-தஞ்சை வெ.கோபாலன்
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 1…

1. சமூகக் காரணங்களும் நீதிக் கட்சியின் தோற்றமும்
நீதிக் கட்சி என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி உருவாகக் காரணம், தமிழ்நாட்டில் பிராமணர்களுடைய ஆதிக்கம் அரசாங்கத்திலும் சரி, சமூகத்திலும் சரி அதிகமாக இருக்கிறது என்ற எண்ணம் ஒருசாராரிடம் ஏற்பட்டதே. தமிழகத்தில் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கவும், இதர மக்களின் நலன்களைப் பேணிக் காக்கவும் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது.
இது 1916ஆம் ஆண்டு டாக்டர் டி.எம்.நாயர் என்ற மலையாளம் பேசுபவராலும், தியாகராய செட்டி எனும் தெலுங்கு பேசுபவராலும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. (இந்த அமைப்பு நடத்திய பத்திரிகையின் பெயர் ’ஜஸ்டிஸ்’. அதாவது நீதி. காலப்போக்கில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ நீதிக்கட்சி என்று பெயர் பெற்றது).
இந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்பு ஆங்காங்கே பிராமணரல்லாதார் கூடி அன்றைய சமூக நிலைமைகளை விவாதித்து வந்தனர். இப்படியொரு அமைப்பு இருக்குமானால், அரசில் பிராமண ஆதிக்கத்தை நீக்கவும், சமூகத்தில் தங்கள் உயர்வினை நிலைப்படுத்தவும் உதவும் எனும் நோக்கில் இந்த நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது.
சமூகத்திலும், பிரிட்டிஷ் அரசாங்கத்திலும் பிராமணர்கள் அதிகமானோர் இருந்ததற்கான காரணங்களை ஆராய்ந்தால், ஏன் அப்படி இருந்தது என்பதன் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். பிரிட்டீஷார் இந்த நாட்டினுள் அடியெடுத்து வைத்து, வர்த்தகம் செய்ய வந்தவர்களுக்கு சிறிது சிறிதாக நம்மவர்களின் ஒற்றுமையின்மை, பிரிவினைகள் தெரிய வந்தது. மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இவர்களுக்குள் புகுந்து இவர்களை ஒடுக்கி அடக்கி வைத்துத் தாங்கள் இந்த நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்ற நோக்கம் அந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பு வரை நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே சமூகம் நான்காகப் பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் இன்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமென்கிற அமைப்பு முறை இருந்தது. அதன்படி ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகங்கள் புரிவது, இறைப் பணி செய்வது, வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் செய்ய வேண்டிய கருமங்கள் இவை பற்றியெல்லாம் செய்ய வேதம் படித்து மேற்படி பணிகளைக் கவனித்துக் கொள்வது ஆகிய பணிகளைக் கவனித்தனர். அதற்காக பிராமணர் எனும் பிரிவு இருந்தது. நாட்டை ஆள்வது, எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது, நிர்வாகங்களை ஒழுங்குமுறையாக நடத்துவது என்பது போன்ற பணிகளைச் செய்ய க்ஷத்திரியர்கள் என்ற ஏற்பாட்ரு இருந்தது. மனித வாழ்வுக்குத் தேவையான பண்டங்களை வாங்கி, விற்று வாணிபம் செய்ய வைசியர்கள் எனும் பிரிவும், நாட்டில் உணவு உற்பத்தி, பாதுகாப்பு, இதர மனிதத் தேவைகளுக்கான பணிகளைச் செய்வதற்கென்று சூத்திரர் எனும் ஒரு பிரிவும் ஏற்பட்டன.
இப்போது ‘சூத்திரர்’ எனும் இந்தச் சொல் ஒரு தவறான சொல் என்றும், அது இழிவான சொல் என்றும் நினைப்பது போல ஒரு நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. அந்தச் சொல்லுக்கு ‘மூல காரணமாகச் செயல்படுவோர்’, ‘காரணமானவர்’ என்பது தான் இயல்பான பொருள்.
இந்த ஒவ்வொரு பிரிவினரும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அவரவர்களுக்குரிய தங்கள் பணிகளைச் செய்துகொண்டு, ஒருவருக்கொருவர் நல்லுறவுடன் வாழ்ந்து வந்தனர். அந்தணர், நாவிதர், வண்ணார் போன்ற பொதுவான தொழில் செய்வோருக்கெல்லாம் அந்த நாளில் ஆண்டுதோறும் அறுவடை நேரத்தில் இவர்களுக்கு இத்தனை மூட்டை நெல் கொடுப்பது என்பது வழக்கத்தில் இருந்தது.
அவ்வப்போது கணக்கு பார்த்துக் கொடுப்பது அல்ல. அதுபோலவே ஒருவர் தொழிலுக்கு இதரர் மதிப்பு கொடுத்து, ஒருவர் தொழிலில் மற்றவர் தலையிடாமல், ஏற்றத் தாழ்வு பார்க்காமல் வாழ்க்கை நடத்தினர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் நான்கு பிரிவினரும் தனித்தனியாக தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை, திருமண உறவுகள், பழக்க வழக்கங்களை பல்லாயிரம் ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், இந்தப் பிரிவினர்களை ஜாதி என்ற பெயரால் பிரித்துப் பார்க்கத் தொடங்கினர்.
‘ஜாதி’ என்பது பிறப்பால் வருவதல்ல, அவரவர் செய்யும் தொழிலால் வந்தது என்பதுதான் நம் வரலாறு சொல்லும் செய்தி. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவரவர் குலத் தொழிலைச் செய்யாதவர் தாங்கள் எந்தக் குலம் என்று கூறிக் கொள்வதில் பெருமை இல்லை.
பிராமண ஜாதியில் பிறந்த ஒருவன் வேதம் ஒதி, யாகங்கள் செய்து, இறைப்பணியாற்றி, உலகோர் நல்வாழ்க்கைக்காக வாழாமல், பாட்டா கடையில் ஷு விற்கும் பணியில் இருந்தால் அவனை பிராமணத் தொழில் செய்பவன் என்று சொல்ல முடியுமா? வியாபாரம் செய்வானானால் அவன் வைசியன்.
வேறு ஜாதியில் பிறந்து புதுச்சேரி உப்பளம் முத்துமாரியம்மன் கோயிலில் மிகச் சிறப்பாக பூஜைகள் செய்துவந்த வேறு ஜாதிப் பையனைப் பார்த்து பாரதியார் தன் மகளிடம் “பாப்பா! பார்! அந்தப் பையன் அந்தணத் தொழிலை எத்துணை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து அவனுக்கும் பூணூல் அணிவித்து, அவன் செய்யும் தொழிலுக்கு அது தேவை என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார்.
பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி இங்கே வந்து நாடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் இந்த சீரான சமூக அமைப்பு அழியத் தொடக்கக் காரணம், 1885இல் நடந்த சிப்பாய் கலவரம் (முதல் இந்திய சுதந்திரப் போர்). இந்தியர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், இனி முன்போல நாம் இவர்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்துப் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள அந்தக் கலவரம் காரணமானது.
அதுவரை அவர்கள் காலடி எடுத்துவைத்த 17ஆம் நூற்றாண்டு தொடங்கி, இந்தியர்களைக் கல்வி அறிவில்லாமல், பணி செய்யும் கூலிகளாகவே அவர்கள் நடத்தி வந்தார்கள். 1885 சிப்பாய் கலவரம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாக ஆனது. நமது பாரம்பரிய கல்வி முறைகளையெல்லாம் ஆங்கிலேயர்கள் தகர்த்து விட்டதோடு, இந்தியன் என்றால் கூலி என்றே எண்ணத் தொடங்கினார்கள். காரணம் இவர்கள் ஆக்கிரமித்த இதர நாடுகளில் எல்லாம் அவர்கள் கால்வைத்த 50 ஆண்டுகளுக்குள் மதமாற்றம் மூலம் எல்லா நாடுகளையும் கிறிஸ்தவ நாடுகளாக மாற்ற முடிந்தது.
ஆனால் உலகில் கிரேக்கம், சீனம், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே எல்லா விதங்களிலும் மேலோங்கியிருந்தன. அப்படி இருந்ததால் இந்தியாவை அத்தனை சீக்கிரம் தங்கள் வசம் கொண்டு வர முடியவில்லை. இங்கு மக்கள் பிரிந்திருந்தாலும் அவரவர் பணிகளில் அக்கறையும் ஒற்றுமையும் கொண்டிருந்தனர். இதில் கை வைத்தால்தான் தாங்கள் கால் ஊன்ற முடியும் என்ற எண்ணம் காரணமாக, இந்தியாவின் பாரம்பரிய குருகுலக் கல்வி முறையை ஒழித்துக் கட்டிவிட்டு, லார்டு மெக்காலே என்பவரைக் கொண்டு ஒரு புதிய கல்வி முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள்.
18ஆம் நூற்றாண்டில் உருவான இந்தக் கல்வி முறை முதலில் பெரு நகரங்களிலும், பின்னர் சிறிது சிறிதாக இதர இடங்களுக்கும் பரவத் தொடங்கியதன் விளைவு, ஆங்கிலக் கல்வி இங்கே நம் பண்பாட்டுக் கல்வியை ஒழித்து விட்டது. இந்திய கல்வி முறை மிகச் சிறப்பானதாக இருந்த போதிலும், எல்லா துறைகளையும் புரிந்துகொள்ளக் கூடிய குருகுல அமைப்பாக இருந்த போதும், புதிதாக புகுத்தப்பட்ட மெக்காலே கல்வித் திட்டம் ஆட்சியாளர்களின் பின்புலத்துடன் இங்கே வேகமாகப் பரவியது.
“நூறாண்டு காலம் என் கல்வி முறையை இந்த நாட்டில் நிலைநிறுத்திவிட்டால், இந்த நாட்டையே கிறிஸ்தவ நாடாக மாற்றிக் காட்டுவேன்” என்று மார்தட்டினான் மெக்காலே. அப்படி மெக்காலேயின் கல்வித் திட்டம் இங்கே வந்ததன் விளைவாக, ஏற்கனவே கற்றலும், கற்பித்தலும் போன்ற பணிகளை மேற்கொண்டிருந்த பிராமணர்கள், அந்த மெக்காலே கல்வித் திட்ட்த்தை முதலில் ஏற்றுப் படித்துத் தங்களை அவர்கள் வழியில் பயணிக்கத் தயார் செய்து கொண்டனர்.
1885 சிப்பாய் கலகத்துக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை இங்கிலாந்து அரசியான ராணி விக்டோரியா நேரடியாக ஏற்றுக் கொண்டார். இனி சிப்பாய்கள் கலவரம் போல எதுவும் நேராமல் இருக்க மெக்காலே கல்வியைக் கற்றவர்களை அரசாங்கத்தில் தங்களுக்குப் பணிபுரிய நியமனம் செய்து கொண்டனர். பிராமணர்கள் ஏற்கனவே தங்கள் பாரம்பரிய கல்வி முறையைக் கற்றிருந்ததால் மெக்காலே கல்வியை உடனடியாகப் படித்து மேற்சொன்ன பணிகளை யெல்லாம் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். எண்ணிக்கையில் குறைவான இவர்கள் மிக அதிகமான பங்கினை அரசாங்க வேலைகளில் இருந்ததற்கு காரணம் இதுவே.
அந்தக் கால நிலைமை அத்தகைய சூழ்நிலையை உருவாக்கியதே தவிர, ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை பதவிகளில் உட்கார வைத்தது வேண்டுமென்று திட்டமிட்டு நடந்ததல்ல, சூழ்நிலை காரணமாகவும் தேவைகளின் காரணமாகவும் நடந்தவை.
இந்தக் காரணம் கொண்டு, நமது பழைய பண்பாட்டு பிரிவுகள், நான்கு வர்ணங்களாக இருந்து வாழ்ந்த வாழ்க்கை கலைந்து ‘யாரும் எதையும் செய்யலாம்’ என்று ஆனபோது, க்ஷத்திரியன் சூத்திரன் பணியை ஏற்கவும், பிராமணன் வைசிய அல்லது சூத்திரன் பணியைச் செய்யவும், எந்த பிரிவினரும் வைசியனாகலாம் என ஒரு சமூகக் குழப்பம் ஏற்பட்டு ‘ வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற நிலை உருவானது.
ஆங்கிலத்தில் First come First served என்பார்களே அதுபோல அவரவர் ஆங்கிலக் கல்வியைப் படித்தவர்கள் பிரிட்டிஷாரிடம் பணிபுரிய நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரவே, நம் சமுகத்தின் அதுவரையிலான தன்னியல்பான கட்டுக்கோப்பு உடைந்து, அவன் விரும்பியபடி இந்தியர்கள் பிரிவினைக்கு வழிகோலி, நானா, நீயா என்ற போட்டி இங்கே உருவாக்கி விட்டது.
ஆங்கிலேயர்களுக்குச் சேவை புரிய எல்லா பிரிவினரும் போட்டியிட்டாலும், கற்பது – கற்பிப்பது எனும் தொழிலில் இருந்த பிராமணர் முந்திக் கொண்டு அரசாங்கப் பணிகளைப் பெரிதும் ஆக்கிரமித்துக் கொண்டனர். இன்னொரு பகுதி பிராமணர்கள் வெள்ளைக்காரன் மிலேச்சன் அவனிடம் ஊழியம் பார்ப்பது பாபம் எனக் கருதி, தேசபக்த இயக்கமான காங்கிரசில் சேர்ந்தனர். மாற்று இயக்கங்கள் பிராமண எதிர்ப்பு நிலை எடுத்ததால், அவர்கள் ஒட்டுமொத்தமாக பிராமணர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதுவே காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருக்கக் காரணமாகிவிட்டது.
காங்கிரசின் தொடக்கக் காலத்தில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற பிரிவுகள் உண்டான போது பிராமணர்கள் இரு பிரிவுகளிலும் இருந்தனர். மிதவாத காங்கிரசார் பலர் பிராமண வழக்கறிஞர்கள். தீவிரவாதப் பிரிவில் வ.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மகாகவி பாரதியார் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
சென்னை மாகாணச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூறாண்டின் முற்பகுதியிலும் பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோருக்கிடையே வகுப்புவாரியாகப் பிரிவினை ஏற்பட்டிருந்தது. பிராமணர்கள், அன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மொத்த மக்கள்தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிற சாதியினரிடம் பேதம் காட்டிய விதமும் இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள்.
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணரல்லாதோருக்காக ஓர் அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. நீதிக்கட்சியின் உருவாக்கம் இத்தேவையைப் பூர்த்தி செய்தது. இக்கட்சி தன் ஆரம்ப ஆண்டுகளில் பிரிட்டீஷ் இந்தியாவின் சட்டமன்றங்களிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமும் முறையிட்டு அரசுப் பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்தது.
மாண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம்-1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ஆம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. (காங்கிரஸ் அத்தேர்தலைப் புறக்கணித்தது).
1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி, தேசியவாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரிட்டீஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் மகாத்மா காந்தியடிகளால் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை.
1938 இல் ஈ.வே.ராமசாமி நாயக்கர் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944இல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய ஈ.வே.ராமசாமி நாயக்கர், கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பின்னால் அப்பிரிவு அடியோடு செயலிழந்து விட்டது.
(தொடர்கிறது)
$$$