-மகாகவி பாரதி
ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

முன்னுரை- 9
இந்த ரகசியம் உனக்கு எங்ஙனம் தெரிந்ததென்று கேட்பீர்களாயின், சொல்கிறேன்.
கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்:
“நீ வாயு:, நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )
கண்ணன் சொல்லுகிறான்: “மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.” (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)
“நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்” – (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
எனவே, கீதையில் கேட்பான் – சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே, அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும், துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும், சாஸ்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ளத்தக்கனவாம்.
‘பிரபோத சந்திரிகை’ என்ற ஒரு நாடக நூல் இருக்கிறது. அதில் விவேகன் என்ற ராஜன் உலோகாயதன், பௌத்தன் முதலியவர்களுடனே யுத்தம் செய்து வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்திரப் பயிற்சியில்லாத ஒரு குழந்தை அந்த நூலைப் பார்த்துவிட்டு, அதாவது, முன்பின் பாராமலே நடுவிலே மாத்திரம் பார்த்துவிட்டு, மேற்படி யுத்தம் எந்த வருஷத்தில் நடந்ததென்றும், அதில் இரு திறத்திலும் எத்தனை உயிர்கள் மடிந்தவென்றும் கேட்கப் புகுவதுபோல், சிலர் துரியோதனாதியரைக் கொல்லும் புறப் பொருளிலே கீதையின் உபதேசத்தைக் கொள்ளுகின்றனர்.
ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நீதிகளாகக் கருதப்படும் பிரஸ்தான திரவியங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த சூத்திரம் – என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்து விடுகின்றனர். ‘இதற்கு – அதாவது, பகவத் கீதைக்கு – சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும் வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்’ என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலென்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.
கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசாரியார் எவ்வளவு தூரம்!
மேலும், நாம் மேலே கூறியபடி, பகவத் கீதையைக் கொலை நூலென்று வாதாடுவோர், அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களேயன்றி, நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை.
ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.
(தொடர்கிறது)
$$$