-கருவாபுரிச் சிறுவன்
தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமபிரானின் கோயில் திருப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று, மூலஸ்தானத்தில் சீதா சமேத ராம லட்சுமணர் ஆஞ்சநேயரை தரிசிக்கும் நாள் எந்நாளோ? இக்கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்ய இருக்கும் செல்வாக்கு மிக்க அறங்காவலர் எங்கிருக்கிறாரோ?

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத் தினால்! ஓராயிரம் மகபுரி பயனை உய்க்குமே சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே இராமஎன் றொருமொழி இயம்பும் காலையில்!
ராம நாமத்தின் அருமை பெருமையை கம்ப நாட்டாழ்வார் சமயம் கிடைக்கும் பொதெல்லாம் சொல்லி சொல்லி மகிழ்வார்.
நான்கு வேதமாகவும், அதன் பொருளாகவும் அத்தகைய வடிவமுமாகியது ராம ராமம் என்பது சான்றோர்கள் துணிபு.
நாராயணா, நமசிவாய ஆகிய மந்திரங்களின இரண்டாவது எழுத்துக்கள் இரண்டும் இணையும் போது பிறக்கும் மகா மந்திரம் ‛ராம’.
முன்பு மக்களை அறவழியில் செல்லும் பொருட்டு, திண்ணைகளிலும், சாவடிகளிலும் ராமாயணம், மகாபாரதம், நளச்சக்கரவர்த்தி கதைகள் படிக்கப்பட்டன. மக்கள் உள்ளங்களில் தர்ம சிந்தனைகள் விதையாகி பின்னாளில் விருட்சமாயின. இன்று இது போன்ற நல்லவர்கள் எங்கோ ஓரிடத்தில் ராம நாம சிந்தனை செய்து கொண்டே இருப்பதால் தான் அங்காங்கு மழை பெய்கிறது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு.
மதுரை, வடக்கு மாசி வீதியில் ராமாயணச்சாவடி என்று ஒன்று இன்றும் ராமாயணத்தின் புகழை பரப்பிக்கொண்டு இருப்பதைக் காணலாம். நிற்க.
ஏனைய மந்திரங்களுக்கு குரு உபதேசம் தேவை. ராம மந்திரத்திற்கு குருவுபதேசம் தேவையில்லை என்பர் சான்றோர்கள். ஏனெனில் அன்னை சீதா பிராட்டியால் ஆஞ்சநேய சுவாமிக்கு லிகமாக எழுதிக் காட்டப்பட்டது.
ராமாவதார முடிவில், அனைவரும் ஸ்ரீ வைகுந்தம் செல்ல ஆயத்தமானார்கள். ஆஞ்சநேயர் மட்டும் வர மாட்டேன் என அடம்பிடித்து விட்டார். காரணம் கேட்ட போது, அங்கு ராம நாமம் கேட்காது. பூலோகத்தில் தான் ராம நாமம் கேட்கும். அதனால் அடியேன் இங்கேயே இருக்கிறேன் என ஸ்ரீராமபிரானிடம் அனுமதி பெற்றுக் கொண்டார் என்கிறது அவரது சரிதம்.
இன்றும் ராமாயண உபன்யாசங்களில் ஆஞ்சநேயருக்கு என்று ஆசனம் ஒன்று வைக்கப்பட்டு, அதில் பழங்கள், பட்சணங்கள் எல்லாம் இருக்கும்.
எங்கிருந்தாலும் வானர வடிவில் வரும் ஆஞ்சநேயர் அவ்விடத்திற்கு வந்து அதைப் பார்த்து அனுக்கிரகித்து உபன்யாசகரை ஆசீர்வாதம் செய்யும் காட்சியை நாளிதழ் முதல் இணையம் வரை காண்கிறோம்.
ராம நாமத்தின் சக்தி அளப்பரியது. அதை எழுதிக் காட்ட முடியாது. அனுபவிப்பவர்கள் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம், முழுமையாக முடியாது.

சைவமும் வைணவமும்:
சைவமும் வைணவமும் காலத்தால் பிரிக்க முடியாதவை. இரண்டு சமயங்களும் தண்டவாளங்கள் போன்றவை. இவ்விரண்டுமே ஹிந்து மதத்தின் இரு கண்கள்.
மனித குலத்தினை மாண்புறச் செய்யும் கடவுள்களாக சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஆதி காலம் தொட்டே திகழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
வேத ஆகமங்களைக் கற்றுணர்ந்த நம் மன்னர் பெருமக்களும், முன்னோர்களும் ஆறு, குளக்கரையின் மீது பெருமாளின் கோயிலின் ஈசான திக்கில் சிவபெருமான் ஆலயத்தையும், சிவபெருமான் கோயிலுக்கு நிருதி திக்கில் பெருமாள் கோயிலையும் அமைத்து ஊரை நிர்மாணம் செய்து இருப்பார்கள். இதுவே பெரும்பாலான கிராமங்களில் உள்ள கோயில்களின் அமைப்பாக இருக்கும்.
பெருமாள் கோயில்கள்:
ராம நாம மகிமையை உணர்ந்தவர்கள், இந்த அகண்ட பாரத தேசத்திலே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராம பிரானுக்கு கோயில்கள், பஜனை மடங்கள், நந்தவனங்கள் , அன்னச்சத்திரங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், அழியாத காவியங்கள் என பலரும் அவரவருக்கு தகுந்தாற் போல பணிகளை செய்து உய்வைத் தேடிக் கொண்டார்கள். அவற்றில் ஒன்று கற் திருப்பணிக் கோயில். அதில் சீதா சமேத ராம லட்சுமண ஆஞ்சநேயர், அல்லது ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள். சீனிவாசப் பெருமாள் கோலத்தில் மூலஸ்தானம் அமைத்து கோயில் எழுப்பி வழிபாடு செய்தார்கள்.
விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்க மன்னார் கோயில், செண்பகத்தோப்பு காட்டழகர், திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள், சோழபுரம் பெருமாள் கோயில்கள் காலத்தால் பழமையானவை.
இக்கோயிலுக்கும் முந்தைய கோயில் உண்டென்றால் அது கரிவலம் வந்த நல்லூர் கோதண்டராம சுவாமி கோயிலாகும்.
கரிவலம் வந்த நல்லூருக்கு அருகிலுள்ள பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நிருதி திக்கில் அமைந்த பெருமாள் கோயில். இது ஒரு காலத்தில் பெருவெள்ளம், அந்நியர் படையெடுப்பால் சிதைவுற்றுப் போனது. அதில் எஞ்சிய கற்களைக் கொண்டு தற்போது பனையூர் கிராமத்தின் வாயு மூலையில் கிருஷ்ணர் பெயரில் கோயிலைப் புணரமைத்து வழிபாடு செய்து வருகிறார்கள் இவ்வூர் மக்கள்.
கோதண்ட ராம சுவாமி கோயில்:
கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் கோயிலுக்கு நிருதி திக்கில் அமையப்பெற்ற ஒரு புராதமான கோயில் இது.
ராமபிரானின் சகோதரர் லட்சுமணர் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் தீர பால்வண்ண நாதரை வழிபட்டதாக, திருக்கருவை தல புராணம் கூறுகிறது. அந்த அடிப்படையில் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் இந்த கோதண்டராம சுவாமி கோயிலை உருவாக்கி இருக்கலாம்.
மேலும் இப்பகுதியை ஆட்சி செய்த அதிவீர ராம பாண்டியர், வரதுங்க ராம பாண்டியர் ஆகியோரின் சமயப்பொறைக்கு எடுத்துக்காட்டாகவும் கூட இக்கோயிலில் திருப்பணி செய்து நிவந்தங்கள் வழங்கி இருக்கலாம். இக்கோயிலுக்குரிய அசையும் சொத்தும் அசையா சொத்தும் எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லா விஷயங்களும் தெரிந்த கரிவலம் வந்த நல்லுார் அக்ரஹாரத்தில் வசித்த சிவாசாரியார், பிராமணர்கள், பட்டாசாரியார்கள் வசதி வாய்ப்புகளைத் தேடியும், இன்ன பிற காரணங்களாலும் நவீன காலத்திற்கு ஏற்ப வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டார்கள். அடியேனுடைய சிறு வயதில் கூட ஒரு சில ஆச்சாரமான பிராமணர்களைப் பார்த்துள்ளேன். காலப்போக்கில் அவர்களும் சென்னை, திருச்சியில் குடியேறியதாகச் சொல்லுவர்.
மூலஸ்தானத்தில் அழகிய கோலத்தில் கோதண்டத்தை ஏந்திய ஸ்ரீராமபிரான், வலது புறத்தில் சீதாதேவி, இடப்புறத்தில் லட்சுமணாழ்வார், மூவரின் திருவடியில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் காட்சி தருவார்கள்.
இரண்டு சிறு அர்த்த மண்டபங்கள். பின்னர் மகா மண்டபம். அதில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், சில நாகர்கள் போன்ற சிலா ரூபங்களை காணலாம். எதிரே பெரிய திருவடியாகிய கருடாழ்வாருக்கு தனிச்சன்னிதி. பின்னர் பலிபீடம்.
சுற்றி கற்களால் ஆன மதிற்சுவர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு சில கயவர்கள் மூலஸ்தான ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் போன்ற மூன்று சிலைகளையும் பின்னப்படுத்தி விட்டார்கள். மீண்டும் ராம லட்சுமணர், ஆஞ்சநேயரை ஸ்தாபனம் செய்து சம்ரோக்ஷணம் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை.
மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் சம்ரோக்ஷணம் செய்யப்பட்டிருக்கும். அதன் பிறகு இக்கோயில் இன்றுவரை சம்ரோக்ஷணம் கண்டதில்லை.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஆஸ்தீக அன்பர்கள் ‘பரகாலன் குமுதவல்லி நாச்சியார் திருச்சபை’ என்று முனைப்போடு செயல்பட்டார்கள். மேலும் சிமெண்டில் செய்த விக்கிரகங்களை நிறுவி மார்கழி மாத பஜனை, மாதாந்திர முதல் சனிக்கிழமை தோறும் திருவிளக்கு பூஜை என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இன்று வரை மெய்யான திருப்பணி துளியளவு கூட நடைபெறவில்லை என்பது தான் கரிவலம் வந்த நல்லூர் வைணவ வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டிய வேதனைச் செய்தியாகும்.
நிறைவாக,
தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமபிரானின் கோயில் திருப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று, மூலஸ்தானத்தில் சீதா சமேத ராம லட்சுமணர் ஆஞ்சநேயரை தரிசிக்கும் நாள் எந்நாளோ? இக்கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்ய இருக்கும் செல்வாக்கு மிக்க அறங்காவலர் எங்கிருக்கிறாரோ? அந்த பரம விஸ்வாசியான ராமபக்தரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சிறிய திருவடியும் பெரிய திருவடியும் சேர்ந்து அழைத்து வந்து அவரை இத்தலத்தில் சேர்க்க வேண்டும் என்பதே அடியேனுடைய பிரார்த்தனை.
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ! புற்பா முதலாப் புல் எறும்பு ஆதிஒன்று இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார் பெற்ற நாட்டுளே!
-என்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழியை உச்சரித்தவாறும், கீழ்க்கண்ட மகா மந்திரங்களை சொல்லி மன அமைதி கொள்வோமாக.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஸ்ரீ கோவிந்த நாம சங்கீர்த்தனம்
கோவிந்தா! கோவிந்தா!
வாழ்க பாரதம் வாழ்க மணித்திருநாடு!
$$$