-சுவாமி விமூர்த்தானந்தர்
தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய, நமது தளத்தில் உள்ள ஐந்தாவது கட்டுரை இது....

“கிறிஸ்துவைத் தொட்டதும் மனித ஆன்மாவே மாறுதலடைகின்றது. அவனது வாழ்க்கை முழுவதும் புனிதமாகி விடுகிறது.”
-இவ்வாறு சுவாமி விவேகானந்தர் கூறியதாகவும், ஆதலால் ஏசுவிடம் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்று ஓர் இந்துக் கோவில் முன்பு சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேனர் தொங்கிக் கொண்டிருந்தது.
இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது. உண்மையான கிறிஸ்தவ அன்பர்களும் இதை விரும்புவார்களா என்பது சந்தேகமே.
உலகமே சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் (2013-இல் எழுதிய கட்டுரை) அந்த மாமனிதரின் திருப்பெயரை, தமது மதமாற்றத்துக்குப் பயன்படுத்தும் மலினமான உத்திகளும் சில கிறிஸ்தவ மிஷனரிகள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றே நாம் இங்கு கூறும் பதாகை.
மதமாற்றம் என்ற சுனாமித் தாக்குதலின் முன் இரும்புச் சுவராக நின்று, தம் இரு விழிப் பார்வையாலேயே இந்து மதத்தைக் காத்தவர் விவேகானந்தர்.
சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு தாங்கள் மட்டுமே புகழப்படுவதற்காக 1893-இல் சிகாகோவில் கிறிஸ்தவ மிஷனரிகள் சர்வ சமய மாநாட்டைக் கூட்டினார்கள்.
அப்படிப்பட்ட சபையில் ‘நம்மைக் கொண்டு செல்லும் அனைத்துப் பாதைகளையும் ஏற்பதே இந்துவின் தாரக மந்திரம்’ என இந்து மதத்தின் உண்மைப் பொருளை உரக்க ஒலித்து, சபையின் நாயகனாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்.
“ஒருவன் எழுந்து தான் மட்டுமே சரியானவன், தனது நெறி மட்டுமே சரியானது, மற்ற எல்லோரும் செய்வது தவறு என்று கூறினால், அவன்தான் முழுக்க முழுக்கத் தவறானவன். பிறரது வழி சரி என நிரூபிப்பதில் தான் அவனது வழியின் நிரூபணம் அடங்கி உள்ளது என்பது அவனுக்குத் தெரியவில்லை” (விவேகானந்தரின் ஞானதீபம்- சுடர் 4; பக்கம் 548.)
-என்பார் சுவாமிஜி.
மதமாற்றத்தில் ஈடுபடும் மத வியாபாரிகளுக்கு இது மிகவும் பொருந்தும்.
உலக மேன்மைக்காக சுவாமிஜியின் பணிகள் பற்றி எல்லோரும் இன்று பெருமிதத்துடன் பேசும்போது அவரது பெயரை மத மாற்றத்திற்காகப் பயன்படுத்துவது அப்பட்டமான அற்பத்தனம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு (* 2013-அம் ஆண்டு) ஸ்ரீரங்கத்தில் லட்சக் கணக்கான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் சுவாமி விவேகானந்தர் ஏசுவைப் பற்றிப் பெருமையாகப் பேசியவற்றை மட்டும் என்ற நூல்களிலிருந்து – தங்களுக்கு ஏற்றாற்போல் ஆங்காங்கே – கண்டபடி திரட்டி அதை இந்துக்களிடமே விநியோகித்தனர்.
உண்மைதான். சுவாமிஜி கிறிஸ்துவைப் போற்றினார். ஆனால் அவற்றோடு கிறிஸ்துவின் பெயரால் நடந்த, நடக்கும் அட்டூழியங்களையும் தார்மிகக் கோபத்துடன் அவர் அவனிக்கு அறிவித்தாரே! அதையும் இந்தப் போலி மதவாதிகள் தொகுத்துப் போட வேண்டியதுதானே?
கிறிஸ்தவ மிஷனரிகள் இந்து மதத்திற்குப் பல நூற்றாண்டுகளாகத் தந்து வரும் இடைஞ்சல்களை சுவாமி விவேகானந்தர் வன்மையாகச் சாடியுள்ளார். அவற்றை இதுவரை எந்த இந்துவும் தொகுத்து கிறிஸ்தவர்களிடம் விநியோகித்ததில்லை.
ஏனென்றால், ஓர் இந்து பிற மதத்தை வெறுக்கும் போது தான் தன் மத அறிவுரைகளிலிருந்து விலகுவதாக நம்புகிறான். மேலும் இந்துவுக்குத் தன் மதத்தின் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கை அது கூறும் பரந்த மனப்பான்மை ஆகியவை இயல்பாகவே இருப்பதால் அவன் அடுத்தவன் மதத்தை – மனதைக் குழப்புவதில்லை; புண்படுத்துவதுமில்லை.
ஓர் இந்துவின் இந்த மனோபாவம் வேறு எல்லா மதத்தினருக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் சாரம்.
“அற்பப் பாவிகள் நாங்கள் என முழந்தாளிட்டு ஓலமிடும்படி நாம் மக்களுக்குப் போதிக்கவா? வேண்டாம். அதற்குப் பதிலாக மக்களின் தெய்விக இயல்பை அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்”
(ஞானதீபம்- சுடர் 4; பக்கம் 550.)
-என்பார் சுவாமி விவேகானந்தர்.
எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எல்லோருக்கும் ஞானஸ்நானம் தரும் இந்த வியாபார மதவாதிகள், ஏசுநாதர் கூறிய, அவர் வழங்கிய உண்மை ஞானஸ்நானத்தை எப்போது பெறுவார்கள்?
***
சுவாமி விவேகானந்தர் ஞானஸ்நானம் பற்றிக் கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது. அவர் கூறுகிறார்:
என் நண்பரும் கிறிஸ்தவ போதகருமான ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு என்னிடம், “ஏசுவை நம்புகிறீர்களா?” என்று கேட்டார். “நம்புகிறேன். சற்று அதிக பயபக்தியுடனேயே நம்புகிறேன்” என்றேன். “அப்படியானால் நீங்கள் ஞானஸ்நானம் பெறலாமே?” என்றார் அவர். நான் எப்படி ஞானஸ்நானம் பெறுவது? யாரிடமிருந்து பெறுவது? மெய்யான ஞானஸ்நானம் தரக்கூடியவர் எங்கே? ஞானஸ்நானம் என்றால் என்ன? சில பிரார்த்தனைகளைச் சொல்லிக்கொண்டு உங்கள் மீது நீரைத் தெளிப்பதும் உங்களை நீரில் அமிழ்த்துவதுமா ஞானஸ்நானம்? ஆன்மிக வாழ்வுக்கு நம்மை நேரடியாக அறிமுகப்படுத்துவதுதான் ஞானஸ்நானம். உண்மையான ஞானஸ்நானம் பெற்றால் நீங்கள் உடல் அல்ல, ஆன்மா என்பதை அறிவீர்கள். முடிந்தால் எனக்கு அத்தகைய ஞானஸ்நானம் கொடுங்கள். இல்லையானால் நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நீங்கள் ஞானஸ்நானம் என அழைக்கிற ஒன்றைப் பெற்ற பின்பும் அப்படியே இருக்கிறீர்கள். ஏசுவின் பெயரால் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என வெறுமனே சொல்வதால் என்ன பயன்? வெறும் பேச்சு, பேச்சு; உங்கள் மூடத்தனத்தால் உலகை என்றும் தொந்தரவுபடுத்தும் வேலை. ‘இருளில் மூழ்கியிருந்தும், தாங்கள் மிகவும் அறிவாளிகள் என எண்ணிக் கொள்கின்ற இந்த மூடர்கள், குருடர்களால் வழிகாட்டப்படுகிற குருடர்கள் போல், அங்குமிங்கும் தத்தளித்தபடி சுற்றிச் சுற்றி வருகிறார்கள்’ – கடோபநிஷதம். ஆகவே நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளாதீர்கள்; ஞானஸ்நானம், அது, இது என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள். உண்மையான ஞானஸ்நானம் இருக்கத் தான் செய்கிறது. ஆரம்பத்தில் ஏசுபிரான் இந்த உலகிற்கு வந்து போதித்தாரே, அப்போது இருந்தது. ஒளி பெற்ற மகான்கள், அவ்வப்போது உலகிற்கு வருகிற மாமனிதர்கள் அந்தத் தெய்விகக் காட்சியை நமக்குக் காட்டவல்ல ஆற்றல் பெற்றிருந்தார்கள். இதுவே உண்மையான ஞானஸ்நானம். மதங்களில் மந்திரங்களுக்கும் சடங்குகளுக்கும் முன்பே பிரபஞ்சம் தழுவிய உண்மையின் கரு இருக்கிறது. காலப்போக்கில் இந்த உண்மை மறக்கப்படுகிறது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் இந்த உண்மையின் தலையை அழுத்திக் கொன்றுவிடுகின்றன, சடங்குகள் எஞ்சுகின்றன – கூடு உள்ளது, ஆன்மப் பொக்கிஷம் அதனுள் இல்லை. ஞானஸ்நானம் எனும் சடங்கு உங்களிடம் உள்ளது. ஆனால் உண்மையான ஞானஸ்நானத்தைச் சிலரே அளிக்க முடியும். ஆனால் புறச்சடங்கு போதாது. உயிரோட்டமான உண்மையைப் பற்றிய உண்மையான அறிவு தேவையென்றால், நாம் தீட்சை பெற வேண்டும். அதுதான் லட்சியம். (ஞானதீபம்- சுடர் 4 ; பக்கம் 450)
***

இந்துக்களை மதம் மாற்றிக் கொண்டிருப்பதிலேயே முனைப்பைக் காட்டி உங்கள் மதத்தின் சாரத்தைச் சுவைக்க மறந்தவர்களே!
பரலோக ராஜ்யம் பற்றிப் பிரசாரம் மட்டுமே செய்து கொண்டு அதைப் பிடிக்கத் தவறுபவர்களே!
சுவாமி விவேகானந்தர் ஏசு மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் தமது மேற்கத்திய கிறிஸ்தவச் சீடர்களுக்குப் பக்தியை ஊட்டவே பல இடங்களில் ஏசுபிரானைப் போற்றிப் பேசினார்.
இதற்குக் காரணம் சுவாமிஜி இந்துக்களுக்குக் கிறிஸ்தவத்தைப் போதித்தார் என்று அர்த்தமல்ல. கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக மலர வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்.
ஆனால் வியாபார மதவாதிகள் மேற்கூறிய தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். முதலில் அவர்கள், ஏசுபிரானும் சுவாமிஜியும் கூறிய அருளுரைகளைப் புரிந்து கொள்ளட்டும்.
சுவாமிஜி கிறிஸ்துவையும் கிறிஸ்தவ மதத்தையும் போற்றினார். அதுபோல பிற மகான்களையும் மதங்களையும் அவற்றின் நல்ல விஷயங்களுக்காக மதித்தார். ஆனால் அவர் எதை வெறுத்தார் தெரியுமா?
தைரியமாக இதைப் படியுங்கள். அவர் கூறுவார்:
“மதப் பிரிவுகள் இருப்பதை நான் எதிர்க்கவில்லை. இன்னும் இரண்டு கோடிப் பிரிவுகள் இருக்க இறைவன் அருளட்டும். ஏனெனில் அவை அதிகமாகின்ற அளவுக்குத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் அதிகமாகும். மதத்தை எல்லோருக்கும் பொருத்த முயற்சிப்பதைத் தான் நான் எதிர்க்கிறேன். (ஞானதீபம்- சுடர் 4; பக்கம் 549.)
இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அன்புக் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் – ஜூன் 2013.
$$$