-கவிஞர் சுரேஜமீ
கோகுலாஷ்டமி வாழ்த்துகள். பண்டிகையைக் கொண்டாட இன்னொரு கவிதை...

பதம் வைத்து வந்த உன்னைப் பார்த்தேன் கண்ணா – என்
பவம் எல்லாம் நீங்க உன்னைக் கேட்டேன் கண்ணா!
இதம் எனக்குத் தரும் விழிகள் பார்த்தேன் கண்ணா – அதன்
எல்லை யற்ற கருணை யையே கேட்டேன் கண்ணா!
விதம் விதமாய் எழில் கொஞ்சப் பார்த்தேன் கண்ணா! – உன்
வித்தார வடிவு காட்டக் கேட்டேன் கண்ணா!
நிதம் என்னுள் மலரும் போதைப் பார்த்தேன் கண்ணா! – அதை
நிகழ்த்தும் வண்ணம் சொல்க எனக் கேட்டேன் கண்ணா! 1
ஆயர் பாடி கூட்டம் அதைப் பார்த்தேன் கண்ணா! – அவர்
ஆடிப் பாடி மகிழும் மனம் கேட்டேன் கண்ணா!
வாயில் உண்ட வெண்ணை யையும் பார்த்தேன் கண்ணா – அன்று
ஜாலம் செய்த கதையைக் கூறக் கேட்டேன் கண்ணா!
மாயக் காரன் உன்னில் என்னைப் பார்த்தேன் கண்ணா – என்
மனத்தை ஆளும் மாயை விலகக் கேட்டேன் கண்ணா!
தாயின் அன்பை உன்னிடத்தில் பார்த்தேன் கண்ணா! – அந்த
தயை யெனக்குத் தருக எனக் கேட்டேன் கண்ணா! 2
உன்னில் என்னை என்னில் உன்னைப் பார்த்தேன் கண்ணா! – புவி
உய்யும் வண்ணம் ஆள்க வெனக் கேட்டேன் கண்ணா!
தன்னை விஞ்சும் ஆற்றல் உன்னில் பார்த்தேன் கண்ணா! – அதன்
தாக்கம் என்னுள் தருக எனக் கேட்டேன் கண்ணா!
முன்னை வினை களையும் வண்ணம் பார்த்தேன் கண்ணா! – இனி
மூச்சில் உன்றன் நினைவு வரக் கேட்டேன் கண்ணா!
கண்ணன் மனம் பிள்ளை மனம் அறிந்தேன் கண்ணா! – என்
காலம் எல்லாம் உன் நிழலாய் வருவேன் கண்ணா! 3
$$$