அமரன் – மேலும் சில பார்வைகள் -4

-விஜ்.ஸ்ரீராம், செல்வன் அன்பு, ஷ்யாம் சங்கர்

‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் மூன்று பார்வைகள் இங்கே...

காண்க:

11. அரசுக்கு எச்சரிக்கை

-விஜ்.ஸ்ரீராம்

உண்மையில் இங்கே அமரனின் மாபெரும் வெற்றி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது… காரணம்…

  1.  இங்கே கடந்த 7 வருடங்களாக (சரியாக ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு) தேசிய எண்ணவோட்டம் கொண்ட அல்லது தேசபக்தி படங்கள் தமிழில் எதுவும் வரவில்லை… இந்த 7 வருடங்களில் எந்த தேசியவாத எண்ணத்தை சாமானியனிடம் மீட்டெடுக்க வேண்டும் என தேசியவாதிகள் சமூக வலைத்தளங்களில் போராடி வருகிறார்களோ, அதை ஒரே ஒரு படம் செய்துவிட்டது…
  •  காஷ்மீர் பற்றிய பார்வை (முக்கியமாக ஆர்டிகிள் 370 ஐ நீக்கிய விவகாரத்தில்) இங்கே பலருக்கு மாறி வருகிறது
  •  இந்தப் படத்தின் வணிக வெற்றி இனி இது போன்ற பல படங்கள் வந்தால் இந்த fringe groupsகள் கடையைச் சாத்திவிட்டு கிளம்பவேண்டி வரும் என்கிற பயம் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது

ஆனால் அரசாங்கம் இவர்களை அரசியல் காரணங்களுக்காக இப்போது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லை  என்றால் நாளை அரசுக்கே பெரிய தலைவலியாக இருப்பார்கள்.

  • இது முகநூல் பதிவர் விஜ்.ஸ்ரீராம் எழுதிய பதிவு.

$$$

12. அமரன் செய்திருப்பது ஆரோக்கியமான விஷயம்!

-செல்வன் அன்பு

பொதுவாக ராணுவ வீரர் என்று சினிமாவில் காட்டி இருப்பதைப் பார்த்தால் ராணுவத்தின் மரியாதையே போய்விடும். 

‘கோழி கூவுது’ படத்தில் பிரபு ஒரு வெட்டி ஆபீசர். ஊரும், அக்காவும் திட்டியதும் கோபித்துக்கொண்டு போவது ராணுவத்துக்கு. பின் மிலிட்டரி சரக்கு வாங்கி வந்து நண்பர்களுக்கு ஊற்றி விட்டு அவர்கள் பாடுவது..”அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே….”..ஆக வேலை வெட்டி இல்லாதவன் சேருவது ராணுவம்.

‘மண்வாசனை’ பாரதிராஜாவின் படம். அதில் பாண்டியன் வினுச்சக்ரவர்த்தியின் ஆட்களை வெட்டி விட்டு போலீசுக்கு பயந்து ஓடி விடுவார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாது. பின் ஒரு ராணுவவீரனாக வருவார். பார்டரில் சிக்கிய ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டு வருவார். கொலை செய்துவிட்டு ஒளிந்து கொள்ள ராணுவம்.

மலையாளத்தில் ‘மீசை மாதவன்’ என்று ஒரு மசாலா படம் வந்தது. அதில் ஒரு மிலிட்டரிக்காரன் இருப்பான். அதில் மிலிட்டரிக்காரன் மனைவியை ஊரே டாவடிக்கும். ஊர் பெரிய மனிதருக்கும் மிலிட்டரி மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கும். மிலிட்டரி ஊருக்கு வந்தது தெரியாமல் ஊர்ப்பெரியவரிடம் மிலிட்டரி மனைவி வரச்சொன்னதாகவும் சொல்லி அவரும் அங்கே போக மிலிட்டரி கட்டை எடுத்துக்கொண்டு துரத்த என மிலிட்டரிக்காரனை வைத்து காமெடியாகப் போகும்.

80களில் ‘மாமனாரின் இன்ப வெறி’ என்கிற பெயரில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தின் உண்மையான பெயர் ‘மழு’. இந்தப்படத்தில் நடிகர் சுகுமாரன் மிலிட்டரியில் இருப்பார். சுகுமாரன் மனைவி ரதி. அண்ணன் பாலன்.கே.நாயர். சுகுமாரனின் அண்ணனும், மனைவியும் ஒரே வீட்டில் இருப்பார்கள். சுகுமாரன் போரில் இறந்து விட்டதாக செய்தி வரும். இதன் பிறகு பாலன்.கே.நாயருக்கும், ரதிக்கும் தொடர்பாகி விடும். ஒரு நாள் சுகுமாரன் திரும்பி வருவார். அவர் போரில் இறந்திருக்க மாட்டார். தன் அண்ணனை சுடுவதாக கதை போகும்…

இதெல்லாம் பரவாயில்லை. இந்த ரிட்டயர்ட் மிலிட்டரிகள் காட்சி படு மோசம். பாக்யராஜின் ‘ஆராரோ ஆரிரரோ’ என்றொரு படம். இதில் பைத்தியக்கார ஆஸ்பத்திரில் பல பைத்தியங்கள் இருக்கும். அதில் ஒரு பைத்தியத்தின் பெயர் ஜெனரல் சொரியப்பா. ஜெனரல் கரியப்பா என்கிற ராணுவ மேஜர் ஜெனரல் பெயரைத்தான் ஸ்பூஃப் செய்து இப்படி பெயர் வைத்திருந்தனர். பாவம்  அந்த கரியப்பா.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கார்த்திக்கின் அப்பா ஜெய்கணேஷ் முன்னாள் ராணுவவீரர். அவர் ஜோதிமீனாவின் பின்னால் ஜொள்ளு விட்டுக்கொண்டு, அண்ட்ராயரோடு இருப்பதும் பின் யாரோ வந்ததும் ஓடி ஒளிவதுமாக காட்சி இருக்கும். சுட்டு விடுவேன் என அடிக்கடி சொல்வதும், க்ளைமேக்ஸில் நான் ராணுவத்தில் தோசை, இட்லி தான் சுட்டேன், துப்பாக்கி இல்லை எனச் சொல்வதாகவும் காட்சிகள் இருக்கும்.

ராணுவவீரன் போன்று சில படங்களில் ராணுவவீரனை போற்றிக்காட்டி இருப்பார்கள். யார் என்கிற படத்தில் அர்ஜுன் ராணுவவீரனாக செம ஆக்டிவ்வாக இருப்பார்.

இப்படி ராணுவத்தை வைத்து காமெடிக்காட்சிகளை சிந்திக்க தென்னிந்திய எழுத்தாளர்களாலே முடியும். காரணம் தென்னிந்தியா இப்படி ஒரு அந்நிய நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு அருகில் இல்லை. ஒரு பஞ்சாப்காரன் வைத்திருக்கும் மதிப்பு, ராணுவத்தின் மீது தமிழனுக்கு இருக்காது. நிலம் தான் காரணம். 

‘அமரன்’ திரைப்படம் ராணுவம் என்கிற உன்னதப் படையின் உழைப்பை, சக்தியை, தியாகத்தை கொஞ்சமாவது தமிழனிடம் ஏற்றி இருக்கிறது என்பதில் மிகையில்லை. 

ஒரு திரைப்படம் வியாபாரத்துக்காக எதை எதையோ பேசும் போது அதில் சிறிது தேசம் பற்றியும், ராணுவப் படை பற்றியும் மக்களின் மனதில் மெலிதாக ஏற்றுவது என்பது ஆரோக்யமான விஷயம்…

அமரன் படம் அதை அழுத்தமாக செய்திருக்கிறது….

  • முகநூலில் திரைத்துறை தொடர்பான பதிவுகளை எழுதும் திரைக் களஞ்சியம், திரு. செல்வன் அன்பு.

$$$

13. இப்படித்தான் இருக்க வேண்டும் நடிகர்கள்…

-ஷ்யாம் சங்கர்

அமரன் திரைப்படம் ஹைதராபாத்தில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடித்த  ‘மூன்று’ திரைப்படத்தில் பார்த்த சிவா கார்த்திகேயன் முழுசாக மாறியிருந்தார்.. கடுமையான உழைப்பு கச்சிதமாய்த் தெரிந்தது.

முகுந்தை மூச்சு வரை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தோய்வு இல்லாத திரைக்கதை, பாரதியாரை இந்த தலைமுறையும் கொண்டாடச் செய்துள்ளது..

 மேஜர் முகுந்தன் அவர்கள். காதலிக்காமல் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து இருந்தால் நாட்டுப்பற்றுடன் ஒரு காதல் கதை நமக்கு கிடைத்திருக்காது.. காதல் என்னென்ன செய்கிறது?

இயக்குநர் சசி அவர்களின்  ‘பூ’ திரைப்படத்தின் பெண் கதாபாத்திரமான பார்வதி நடிப்பு பிரமிக்க வைத்தது. பல வருடங்கள் கழித்து சாய்பல்லவி  அதைவிட பல மடங்கு பிரமிப்பில் ஆழ்த்தி விட்டார் 

சாய் பல்லவி அனைவரையும் தனது நடிப்பால் சாய்த்து விட்டார்..

இப்படித்தான் நடக்கும் என்று நமக்குத் முன்பே தெரிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் மனதில் ஏதோ ஒரு வலியுடன் முட்டும் அழுகையுடன் நகர்ந்து செல்லும் திரைக்கதை. 

தெலுங்குக் காரர்களையும் அழவைத்தான் அமரன்…

சிவ கார்த்திகேயனும் சாய் பல்லவியும் அவர்களின் நிஜ வாழ்க்கையில் சில ஒழுக்கங்களை மக்களுக்குப் பரப்புகிறார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் நடிகர்கள்..

கமல் மருதநாயகத்திற்கு  காசு சேர்த்து விடுவார்.

ஜாதியின் குறியீடுகளை காட்டினாலும் தப்பு காட்டா விட்டாலும் தப்பு 

இயக்குநர் அழகாக நியாயப்படுத்தி இருக்கிறார்… வாழ்த்துகள்.

  • பிரபல ஓவியர் திரு. ஷ்யாம் சங்கரின் முகநூல் பதிவு இது.

$$

Leave a comment