-தஞ்சை வெ.கோபாலன்
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 8…

8. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்
1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சிக் காலத்தில் ஹிந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி.பன்னீர் செல்வம், ஈ.வே.ரா. ஆகியோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.
அதே வருடம் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கமும் இவர்கள் எழுப்பினார்கள். ஈ.வே.ரா. பள்ளிகளில் ஹிந்தி மொழி ஒரு பாடமாக ஆக்கப்படுவதை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார். ‘ஹிந்தியை ஏற்றுக்கொள்வது, ஹிந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். ஹிந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள்’ என்று ஈ.வே.ரா. வலியுறுத்தினார். தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன
அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு.
1949 இல் ஈ.வே.ரா. வின் தலைமைத் தளபதியான காஞ்சிவரம் நடராசன் (சி.என்.) அண்ணாதுரை, ஈ.வே.ரா. விடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவுக்கு ஈ.வே.ரா. மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகின்றது. ராமசாமி, திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.
ஈ.வே.ரா. தன்னுடைய கட்சியின் லட்சியங்களாகவும், தனது லட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
ஈ.வே.ரா. விடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் போல ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது. சமூக சீர்திருத்தங்கள் பலவற்றை வலியுறுத்தி வந்த ஈ.வே.ரா. ஜூலை 9, 1948 அன்று தன்னை விட 40 வயது இளையவரான தனக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த மணியம்மை என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இந்த பொருந்தாத் திருமணத்தைக் காரணம் காட்டி, கட்சியிலிருந்து அண்ணாதுரை தலைமையில் பலரும் விலகினர்.
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று தனிக் கட்சி ஆரம்பித்த காரணத்தினாலும், அவர்கள் கண்ணீருடன் பிரிகிறோம் என்ற சொல்லை வைத்தே அவர்களை ஈ.வே.ரா. “கண்ணீர்த்துளிகள்” என்றே பெயரிட்டு அழைக்கவும் எழுதவும் தொடங்கினார். அவர்களின் திமுக கட்சியையும் கண்ணீர்த்துளி கட்சி என்று வர்ணிக்கலானார்.
கழகம் உடைந்தது! தி.மு.க. பிறந்தது.
திராவிடர் கழகத்திலிருந்து சி.என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு, ராயபுரம், ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தி கட்சியின் தொடக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிக்கிறது. அதன் அறிகுறியாக இந்திய பொதுத் தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு சுயேச்சையான தனியாட்சி பெற்ற திராவிட நாடு” வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
1953 ஜூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, ‘டால்மியாபுரம்’ பெயரை ‘கல்லக்குடி’ என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது கிராமப்புற மாணவர்கள் அதிகமானோர் படிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், எல்லோரையும் படிக்க வைக்க பள்ளிக்கூட இடப் பற்றாக் குறை காரணமாக ஒரு பள்ளியில் காலையில் ஒரு பகுதியினர், மாலையில் ஒரு பகுதியினர் என்று இரண்டு வேளை கல்வி கற்கவும், இது போதுமான கட்டடங்கள் கட்டும் வரை தொடரும் என்றும் ஒரு மசோதா கொன்டு வந்தார். அப்போது ஒருவேளை மட்டும் படிக்கும் மாணவர்கள் மறுவேளையில் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ராஜாஜி சொன்னார், ‘அவரவர் பகுதியில் ஏதேனும் தொழில் நடக்குமல்லவா, அங்கு சென்று அந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளட்டும்’ என்றார். அவரை மறுபடி மறித்து கேள்வி கேட்டனர். அப்படி எந்தத் தொழிலும் மாணவர்கள் இருக்கும் பகுதியில் இல்லையென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு, “அவரவர்களின் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்களோ அந்த வேலையைக் கற்றுக் கொள்ளட்டும்” என்றார். இதை வெகுவாகத் திரித்து “அப்பன் வேலையை மகன் செய்ய வேண்டுமாம், உயர்ந்த குடிப் பிள்ளைகள் உயர்வான தொழிலும் தாழ்ந்த குடிப் பையன்கள் தாழ்ந்த வேலையும் செய்ய வேண்டுமென்கிறார், இது குலத் தொழில் கல்வி” என்று பெயரிட்டு மூச்சு விடாமல் கதறி உண்மையை மறைத்து ஊரை போராட்டக் களமாக ஆக்கிய பின் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.
1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா, வேண்டாமா என்று மாநாடு வாயிலில் இரண்டு பெட்டிகளை வைத்து அதில் வாக்களிக்க வைத்து மக்கள் (தி.மு.க. தொண்டர்கள்) முடிவுக்கேற்ப தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது.
எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய உரிமையை தானே பெற்றிருக்க “அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. தமிழ்நாட்டில் மொத்தம் 112 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு ‘உதயசூரியன்’ தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
ஏப்ரல் 19, 1961இல் கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டது. ஈ.வெ.கி. சம்பத் கட்சியிலிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சியை உருவாக்கினார். இந்தப் பிளவின் காரணமாக ஈ.வி.கே.சம்பத் (இவர் ஈ.வே.ரா.வின் அண்ணன் மகன்) பெரிதும் இன்னல்களுக்கு ஆளானார். இவருடன் கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் கட்சியில் இருந்து வெளியேறினர். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு.
1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “தனித் திராவிட நாடு” கோரிக்கையை முன்வைத்து பிரசாரம் செய்தது தி.மு.க. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் நடேச முதலியார் எனும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
1963இல் தேசப் பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் ‘பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா’வை இந்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து 1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “சுதந்திரமான தனித் திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டது. அப்படி கைவிட்ட காரணங்களை விளக்கி ‘திராவிட நாடு’ பத்திரிகையில் “சூட்சுமம் புரிகிறதா தம்பி!” என்று சி.என்.அண்ணாதுரை ஒரு கட்டுரையும் எழுதினார்.
“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் மேற்படி மொழி பேசும் மாநிலங்கள் இவர்கள் சொன்ன அந்த “அகண்ட திராவிட நாடு” கோரிக்கையை ஆதரிக்காததோடு எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அதே ஆண்டில் நவம்பர் 17இல், ஹிந்தி பேசாத மக்களின் மீது ஹிந்தியைத் திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 ஜனவரி 26 முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து ஜனவரி 26-இந்திய குடியரசு நாளைத் துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.
(தொடர்கிறது)
$$$