செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை

-ராம் மாதவ்

செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
‘பரம்-சிவாய்’: இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்

ஜேம்ஸ் கார்வில்லியின்,  “முட்டாளே, இது பொருளாதாரம்”  என்ற வாக்கியம் மிகவும் புகழ் பெற்றது. அவர் பில் கிளிண்டன் வெற்றிக்குத் திட்டம் தீட்டியவர். அவரால்தான், 1992-இல் ஜார்ஜ் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக கிளிண்டன் வெள்ளை மாளிகைக்குக் குடியேறினார் . இன்று அதேபோல சொல்ல வேண்டும் என்றால்  “முட்டாள், இது தொழில்நுட்பம்” என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில்நுட்பம் இருக்கப் பெற்றவர்கள் – அது இல்லாதவர்கள் என்று  உலகம் இன்று தொழில்நுட்ப யுகத்துக்குள் நுழைந்துவிட்டது. உண்மையான போட்டியில் ஜிடிபி எனப்படுகின்ற  ‘உள்நாட்டு மொத்த உற்பத்தி’ இப்போது நிழலாகப் போயுள்ளது. மொத்த உற்பத்தியை (GDP) வெவ்வேறு தரவுகளைக் கொண்டு வெவ்வேறு விதமாக விளக்கலாம். எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் மொத்த உற்பத்தி சீனாவை விட பத்து ட்ரில்லியன் டாலர் அதிகம். ஆனால் வாங்கும் சக்தியைப் பார்க்கும் போது சீனா அமெரிக்காவை விட நான்கு ட்ரில்லியன் டாலர் அதிகம்.

ஆனால் இரண்டு நாடுகளும் இந்த எண்ணிக்கை குறித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் மொத்த உற்பத்தி அதிகமுள்ள நாடுதான் உலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் என்ற கருத்து காலாவதியாகிவிட்டது.  இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் ஐந்து  அல்லது ஆறு மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட நாடு உலகில் ஆதிக்கம் செலுத்தும்.

செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் (குறை கடத்தி), குவான்டம் கணினியியல் , வேதி மற்றும் உயிரித் தொழில்நுட்பம், மாசுக் கட்டுப்பாடு மற்றும் வான்வெளி தொழில்நுட்பம் ஆகியவையே 21-ஆம் நூற்றாண்டில் உலகை அடக்கியாள்வதற்கான ஆயுதங்கள்.

அண்மையில் கூகுள்  ‘வில்லோ’ என்ற புதிய குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அது, உலகில் உள்ள மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் பத்து செப்டிலியன் ஆண்டுகளில் செய்யக்கூடிய கணக்கை ஐந்தே நிமிடத்தில் செய்து முடித்து விடும்.  ‘செப்டிலியன்’ என்றால் ஒன்றுக்கு அடுத்து 24 பூஜ்ஜியங்களைப் போட வேண்டும்.

2019 -இல் கூகுள்  ‘சைக்கோமோர்’ என்ற பிராசஸரை உருவாக்கியது. அது, வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் போடும் கணக்கை இருநூறு நொடிகளில் போட்டு முடித்து விடும்.  ‘வில்லோ பிராசஸர் சிப்’ இரண்டு மடங்கு குவாண்டம் பிட்ஸை (கியூ பிட்ஸ்) கொண்டது என்பதால், அது மாபெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. சுந்தர் பிச்சை அதை அறிமுகம் செய்தபோது எலன் மஸ்க் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களே ஆவென்று வாய் பிளந்தார்கள்.

இந்தியா இந்த தொழில்நுட்பச் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான தொழில்நுட்பத் துறைகளிலும் போட்டியிடத் தயாராக வேண்டும். இந்த சவாலைப் பற்றி சில தரவுகளைக் கொண்டு விளக்கப் பார்க்கிறேன்.

‘க்ரே’ சூப்பர் கம்ப்யூட்டர்

1960 -களில் சூப்பர் கம்ப்யூட்டர், தரவுகள் சேமிப்பின் அளவு, பிராசஸிங் மிஷன்கள் என்று டிஜிட்டல் யுகம் வளர்ச்சி கண்டது. 1964 –இல் அமெரிக்கா  ‘க்ரே’ (Cray) என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது.

நாம் அந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவே இருபது ஆண்டுகளாயின.  அமெரிக்கா தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தர மறுத்துவிட்டது. எனவே அதனை இந்தியா சொந்தமாகத் தயாரிக்க முடிவெடுத்தது. விஜய் பட்கர் இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரை (பரம் 8000) 1991-இல் வடிவமைத்தார்.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையின்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  ‘பரம் சிவாய்’ என்ற சூப்பர் கம்ப்யூட்டர் அண்மையில் தான் காசியில் உள்ள ஹிந்து பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஐராவத்- AIRAWAT (AI Research, Analytics and Knowledge Assimilation Program – செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வு, அலசல் மற்றும் அறிவுத் தொகுப்பு திட்டம்) எனப்படுகின்ற சூப்பர் கம்ப்யூட்டர் தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் செயல் திறனில் அது உலகில் 75 –ஆம் இடத்தில் தான் இருக்கிறது.

இதே வேளையில், சூப்பர் கம்ப்யூட்டரை விட பல மடங்கு வேகமும் திறனும் கொண்ட குவாண்டம் தொழில்நுட்பத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI) எதிர்காலமும், மரபணுத் தொழில்நுட்பம், வானியல் மற்றும் மாசற்ற சூழல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதன் முன்னெடுப்புகள் அனைத்தும் குவான்டம் கணினியியல் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியா இந்த விஷயத்தில் ஈடுபட தாமதம் செய்யக் கூடாது. சூப்பர் கம்ப்யூட்டரை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் படைத்தவர்கள், அதனாலேயே முன்னணியில் இருக்கிறோம் என்ற பெருமிதத்தில் ஆழ்ந்து சோடை போய் விடக் கூடாது.

‘குவான்டம் 2.0’ என்ற புதுயுகத்தில் செயற்கை அறிவினால் சூப்பர் கம்ப்யூட்டரின் பயன்பாடு வரம்புக்கு உட்பட்டதாக மாறியுள்ளது. அதனால் தான் குவான்டம் தொழில்நுட்பத்திலும்  அது சார்ந்த இதர தொழில்நுட்பத்திலும் நாடுகள் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. 2022-இல் குவாண்டம் தொழில் நுட்பத்திற்காக சீனா 15.3 பில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் ஒதுக்கியதை விட இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகம்.

தொலைநோக்குடன் திட்டமிட்டுச் செயல்பட்டு வரும் மோடி அரசின் முன்னெடுப்புகளால் இந்தியா இந்த ஓட்டத்தில் நுழைந்துள்ளது. இதற்காக  ‘2020 இல் தேசிய குவான்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஐந்தாண்டுத் திட்டமாக ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகில், குவான்டம் தொழில்நுட்பத் துறையில் நீண்ட காலத் திட்டத்தை வெளியிட்டுள்ள நாடுகளில் இந்தியா ஏழாவது நாடாகும். இருந்த போதிலும், இத்துறையில் ஆய்வுகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் என்ற வகையில் நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது .  உலகில் குவான்டம் தொழில்நுட்ப உயர் ஆய்வுகளில் பத்து சதவீதத்தைக் கணக்கிட்டால் அதில் இந்தியா இருபதாவது இடத்தில் இருக்கிறது.

குவான்டம் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகள் விஷயத்தில் இதுவரை இந்தியா 340 காப்புரிமைகளைப் பதிவு செய்து, ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மொத்த காப்புரிமைகளில் 57 சதவீதத்தை சீனா   வைத்துள்ளது. அமெரிக்கா அதைவிட 28 சதவீதம் அதிகமாக பதிவு செய்து உலகில் முதலிடத்தில் உள்ளது.

முன்னேற்றத்திற்காக நாடுகள் நீண்ட காலம் காத்திருக்க முடியாது. தொலைநோக்கு உள்ள தலைமையாலும் தீவிர தொடர் முயற்சிகளாலும் பத்து-  பதினைந்து ஆண்டுகளுக்குள் நிமிர்ந்து விட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய நீள்நோக்கினால் 1933 -இல் இருந்து 1945 -க்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்தினார். இரண்டாம் உலகப் போரின் விளைவாக அமெரிக்கா தனது ஆயுத தொழில்துறையை வலுவாக்கிக் கொண்டது.

பெங்களூரில் (ஐ.ஐ.எஸ்சி.) உள்ள
இந்தியாவின் ‘பரம்-ப்ரவேகா’ சூப்பர் கம்ப்யூட்டர்.

அதைப்போலவே ஸ்டாலின், குருஷேவ் காலத்தில் சோவியத் யூனியன் விரிவடைந்தது. 1985 லிருந்து 1995 வரை ஆட்சியில் இருந்த டெங் ஜிப்பியாங்  காலத்தில் சீனா உற்பத்தித் துறையில் முன்னணி பெற்றது. அமெரிக்காவும் சீனாவும் மேலெழுந்தவுடன்  தொடர்ந்து தங்கள் முன்னணி துறைகளில் முதலீடுகளை அதிகரித்தன. அரசு முதலீடாக சீனாவிலும், தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடாக அமெரிக்காவிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா அவர்களுடன் சேர வேண்டும் என்றால், நெடு நோக்கு கொண்ட தலைமையும், தனியார் மற்றும் பொதுத்துறை அமைப்புகள் சேர்ந்து முதலீடு செய்யவும் வேண்டும். அதை இந்தியா செய்யுமா?

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த முகேஷ் தொம்மராஜூ என்ற 18 வயது இளைஞர் சதுரங்க விளையாட்டில் முன்னணியில் இருந்த சீன வீரரான டிங் லிரென்-ஐத் தோற்கடித்து உலக வாகையர் பட்டத்தை வென்ற செய்தி வந்துள்ளது. தொழில்நுட்ப உலகில் முன்னேறி வருவதற்கான அறிவுத்திறன் இந்தியாவில் உள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக தொலைநோக்கு கொண்ட தலைமை இருப்பதும் தெரிகிறது.

உலகில் 1980-லும் 1990-லும் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டபோது இந்தியாவிலிருந்த முன்னணி ஐ.டி. தொழில் முனைவோர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இப்போது, அரசின் தலைமை தொழில்நுட்ப யுகத்தில் தேசத்தை முன்னேற்ற முனையும் போது, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த மகத்தான முன்னெடுப்பில் முனைப்புடன் பங்கேற்க வேண்டும்.

21- ஆம் நூற்றாண்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முதலீடு என்றால் ஸ்தூலமாகத் தெரிவதில் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் தான் என்பது நமக்கு இன்னமும் புரியாமல் இருப்பது சோகமான விஷயம்.

  • நன்றி:  இந்தியன் எக்ஸ்பிரஸ் (14 டிசம்பர் 2024)
  • தமிழில்: திருநின்றவூர்  ரவிகுமார்

$$$

Leave a comment