மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’ என்பது உபதேசம். இது புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.....
Tag: சத்திய சோதனை
சத்திய சோதனை- 4(1-5)
கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். ....
சத்திய சோதனை- 3(20-23)
மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவை யாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால், நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால், இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பொருளை ஒரு கணமேனும் தரிசித்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்த சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும்.....
சத்திய சோதனை- 3 (16-19)
பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப் பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக, முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்; நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன். பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில் அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசிய பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார். ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழிபெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.....
சத்திய சோதனை- 3(11-15)
“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.... “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி....
சத்திய சோதனை- 3(6-10)
சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக்கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலைமுடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். “உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.
சத்திய சோதனை- 3(1-5)
என்னுடைய சோதனைகளின் முடிவான பலன், காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும், பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு, தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர்பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால், சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டி வரும் போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்?
சத்திய சோதனை- 2(26-29)
ஸர் பிரோஸ் ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போல கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார்.....
சத்திய சோதனை- 2(21-25)
இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானுபூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. ஏனெனில் அது தேடாமலேயே எனக்குக் கிட்டியதோடு, அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கத்தியவாரின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல, கடவுளைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருப்பதையும் ஆத்ம ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.
சத்திய சோதனை – 2(16-20)
மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது....
சத்திய சோதனை 2(11-15)
னக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. ....
சத்திய சோதனை- 2(6-10)
சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
....சத்திய சோதனை- 2(1-5)
குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபட வேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை....
சத்திய சோதனை 1(21- 25)
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன்முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை.... நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்....
சத்தியசோதனை 1(16-20)
புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதை கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.....