அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. ....
Category: கருவூலம்
மனித யந்திரம்
அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...
சத்திய சோதனை- 2(6-10)
சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
....இலக்கிய தீபம் – 10
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது 'இது கடவுள்வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்....
நடைபாதையில் ஞானோபதேசம்
எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஏற்றம் தந்தவர் அமரர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது தாக்கம் மிகவும் பெரியது. ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர் பின்னாளில் கனிந்த தேசியவாதியானார். ஆனால், பின்னாளில் தானே ஏற்றுக்கொண்ட விரதம் காரணமாக அவரது பிற்காலச் சிந்தனைகள் அதிக அளவில் எழுத்துவடிவம் பெறவில்லை. திரைத் துறையிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் தனது மனசாட்சிப்படி பேசியவர்; எழுத்துகளால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். ஞானபீடம் (2002), சாஹித்ய அகாதெமி (1972) விருதுகளைப் பெற்றவர்.அவரது சொந்த அனுபவம் இங்கு சிறுகதை வடிவில் பதிவாகிறது....
நினைக்கத் தெரிந்த மனமே…
காதலனைப் பிரிந்த பெண்ணின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் எளிய பதங்கள்... அதில் புதைந்திருக்கும் உண்மையான அன்பின் சோகம், காட்சிக்கு உகந்த கற்பனை வரிகள் என, கவியரசரின் மேதமை வெளிப்படும் சிறந்த திரைப்பாடல் இது...
இலக்கிய தீபம் – 9
பல சுவடிகளை ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்....
சத்திய சோதனை- 2(1-5)
குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக்கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபட வேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை....
இலக்கிய தீபம்- 8
நமது தேச சரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதையுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன்முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்த வேண்டியனவாகவே உள்ளன. ....
பிரம்ம ராக்ஷஸ்
-புதுமைப்பித்தன் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்
சத்திய சோதனை 1(21- 25)
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன்முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை.... நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்....
இலக்கிய தீபம்- 7
செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவாதிருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ்விரு கொள்கைகள் பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது....
இலக்கிய தீபம் – 6
பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவனாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற்றின் முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்....
இலக்கிய தீபம் -5
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16 கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
சத்தியசோதனை 1(16-20)
புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதை கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.....