-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு:
தமிழக டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார் (டிச. 1).
இதனால், ஆவேசமடைந்த இண்டி கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது. அது கிடப்பில் உள்ளது.
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதூறு கருத்துகள் தமிழகத்தில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டன. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சைபர் குற்றப் பிரிவு , சமூக ஊடகங்களில் உள்ள ஆட்சேபனை கருத்துகள், பதிவுகளை தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்ட எஸ்.பி-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
- ஆதாரம்: ஜனம் டி.வி.
$$$
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு விவகாரம்:
உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்
புதுதில்லி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மதுரை திருபரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜன. 29-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், திட்டமிட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய, சென்னை காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் போலீஸாரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.மணி குறிப்பிட்டுள்ள யூ-டியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் நபர்களைக் கண்டறியவும், அவதூறு கருத்துகளை நீக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புத்தகங்கள் பறிமுதல்: நீதிபதியை அவதூறாக சித்திரிக்கும் கார்ட்டூனை அட்டைப் படமாக கொண்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, குருசாமி தலைமையிலான சமூக நல்லிணக்கத்துக்கான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பொது அமைதியை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்து நீதித் துறையின் சுதந்திரம், கண்ணியத்தைப் பாதுகாக்கவும் நீதிமன்றங்களின் உத்தரப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நன்றி: இந்து தமிழ் திசை (02.02.2026)
$$$