வழிபாடு எந்த மொழியில்?

-மயூரகிரி சர்மா

இறைவனை எம்மொழியில் வழிபடுவது? தேவ பாஷயிலா, மனித பாஷையிலா? என்ற விதண்டாவாதம் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. தேவ பாஷை: சம்ஸ்க்ருதம், மனித பாஷை: தமிழ் என்கிறார்கள் வம்பு வளர்ப்போர். நம்மைப் பொருத்த வரை, இவ்விரு மொழிகளும், ஈசனின் உடுக்கையில் உதித்த இறையம்சம் கொண்ட தெய்வீக மொழிகள். ஆனால், தமிழக ஆன்மிகச் சூழலில் இதனை துணிவுடன் எடுத்தியம்ப ஆன்மிகவாதிகள் தயங்குவது இயல்பாக உள்ளது. இந்நிலையில், இலங்கையைச் சார்ந்த திரு. மயூரகிரி சர்மாவின் முகநூல் பதிவு மிகவும் தெளிவாகவும் துணிவாகவும் இருக்கிறது. எனவே அதனை உரிமையுடன் இங்கு மீள்பதிவு செய்து மகிழ்கிறோம்….

எழுதத் தயங்கும் விடயம். ஆனால் பலரும் இது பற்றிப் பேசுவதால் எழுதுகிறேன். இது என் கருத்து. வயது நாற்பதை நோக்கி ஏறுகிறது. உள்ளக்கருத்தை உறுதியாக எழுதுகிறேன்.

ஏற்போர் ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாதவர் தள்ளுங்கள். 

உங்கள் கருத்து எதுவாயினும் என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. இப்போது தனித்தமிழ் வழிபாடு என்பது, தமிழகத்திலும் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பரவியிருக்கிறது. நீங்கள் அதை எப்படி கருதுகிறீர்கள்?

பதில்: இன்றைக்கு சீரடி வழிபாடு, அம்மா பகவான், அது, இது என்று ஏதேதோ வருகிறது. அவற்றோடு ஒப்பிடுகையில்  ‘தமிழ் வழிபாடு’ என்று நம் சமயாச்சார்யர்கள் அருளிய திருமுறைகளை ஓதி வழிபடுவது எத்தனையோ மடங்கு உயர்வுடையது.

2. தேவதா சாந்நித்யம் ஏற்படுமா?

பதில்: சந்தேகமே வேண்டாம். திருமுறை ஒலிக்கும் இடத்தில் சிவபெருமானின் பிரசன்னம் இருக்கும் என்பதே சைவ நம்பிக்கை. 

அது போலவே நாலாயிரம் கேட்டால் நாராயணன் ஓடி வருவான். திருப்புகழ் ஒலித்தால் திருமுருகன் முன் நிற்பான்.

3. அப்படியாகில் வேத மந்திர வழிபாடு தேவையில்லையா?

பதில்: “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக..” என்பது திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கு. இப்படி பல நூறு இடங்களில் திருமுறைகளே வேதத்தை போற்றுகின்றன. (அந்த வேதம் வேறு, இந்த வேதம் வேறு என்று சொல்வதை நான் சிறிதும் ஏற்பதில்லை. அது நகைப்புக்குரிய ஒன்று). எனவே, பொதுவாக கிரியைகளுக்கு வேதம் சிறப்பு. பிரார்த்தனைக்கு திருமுறை / தமிழ் சிறப்பு.

4. ஆகமங்கள் என்ன சொல்கின்றன?

பதில்: எமக்கு இப்போது ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்தில் தான் கிடைக்கின்றன. ஆகம மந்திரங்களும் அவ்வாறு தான் கிடைக்கின்றன.

எனவே ஆகம கிரியைகளை வடமொழியில் தான் சிறப்பாகவும் முறையாகவும் செய்யக் கூடியதாக உள்ளது. இன்று வரை பஞ்சாக்ஷரம் – பஞ்சபிரம்ம – க்ஷடங்க மந்த்ரங்களை அக்ஷர எண்ணிக்கை குன்றாமல் – திருமுறை ஆசிரியர்களின் வாக்கியப்படி மொழிபெயர்க்க முடியவில்லை. அது முடியாதது என்பதே என் எண்ணம்.

5. கத்தோலிக்க வழிபாட்டை மேற்கோள் காட்டுகிறார்களே?

பதில்: முதலில் சொன்னது போல பிரார்த்தனைக்கு தமிழ் மிக நெருக்கமானது. நானும் பிரார்த்தனைக்கு பெரும்பாலும் தமிழையே பயன்படுத்துவேன்.  கிறிஸ்தவ திருச்சபை பூசைகள் என்பவை பெரும்பாலும் பிரார்த்தனை வடிவில் இருப்பதால் அது சாத்தியமாகிறது.

இங்கு சைவ மரபில், யாக- வேதிகார்ச்சனை ,அக்னி ஆராதனை, கும்ப பூஜை, மண்டலார்ச்சனை, நியாசம், அது, இது என்று இருப்பதால் சம்ஸ்க்ருதத்தில் உள்ள மரபான மந்திரங்களே இயல்பாக பொருந்துகின்றன.

6. அப்படியாகில் தமிழில் கிரியை தவறா?

பதில்:  புதிதாக அமைக்கப்பட்ட ஆகம மரபுக்கு உட்படாத சிற்றாலயங்கள், மடங்கள், ஆன்மார்த்த பூசை இவற்றில் இத்தகு கிரியை ஏற்புடையது. பழைமையான நீண்ட மரபுடைய கோயில்களில் இப்போதைக்கு கிரியை மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. அது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகிறேன்.

7.  உங்கள் தொழில்களம் சார்ந்து அஞ்சுகிறீர்களா?

பதில்: நான் தமிழில் கவிதை, பேச்சு என்று இயங்குபவன். திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவன். என்னால் தமிழ் அர்ச்சகர்களாக தம்மை காட்டிக்கொள்பவர்களை விட சிறப்பாக அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே பிரச்சினை தனி சுயநலம் அல்ல. பொது நலம் நோக்கியதே ஆகும்.

8. முடிவாக உங்கள் பதில் என்ன?

பதில்: தமிழ் வழிபாட்டை நான் எதிர்க்கவில்லை. அது ஏற்புடையதே. ஆனால் மரபார்ந்த கோயில்களில் அது கிரியைகளுக்குள் நுழைவது ஏற்புடையது அல்ல.

அங்கே வேதமும் ஆகம மந்திரங்களும் திருமுறையும் ஒருங்கே இணைந்து ஒலிக்க வேண்டும். அதுவே சிறப்பாக இருக்கும்.

9. அப்படி எங்கேனும் நடக்கிறதா?

பதில்: பல இடங்களில் அப்படி நடக்கிறது. சில நாட்களுக்கு முன் ஈழத்து சிதம்பர கும்பாபிஷேகம் நடந்தது. சிதம்பரத்திலிருந்து நான்கு தீக்ஷிதர்கள் வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேக காலங்களில் முறையாக பல மணி நேரம் சதுர்வேதம் ஓதப்பட்டது. ஈழத்து சாதகாச்சார்யர்கள் சிவாகம மந்திரங்களை தெளிவாக ஓதினர்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருத்தணி சுவாமிநாதன் உள்ளிட்ட மூன்று ஓதுவா மூர்த்திகள் நாள் தோறும் பல மணிநேரம் பக்க வாத்தியங்கள் உடன் திருமுறை விண்ணப்பம் செய்தனர். மூன்றில் எந்த ஒன்றையும் வேறு ஒன்றும் ஆக்கிரமிக்கவில்லை.

10. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்படாமல் இங்குள்ள ஆளுமைகளை வைத்தும் இது சாத்தியமா?

பதில்: ஆம். சாத்தியம். இப்போது இங்குள்ள (இலங்கை) பிரபல சாதகாச்சார்யர்கள் பலரும் தமிழ் ஆற்றலும் இசை ஆர்வமும் கொண்டவர்கள்.  வேத பாகங்களையும் மூலாகம சுலோகங்களையும் படித்தவர்கள். கிரியா நுட்பங்களையும் தேடித் தேடி அறிகிறார்கள். எனவே இது பெரும்பாலான கும்பாபிஷேகங்களில் இயல்பாக பொருந்துகிறது. சாதாரண கோயில் வழிபாட்டு நாட்களில் தான் இதில் ஒருவித தொய்வை சில இடங்களில் காண்பீர்கள். அதுவும் எதிர்காலத்தில் மாறும் என்பதே எனது நம்பிக்கை.

11. வெறுப்பை ஏற்படுத்துவது எது?

பதில்:  சைவ சமயாச்சார்யர்கள் நால்வரில் மூவர் அந்தணர். சந்தனாச்சார்யர்கள் நால்வரில் மூவர் அந்தணர். கச்சியப்பர் – திருமுறை தொகுத்த நம்பி போன்றோரும் அந்தணர். ஆனால் இவர்கள் தந்த திருமுறையை வைத்து பிராமண துவேஷக் கருத்துக்களையும் வடமொழி வெறுப்பையும் கக்கிப் பேசுவது சைவ மரபுக்கே முரணானது. இதுவே சிலரை விட்டு விலகி நிற்க காரணம்.

12. இணைந்து பயணிக்க முடியுமா?

பதில்: நிச்சயம். அவரவர் நம்பிக்கைகளுக்கு அப்பால் பிற சமயிகளுடனேயே நாம் இணைந்து பயணிக்கிற போது இது ஏன் சாத்தியமாகாது? எனவே பரஸ்பர நம்பிக்கை மரியாதையுடன் இணைவது நிச்சயம் அவசியமான ஒன்று.

$$$

Leave a comment