முகநூலில் இரு நூல் பதிவுகள்

-ஜடாயு

 ‘பொருள் புதிது’ தளத்தின் இனிய விளைவாக வெளியான இரு நூல்கள் குறித்து முகநூலில் அறிமுகம் செய்திருக்கிறார் அன்பு நண்பர் திரு. ஜடாயு. அவருக்கு நமது நன்றி!

தமிழ் இலக்கியத்தில் செங்கோல், ஆசிரியர்: சேக்கிழான் (2023).

இத்தகைய ஒரு நூல் வெளிவருவதற்கு பிரதமர் நரேந்திர மோதி என்ற மாபெரும் தேசியத் தலைவர் பாரத பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் தருணம் வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. நியாயம் தான். 1967லிருந்து மாறிமாறி திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் கொடுங்கோல் பிடியிலேயே தமிழ்நாட்டின் அரசாட்சி சிக்கியிருக்கையில், செங்கோல் பற்றி யாருக்கு புத்தகம் எழுதத் தோன்றும், சொல்லுங்கள்?

1990களுக்கு முன்பு இத்தகைய புத்தகங்களை தமிழறிஞர்கள் எழுதப் புகுந்தால், அதற்கு நிறைய பழந்தமிழ் இலக்கிய வாசிப்பும், அசுரத் தனமான நினைவாற்றலும், நூலகங்களில் அச்சுப் புத்தகங்களோடு மல்லுக்கட்டுதலும் தேவைப்பட்டிருக்கும். பழந்தமிழ் இலக்கியம் முழுவதும் மின்பிரதிகளாகக் கிடைக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில், செங்கோல் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது ஒப்பீட்டில் எளிது என்றாலும், அதனை செம்மையாக சேகரித்து, கோர்வையான விவரணங்களுடன் தொகுத்தளிப்பதும் எளிதான விஷயமல்ல. அதனை சிறப்பாக செய்து நூல்வடிவில் கொணர்ந்திருக்கும் நண்பருக்குப் பாராட்டுக்கள்.

அட்டைப் படத்தில் காணும் நூல்களோடு கூட, வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றில் உள்ள  ‘செங்கோல்’ குறிப்புகள் குறித்தும் இறுதியில் இரண்டு கட்டுரைகள் உள்ளன.  “நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய்” என்ற பாரதியாரின் வரியில் தொடங்கி பாரதியார் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் செங்கோன்மை எனப்படும் நல்லாட்சி குறித்து உள்ள கருத்துக்களை அளித்திருப்பது நன்று.

வெளியீடு:

விஜயபாரதம் பிரசுரம், சென்னை.
தொலைபேசி (வாட்ஸப்) எண்: 89391-49466
புத்தகத்தை ஆன்லைனில் இங்கே வாங்கலாம் - https://vijayabharathambooks.com/

$$$

என்றும் வாழும் சனாதன தர்மம் – தொகுப்பு: சேக்கிழான் (அக்டோபர் 2023).

சென்ற ஆண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த வெறுப்புப் பேச்சு பின்னணியில் வந்துள்ளது இந்தத் தொகுப்பு நூல்.

இந்து மதம் குறித்து காந்திஜி, ஸ்ரீ அரவிந்தர் முதலானோர் கருத்துக்களுடன், அந்த வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அப்போது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த சில பதிவுகளையும், எதிர்வினைகளையும் இந்த நூல் தொகுத்தளிக்கிறது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் & எல்.முருகன், சுவாமி விமூர்த்தானந்தர் தொடங்கி, பா.இந்துவன், பி.ஆர்.மகாதேவன், அருட்செல்வப் பேரரசன், முரளி முத்துவேலு, ஜடாயு போன்றவர்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகள் வரை இதில் உள்ளன. ஒரு முக்கியமான அரசியல் விவாதத்தை ஆவணப்படுத்தும் நல்ல முயற்சி. இந்து இயக்க நண்பர்கள், பாஜக கட்சித் தொண்டர்கள் ஆகியோர் ஒரு கையேடு போல இந்த நூலைப் பயன்படுத்தலாம்.

வெளியீடு:

விஜயபாரதம் பிரசுரம், சென்னை.
தொலைபேசி (வாட்ஸப்) எண்: 89391-49466
புத்தகங்களை ஆன்லைனில் இங்கே வாங்கலாம் - https://vijayabharathambooks.com/

$$$

Leave a comment