பகவத் கீதை- பதினேழாம் அத்தியாயம்

-மகாகவி பாரதி

அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்படுகின்றன; அவற்றின் பலன்களும் அவ்வாறே. சாத்விகம், ராஜசம், தாமசம் என்னும் இம்முன்று வகைப்பாட்டில் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா...

பதினேழாம் அத்தியாயம்: சிரத்தாத்ரய விபாக யோகம்

அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர், சாஸ்திரத்தைத் தழுவி  தேவர்களை வணங்குவர். ராஜசச் சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவர். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவர். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. கண்ணா! சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

2. ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்வீகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

3. பாரத! யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் *1 சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான்.

4. ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும், ராக்ஷதருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்ற தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

5. (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமு முடையோராய், விருப்பத்திலும், விழைவிலும் சார்புற்றவர்களாய் கோரமான தவஞ் செய்கிறார்கள்.

6. இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

7. ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்றுவகைப் படுகிறது. வேள்வியும், தவமும், தானமும், அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

8. உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி இவற்றை மிகுதிப் படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உளமுகந்தன – இவ்வுணவு சத்துவ குணமுடையோருக்குப் பிரியமானவை.

9. கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைப்பன.

10. பழையது, சுவையற்றது, அருகியது, கெட்டுப் போனது, எச்சில், அசுத்தம் – இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

11. பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

12. பயனைக் குறித்தெனினும், ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜசமென்றுணர், பாரதரிற் சிறந்தாய்!

13. விதி தவறியது, பிறர்க்குணவு தராதது, மந்திரமற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பர்.

14. தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

15. சினத்தை விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி இவை வாக்குத் தவமெனப்படும்.

16. மன அமைதி, மகிழ்ச்சி, மெளனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத் தவமெனப்படும்.

17. பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும்.

18. மதிப்பையும், பெருமையையும், பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ரஜோ வெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

19. மூடக் கொள்கையுடன் தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.

20. கொடுத்தல் கடமையென்று கருதி கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்விகமென்பர்.

21. கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.

22. தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.

23.  ‘ஓம் தத் ஸத்’ என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால், முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

24. ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும்  ‘ஓம்’ என்று தொடங்கி செய்யப்படுகின்றன.

25.  ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

26.  ‘ஸத்’ என்ற சொல் உண்மையென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா! புகழ்வதற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும்  ‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது.

27. வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும்  ‘ஸத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும்  ‘ஸத்’  என்றே சொல்லப்படும்.

28. அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும்  ‘அஸத்’ எனப்படும். பார்த்தா! அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா.

அடிக்குறிப்பு:

*1. நம்பிக்கை

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s