-டி.எஸ்.தியாகராசன்
ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.

“மின்னுவது எல்லாம் பொன் அல்ல” என்றதொரு பழமொழி தமிழில் உண்டு. சில நேரங்களில் போலிக்கு மினு மினுப்பும், பளபளப்பும் அதிகம் உண்டு. இதனால் இதனை அசல் என்று நம்பி மோசம் போவார்கள். ஒரு திரைப்படத்தில் மகாராஜாவாக நடிப்பவரை உண்மையான மகாராஜா என்று எண்ணி சமூகம் மதிப்பு அளிக்கும் காலமிது. உண்மையில் திரையில் வரும் மகாராஜாவின் தலையில் அணியும் கிரீடம், உடுத்தும் உடை, இடிப்பில் வைத்திருக்கும் வாள், உடலில் அணியும் ஆபரணங்கள், எல்லாமே இரவல் தான். திரையில் நடித்தவர் நம்மில் ஒருவர்தான் என்று உணர வேண்டும். மக்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக பல பணிகளில் சேர்ந்து உழைப்பது போலவே, நடிகரும் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக அரிதாரம் பூசி அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நம் முன்பாக காட்சியளிக்கிறார். அவ்வளவே!
இதைப் புரிந்து கொண்டால், நமது பொழுதுபோக்கிற்காக நாம் காசு செலவு செய்து சில மணி நேரம் திரையரங்குகளில் இருந்துவிட்டுப் போகிறோம் என்ற மனநிலையில் நிறைவோடு இல்லம் திரும்பலாம். திரையில் கதாநாயகன் கதாநாயகியை கட்டிப் பிடித்து ஆடுவது போல, பலரை தான் ஒருவராக நின்று சமர் புரிந்து வெற்றி பெறுவது போல, நாம் நமது தினசரி வாழ்வில் செய்து காட்ட இயலாது.
அசல் வீரர் யார்? வீரராக நடிப்பவர் யார்? என்று மக்கள் இனம் கண்டு கொண்டால் அண்மையில் இரு நடிகர்கள் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வெளியீட்டு விழா வினோதங்கள், விரோதங்கள், பொருட்சேதங்கள், உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஒரு நடிகரின் பிரபலத்தை, அவர் நடித்த படத்தின் வசூல், நடிகரின் பிரமாண்ட கட்அவுட், பால் அபிஷேகம், அலைமோதும் கூட்டம், முதல் நாள் கூட்டம், இவற்றை ஒரு அளவுகோலாக வைத்து செய்தி ஊடகங்கள் தன் பங்கிற்கு பிரத்யேக விளம்பரச் செய்திகள் வெளியிடுகின்றன. தனது செல்வாக்கை தனது படத்திற்கான மக்களின் பெரியதொரு எழுச்சியை வைத்து நடிகர் தங்களின் நடிப்பிற்கான ஊதியத்தை பன்மடங்காக ஏற்றிக் கொள்கின்றனர்.
அண்மையில் மும்பையில் ஒரு நடிகர் நடித்த படம் வெளியான அன்று மட்டும் வசூல் ரூ..55 கோடி. இப்படி நம் நாட்டில் திரைத்தொழிலில் புகழ் பெறும் நடிக, நடிகைகள் ஈட்டும் மூலதனம் இல்லா வருவாய் வேறு யார்க்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, எளிய மக்களின் மனங்களில் கோலோச்சும் அபாரத் திறமையும் இல்லை என்பதும் உண்மை.
இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம்தேதி திரைப்படம் வெளிவந்த அன்று ஓடும் சரக்குப் பேருந்தில் துணிவாக நடனம் ஆடியவர் முடிவாக நாம் தொலையப் போகிறோம் என்றறியாத காளையின் துணிவைப் பாராட்டவா இயலும்? இரு படங்களிலும் தோன்றிய கதாநாயகர்களின் ரசிகர்கள் தங்களை ஒரு நாட்டின் படைவீரர்களாக எண்ணிக் கொண்டு பகையரசரின் படைகளோடு மோதுவது போன்று தெருவில் சண்டை போடுவதும் தங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்க திரையரங்குகளை நடத்தும் தொழில் துறையினரின் சொத்துக்களை சேதப்படுத்துவதும் ஆண்டுதோறும் காணக் கிடைக்கின்ற இலவசக் காட்சிகள்.
மக்கள் கூட்டத்தின் அடர்த்தி கருதியும், வரி வசூல் மேம்பாடு கருதியும், காட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதும் அவசியமாகிறது. அதனால் என்ன? நடுநிசியானாலும் சரியே! விடியற்காலை ஆனாலும் சரியே! தன் குடும்பம் மறந்து, பணி துறந்து, உழைப்பைத் தொலைத்து, ஏன் தன்னையே ஈந்து இனிய திரைப்படம் பார்க்க ரசிகர்கள் வெள்ளமென கூடுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் நடிகர்கள் மாபெரும் ஆதரவை ஈட்டுகிறார்கள். சில நேரங்களில் சிலருக்கு அவர் தம் அரசியல் வாழ்விற்கு நுழைவாயில்களாக மாறி ஆட்சிக் கட்டிலில் அமரவும் வாய்ப்பாகிறது என்ற உண்மையையும் மறுப்பதற்கு இல்லை.
ஆக, திரையும் அரசியலும் பின்னிப் பிணைந்த அடர்கொடிகள். இதே ஜனவரி 14 ஆம் நாள் மாலை 5.40 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ‘சோஷில்லா’ சுரங்கப் பாதையில் வேலை செய்து வந்த மெகா இன்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸைச் சார்ந்த 172 சுரங்கத் தொழிலாளர்கள் மிகப் பெரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டார்கள். இந்த கம்பெனி உடனே நமது இந்திய ராணுவத்தைத் தொடர்பு கொண்டு தொழிளாளர்களை மீட்க உதவி கேட்டது. ‘சேவா பரமோ தர்ம’ என்ற தனது குறிக்கோளுக்கு இணங்க, இந்திய ராணுவம் மின்னல் வேகத்தில் பணியில் இறங்கியது. ராணுவத்தில் உள்ள அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமென்ட் பிரில் மீட்புப் பணிகளில் நல்ல முதிர்ச்சியையும், தேர்ச்சியையும் பெற்ற பல நூறு வீரர்களை களத்தில் இறக்கியது.
அந்தக் காரிருள் சூழ்ந்த, மைனஸ் 15 டிகிரிக்கும் குறைவான குளிரில், பல ஆயிரம் அடி உயரம் உள்ள மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள பகுதியை விரைவாக வீர்ர்கள் அடைந்தனர். மோப்ப நாய்கள், பனி மலைச் சரிவுகளில் கால் பதிக்க வல்ல தக்க உபகரணங்களோடு ஒன்றுகூடி, ஒழுங்கமைதியோடும் உயிர்த் துடிப்போடும் களப்பணியாற்றினார்கள். இந்திய ராணுவப் பிரிவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள், ஏனைய உபகரணங்கள் எல்லாம் இப் மீட்புப் பணிக் குழுவினரில் அடக்கம். என்ன அற்புதம்!
இறைவனின் பெருங்கருணையால், வல்லமை கொண்ட இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமென்ட், மறுநாள் காலை ஜனவரி 15 ஆம் நாள் பனிச்சரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டுத் தந்தார்கள். எலும்பையும் ஊடுருவித் தாக்கும் குளிரில் தங்களுக்கு உறவினர்களோ, நண்பர்களோ அல்லாதவர்களை, முன்பின் தெரியாத அந்தத் தொழிலாளர்களை மீட்பதற்காக, தங்களது இன்னுயிரையும் பொருட்டாகக் கருதிடாது, விரைந்து பணி ஆற்றிய நம் இந்திய ராணுவத்தை பாராட்ட வார்த்தைகள் உண்டா?
ராணுவத்தினர் தங்கள் தேக சுகம் துறந்து, தேசம் சுகமாக இருக்க இரவு, பகல் பாராது கனத்த உடையோடும், பெருத்த இயந்திர துப்பாக்கிகளோடும், சில நேரங்களில் தங்கள் உடலின் இயற்கை அழைப்புகளையும் மறந்து, அல்லது தள்ளிவைத்து காவல் காக்கின்றனர். உள்நாட்டில் இரவில் நிம்மதியாக உறங்கியும், பகலில் பகைவர்கள் தொல்லை இல்லாது பாதுகாப்போடு உலவும் நமது சமூகமோ, நமது நாட்டு இளைஞர்களோ என்றேனும் இவர்களை ஹீரோக்கள் என்று சொல்லி மகிழ்ந்ததுண்டா? அவர்தம் பிறந்த நாளை அல்லது போரில் அமரர் ஆன நாளை நினைத்ததுண்டா?
ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.
ஆனால் உலகில் மக்கள் திரைமோகக் கவர்ச்சியில் மகிழ்ந்தும், ஆழ்ந்தும் இருப்பதால் தான் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட ரொனால்டு ரீகன் என்றதொரு நடிகர் ஆளும் அதிபர் ஆனார். இதைவிட வேதனையும் கொடுமையும் கொண்டதொரு நிகழ்ச்சி, உலகின் மிகுந்த சுறுசுறுப்பு மிக்க நாடு, மின்னியல் துறையில் சாதனைகளை நிகழ்த்தும் நாடு, கடுமையான உழைப்பு மிக்க நாடு என்று பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் நடந்தது.
நமது நாட்டு பிரதமரின் ஆழ்ந்த நட்புக்குரியவரும், தூய்மை கங்கை திட்டத்திற்கு உதவியவரும், முன்னிரவு வேளைகளில் நடைபெற்ற காசி கங்கைக்கரை தீபாராதனைகளில் கலந்து கொண்டவரும், சிறந்த பொருளாதார மேதை என்று உலகில் பாராட்டப்பட்டவரும் ‘அவரது பொருளாதார கொள்கைகள் அபேனாதமிக்ஸ்’ என்ற வர்ணணைக்கு உரியவருமான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தன் கட்சி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது கடந்த 2022 ஆண்டு சூலை 8 ஆம் நாள் யமகாமி என்ற ஜப்பானியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே கண்ணீர் வடித்தது. கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான்.
இந்நிலையில் வழக்கம் போல உலகில் கொடூரச் சம்பவங்கள் நடந்தால் அதனை ஒட்டி திரைப்படம் தயாரித்து பொருள், புகழ் ஈட்டும் நல்ல வல்லவர்கள் இந்தக் கொலையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றை ‘ரெவல்யூஷன் பிளஸ் ஒன்’ என்ற பெயரில் தயாரித்து ஜப்பானில் திரையரங்குகளில் வெளியிட்டார்கள். கொலையாளி யமகாமியின் வாழ்க்கை, அவன் ஏன் முன்னாள் பிரதமரைக் கொன்றான், என்ற போக்கில் திரைப்படம் போகிறது. கொலையாளியின் குடும்ப வாழ்க்கை அவனது கொலை வெறிக்கு எப்படி துணை நின்றது என்ற தடத்தில் பயணிக்கிறது. படம் வெளிவந்து அதைப் பார்த்த பல்லாயிரவர் யமகாமிக்கு ஏற்பட்ட வாழ்க்கைச் சூழலில் “தன் குறிக்கோளை அடைய அவனுக்கு வேறு மார்க்கமே இல்லை” என்பது நிதர்சனம் என்று உரக்கச் சொல்லி வருகிறார்கள். இதுமட்டுமல்ல ஜப்பான் நாட்டு இளம் மங்கையர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதைவிட ஒரு வினோத கொடுமை, இவர்கள் எல்லாம் தங்களை ‘யம காமி கேர்ல்ஸ்’ என்று பெருமையாக தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். இதனால் கொலையாளியை சிறையில் இருந்து விடுவிக்க சட்ட நிபுணர்கள் குழு ஒன்று ஏற்பட்டு இருக்கிறது; வழக்கு நடத்துவதற்கு நிதி திரட்டப்படுகிறது. இவனுக்கு வரும் பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவன் இருக்கும் சிறை அறைக்குள் குவியும் பொருட்களை வைக்க இடம் போதவில்லை என்ற வினோதம்.
பொதுவாகவே ஜப்பானியர்கள் மிகுந்த நற்பண்புகள் நிறைந்தவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள். அண்மையில் உலக கால் பந்தாட்டப் போட்டியில் இவர்களது அணி தோற்றாலும் ஆடி முடித்த பின்னர் மைதானத்தில் சிந்தியிருந்த குப்பைக் கழிவுகளை அகற்றிவிட்டுச் சென்றார்கள். இத்தகைய நற்சிந்தனை உடையவர்களிடம் கூட ஒரு திரைப்படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் பார்க்கும்போது, திரைவானின் வலிமையை உணர்ந்து கொள்ளலாம். அதனால் தான் எல்லா விளம்பரங்களிலும் நடிகர், நடிகைகள் வணிகச் சந்தையின் உச்சத்திற்கு உத்தரவாதம் தருகிறார்கள்.
இது சமூகத்தின் அவலமா, வரமா? என்றால் இரண்டும் தான். சில ஆண்டுகட்கு முன்னர் தாய்லாந்தில் நீர்க் குகையில் பலதினங்கள் விளையாட்டு வீரர்கள் சிக்கிக்கொண்டு உயிர்க்குப் போராடிய போது உலகமே கண்ணீரோடு பிரார்த்தனை செய்தது. ஆனாலும் இவர்களை முயன்ற அளவு காப்பாற்றிய துணிவு மிக்க வீரர்களையோ, அவர்தம் வாரிசுகளையோ மக்கள் மனம் கொள்வது இல்லை.
இதே தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த படம் ஒன்று நாகப்பட்டினத்தில் ஆண்டுக் கணக்கில் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது. திரைப்படம் பார்க்க திருவாரூரில் இருந்து மாலையில் தொடர் வண்டியை தெற்கு ரயில்வே இயக்கியது என்பது வரலாறு. ஒலிக்கும் ஒளிக்கும் மக்களை வசீகரிக்கும் தன்மை உண்டென்றால் அதனைக் கொண்டு திரையில் தோன்றும் நம்மைப் போன்றோர் நம்மைப் போன்றோர்க்கு கடவுளாக காட்சியளிக்கிறார்கள்.
இதனால் தான் ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் படுத்தவாறே ‘தாய், தந்தை வேண்டாம். அந்த நடிகர் நடித்த படத்தைப் பார்க்க வேண்டும்’ என்றார். இளம் வயது ரசிகர் திரைப்படத்தை ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக கருதிடாது திரைப்படமே, திரையில் தோன்றும் நடிகரே என்னுடைய வாழ்க்கையின் விடியல் என்று எண்ணிட்டால் என் செய்ய! இந்த அவலங்கள் நாளும் பெருகிடாது. நாளை உலகு நல்லன பெருக்கி அல்லன அகற்றி வாழ வல்ல இளஞர்களை வழிநடத்த இனி ஒரு விதி செய்வோம்.
அறிஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஒட்டுமொத்த சமூகமுமே ஒன்று கூடி இளைஞர்களை நெறிபடுத்த நன்னெறிகளைக் கொண்டு செயல்முறைத் திட்டத்தை ஒவ்வொரு இல்லத்திலும் உருவாக்குதல் மிக அவசியம். அப்போதுதான் ‘மின்னுவது எல்லாம் பொன் அல்ல’ என்று பிரித்தெடுக்கும் மேதமை உருவாகும்; பேதமை உருக்குலையும்.
இது போன்ற சிந்தனைக் களங்களை உருவாக்க வல்லவற்றை எல்லா செய்தி ஊடகங்களிலும் நாளும் நடத்தலாம். இவ்வண்ணம் அமையப்பெறின் உலகம் அறிவுசார் உலகமாக மாறி வருங்காலத்தை செம்மையோடு செழுமைப்படுத்தும். இது உண்மை. உண்மை.
- நன்றி: தினமணி (08.02.2023)
$$$