப்
      பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன் றில்
நேரிட வாழ்வுண் டோ?-இரு
      நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ?’       135

$$$

Leave a comment