-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்றைந்தாம் திருப்பதி...

105. கண்ணன் அவதரித்த வடமதுரை
கண்ணன் மனது கனியமுது… கல்லுக்கும் கனிந்த தேனமுது… கடல் மகள் அமர்ந்த மார்பழகு… வில்லைச் சுமந்த தோளழகு… சொல்லச் சொல்ல எல்லாம் அழகு என்றாலும், மதுராவில் நின்ற கோவர்த்தன நேசனே அழகு!
கீதை சொன்ன கண்ணன் குழந்தையாகப் பிறந்த தலம் வடமதுரை. முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்று. மதுராவை நினைத்தாலே பாவங்கள் விலகிவிடும் என்பது நம்பிக்கை. யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் கோவர்த்தன கிரியும், 10 கி.மீ. தொலைவில் பிருந்தாவனமும், கோகுலமும் (திருவாய்ப்பாடி) உள்ளன.
யாதவ அரசன் கம்சன். தனது சகோதரி தேவகிக்கும் வாசுதேவருக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், அவர்கள் இருவரையும் சிறை வைத்து, தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான். தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். மதுரா சிறையில் பிறந்த கிருஷ்ணர், அன்று இரவே ஆயர்ப்பாடிக்கு ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டு, நந்தகோபர் – யசோதையின் மகனாக வளர்க்கப்பட்டார்.
அங்கு ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று வெண்ணெய் உண்டு, கோபியருடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணர், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி, இளைஞரான பின்னர் மதுரா சென்று மாமன் கம்சனை வதம் செய்தார். பின்னர் கிருஷ்ணர் துவாரகை சென்று ஆண்டார். மகாபாரத யுத்தத்தில் பாணடவற் அணியில் பங்கேற்றார். கிருஷ்ண ஜன்மபூமி என்பதால் தேசிய அளவில் பிரபலமானது மதுரா.
மூலவர்: கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: சத்யபாமா
விமானம்: கோவர்த்தன விமானம்
தீர்த்தம்: சக்கர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் இத்தலம் உள்ளது (மதுரா). தில்லியில் இருந்து ஆக்ரா போகும் ரயில் பாதையில் மதுரா என்னும் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. அதிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது தான் இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
பேராபத்திலிருந்து தப்பிக்கவும். பகைவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடவும், நினைத்தது நிறைவேறவும் வந்து தரிசிக்க வேண்டிய தலமாகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களும், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் வரவேண்டிய தலம் இது.
$$$