-தஞ்சை வெ.கோபாலன்
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 2…

2. ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை உதயம்
பிரிட்டீஷ் இந்திய அரசியலில் நீதிக்கட்சி மத்திய நீரோட்டத்திலிருந்து விலகி தனித்தே செயல்பட்டது. பிராமண எதிர்ப்பே இக்கட்சியின் கொள்கைகளின் மையக்கருத்தாக இருந்தது. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமென நீதிக்கட்சி கருதியதால் அதனையும் எதிர்த்தது; காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டது. மகாத்மா காந்தி வர்ணாசிரமத்தைப் புகழ்ந்ததால் அவரையும் கடுமையாக எதிர்த்தது.
தேசியவாதத்தை முன்னிறுத்திய காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் அது ஆதரிக்கவில்லை.
பிராமணரல்லாத அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் அது முஸ்லிம்கள் மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் ஆதரவை இழந்து விட்டது. பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள், பிள்ளைமார்கள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகிய ஜாதிப் பிரிவினர்களின் நலனுக்காக அது செயல்படுவதாக, முஸ்லிம்களும் பட்டியல் பிரிவு மக்களும் குற்றம் சாட்டினர்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் சாதனைகள் எனலாம்.
நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தியாகராய நகர் பகுதி, நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40 காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.
1967 இலிருந்து தமிழ்நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2 விழுக்காடு இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெற்றிருந்தனர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.
19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய நிர்வாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்கள் அதிகமாக பணியில் இருந்தனர். பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லா தோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது என்ற கருத்தும் இருந்தது.
பிராமணர்கள் சென்னை மாகாண சட்டமன்றத்திலும் அதிகமாகக் காணப்பட்டனர். 1910–20 காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிர்வாக உறுப்பினர்களில் எட்டு பேர் பிராமணர்கள். நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பிராமணர்கள். இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும் இவர்கள்தான் அதிகம் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை மாகாணத்தில் அப்போது வெளி வந்து கொண்டிருந்த 11 முக்கிய இதழ்களில் நான்கு (தி இந்து, இந்தியன் ரெவியூ, சுதேசமித்திரன், ஆந்திரப் பத்திரிகா) இதழ்கள் பிராமணர்களுடையவை. மேலும், அன்னி பெசண்டின் ‘நியூ இந்தியா’ பத்திரிகையும் பிராமணர்களுக்கு ஆதரவு நிலை எடுத்தது. மீதமிருந்த ஆறில் இரண்டு பிரிட்டீஷாருக்கு ஆதரவு இதழ்கள் (மெட்ராஸ் மெயில், மெட்ராஸ் டைம்ஸ்; மேலும் நான்கு எவாஞ்செலிக் கிறித்தவ மதப் பிரச்சார இதழ்கள். இந்த ஆதிக்கம் சரியானதல்ல என பிராமணரல்லாத தலைவர்கள் துண்டறிக்கைகளிலும் சென்னை ஆளுனருக்கு எழுதிய திறந்த கடிதங்களிலும் தெரிவித்து வந்தனர்.
20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, பிராமணரல்லாதோர் குழு என்ற பெயரில் புதிய குழு தோன்றி பிறகு நீதிக்கட்சியாக உருவெடுத்தது.
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்கு குறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரிட்டீஷாருக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அவ்வளர்ச்சி அவர்களது செயல்களால் மட்டும் நிகழவில்லை. பிராமணரல்லாதோர் இயக்கம் என்பது இந்தியாவில் அப்போது எழுச்சி பெற்றிருந்த இந்திய தேசியவாத காங்கிரசுக்கு எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டது; பிரிட்டீஷ் அரசின் கொள்கைகளால் தான் அது அப்படி உருவாக்கப்பட்டது .
பிராமணர் – பிராமணரல்லாதோர் இடையே நிலவிய சமூகப் பிளவே நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்கிறார்கள் சிலர். ஆனால் அப்போது இந்தியாவில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உருவான தேசிய காங்கிரஸ் இயக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிரிட்டீஷாரே தொடர்ந்து இந்தியாவை ஆள வேண்டுமென்கிற கோரிக்கையுடன் இந்த நீதிக் கட்சி தொடர்ந்து இயங்கி வந்தது.
நீதிக்கட்சியின் வளர்ச்சியில் பிரிட்டீஷ் அரசின் பங்கு குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும், அது சிறிய அளவிலோ அல்லது முழுவதுமாகவோ இருந்திருக்க வேண்டுமென்று பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுப்பெற்ற பிராமணர் குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பிராமணரல்லாதோர் பலரை அரசுப் பணிகளில் நியமிக்கத் தொடங்கினர். 1903ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் சி. சங்கரன் நாயரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு . இவர் தமிழரல்ல, மலையாளி. (பாஷ்யம் ஐயங்கார் என்பவர் ஓய்வு பெற்றதால் அக் காலியிடம் உருவாகியிருந்தது).
1912 இல் சர் அலெக்சாந்தர் கார்டியூவின் முயற்சியால், சென்னை அரசுச் செயலகம், அரசுப் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோர் என்றொரு தனிப்பிரிவை உருவாக்கியது. 1918 இல் இரு பிரிவினருக்கும் தனித்தனியே பட்டியல்கள் உருவாக்கப்பட்டு நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாயிற்று.
பிரிட்டீஷ் இந்தியாவில் மொழிக் குழுக்கள் அரசியலில் ஈடுபடுவது பரவலாக இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸ் தலைமையில் சுதந்திரம் பெறவேண்டுமென்கிற வேகம் இருந்தும், சுதந்திர இந்திய அரசை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலெனக் கருதிய குழுக்களும் இங்கே இருந்தன.
1909 இல் பி.சுப்ரமணியம், எம்.புருஷோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் ‘சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி அக்டோபர் 1909 க்கு முன்னர் ஆயிரம் பிராமணரல்லாத உறுப்பினர்களைச் சேர்க்கப் போவதாக அறிவித்தனர். ஆனால் பிராமணரல்லாத மக்களிடையே இந்த முயற்சி எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; இந்த அமைப்பும் நீர்த்துப் போனது. 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ்.நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் ‘சென்னை ஐக்கிய சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் என்பவர் இதன் செயலாளராக இருந்தார். இவ்வமைப்பு அரசியலைத் தவிர்த்து சமூகப் பணிகளில் மட்டும் ஈடுபட்டது.
அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு ‘சென்னை திராவிடர் சங்கம்’ என்று பெயரிடப்பட்டது. சென்னை நகரத்தில் பல கிளைகளைத் தொடங்கிய இச்சங்கத்தின் முக்கிய சாதனை, பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நிறுவியதாகும். மேலும் இது ஆண்டுதோறும் பிராமணரல்லாத பட்டதாரிகளுக்காக விழாக்களை நடத்தியதுடன், அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கும் நூல்களையும் வெளியிட்டது.
இந்திய சட்டமன்றத்துக்கு நடந்த 1916 தேர்தலில் பிராமணரல்லாத வேட்பாளர்களான டி.எம்.நாயர் (தெற்கு மாவட்டங்கள் தொகுதி- இவர் மலையாளி) மற்றும் பனகல் அரசர் (ஜமீன்தார்கள் தொகுதி – இவர் தெலுங்கர்), ஆகியோர், தமிழ் பிராமண வேட்பாளர்களான ரைட் ஆனரபிள் வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, கே.வி.ரங்கசாமி ஐயங்கார் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர்.
அதே ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தியாகராய செட்டியும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவும் ஹோம் ரூல் இயக்க ஆதரவு பிராமண வேட்பாளர்களால் தோற்கடிக்கப் பட்டனர்.
இந்தத் தோல்விகள், இரு குழுவினருக்கிடையேயான பகையுணர்வை அதிகரித்து, பிராமணரல்லாதோருக்காகத் தனியே ஒரு அரசியல் அமைப்பு உருவாக உடனடிக் காரணமாக அமைந்தன.
நவம்பர் 20, 1916 இல் பிராமணரல்லாதோரின் 30 முக்கிய தலைவர்கள் தியாகராய செட்டி, டி.எம்.நாயரின் தலைமையில் சென்னை, விக்டோரியா ஹாலில் சந்தித்தனர். அக்கூட்டத்தில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரில் பிராமணர் அல்லாதார் இயக்கம் உருவானது.
பிராமணரல்லாதோரின் குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் செய்தித்தாள்களை நடத்துவது இவ்வமைப்பின் குறிக்கோள் என்று அறிவிக்கப்பட்டது. தியாகராய செட்டியாரும், டாக்டர் நாயரும், சென்னை நகரசபை அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரணியில் இருந்தவர்கள்; ஆனால் நடேச முதலியாரின் முயற்சியால் ஓரணியில் ஒருங்கிணைந்தனர். இதுவே பின்னாளில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) என்று பரவலாக அழைக்கப்படலாயிற்று.
‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில இதழை அது வெளியிட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. டிசம்பர் 1916 இல் இவ்வமைப்பு ‘பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கை’ ஒன்றை வெளியிட்டது. அதில் பிரிட்டிஷ் அரசுக்கு தங்கள் உண்மையான விசுவாசத்தையும், சுதந்திரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த காங்கிரசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தும் அறிவித்த அதேவேளை, நிர்வாகத்தில் பிராமணர் எண்ணிக்கையை கடுமையாகக் குறைக்கவும் முடிந்தது. இந்த அறிக்கையைத் தேசியவாத நாளிதழான ‘தி இந்து’ (20 டிசம்பர் 1916) பின்வருமாறு விமர்சித்தது:
“ இந்த அறிக்கை எமக்கு மிகுந்த வியப்பினையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்வறிக்கை அது பேசும் பொருளைப் பற்றித் தவறான, வெகுவாகத் திரிக்கப்பட்ட கண்ணோட்டதை முன் வைக்கிறது. பெரும் பாரத சமூகத்தினிடையே பகையுணர்வை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கமாகக் கொள்ள முடியும்.”.
‘இந்து நேசன்’ இதழ் “இப்போது இந்தப் புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமென்ன?” என்று வினவியது. ஹோம் ரூல் இயக்கத்தின் ‘நியூ ஏஜ்’ இதழ், இப்புதிய அமைப்பை நிராகரித்ததுடன் அது விரைவில் அழிந்து விடும் என்றும் கருத்துத் தெரிவித்தது.
பிப்ரவரி 1917இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், கூட்டுப்பங்கு நிறுவனம் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 640 பங்குகளை விற்று முதலீடு திரட்டியது. இப்பணத்தைக் கொண்டு ஒரு அச்சுக் கூடத்தை வாங்கி ‘ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் ஓர் இதழை வெளியிட முயன்றது.
முதலில் சி. கருணாகர மேனன் (இவரும் ஒரு மலையாளி) இதழாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து, நாயரே அவ்விதழின் கௌரவ ஆசிரியரானார். பி.என்.ராமன் பிள்ளையும், மு. சி. பூரணலிங்கம் பிள்ளையும் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
இதன் முதல் பதிப்பு பிப்ரவரி 26, 1917 இல் வெளியானது. ஜூன் 1917 இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட ‘திராவிடன்’ என்ற தமிழ் இதழையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் ஏ.சி.பார்த்தசாரதி நாயுடு ஆசிரியராக இருந்த ‘ஆந்திர பிரகாசிக்கா’ என்ற தெலுங்கு நாளிதழையும் நீதிக்கட்சி வாங்கியது. ஆனால் 1919 ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறையினால் இவ்விரு நாளிதழ்களும் வார இதழ்களாக மாற்றப்பட்டன.
(தொடர்கிறது)
$$$