-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபதாம் திருப்பதி...

20. நாச்சியார் ஆளும் திருநறையூர்
வானின் உயரம், மானின் மனது கொண்டவரே, பிரம்மன் வந்து பூஜை செய்ய நின்றவரே! வஞ்சின மரத்தின் வஞ்சுள தேவியைக் கொண்டவரே – உனை நெஞ்சில் நினைத்து திருநரையூர் வந்தேன் என்னை அஞ்சேல் என்று காப்பாயே!
நறை (நறுமணம்) மிகுந்த பூஞ்சோலைகள் நிறைந்த நகரம் திருநறையூர். வஞ்சுள மரத்தடியில் அவதரித்த தாயார் அருள் பாலிக்கும் தலம். பஞ்சகிருஷ்ண தலங்களுள் ஒன்று. நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், தாயாரே ஆட்சி செய்கிறார் என்பது ஐதீகம்.
வஞ்சுளவல்லியை மணம்புரிய மேதாவி முனிவரின் நிபந்தனையை ஏற்று, ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று உலகிற்குப் பறை சாற்றியவர் இத்தலப் பெருமாள். இக்கோயிலில் உள்ள கல் கருடன் புகழ் பெற்றது. சோழ மன்னன் கோச்செங்கண்ணண் என்ற நாயன்மார் வழிபட்ட தலமும் கூட.
மூலவர்: திருநறையூர் நம்பி ஸ்ரீநிவாசன் (நின்ற கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்
உற்சவர்: இடர்கடுத்த திருவாளன்
ஆகமம்: வைகானஸம்
விமானம்: ஹேம விமானம்
தீர்த்தம்: மணிமுக்தா நதி, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்ப தீர்த்தம்
தல விருட்சம்: வகுள (மகிழ) மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?:
கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம் (நாச்சியார் கோயில்).
கல் கருட வாகனம்
இத்தலத்தில் மட்டுமே உற்சவ வாகனமாக கல் கருடாழ்வார் உள்ளார். உற்சவ தினங்களில் இத்தலத்தில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கல் கருட வாகனம், இத்தலம் தவிர வேறு எங்கும் இல்லை.
நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லித் தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்ற போது, தெய்வத் திருமணத்துக்கு பெரிதும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு, அவருக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனைத் தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாக்க் குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர். இன்றும் நிகழும் அதிசயம் இது.

சேவிப்பதன் பலன்கள்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், தோஷம் சபாம் நீங்கவும், குரு தரிசனம் கிடைக்கவும், இப்பெருமாளைத் தரிசிக்க மிகுந்த பலன் கிட்டும். 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.
$$$