பகவத் கீதை- ஆறாம் ஆத்தியாயம்

-மகாகவி பாரதி

முந்தைய அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம், துறவு ஆகியவை குறித்து விளக்கிய பார்த்தசாரதி, இந்த அத்தியாயத்தில் ராஜயோகமான தியானத்தின் சிறப்பை விளக்குகிறார்; “யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்” என்கிறார்.

ஆறாம் அத்தியாயம்: தியான யோகம்

கர்ம யோக ஞான யோகங்களில் சித்தி பெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன்- பகைவன், பந்து, நல்லவன் – கெட்டவன் என்ற வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரே விதமான மனப்பான்மை ஏற்படும். அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேகசம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப் பட்டவர்களென்றும் உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி, தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

2. பாண்டவா! எதனை சந்நியாசமென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

3. யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறிய பின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

4. ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்துவிட்டுப் புலன்களிலேனும், செயல்களிலேனும் பற்றுதலின்றியிருப்பானாயின், அப்போதவன்  ‘யோகநிலையில் ஏறியவன்’ என்று சொல்லப்படுகிறான்.

5. தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னாலிழிவுறுத்த வேண்டா; தனக்குத் தானே நண்பன்; தனக்குத் தானே பகைவன்.

6. தன்னைத் தான் வென்றவனே தனக்குத் தான் நண்பன்; தன்னைத் தான் வெல்லாதான் தனக்குத் தான் பகைவன்போற் கேடு சூழ்கிறான்.

7. தன்னை வென்று ஆறுதலெய்தியவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

8. *1 ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்று போலே காணும் யோகியே நிலையுற்றானெனப்படுவான்.

9. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சமபுத்தியுடையான் மேலோனாவான்.

10. மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய், உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆத்மாவில் யோகமுறக் கடவான்.

11. சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை, இவற்றின்மீது தனக்கோர் உறுதியான ஆசனம் சமைத்துக் கொண்டு,

12. அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புறச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து, ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

13. உடம்பையும் தலையையும், கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக் கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டு, திசைகளை நோக்காமல்,

14. நன்கு சாந்தமெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி பிரம்மச்சரிய விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

15. இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலைபெற்றதாகிய மிகச் சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

16. மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கு ஏகாந்தநிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா! மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

17. ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

18. உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோகமுற்றா னெனப்படுவான்.

19. சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

20. எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ,

21. புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்கு காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

22. எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலைபெறுவதால் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

23. அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.

24. *2 சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

25. துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.

26. எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

27. மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

28. குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

29. யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

30. எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழிய மாட்டேன்; எனக்கவன் அழிய மாட்டான்.

31. ஒருமையில் நிலை கொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுள்ள என்னைத் தொழுவோன் யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

32. இன்பமாயினும், துன்பமாயினும் – எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப்பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

33. மதுசூதனா! இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

34. கண்ணா! மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவதுபோல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

35. பெருந்தோளாய்! மனம் கட்டுதற்கரியதுதான், சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! அதைப் பழக்கத்தாலும், விருப்பின்மையாலும் கட்டி விடலாம்.

36. தன்னைக் கட்டாதவன் யோகமெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன், முயற்சியாலும் உபாயத்தாலும் அதனை எய்த வல்லான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

37. நம்பிக்கை யுடையோயெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன் யோகத்தில் தோற்றுப்போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

38. ஒரு வேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய்! உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

39. கண்ணா! எனக்குள்ள இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

40. பார்த்தா! அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே! நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

41. யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

42. அல்லது, புத்திமான்களாகிய யோகிகளில் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இது போன்ற பிறவி யெய்துதல் மிகவும் அரிது.

43. அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா! அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

44. பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

45. பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

46. தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப் படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால் அர்ஜுனா! யோகியாகுக.

47. மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

அடிக்குறிப்புகள்:

*1 ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு; விஞ்ஞானமென்பது உலகியலைப் பற்றியது.
*2 சங்கல்பம்= மனத்தீர்மானம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s