-மகாகவி பாரதி
மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

முன்னுரை- 10
இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு – ஒரே சத்துரு – அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.
தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப்பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப்பகையாவது. உள்ளப் பகையைக் களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.
புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் – அதாவது வேற்றுமை உணர்ச்சி – ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.
வேற்றுமையுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களெல்லாம் ஈசன் செயல்களென்றும், தோன்றும் தோற்றங்களெல்லாம் ஈசனுடைய தோற்றங்களென்றும் தெரிந்து கொள்ளுமிடத்தே பய நாசம் உண்டாகிறது.
“‘சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே? சொல்’லென்று ஹிரண்யன் தான் உறுமிக்கேட்க நல்லதொரு மகன் சொல்வான் ‘தூணி லுள்ளான், நாராயணன் துரும்பினுள்ளா’ னென்றான், வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை, மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை, அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ?”
“தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?” எனில் – தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத்தான் தன்மையுடையதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப் போது பகையாம்.
எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போது கடவுளாகுமன்றோ? ‘எப்பொருள் யாது செய்யுமோயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை’ யென்றும், விதி மாறாதன்றோ? எனில் – அவ்வுரை மெய்யே. எனினும், நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிரமாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.
அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாச் சமைக்கப் பட்டிருக்கின்றன.
மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறந்து விடுவதில் பயனில்லை.
மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் பிரத்தியக்ஷம். நல்ல கூட்டத்தாலும் நல்ல பயிற்சியாலும் அதனை உபகார வஸ்துவாகச் செய்தல் சாத்தியமென்பது யோகிகளின் சர்வசாதாரண அனுபவம்.
எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை. பரம சத்தியம். ஆயினும் மனிதனுக்குத் துன்பமுண்டு, எல்லாம் கடவுளுடைய வடிவமென்பது பரம சத்தியம். எனினும், ஜீவர்கள் துயரப்படுவதைப் பிரத்தியக்ஷமாகக் காணுகிறோம்.
அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்றுபோலவேயாம். எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும், எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும், கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை. அகண்ட கோடிகள் சிதறுகின்றன. பூகம்பமுண்டாய்த் தேசங்களழிகின்றன.
சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள்- கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடி கோடிகோடி கோடிகோடி கோடிகோடி கோடிகோடி கோடிகோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணத்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணத்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.
கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.
ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் இலதாம்.
(தொடர்கிறது)
$$$