பகவத் கீதை- பத்தாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

பகவத் கீதை பத்தாவது அத்தியாயம், இறைவனின் பெருமையை வியக்கும் வகையில் இறைவனே உரைப்பதாக அமைந்திருக்கிறது. ”ஒளிகளில் ஞாயிறு... ருத்திரர்களில் நான் சங்கரன்... வீரர்களுள் ராமன்... எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான்” என்கிறார் கண்ணன். இறைவனின் புகழ் பாடும் யோகம் இது…

பத்தாம் அத்தியாயம்: விபூதி யோகம்

பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன். அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன். ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை. சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரசமரம். மனிதர்களுள் அரசன். பசுக்களுள் காமதேனு. அசுரருள் பிரகலாதான். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துக்களுள் ‘அ’ என்னும் முதலெழுத்து. மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

1. பெருந்தோளுடையாய்! பின்னுமோர் முறை நான் சொல்லப்புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால் நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.

2. வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவரு முணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.

3. பிறப்பதில்லான்; தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனை யுணர்வோன். மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப் பட்டான்.

4. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,

5. துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலபடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.

6. முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம் மக்களெல்லாரும்.

7. இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.

8. நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.

9. அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரையொருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.

10. எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னையவர் எய்துவார்.

11. அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

12. நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மையனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே  ‘நித்தியபுருஷ’ னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,

13. முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனமே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.

14. கேசவா! நினது *கிளவி யனைத்தையும் மெய்யெனக் கொண்டேன். பகவனே! விண்ணவரும் அசுரரு நின் விளக்கத்தை யறிவாரோ?

15. புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய் பூதங்களானாய்! பூதத் தலைவனே தேவ தேவ! வையத் திறைவா!

16. எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.

17. யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?

18. ஜனார்த்தனா! நின் யோகத்தையும், பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

19. அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே, அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

20. அர்ஜுனா! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் நானே.

21. ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

22. வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.

23. ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன்; வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.

24. பார்த்தா! புரோகிதர்களில் தலைவனாகிய பிருகஸ்பதி நான் என்றுணர். படைத் தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.

25. மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான்  ‘ஓம்’ என்ற ஓரெழுத்து. யக்ஞங்களில் நான் ஜபயக்ஜம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.

26. மரங்களனைத்திலும் நான் அரசமரம்; தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்தரகுப்தன்; சித்தர்களில் கபிலமுனி.

27. குதிரைகளினிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.

28. ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.

29. நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.

30. அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குவனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.

31. தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படை தரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.

32. படைப்புக்களின் ஆதியும் அந்தமும் நான், அர்ஜுனா! வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.

33. எழுத்துக்களில் நான்  ‘அகரம்’; புணர்ப்புக்களில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.

34. எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை, ஸ்திதி, பொறை.

35. அங்ஙனமே, சாமங்களில் நான்  ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர்சான்ற இளவேனில்.

36. வஞ்சகரின் சூது நான்; ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி, நான் நிச்சயம்; உண்மையுடையோரின் உண்மை நான்.

37. விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிரகவி.

38. ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மெளனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.

39. எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா! சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றில்லை.

40. பார்த்தா! என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

41. எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து – அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.

42. அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

அடிக்குறிப்பு:

*கிளவி = சொல்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s