தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்!

-இசைக்கவி ரமணன், கவிஞர் சுரேஜமீ

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள். இதனையொட்டி இரு கவிதைகள்...
நன்றி: ஓவியர் ஜீவா

காளிநம் வாழ்வைக் காக்கட்டும்!

-இசைக்கவி ரமணன்

உள்ளொளி யைமனம் உணரட்டும்
ஊரெங்கும் அது விரியட்டும்
வெள்ளம் போலே நம்மன்பு
வையம் தாண்டி விரையட்டும்
முள்ளும் மலராய் மாறட்டும்
முழுதாய் வளமே சூழட்டும்
கள்ளும் மயங்கும் கண்ணுடையாள்
காளிநம் வாழ்வைக் காக்கட்டும்!



$$$

நன்றி: கார்டூனிஸ்ட் மதி

திசையெட்டும் வெல்வோம் நாமே!

-கவிஞர் சுரேஜமீ

ஒன்றன்பின் ஒன்றும் வரிசை
ஒன்றினிணை ஒன்றும் வரிசை
நன்றெல்லாம் தொடரும் வரிசை
நாமெல்லாம் போற்றும் வரிசை
மன்றெல்லாம் முழங்கும் வரிசை
மாநிலத்தின் முதன்மை வரிசை
வென்றியதைக் குறிக்கும் வரிசை
வீடெல்லாம் தீபம் அஃதே!

அடையாளம் நம்மின் வரிசை
அவதாரம் அதனின் வரிசை
தடைகளையே உடைக்கும் வரிசை
தர்மத்தின் காவல் வரிசை
நடைதன்னில் நின்ற வரிசை
நாயகனாய் உயர்ந்த வரிசை
கொடைதன்னில் வாழும் வரிசை
குலம்போற்றும் வரிசை அஃதே!

இருள்நீக்கும் ஒளியின் வரிசை
இன்பத்தின் துள்ளல் வரிசை
மருள்நீக்கும் மனத்தின் வரிசை
மாயையினை விலக்கும் வரிசை
பொருள்குவிக்கும் வாழ்வின் வரிசை
புகழ்சேர்க்கும் குலத்தின் வரிசை
அருளொன்றே அகத்தின் வரிசை
ஆண்டவனின் இருப்பும் அஃதே!

தீபங்களின் வரிசை இன்று
தீபவொளித் திருநாள் அன்றோ?
பாபங்கள் தோற்கும் என்ற
பாரதத்தின் கொள்கை சாற்றும்
தீபவொளி பரவி எங்கும்
திசையெட்டும் வெல்வோம் நாமே!
மாபெருமிக் கொண்டாட்டங்கள்
வானையே அசைக்கும் நின்றே!

$$$

Leave a Reply