-கருவாபுரிச் சிறுவன்
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் இரண்டாம் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்).

- காண்க: பகுதி -1
ஸ்ரீமத் சிவஞானயோகிகள் நோக்கில் வெளிப்பட்ட திருத்தலங்கள்:
1. விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி – பாபநாசம் நெடுஞ்சாலை 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது விக்கிரமசிங்க புரம். பொதிகை மலைக்கு மிகவும் அருகிலுள்ள தலம். அகத்தியரின் திருவருளால் அவதாரம் செய்தவர் சிவஞான யோகிகள். அவர்கள் வாழ்ந்த இல்லத்தை சிவஞானயோகிகள் ஆலயமாக அமைத்துள்ளார்கள் திருவாவடுதுறை ஆதினத்தினர்.
சைவர்களின் குலதெய்வமாகிய சிவஞான யோகிகள் பரிபூரணம் அடைந்த சித்திரை ஆயில்யம் நாளன்று இங்கு ஆண்டுதோறும் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
மேலும் சைவ சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு எடுத்தியம்பிய யோகிகள் திருநாமத்தின் பெயரால் பலரும் சிவதொண்டுகள் புரிந்து வருகிறார்கள்.
சிவஞானயோகிகளின் அவதாரத்தலம் என்பதால் இங்கு அமைந்துள்ள சிவலாயத்தை தரிசனம் செய்வது நன்று.
சிவஞான யோகிகளின் சிறிய தந்தையார் நமச்சிவாயக்கவிராயர் இத்தல முக்களா லிங்கர் மீது பல பிரபந்த நூற்களை அருளிச் செய்துள்ளார். அது ‘சிங்கை பிரபந்தத் திரட்டு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில் அம்பிகையை அடியார்கள் உள்ளத்தில் கண்டு தரிசிக்கலாம் என்ற பாடலை பாராயணம் செய்வோமா…
வெள்ளமோ வெள்ளிமலை
மேடோ தமிழ்மலைக்கீழ்ப்
பள்ளமோ தெள்ளிய நாற்பத்து
முக்கோண் மத்தியமோ
கள்ளமோ காண்கிலனான்
காண்பேன் உனக்கடியார்
உள்ளமோ கோயில்
உலகுடைய மாதாவே
(பாபநாசம் உலகம்மை கலிப்பா - 62 )
* * ஸ்ரீ மத் சிவஞான யோகிகளை இனி நம் யோகிகள் என்றே இனி சிந்திப்போமாக.

2. சுசீந்திரம்
அகலிகை மீது ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அது தேரூர் எனப்பட்டது. ஐராவதம் யானை மருந்து வாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உற்பத்தி செய்தது. அது கோட்டாறு எனப்பட்டது. இந்திரனின் தவம் பலித்தது. ஸ்தாணுவாகிய இறைவன் அவன் முன் தோன்றினார்.
இந்திரன் சாபம் நீங்கித் தூய்மை அடைந்த இடம் ஆதலால் (சுசி இந்திரம்; சுசி – தூய்மை) சுசீந்திரம் என ஆயிற்று.
இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான்.
இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜா திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர்.
அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை.
இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது ‘அகம் கண்டது புறம் கூறேன்’ என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேண்டும் என்ற தெய்விக முறை உள்ளது. இத்தலத்தின் அருகே திருவாவடுதுறையின் கிளை மடம் உள்ளது. இது தொடங்கிய காலம் தொட்டே புகழுடன் செயல்பட்டு வருகிறது.
திருவாவடுறையில் இருந்து இம்மடத்திற்கு யாத்திரையாக வரும் தம்பிரான் சுவாமிகள், வழியில் பாபநாசத்தில் முக்களாலிங்கரை கண்டு தன்னோடு இங்கு அழைத்து வருகிறார்கள்.
ஆக, நம் யோகிகளின் திருவடிபட்ட திருத்தலம் என்ற பெருமையினை யுடையது.
பின்னாளில் திருவாவடுதுறையாதினத்தில் அணுக்கமாக இருந்த வீ. பழனிக்குமாரப் பண்டாரப் புலவர் அவர்கள் கோட்டாறு விநாயகர் மீது பண்மணி மாலை ஒன்றை சாற்றியுள்ளார்கள்.
அதிலுள்ள பரசிவத்தைத் தோத்தரிக்கும் நறுமணம் யாத்திரையின் கடைசி வரையிலும் மாறாமல் மணம் வீசுவதை அனுபவித்து மகிழ்வீர்களாக.
அருவாகி உருவாகி அருவுருவாய்
அகில சராசரங்களாகிப்
பொருளாகி மலர்மணம்போல் புகுந்
துடலில் சிவசீவப் போதம் காட்டும்
குருவாகி ஐந்தொழிற்கும் குறியிடமாய்
அருட்சக்திக் குடிதாகித்
திருவாகி எனதுளத்தில் திகழொளியாம்
பரசிவத்தை சிந்தை செய்வாம்.
(கோட்டாறு விநாயகர் மீது பண்மணி மாலை - 2)
3. ராஜவல்லிபுரம்
திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜவல்லிபுரம். இது தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த சிவாலயம். இருப்பினும் செப்பறை அழகிய கூத்தர் கோயில் என்றே பெயர் பெற்றது. இப்பகுதிகளில் உள்ள பஞ்ச நடராஜப் பெருமான் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அகிலாண்டேஸ்வரி சமேத அக்னிஸ்வரராக சுவாமி அம்பாள் அருள் செய்கின்றனர்.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னையின் மீது யோகிகள் முதன் முதலாக பாடிய பக்தி இலக்கிய பதிகம் இதுவே ஆகும் என்பது சான்றோர் துணிபு. செப்பறை அகிலாண்டேஸ்வரி பதிகம் என்பதாகும்.
சைவ சமயம் தொடர்ந்து தன் இருப்பு நிலையை விழித்துக் காட்டிக் கொள்ளுவதால் இது போன்ற தலங்களுக்கு அன்பர்கள் பலரும் தேடிச் சென்று தரிசனம் செய்யப் பயணிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
எழுத்தாளர் ரா.பி. சேதுப்பிள்ளை, வல்லிக்கண்ணன் போன்றோரின் பூர்விகப்பதி இதுவாகும்.
இந்த ராஜவல்லிபுரத்திலுள்ள சிவகாமி நேசனுக்கு தல மான்மியம் ஒன்று உள்ளது. அதிலுள்ள சித்தாந்த ஆசிரியர்களின் துதியை பாடி இவ்யாத்திரையின் புண்ணியத்தை அடைவோமாக.
சிவஞான போத நுால் செய்த பிரான் போற்றி
சிவஞான சித்தியருள் செய்த நந்தி கழல் போற்றி
சிவஞான சம்பந்தர் செய்ய திருவடி போற்றி
சிவஞானப்பிரகாசம் செய்த சிவன் தாள் போற்றி
-சங்கர சுப்பிரமணியபிள்ளை
பண்டை வினையாலும் வருபழ வினையினாலும் முறு
பாழ்த்தகன் மத்தி னாலும்
பாழான மாயைப் புணர்ச்சியாலும் தொலைவில்
பல பல தனுக்கடூக்கிக்
கொண்டு சுழல் பாவியேன் செய்கின்ற பிழையெலாம்
குணமெனக் கருதி எளிதாக்
கோலங்கள் காட்டியெனை இவ்வள வெடுத்தாண்ட
குணமேருவே நிறைந்து
மண்டுமானந்த வெள்ளத்தையுண்டு இன்புறவும்
வைப்பதென்றோ அறிகிலேன்
வானாகி மண்ணாகி மற்றுளவெ லாாமாகி
மறை நான்கும் அறியாமலே
அண்டபகிரண்டப் பரப்பமாயப் புறமு
மளவற்று நின்றுலாவும்
அருண் ஞானவாரியே ராசை மேவிய செல்வ
அகிலாண்ட மென்னும் அரசே!
(அகிலாண்டம்மை பதிகம் - 1)
4. திருவாவடுதுறை
இது சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையிலுள்ள வழிகாட்டும் ஆதின வளைவில் சென்றால் திருவாவடுதுறை ஆதீனத்துடன் கூடிய திருக்கோயில். அருகிலுள்ள இருப்புப்பாதை நிலையம் நரசிங்கன் பேட்டை.
அம்பிகை பசுவடிவில் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்த நாயனார் தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றது
சுந்தர மூர்த்தி சுவாமிகளின் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது
திருவிடைமருதுாரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது
தேவர்கள் படர் அரசு ஆக விளங்க அதன்கீழ் சுவாமி எழுந்தருளியது
திருமூல தேவ நாயனார் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளியது
ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களில் ஒருவராகிய திருமாளிகைத்தேவர் பல அற்புதங்களை நிகழ்த்தியது
சேரமான் பெருமாள் நாயனார், விக்ரம பாண்டிய மன்னர் ஆகியோர் வழிபட்டது
முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியோகேசராகவும் காட்டியது.
சித்தர்க்கு அட்டமா சித்திகளை அருளியது;
தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றது;
திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலியோருடைய சமாதிகள் இருப்பது என எண்ணற்ற சிறப்புக்களையுடைய தலம் திருவாவடுதுறை.
மேலும் இத்தலத்தில் எழுந்தருளிய நமசிவாய குருமுதல்வரை சொற்றமிழால் பாடிப் பரவுகிறார் யோகிகள்.
அதில் தற்கால நிலைகளை விளக்கிச் சொல்லும் அப்பாடலை அன்றே குருமுதல்வரின் திருவடியில் சமர்ப்பித்துள்ளார் யோகிகள். திருவருள் சித்தம் இதுவே என எண்ணி அச்செய்யுள்…
பொய்யும் கவடும் கொடுமையும்
வஞ்சமும் பூண்ட பொல்லாக்
கையான் கலதி முழுமூட
னேனும் நின் கண்ணருளால்
உய்யும் படி என்று கூடும்
எந்தாய் உண்மையாளர் அன்பு
செய்யும் துறைசையுள் தேவே
பஞ்சாக்கர தேசிகனே!
(பஞ்சாக்கர தேசிகர் மாலை - 2)
5. காஞ்சிபுரம்
இப்பாரத தேசத்தின் முக்தித்தலங்கள் ஏழினுள் இதுவும் ஒன்று. தமிழக பஞ்சபூத ஸ்தங்களில் முதன்மையான பிருத்விக்குரியது. தேவார, திருவாசக, திருப்புகழும் பாடப்பெற்ற திருத்தலம். பல ஞானியரும் முனிவரும் தவமிருந்த தலம். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம். சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம். அழியாபுகழ் பெற்ற சைவமும் வைணவமும் தமிழும் தழைத்தோங்கும் சீர்மை மிகுந்த இலக்கியங்களைப் பெற்ற தலம். அக்காலம் முதல் இக்காலம் வரை புகழ் பெற்ற புலவர்களால் போற்றப்பெற்ற பழம்பதி.
இதனுடைய பெருமைகளையும் அருமைகளையும் செல்லிக் கொண்டே, எழுதிக் கொண்டே போகலாம்.
யோகிகள் இத்தலத்தை உயிர்ப்பாக வைத்துதான் காஞ்சிபுராணம் என்னும் முதல் நுாலையும், கச்சியப்ப முனிவர் பிரான் காஞ்சிபுராணம் இரண்டாம் காண்டத்தையும் அருளிச்செய்துள்ளார்கள்.
பதினொரு திருமுறைகளை எப்படி பெரிய புராணத்தின் வழி பாராயணம் செய்வது உத்தமமோ அது போல பதினான்கு சாஸ்திரங்களை இப்பட்டர் பிரான்கள் இயற்றிய காஞ்சி புராணம் வழி கற்பது சாலச்சிறந்தது என்பார்கள் ஆன்றோர்கள்.
சாஸ்திரத்தின் மணிமுடியாக திகழும் ஆதிரையானை நாமும் வழிபட வேண்டும் என்பது யோகிகளின் திருவாக்கு.
சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும்
மறைக்கோவுந் தழல்கால் சூலம்,
அங்கேந்தும் அம்மானும் தத்தமது
தொழில்தலைநின் றாற்றச் செய்தோர்,
பங்கேந்தும் பெருமாட்டி விழிகளிப்ப
இருமுனிவர் பணிந்து போற்றக்,
கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும்
பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம்.
(காஞ்சிபுராணம் பாயிரம்- 3)

6. வடதிருமுல்லை வாயில்
வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்கும் நரை, திரை, மூப்பு என்னும் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்…
நரை என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல், திரை என்றால் தோலில் விழும் சுருக்கங்கள், மூப்பு என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்கள் முதிர்ந்த தோற்றமாகும்.
இவை மூன்றிலும் இருந்து விடுபடுவதற்கு ஒரு உபாயம் ஒன்றைச் சொல்லுகிறார் சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
சென்னை, வட திருமுல்லைவாயிலில் இருக்கும் மாசிலாமணியீசரை வணங்குங்கள். விண்ணில் இருக்கும் தேவாதி தேவர்களும் உங்களைக் கண்டு நாணுவார்கள் என பதிகத்தில் அறுதியிட்டுக் கூறுகிறார். வாருங்கள் படிப்போம்.
விரை தரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானைத் திரை தரு புனல் சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலாரூரன் உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்தவல்லார்கள் நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
சென்னை திருவலிதாயத்திலிருந்து 10 கி.மீ. துாரத்தில் உள்ளது வட திருமுல்லைவாயில். அம்பத்தூர் செல்லும் ரோட்டில் ஆவடி செல்வதற்கு முன்னாலேயே பச்சை அம்மன் கோயிலுக்கான வழி உள்ளது. அக்கோயிலைத் தாண்டிப் போனால் வட திருமுல்லை வாயிலுக்கு செல்லலாம். ‘கொடியிடை அம்மன் கோயில்’ என்று விசாரித்தாலும் நல்லது தான்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரிநாதர், வள்ளலார் போன்றோரால் பாடப்பெற்ற புண்ணியப் பதி. மூன்று சக்திகள் அதாவது கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கும் விதமாக திரிசக்திக் கோயில்கள் தருமமிகு இச்சென்னையில் உள்ளன.
இங்குள்ள கொடியிடையம்பிகை கிரியா சக்தியாகவும், மீஞ்சூர் அருகிலுள்ள (வட) மேலூர் திருவிடையம்பிகை இச்சா சக்தியாகவும், திருவொற்றியூர் வடிவுடையம்பிகை ஞான சக்தியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
பௌர்ணமி தினத்தில் இம்மூன்று அம்பிகையையும் தரிசிப்பது விசேஷம் என்கிற மரபு தொன்று தொட்டு நிலவி வருகிறது.
இங்குள்ள சுவாமியின் மீது வடதிருமுல்லைவாயில் அந்தாதி என்றொரு அரிய நுாலை இயற்றியுள்ளார் யோகிகள்.
என்றும் இளமையோடு வாழ விரும்புவர்கள் இத்தல பெருமானை தரிசித்து உய்வடையலாம்.
7. இளசை
சைவ சித்தாந்த நற்கருத்துக்களை உலகளவில் கொண்டுசென்று போற்றியும் ஏற்றியும் வரும் இத்தகைய சூழலில் எங்கும் எதிலும் சைவ சித்தாந்தத்தை வேரூன்றச் செய்த குருமகா சன்னிதானங்கள் முதல் அடிப்பொடிகளாய் பணியாற்றும் அன்பர்கள் திருக்கூட்டம் வரை யாவரின் திருவடியையும் மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்கிறேன்.
அதே சமயத்தில் திராவிட ஞானபானு, சைவர்களின் குலதெய்வமாம் யோகிகளால் தொடர்புடைய திருத்தலத்தினை தரிசித்து உய்வு பெறுவது யாம் பெரும் பேறு என்ற கொள்கையில் புறப்பட்ட நமக்கு இத்தலம் எங்குள்ளது என இன்று வரை தெரியவில்லை.
ஆனால் உ.வே சா. அவர்கள் இன்றைய திருவள்ளுர் மாவட்டம், புட்லுாரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது என்ற குறிப்பு மட்டும் கொடுத்துள்ளார் என்கிறார்கள் யோகிகள் மீது பற்று கொண்ட உழுவலன்பர்கள் சிலர்.
இந்தச் சான்றினை வைத்துக் கொண்டு இளசைப்பதி எங்குள்ளது என்பதைக் கண்டு தரிசிக்கும் ஆத்மாவை சிவஞானியர்களே அறிவர்.
இக்கோயில் மட்டும் பூர்வஜென்ம புண்ணியப்பயனால் தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போனது யாம் செய்த நல்வினை தவத்தின் குறைவு.
அந்த இளசை கோமானின் திருவடியை இருந்த இடத்திலேயே துதி செய்து மகிழ்வோமாக.
மாறிலாக் கருணை காட்டும்
வளரொளி நயன மூன்றும்
சீறுமாடு அரவம் பூணும் திருமுகப்
பொலிவும் வெள்ளை
நீறுபூத் தலர்ந்த மெய்யு
நெறிகுழலிமய வல்லி
கூறுமாய் இளசைக் கோமான்
என்னுள்ளம் குடிகொண்டானே.
(இளசை பதிற்றுப்பத்து அந்தாதி-55)
8. கலசை ( தொட்டிக்கலை)
சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள செவ்வாய்பேட்டை அருகே அமைந்துள்ளது தொட்டிக்கலை என்னும் சிவப்பதி. இது சென்னை, ஆவடியில் இருந்து 18 கி.மீ. திருவள்ளூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கலைசை என சுருக்கமாகக் கூறப்படும் தொட்டிக்கலை தலத்தில் எழுந்தருளி இருக்கும் செங்கழுநீர் விநாயகர் யோகிகளை ஆட்கொண்டவர். இவ்விநாயகர் மீது பிள்ளைத்தமிழ் ஒன்று பாடியுள்ளார்கள்.
அம்பிகை, முருகன், விஷ்ணு… மற்றும் ஏனைய தெய்வங்களுக்கு புலவர்கள் பிள்ளைத்தமிழ் நூல் செய்து இருப்பார்கள். ஆனால் விநாயகருக்கு பிள்ளைத்தமிழ் நுால் செய்வது அவ்வளவு எளிதல்ல… ஏனென்றால் அவருடைய திருவுருவம் அப்படி … விநாயகருக்கும் பிள்ளைத்தமிழ் நூல் செய்யலாம் என்கிற நன்மரபினை முதன் முதலில் உருவாக்கியவர் யோகிகள்.
இவ்வூரின் நடுவே கிழக்கு திசையில் அமைந்துள்ளது சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். இவருக்கு கலசை பதிற்றுப்பத்து அந்தாதி என்னும் அருள்வாடாத சொன் மாலையை சாற்றியுள்ளார்கள். இக்கோயிலின் எதிரில் தீர்க்கக்குளம் ஒன்று உள்ளது.
சுப்பிரமணியம் என்னும் அன்பர் தனது வித்யா குருவின் ஆணைப்படி இக்கோயிலில் திருப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து கும்பாபிஷேகத்தையும் நிகழ்த்தி நித்திய பூஜைகளையும் வழுவின்றி நடாத்தி வருகிறார்கள்.
இந்த கலைசைப்பதியில் இருக்கிற சிதம்பரேசுவரர் எப்படி பட்டவர் என்பதை யோகிகள் வாக்கினால் கேட்போமா…
புதியான் பழையான் புறத்தான் அகத்தான்
முதியான் இளையான் முதலான் முடியான்
பதியாம் கலைசைப் பகவன் பெருமை
மதியால் எவர் தேறிட வல்லவரே!
(கலைசைப்பதிற்றுப்பத்து அந்தாதி- 3)
9. குளசை (குளத்துார்)
சென்னை,கொளத்தூரில் அமைந்துள்ளது சோமநாத சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுக்கு முன்பு ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் இவ்வூரின் ஜமீன்தாராகிய ஒரு சிவஅன்பரால் கட்டப்பட்டது.
இக்கோயிலுக்கு எதிரில் திருக்குளங்கள் உள்ளன. சந்திர பகவானுக்கு இத்திருத்தல சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் பாலித்ததாலும் அவரின் திருநாமமே விளங்கப் பெறுகிறது.
சந்திரனுக்கு சோமன் என்று பெயரே மூலவரின் திருநாமமான சோமநாதர் என்பதாகும். அம்பிகையின் திருநாமம் அமுதாம்பிகை.
இக்கோயில் சந்திரஸ்தலம் என்பதால் மனவளர்ச்சி குன்றியவர்களும் மன நிலை பாதிப்புள்ளவர்களும் இவரை வணங்கி வழிபட நலம் பெறுவர் என்பது திண்ணம்.
சென்னைமாநகரில் உள்ள நவக்கிரக தலங்களில் இது சந்திரனுக்குரிய தலம்.
இக்குளத்துார் பெருமானை சென்று தரிசனம் செய்பவர்களுக்கு தானாக எல்லாம் வந்து அணையும் என்பதை வரிசைப்படுத்தும் யோகிகளின் திருவாக்கின் அணியழகினை ஒருதரம் எல்லோரும் படியுங்கள்.
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், குளத்துார் பதிற்றுப்பத்து அந்தாதி என்பன இத்தலத்திற்குரிய இலக்கிய நுாற்கள். சென்னையின் முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சீரும் கல்வியும் செல்வமும் ஞானமும்
பாரும் விண்ணும் பரிக்கும் இறைமையும்
சாரும் தென் குளந்தாபுரி மேவிய
காருண் கண்டனைக் கை தொழுவார்கட்கே
(குளத்துார் பதிற்றுப்பத்து அந்தாதி - 1)

10. திருப்பாதிரிப்புலியூர்
முன்னொரு காலத்தில் அன்னை விளையாட்டாக சுவாமியின் திருக்கண்களை தன் கைகளால் பொத்த உலகம் இருண்டது. அதனால் அருவமாக இத்தலத்திற்கு வந்து தோன்றாத்துணை நாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாள்.
இத்தலத்தில் அம்பிகையே அர்த்த ஜாம வழிபாட்டில் பள்ளியறைக்கு எழுந்தருள்வது இங்குள்ள சிறப்பு. கடலூர் நகரின் ஒரு பகுதியில் இக்கோயில் அமைத்துள்ளது.
மத்யந்தின முனிவரின் மகன் சிவபெருமானின் வழிபாட்டிற்காக வண்டுகள் வருவதன் முன் பூப்பறிக்க புலியின் கண்களும் பாதங்களும் பெற்றுப் புலிக்கால் முனிவரான தலம்.
உழவாரப்படையாளியாம் திருநாவுக்கரசு பெருமான் கடலை தெப்பமாக்கி மிதந்து தீந்தமிழ் மாலைகளை தந்த திருப்பதி இது. அப்பர் பெருமான் அமர்ந்த நிலையில் இங்கு காட்சி தருகிறார்.
திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் இங்கு உள்ளது.
இத்தலத்தினை சார்ந்த ஏழை பிராமணர் ஒருவருக்கு பொற்காசுகள் கிடைக்க, முற்றுப் பெறாத வெண்பாவை முழுமைப்படுத்தி அவருக்கு கருணை செய்கிறார் யோகிகள்.
இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்பவர்கள் அளவிடமுடியாத ஆற்றலை பெறுவர். மேலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற கருணை பிறக்குமன்றோ…
கருவுற்ற நாள்முதலாக
உன்பாதமே காண்பதற்கு
உருகிற்று என் உள்ளமும் நானுங்
கிடந்தலந்து எய்த்தொழிந்தேன்
திருவொற்றியூரா! திருவால
வாயா! திருவாரூரா!
ஒருபற்றி லாமையும் கண்டு
இரங்காய் கச்சி யேகம்பனே.
(திருநாவுக்கரசர் தேவாரம்)
11. திருவொற்றியூர்
சென்னை அருகில் உள்ள திருவொற்றியூர், தொண்டை மண்டலத்தின் முக்கிய பதிகளில் ஒன்றாகும்.
ஒரு நாளுக்கு ஒரு முறை தான் எனவும், குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் தான் என்றும், அப்படி அவர்கள் சொல்லித்தரும் ஒரு ஸ்லோகம் மீண்டும் இடம் பெறாது எனவும் விதி முறை வகுத்து வடமொழிகளை கற்றுத்தருவார்கள் சென்னை, திருவொற்றியூரில் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்தணப் பெருமக்கள்.
அவர்களிடம் மணலி சின்னையா முதலியார் அவர்களின் உதவியோடு யோகிகள் வேதாகமங்களை கசடறக் கற்றுக் கொண்டார் என்கிறார் டி.என்.ராமசந்திரன் அவர்கள். ஆக, திருவொற்றியூரும் யோகிகளின் திருவடி பட்ட தலமாகும்.
ஆதிபுரி என்று அழைக்கப்படும் இத்தலம், சங்கிலியாரை சுந்தர மூர்த்தி நாயனார் மணந்து கொண்ட சிறப்பினை உடையது.
கலிய நாயனார் அவதாரம் செய்த தலம். பட்டினத்தடிகள் முக்தி பெற்ற திருத்தலம். கமலை ஞானப்பிரகாசரின் மாணவரான திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் என்பவரால் தல புராணம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
இத்தல சிவபெருமானை பிரம்ம தேவர் பூஜித்து வழிபட்டுள்ளார் என்கிறார் காழி வள்ளல் திருஞானசம்பந்த சுவாமிகள்.
விடையவனை விண்ணு மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாட் படையவனை பாய்புலித் தோலுடை கோவணம் பல்கரந்தைச் கடையவ னை சாமவேதன் சசி தங்கிய சங்க வெண்தோடு உடையவன் ஊனமில்லி உறையுமிடம் ஒற்றியூரே.
(தொடர்கிறது)
$$$