-இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அவமதிப்பு மனுக்களை விசாரித்த தனி நிதிபதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதற்கு எதிராக அரசுத் தரப்பிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகும் தனி நீதிபதி தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார். ‘டிச.4 உத்தரவுக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடை விதிக்கவில்லை’ என்று கூறி தனி நீதிபதி விசாரணையை நாளைக்கு (ஏப்.9) தள்ளிவைத்துள்ளார்”என்றனர்.
தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மோகன், வாஞ்சிநாதன் ஆகியோர், “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பொருளுடன் நீதிபதி இணைந்துவிட்டார். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அந்த நீதிபதி விசாரிக்கக் கூடாது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்கா நிர்வாகம் மீதும் வழக்குப் பதிவு செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றனர்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
”இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்னை, ஊதி ஊதி பெரிய பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. மேல்முறையீடு மனு மீது இரு நீதிபதிகள் ஏற்கெனவே இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன் பிறகும் தனி நீதிபதியின் உத்தரவை மிகைப்படுத்துவது ஏன்? இந்த வழக்கில் நீதிமன்றத்தில் யாரும் குரலை உயர்த்தி, நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கத்தில் பேசக் கூடாது. இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும்….
தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பிறகு, தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அந்த வழக்கு தானாக இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்துவிடும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா அல்லது இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பதை இந்த நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவெடுக்கும் வரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது”
-என்று உத்தரவிட்டனர்.
புதிய திருப்பம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம், இந்த இடைக்காலத் தடையால் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுகள் அரசுத் தரப்பிலும், நிர்வாக ரீதியாகவும் சில சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு முக்கியமான சட்டக் கேள்வியை முன்வைத்தது. அதாவது, இது போன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை ஒரு தனி நீதிபதி விசாரிப்பதே சரியானதா அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து ஆழமான சட்ட விளக்கம் தேவைப்படுவதாக நீதிபதிகள் கருதினர்.
இந்த அடிப்படை சட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதுவரை பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அரசின் வாதங்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடையைப் பிறப்பித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளோடு தொடர்புடைய இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் இந்த அடுத்தகட்ட நகர்வு தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடை காரணமாக, தீபம் ஏற்றுவது தொடர்பான முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாகச் செயல் இழந்துள்ளன.
சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் தருணத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு எதிரான தீர்ப்பை தனி நீதிபதி வழங்கிவிடுவாரோ என்ற அச்சத்தால், நீதிபதியிடம் அளித்த உறுதிமொழியை மீறி மீண்டும் மேல்முறையீட்டை தமிழக அரசு உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்தது. அதன் பலனாக, தற்போது தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளது.
$$$