ஆம்ஸ்ட்ராங் இ.பழனிசாமி, தலைவர், ஆம்ஸ்ட்ராங் குழுமம், திருப்பூர்
நேர்காணல்: வ.மு.முரளி
1969இல் ஒரு தொழிலாளியுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம், இன்று ஆலமரமாய் வளர்ந்து, பின்னலாடையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் கொண்டதாக, பல ஆயிரம் தொழிலாளரின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. தொழில் நகரம் திருப்பூரின் முன்னோடியான ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ், இன்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையங்களுடன், ஆண்டுக்கு ரூ. 600 கோடி விற்றுமுதல் கொண்ட தொழில் குழுமம். இதன் நிறுவனரும் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் இ.பழனிசாமி, தனது தொழில் பயணத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்…

உங்கள் குடும்பப் பின்னணி குறித்து…
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகிலுள்ள பழங்கரை, தேவம்பாளையம் தான் எனது சொந்த ஊர். பாரம்பரியமான விவசாயக் குடும்பம். அப்பா ஈஸ்வரமூர்த்தி கவுண்டர், அம்மா மாராத்தாள். 1946இல் பிறந்தேன். 2 சகோதரிகள், ஒரு தம்பியுடன் வளர்ந்தேன். நான் 1964இல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். பிறகு பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் பி.யூ.சி.யில் சேர்ந்தேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே விவசாயத்தில் ஈடுபட்டேன். இடைப்பட்ட காலத்தில் புளியம்பட்டி அருகிலுள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் ஓராண்டு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன்.
வறட்சியால் விவசாயம் தள்ளாடிய சூழல். எனவே கிணறு வெட்டப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகளை விற்கும் தொழிலில் சில காலம் ஈடுபட்டேன். ஆனால் அது என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அத்தொழிலில் முறையாகச் செயல்பட முடியாது என்று அவர் எச்சரித்தார். மேலும், அருகிலுள்ள திருப்பூரில் பனியன் தொழில் நன்கு வளர்ந்து வருவதால், அதைக் கற்றுக் கொண்டு தொழில் ஆரம்பிக்குமாறு அப்பா சொன்னார். அன்றைய காலகட்டத்தில் திருப்பூர் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. அங்கு சுமார் 200 கம்பெனிகள் இயங்கிக் கொண்டிருந்தன.
நீங்கள் எடுத்தவுடனேயே பனியன் கம்பெனி தொடங்கினீர்களா?
ஆமாம். அப்பாவின் அறிவுரையை ஏற்று, ரூ. 10,000 முதலீட்டுடன், திருப்பூரில் ஒரு சிறு கட்டத்தை வாடகைக்குப் பிடித்து, 1969இல் ‘ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிவிட்டேன். இதில் நானே முதலாளியும் தொழிலாளியுமாகப் பணியாற்றினேன். ஒரேயொரு கட்டிங் மாஸ்டர் தான் கூடுதல் தொழிலாளி. விசேஷம் என்னவென்றால், அவருக்கு மட்டுமே பனியன் தொழில் தெரியும்.
பனியன் துணி தயாரிக்க, ஸ்பின்னிங் மில்களில் நூல் வாங்கி வந்து வெளியே கொடுத்து நிட்டிங் செய்து, சலவை செய்து கொண்டு வருவோம். பிறகு கட்டிங் செய்து அவற்றை ஜாப் ஆர்டர் கொடுத்து தைத்து வாங்குவோம். முகவர் மூலமாக மும்பைக்கு அனுப்பி வைப்போம். இப்படித்தான் எங்கள் தொழில் தொடங்கியது.


‘ஆம்ஸ்ட்ராங்’ என்ற பெயரை எப்படி தேர்வு செய்தீர்கள்?
அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நிலவில் கால் பதித்தார். அந்த நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது. அந்த ஆண்டு தொடங்கிய நிறுவனம் என்பதால் ‘ஆம்ஸ்ட்ராங்’ என்று பெயரிட்டேன். ஆரம்பத்தில் நிட்டிங், சலவை, சாயமிடுதல் போன்ற அனைத்துப் பணிகளையும் வெளியில் கொடுத்துத் தான் செய்து வந்தோம். முதலாண்டில் கொஞ்சம் நஷ்டம் தான். ஆனால் நல்ல தொழில் அனுபவம் கிடைத்தது. 1972 மார்ச் மாதம் கொஞ்சமாக லாபம் வந்தது. பிறகு தொழில் கைவசமாகிவிட்டது.
அதையடுத்து, வலையங்காடு, ஆர்.வி.நகரில் வேறொரு கட்டடத்திற்கு மாறினோம். தையலுக்கான பவர் டேபிள்களுடன் தொழிலை விஸ்தரித்தோம். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தொழில் வளர வளர, நிறுவனமும் வளர்ந்தது. 1978இல் தம்பி நடராஜும் என்னுடன் சேர்ந்தார். அவர் 1989இல் தனி கம்பெனி நிறுவிச் சென்றார்.
1976இல் ஏற்றுமதியாளருக்கு ஆடைகளை தயாரித்துத் தரும் மெர்ச்சண்டைசராக மாறினோம். அதேசமயம், உள்நாட்டு பனியன் உற்பத்தியிலும் கவனம் செலுத்தினோம். 1980இல் ராம்நகரில் சொந்தக் கட்டடம் கட்டி இடம் மாறினோம். 1984இல் நேரடி ஏற்றுமதியில் கால் பதித்தோம். 1997இல் ஸ்பின்னிங், 2002இல் நிட்டிங் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2000ஆவது ஆண்டில் திருப்பூர், சாமிநாதபுரத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் நிறுவனத்தை இடம் மாற்றினோம். அதன் பிறகு நூல், துணி விற்பனையில் எங்கள் நிறுவனம் முக்கிய இடம் பிடித்தது. ஆடை தயாரிப்பும் தொடர்ந்தது.
1996இல் எனது மகன் விவேகானந்தன் என்னுடன் இணைந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார். அவர்தான் இப்போது நிர்வாக இயக்குநராக உள்ளார். சென்ற நிதியாண்டில் எங்கள் ஏற்றுமதி விற்றுமுதல் ரூ. 400 கோடி. டையிங், நூல் விற்பனையில் விற்றுமுதல் ரூ. 200 கோடி.

நீங்கள் இந்தத் தொழிலில் சந்தித்த சவால்களைப் பற்றி…
எந்தத் தொழிலிலும் சவால்கள் இருக்கவே செய்யும். பனியன் தொழிலில் வித்தியாசமான சவால்கள் அவ்வப்போது முளைக்கும். ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் திருப்பூர் பல சவால்களைச் சந்தித்து வந்திருக்கிறது. சுமார் 60 ஆண்டுகால தொழில்பயணியாக (1969- 2026) நான் பல ஏற்ற இறக்கங்களை திருப்பூரில் பார்த்துவிட்டேன்.
நான் தொழிலுக்கு வருவதற்கு முன்னரே 1964இல் திருப்பூர் நகரில் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 1974இல் நூலுக்கு கோட்டா முறை கொண்டுவரப்பட்டபோது தொழிலில் சிறிய சுணக்கம் ஏற்பட்டது. அதை வெற்றிகரமாகத் தாண்டினோம். 1964 வரை மோட்டா நூல் என்ற தடிமனான நூலைக் கொண்டு துணிகளைத் தயாரித்து வந்தோம். 1965இல் தான் ஃபைன் எனப்படும் மெல்லிய நூலுக்கு மாறினோம். அந்த மாற்றமும் சிலகாலம் சிரமங்களைத் தந்தது.
1974லும், 1984லும் திருப்பூரில் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நடந்தன. அந்தக் காலத்தில் நகரில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் செல்வாக்குடன் இருந்தன. அவர்களால் அடிக்கடி தொழில் துறையில் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. 1984இல் நடத்தப்பட்ட 128 நாள் வேலைநிறுத்தம் பனியன் தொழிலை கடுமையாகப் பாதித்தது. எனவே தொழிலதிபர்கள் ஒருங்கிணையத் தொடங்கினர். தவிர தொழிற்சாலைகளை பரவலாகப் பிரித்து நடத்த ஆரம்பித்தனர். அந்தச் சமயத்தில் ஹிந்து முன்னணி திருப்பூர் தொழிலதிபர்களுக்கு காவலனாக உடன் நின்று போராடியது. தொழிலதிபர்களின் ஒற்றுமையால், தொழிலாளர் வேலைநிறுத்த மிரட்டல் நின்றுபோனது. இன்றைய திருப்பூரில் கம்யூனிஸ்டுகள் கரைந்துபோய் விட்டனர்.

1990-91இல் வெளிநாட்டு பையர் மற்றும் வங்கி திவாலால் (பிரிட்டன் – பி.சி.சி.சி. வங்கி) கடுமையான நஷ்டம் ஏற்பட்டது அதையும் தாண்டினோம். 1996இல் நூல் விலை அதிகரிப்பு பிரச்சினை வந்தது. 2007இல் டெரிவேட்டிவ் பிரச்சினை முக்கியமான ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டது. அது பற்றி மட்டும் தனியாகச் சொல்ல வேண்டும். 2011-இல் நீதிமன்றங்களின் தலையீட்டால் சாயக் கழிவுநீர்ப் பிரச்சினை உருவானது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை முழுமையாகக் கடைபிடித்து அந்தச் சவாலிலும் வென்றோம். 2025இல் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் ஏற்றுமதி சில மாதங்கள் முடங்கியது. மத்திய அரசின் முயற்சிகளால் அதிலிருந்து வெளிவந்தோம்.
இதுபோன்ற சிக்கல்கள் பல இருந்தாலும், திருப்பூர் நகரம் தொடர்ந்து வெற்றி கண்டு வருவது இந்த மண்ணின் குணத்தால் தான். திருப்பூரைச் சுற்றிலும் உள்ள விவசாயிகளே தொழில் முனைவோராக உருவான நகரம் இது. தொழிலாளியாக ஆரம்பித்து தொழிலதிபர்கள் ஆனவர்களின் நகரம் இது. வேறெங்கும் இந்த சிறப்பான காட்சியை நீங்கள் காண முடியாது. நேர்மையும் கடின உழைப்பும் கொண்டவர்கள் மிகுந்திருப்பதால், இடையூறுகளைத் தாண்டி தொழில் வளர்கிறது. தவிர புதிய தொழில்நுட்பங்களை சுவீகரிப்பதில் திருப்பூர் முதலிடம் வகிக்கிறது.
டெரிவேட்டிவ் பிரச்சினை பற்றி சொல்லுங்கள்…
டெரிவேட்டிவ் (Forex Derivatives) பிரச்சினை என்பது 2007-2008 ஆம் ஆண்டுகளில் திருப்பூரின் முன்னணி பனியன் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கும், பல்வேறு வங்கிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நிதி மற்றும் சட்டச் சிக்கலாகும். அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களால், திருப்பூரைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெரிய ஏற்றுமதியாளர்கள் ரூ. 400 கோடி வரை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். நமது நிறுவனமும் அதில் ரூ. 30 கோடி மதிப்புக்கு இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
தவறான வாக்குறுதிகளுடன், சிக்கலான யூக வணிகம் சார்ந்த ஒரு ஒப்பந்ததை ஏற்றுமதியாளர்கள் மீது வங்கிகள், முழுமையாக விளக்காமல் திணித்துவிட்டன. உண்மையில் அவர்களுக்கே அந்தச் சிக்கல்கள் தெரியவில்லை என்பது பிற்பாடு தெரிய வந்தது. ஏ.பி.என் ஆம்ரோ, பாரத ஸ்டேட் வங்கி, சிசிஐ வங்கி உள்ளிட்ட 19 வங்கிகள் இதில் ஈடுபட்டன. முற்றிலும் அமெரிக்காவுக்கு சாதகமான இந்த யூக வணிக ஒப்பந்தம் நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் சுமார் ரூ. 38,750 கோடி இழப்பு பல்வேறு தொழில் துறையினருக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. நமது முயற்சியால் நாடு முழுவதும் உள்ள பல தொழில் துறையினரும் காப்பாற்றப்பட்டனர்.
அந்தச் சமயத்தில், பிரபல கணக்குத் தணிக்கையாளர் எஸ்.குருமூர்த்தி அவர்களின் வழிகாட்டலில், பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்து ஓர் அமைப்பை (Forex Derivatives Consumer Forum – TFDCF ) உருவாக்கி, வங்கிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோம். அப்போதைய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் தலைமையில் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய மத்திய அரசு இவ்விஷயத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. எனவே ரிசர்வ் வங்கி அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள், நிதி ஆணைய அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து, நமது நிலையை விளக்கினோம்.
ஏழாண்டுகள் (2008- 2015) நடைபெற்ற வழக்கின் இறுதியில் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை விற்ற வங்கிகள் மீது உச்ச நீதிமன்றம் அபராத நடவடிக்கை எடுத்தது. 20 சதவீத செட்டில்மென்ட் தீர்வுடன் அந்தச் சிக்கலில் இருந்து தப்பினோம். அன்றைய பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, அருண் ஜேட்லி, வி.சண்முகநாதன் உள்பட பலரும் அப்போது எங்களுக்கு உதவியதை மறக்க முடியாது.


உங்கள் குழுமத்தின் பிற தொழில்கள் குறித்து கூற முடியுமா?
காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்களில் விரிவாக்கம் அவசியம். அதன்படி காற்றாலை, சூரிய ஒளி மின்திட்டங்களில் ‘ஆம்ஸ்ட்ராங் கிரீன் எனர்ஜி’ நிறுவனம் மூலமாக நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். காற்றாலைகள் மூலமாக 18.5 மெ.வா. மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். சோலர் யூனிட்கள் மூலமாக 20 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். எங்கள் தொழில் தேவை முழுவதையும் இந்த புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மின்சாரத்தால் பூர்த்தி செய்து கொள்கிறோம்.
பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்டி பெட் பாட்டிகளை மறுசுழற்சி செய்து நவீன பாலியஸ்டர் ஆடைகளாக மாற்றும் யூனிட்டை நாட்டிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதனால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்கிறோம்.
தேங்காயிலிருந்து எண்ணெய் முதல் நார்க்கட்டிகள் வர 14 உப பொருட்களைத் தயாரிக்கும் ‘அபெக்ஸ் கோகோ அண்ட் சோலார் எனர்ஜி’ நிறுவனத்தை தாராபுரம் அருகிலுள்ள தேவநல்லூர் கிராமத்தில் கூட்டு நிறுவனமாக நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறோம். இது ஒரு அதிநவீன தொழிற்சாலையாகும்.


உங்களுடைய சமூகப் பணிகள் குறித்து…
நான் முதன்முதலில் ஆசிரியராக வேலை செய்த புளியம்பட்டி கிராமத்தை இன்றும் நான் மறக்கவில்லை. அங்கு 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 கண் சிகிச்சை முகாம்களை அரவிந்த கண் மருத்துவமனை உதவியுடன் நடத்தி இருக்கிறேன். அதன் மூலமாக சுமார் 9,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தவிர 3,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதில் 100 கிராம மக்கள் பயனடைந்துள்ளனர். தற்போது எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) தொகையைக் கொண்டு, பிரேரணா அறக்கட்டளை மூலமாக நலத் திட்டங்களை செய்து வருகிறேன்.
வேமாண்டம்பாளையத்தில் உள்ள எங்கள் ஸ்பின்னிங் ஆலையைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் ஆன்மிக, கல்வி, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் நகரத் தலைவராக 1998இல் பொறுப்பேற்றேன். தற்போது திருப்பூர் கோட்டத் தலைவராக உள்ளேன். தவிர, பல்வேறு தொழில் அமைப்புகளிலும் செயல்படுகிறேன். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவராக 9 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். நிஃப்ட் – டீ கல்லூரியின் துணைத் தலைவராகவும், புதிய திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவின் இயக்குநராகவும் பதவி வகிக்கிறேன்.
இளைய தலைமுறைக்கு உங்கள் வழிகாட்டுதல்…
எங்கள் காலம் போல இப்போது இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு கல்வி, தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே கற்கும் வயதில் தேவையானதைக் கற்றால் பின்னாளில் மிளிர முடியும். எந்தத் தொழில் அல்லது வேலைக்குச் சென்றாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் முன்னேற முடியும். இது எனது அறிவுரை மட்டுமல்ல, அனுபவமும் கூட.
- நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர்- 2026
$$$